இந்தியாவுக்குள் 1,600 கோடி கள்ள நோட்டுகள் புழக்கம்: திடுக்கிடும் தகவல்
டெல்லி போலீஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் துன்டாவை மத்திய உளவுத் துறையினரும், டெல்லி பயங்கரவாதத் தடுப்புப் படை அதிகாரிகளும் கடந்த மூன்று நாள்களாக விசாரித்து வருகின்றனர்.அவரது போலீஸ் காவல் செவ்வாய்க்கிழமை முடிவடையவுள்ளது. அதையொட்டி, நீதிமன்றத்தில் துன்டா ஆஜர்படுத்தப்படும்போது, அவரது காவலை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க அனுமதி கோரப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணைக்கு துன்டா முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருவதாகவும், பல திடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டு வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இல்லை என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக கூறி வந்தது. இந்நிலையில், அந்நாட்டின் கராச்சி நகரில் ஐஎஸ்ஐ பாதுகாப்பில் தாவூத் இப்ராஹிம் வசித்து வருவதாகத் அதிகாரிகளிடம் துன்டா கூறியதாகத் தெரிகிறது.
மேலும், தாவூத் இப்ராஹிம் தலைமையில் செயல்படும் குழுக்கள் ஆண்டுதோறும் சில ஏஜெண்டுகள் மூலம் 1,600 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை இந்தியாவுக்குள் புழக்கத்தில் விட்டதாக துன்டா கூறும் தகவல் போலீஸாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
பாகிஸ்தான் ராணுவ மேஜருக்கு பங்கு: “பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜராக பணியாற்றும் தயீப் என்ற அதிகாரிதான் இந்தியாவுக்குள் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட மூளையாகச் செயல்பட்டு வந்தார். ஐஎஸ்ஐ கட்டுப்பாட்டில் உள்ள அச்சகத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படும் என துன்டா கூறுகிறார்.
மேலும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக ஹமீது குல் 1987-89 வரை இருந்தார். காஷ்மீரில் உள்ள இளைஞர்களை பயங்கரவாத குழுக்களிடம் சேர்த்து பயிற்சி பெற வைப்பதும், ஆப்கானிஸ்தானில் இருந்துவரும் முஜாஹிதீன்களை காஷ்மீருக்காக போராடச் செய்வதும்தான் அவரது நோக்கம் என துன்டா கூறுகிறார்.
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது எப்படி?: ஐஎஸ்ஐ பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகும், ஹமீது குல் பயங்கரவாத இயக்கங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், அவரை 1995-ஆம் ஆண்டு துன்டா நேரில் பார்த்த போது பாகிஸ்தான் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை இந்தியாவில் புழக்கத்தில் விடும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.வங்கதேசத்திலும், காஷ்மீரிலும் உள்ள சில பயங்கரவாத ஏஜெண்டுகள் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகள் இந்தியாவுக்குள் விநியோகிக்கப்படும்.
இதற்கு பாகிஸ்தானில் உள்ள தாவூத் இப்ராஹிமும், அவரது கூட்டாளிகளும் உதவியாக இருந்தனர்.
அவர்களையும் மற்ற நாடுகளில் உள்ள ஏஜெண்டுகளையும் மேஜர் தயீப் ஒருங்கிணைந்து செயல்படுத்தினார்.
கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களுக்கு தேவையான நிதி ஆதாரத்தை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர் என துன்டா கூறினார்’ என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பையில் 2008-இல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜமா-உத்-தாவா தலைவர் ஹஃபீஸ் சயீதுக்கு தொடர்பு உள்ளது என இந்தியா கூறி வருகிறது. ஆனால், அதை நிரூபிக்க இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என பாகிஸ்தான் கூறியது.
துண்டாவிடம் கூடுதல் தகவல் பெற போலீஸ் திட்டம்: இந்நிலையில், போலீஸாரிடம் துன்டா அளித்துள்ள வாக்குமூலத்தில் “இந்தியாவில் சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்த ஹஃபீஸ் சயீத் சதித் திட்டம் திட்டியதாகவும், அவரை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு ஒரு வாரம் முன்பாக நேரில் பார்த்த போது இத்தகவல் தெரிய வந்தது’ என்றும் கூறியுள்ளதாகத் தெரிகிறது.எனவே, ஹஃபீஸ் சயீத் தொடர்பாக துன்டாவிடம் இருந்து கூடுதல் தகவல் பெற முடியும் என தில்லி போலீஸார் நம்புகின்றனர்.
No comments:
Post a Comment