Friday, 30 August 2013

Catholic News in Tamil / கத்தோலிக்கச்செய்திகள் - 28/08/13

1. பொது நிதியை ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு பிலிப்பின்ஸ் அரசு பயன்படுத்தவேண்டும் - கர்தினால் தாக்லே

2. வெளிநாடுகளிலிருந்து வரும் இராணுவ முயற்சிகள் சிரியாவின் நிலையை இன்னும் அதிக அழிவுக்கே இட்டுச்செல்லும் - Aleppo ஆயர் Antoine Audo

3. NATO நாடுகள், சிரியா மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவசபை எதிர்ப்பு

4. யூதர்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து செயலாற்றுவதே தங்கள் நம்பிக்கை - எருசலேம் முதுபெரும் தந்தை Fouad Twal

5. குர்திஸ்தான் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், வேறு இடங்களுக்குக் குடிபெயர்வதை நிறுத்தவேண்டும் - கல்தேய முதுபெரும்தந்தை Raphael Luis Sako

6. சிரியாவில் கடத்தப்பட்ட இயேசு சபை அருள் பணியாளர் Paolo Dall'Oglio விடுவிக்கப்பட செபமும், உண்ணாநோன்பும்

7. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை இலங்கையில் மேற்கொண்டுள்ள பயணம்

------------------------------------------------------------------------------------------------------

1. பொது நிதியை ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு பிலிப்பின்ஸ் அரசு பயன்படுத்தவேண்டும் - கர்தினால் தாக்லே

ஆக.28,2013. குடும்பங்கள், பணியிடங்கள், அரசியல் என்ற அனைத்துத் தளங்களிலும் நேர்மையும், மாண்பும் கடைபிடிக்கப்படவேண்டும் என்று மணிலா உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.
பொது நிதியை மக்களின் முன்னேற்றத்திற்கு, குறிப்பாக ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு பிலிப்பின்ஸ் அரசு பயன்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிலாவில் 3,50,000க்கும் அதிகமானோர் மேற்கொண்ட ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கர்தினால் தாக்லே அவர்கள் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
நாடுதழுவிய முன்னேற்ற நிதி என்ற பெயரில் 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நிதி, 1996ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தகுந்த வழிகளில் பயன்படுத்தப்படவில்லை என்பதை போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், கர்தினால் தாக்லே அவர்களும் சுட்டிக்காட்டினர்.
கர்தினால் தாக்லே அவர்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில் சமுதாய அக்கறை கொண்ட பல்வேறு சமயத் தலைவர்களும், ஏனைய சமுதாய  ஆர்வலர்களும் கலந்துகொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

ஆதாரம் : AsiaNews/CBCP

2. வெளிநாடுகளிலிருந்து வரும் இராணுவ முயற்சிகள் சிரியாவின் நிலையை இன்னும் அதிக அழிவுக்கே இட்டுச்செல்லும் - Aleppo ஆயர் Antoine Audo

ஆக.28,2013. அமைதியின் மீது நம்பிக்கையை உருவாக்கும் முயற்சிகளையே சிரியாவில் வாழும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் தவிர, இங்கு நிலவும் வெறுப்பை வளர்க்கும் முயற்சிகளை அல்ல என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
சிரியாவின் வன்முறைகளால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நகர்களில் ஒன்றான Aleppoவின் ஆயர் Antoine Audo அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
சிரியாவில் வேதியத் தளவாடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற செய்தியை ஆகஸ்ட் 26, கடந்த திங்களன்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் John Kerry அவர்கள் கூறியதைத் தொடர்ந்து, சிரியாவில் அமேரிக்காவின் இராணுவத் தலையீடு இருக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து வரும் இராணுவ முயற்சிகள் சிரியாவின் நிலையை இன்னும் அதிக அழிவுக்கே இட்டுச்செல்லும் என்று கூறிய ஆயர் Audo அவர்கள், உரையாடல் மட்டுமே அமைதியைக் கொணரும் என்பதை வலியுறுத்தினார்.
சிரியாவில் உரையாடல்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துவரும் விண்ணப்பங்கள் சிரியாவில் வாழும் அப்பாவி மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்த்துள்ளது என்று கூறிய ஆயர் Audo அவர்கள், உரையாடல் வழியை மட்டுமே தானும் நம்பியுள்ளதாக CNA செய்தியிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : CNA

3. NATO நாடுகள், சிரியா மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவசபை எதிர்ப்பு

ஆக.28,2013. கற்பனையான ஒரு குடியரசை அமைக்கும் வேகத்தில் NATO நாடுகள் சிரியாவின் மீது இராணுவ தலையீட்டை மேற்கொண்டால், பல்லாயிரம் அப்பாவி உயிர்கள் பலியாகும் என்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவசபை கவலை தெரிவித்துள்ளது.
சிரியாவில் தொடர்ந்து வரும் வன்முறைகளை முடிவுக்கு கொணர்வதற்கு NATO நாடுகள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் உத்தரவின்றி, சிரியாவைத் தாக்கும் நோக்கத்தை வெளியிட்டிருப்பதற்கு இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவசபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவசபையின் சார்பில் ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய அச்சபையின் தலைவர்களில் ஒருவரான Hilarion அவர்கள், உலகெங்கும் தண்டனைகளை வழங்கும் அதிகாரத்தை தாங்களாகவே எடுத்துக்கொள்ளும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வேகத்தைக் குறித்து கேள்விகள் எழுப்பினார்.
தகுந்த காரணங்கள் இன்றி ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் இராணுவ தலையீட்டை மேற்கொண்ட அமெரிக்க ஐக்கிய நாடும், NATO நாடுகளும் சிரியாவிலும் அரசியல் நிலையற்ற வெற்றிடத்தை உருவாக்க முனைந்திருப்பது ஆபத்தானது என்று ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் தலைவர் Hilarion.

ஆதாரம் : AsiaNews

4. யூதர்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து செயலாற்றுவதே தங்கள் நம்பிக்கை - எருசலேம் முதுபெரும் தந்தை Fouad Twal

ஆக.28,2013. யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே உரையாடலை ஆழப்படுத்தி, இருவரும் இணைந்து செயலாற்றுவதே தங்கள் நம்பிக்கை என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 24ம் தேதியன்று இஸ்ரயேல் பெரும் தலைவர்கள் என்ற பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள David Lau Ashkenazi, Sephardic Yosef Yitzhaq ஆகிய இருவருக்கும், முதுபெரும் தந்தை Fouad Twal உட்பட பல கத்தோலிக்கத் தலைவர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இரு தனிப்பட்ட வாழ்த்து மடல்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27ம் தேதி இச்செவ்வாயன்று, வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romanoவில் வெளியான இம்மடல்களில், எருசலேம் முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்கள் இருவரையும் விரைவில் சந்திக்கும் தன் ஆவலையும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. குர்திஸ்தான் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், வேறு இடங்களுக்குக் குடிபெயர்வதை நிறுத்தவேண்டும் - கல்தேய முதுபெரும்தந்தை Raphael Luis Sako

ஆக.28,2013. ஈராக் நாட்டின் மேற்கில் அமைந்துள்ள குர்திஸ்தான் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள், தங்கள் இல்லங்களை விற்றுவிட்டு வேறு இடங்களுக்குக் குடிபெயர்வதை நிறுத்தவேண்டும் என்று அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறினார்.
கடந்த ஒருவார அளவில் குர்திஸ்தான் பகுதியில் அமைந்துள்ள Zakho Emmadea மறைமாவட்டத்தில் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்ட கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை Raphael Luis Sako அவர்கள், அப்பகுதியில் 2000 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்கள், தொடர்ந்து அப்பகுதியில் வேரூன்றி வாழவேண்டும் என்று வேண்டுகோளை விடுத்தார்.
கிறிஸ்துவ மறை தொடங்கிய காலத்திலிருந்தே அப்பகுதிகளில் வாழ்ந்துவரும் கிறிஸ்தவர்கள், கடந்த இருபது நூற்றாண்டுகளாக பல்வேறு போராட்டங்களின் மத்தியிலும் உறுதியுடன் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டிய முதுபெரும்தந்தை சாகோ அவர்கள், கடந்த பத்தாண்டுகளில் அப்பகுதியில் 6,00,000க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் வெளியேறியுள்ளதையும் வருத்தத்துடன் எடுத்துரைத்தார்.
ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் Shia மற்றும் Sunni முஸ்லிம் பிரிவினரிடையே உருவாகியுள்ள மோதல்களால், குர்திஸ்தான் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எடுத்துரைத்த முதுபெரும்தந்தை சாகோ அவர்கள், அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பல்வேறு உதவிகள் தேவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அப்பகுதியில் நிலவும் வன்முறைகளை நிறுத்துவதோடு, அப்பகுதி மக்களுக்குத் தேவையான மருத்துவ மற்றும் கல்வி வசதிகளையும் உருவாக்கினால் மட்டுமே அங்குள்ள கிறிஸ்தவர்கள் அங்கு தங்கமுடியும் என்பதையும் பாபிலோன் முதுபெரும்தந்தை சாகோ அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides / AsiaNews

6. சிரியாவில் கடத்தப்பட்ட இயேசு சபை அருள் பணியாளர் Paolo Dall'Oglio விடுவிக்கப்பட செபமும், உண்ணாநோன்பும்

ஆக.28,2013. ஜூலை மாதம் சிரியாவில் கடத்தப்பட்ட இயேசு சபை அருள் பணியாளர் Paolo Dall'Oglio அவர்கள் விடுவிக்கப்படவும், சிரியாவில் நிலவும் அமைதியற்றச் சூழல் உரையாடல் வழியாக தீர்க்கப்படவும் செபமும், உண்ணாநோன்பும் மேற்கொள்ளப்பட்டன என்று அந்நாட்டு அருள் பணியாளர் ஒருவர் கூறினார்.
சிரியா கத்தோலிக்க வழிபாட்டு முறை தவ இல்லத்தின் தலைவர் அருள் பணியாளர் Jacques Mourad அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், ஆகஸ்ட் 28, இப்புதனன்று தங்கள் தவ இல்லத்தில் எத்தியோப்பிய நாட்டு புனித மோசே அவர்களின் திருநாள் கொண்டாடப்படுகிறது என்றும், இத்திருவிழாவின் திருவிழிப்பு நாளன்று அருள் பணியாளர் Dall'Oglio அவர்களுக்காகவும், சிரியா நாட்டுக்காகவும் செபமும், உண்ணாநோன்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும் கூறினார்.
கடத்திச் செல்லப்பட்டுள்ள அருள் பணியாளர் Dall'Oglio அவர்களைப் பற்றிய தகவல்கள் ஏதும் இதுவரை தெரியவில்லை என்றும், அவருக்காகவும், சிரியாவில் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் சிறப்பான செபமும் உண்ணாநோன்பும் மேற்கொள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதையும் அருள் பணியாளர் Mourad எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides / Zenit

7. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை இலங்கையில் மேற்கொண்டுள்ள பயணம்

ஆக.28,2013. காணாமல் போனோர் விவகாரம் உட்பட, இலங்கையில் உள்நாட்டு போரின்போது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளில் ஆழமாகக் கவனம் செலுத்தி, அவற்றுக்கு தீர்வுகாண தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்கள் வாக்களித்துள்ளார்.
ஆகஸ்ட் 25 இஞ்ஞாயிறு முதல் ஆகஸ்ட் 30 இவ்வெள்ளிக் கிழமை முடிய ஐ.நா.வின் உயர் அதிகாரி நவி பிள்ளை அவர்கள் இலங்கையில் மேற்கொண்டுள்ள பயணத்தையடுத்து கொழும்புவில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டு போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் சென்று ஐ.நா.வின் இந்த உயர் அதிகாரி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளதை ஊடகங்கள் பலவாறாக விமர்சனம் செய்துள்ளன.
இலங்கை உள்நாட்டுப் போரில் எவ்விதத் தடயமும் இன்றி காணாமற்போன தங்கள் உறவுகளின் புகைப்படங்களைத் தாங்கிய 800க்கும் அதிகமானோர், குறிப்பாக பெண்கள், நவி பிள்ளை அவர்களைச் சந்திக்க முயன்றும், காவல் துறையினரால் அவர்கள் தடை செய்யப்பட்டனர் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் பெரும்பான்மை எண்ணிக்கையில் உள்ள சிங்கள மக்களால் 1981ம் ஆண்டு தீயிட்டு அழிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தில், நவி பிள்ளை அவர்களுடன் அரசு அதிகாரிகள் மேற்கொண்ட ஒரு சந்திப்பின்போது, வெளியில் கூடியிருந்த பலர் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews / UCAN
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...