Wednesday 28 August 2013

Catholic News in Tamil / கத்தோலிக்கச்செய்திகள் - 24/08/13


1. வருகிற செப்டம்பரில் உரோமில் புலம்பெயர்ந்தோர் மையத்தைப் பார்வையிடுவார் திருத்தந்தை பிரான்சிஸ்

2. கர்தினால் Tauran : மத சுதந்திரம் இன்றி மனிதர் ஒரு வியாபாரப் பொருளாக மாறுகின்றார்

3. அர்ஜென்டினா அருள்பணியாளர் : கர்தினால் பெர்கோலியோ, திருத்தந்தையான பின்னும் எவ்வித மாற்றமும் இல்லை

4. ஒரிசாவில் அடக்குமுறைக்கு உள்ளான கிறிஸ்தவர்கள் மத்தியில் விசுவாசம் வளர்ந்துள்ளது, பேராயர் பார்வா

5. மியான்மார் கத்தோலிக்கர் : சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு மத சுதந்திரமும் இனங்களுக்கிடையே அமைதியும் அடித்தளங்கள்

6. பங்களாதேஷின் நெருக்கடிநிலை நீங்குவதற்கு உரையாடலும் ஒத்துழைப்பும் அவசியம், பல்சமயத் தலைவர்கள்

7. எகிப்துத் திருஅவை கடந்த 1,600 ஆண்டுகளில் முதன்முறையாக, திருப்பலியை இரத்து செய்துள்ளது

8. ஏப்ரல் 6, வளர்ச்சிக்கும், அமைதிக்குமான அனைத்துலக விளையாட்டு நாள்

9. புலம்பெயர்ந்த இலங்கை மக்களை ஆஸ்திரேலியா தடுத்து வைத்தது கொடூரச் செயல்: ஐநா

10. சீரான உணவுப் பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்

------------------------------------------------------------------------------------------------------

1. வருகிற செப்டம்பரில் உரோமில் புலம்பெயர்ந்தோர் மையத்தைப் பார்வையிடுவார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆக.,24,2013. உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்தும் புலம்பெயர்ந்தோர் மையத்தை வருகிற செப்டம்பரில் பார்வையிடவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமில் இயேசு சபையினரின் தாய் ஆலயமான ஜேசு ஆலயத்துக்குப் பின்புறத்திலுள்ள Astalli புலம்பெயர்ந்தோர் மையத்துக்கு வருகிற செப்டம்பர் 10ம் தேதி பிற்பகலில் செல்லவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மையத்தில் புலம்பெயர்ந்தோர்க்கு கடந்த 13 ஆண்டுகளாகத் தன்னார்வப் பணியாளர்களின் உதவியுடன் இலவச உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பார்வையிட வேண்டுமென்று கடந்த ஏப்ரலில் அம்மையத் தலைவர் அருள்பணி Giovanni La Manna விடுத்த அழைப்பை ஏற்று வருகிற செப்டம்பர் 10ம் தேதியன்று அங்குச் செல்கிறார் அவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. கர்தினால் Tauran : மத சுதந்திரம் இன்றி மனிதர் ஒரு வியாபாரப் பொருளாக மாறுகின்றார்

ஆக.,24,2013. மத சுதந்திரம் இன்றி மனிதர் ஒரு வியாபாரப் பொருளாக மாறுகின்றார் என்று, இத்தாலியின் ரிமினி நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் கூறினார் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran.
இம்மாதம் 18ம் தேதி முதல் நடைபெற்ற ஒரு வாரக் கூட்டத்தில் இவ்வெள்ளிக்கிழமை மாலை உரையாற்றிய கர்தினால் Tauran, மத சுதந்திரம் பற்றிப் பேசும்போது மதத்தைப் பற்றி நாம் பேசவில்லை, மாறாக, அனைத்துலக அளவில் தெளிவாக விளக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை பற்றிப் பேசுகிறோம் என்று கூறினார்.
ஒரு நாடோ அல்லது ஓர் அரசோ தனது குடிமக்களுக்கு நன்மனத்தின் அடிப்படையில் தாராளமாக வழங்குவது அல்ல மத சுதந்திரம் என்று விளக்கிய கர்தினால் Tauran, சமய சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் உரியது, அவர் அதைத் தனது தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும், பிறரது உரிமைகளைப் பாதிக்காத வகையில் தனியாகவோ அல்லது குழுவாகவோ கடைப்பிடிக்கிறார் என்று கூறினார்.
மத சுதந்திரம் மனிதரின் அடிப்படை உரிமை எனவும், இது, மனிதர் இறைவனோடு ஆள்-ஆள் உறவு கொள்வதற்கும், மனிதர் தனது இறை நம்பிக்கையை பொதுவில் சுதந்திரமாக அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தவுமான சுதந்திரம் எனவும் கூறினார் கர்தினால் Tauran.
கடந்த ஞாயிறன்று தொடங்கிய ரிமினி கூட்டம் இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது. மக்கள் மத்தியில் நட்பை வளர்ப்பதற்கென 1980ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இக்கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த பல்சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என, பல முக்கிய தலைவர்கள் தங்களின் விசுவாச அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. அர்ஜென்டினா அருள்பணியாளர் : கர்தினால் பெர்கோலியோ, திருத்தந்தையான பின்னும் எவ்வித மாற்றமும் இல்லை

ஆக.,24,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Buenos Aires உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியபோது அவரின் அணுகுமுறை எவ்வாறு இருந்ததோ அவ்வாறே அவர் திருத்தந்தையானபின்னரும் இருக்கின்றது என்று அர்ஜென்டினா தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.
இத்தாலியின் ரிமினி நகரில் நடைபெற்ற கூட்டத்தின் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்த அருள்பணி José Maria di Paola, கர்தினால் கோர்கே மாரியோ பெர்கோலியோ Buenos Airesல் செய்த பணிகளை இப்போது திருத்தந்தையாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கண்ணோட்டத்திலும், மக்களோடு அவர் கொள்ளும் உறவிலும் இப்போது எவ்வித மாற்றமும் காணப்படவில்லை என்றும், அவர் Buenos Aires பேராயராக இருந்தபோது எவ்வாறு செயலாற்றினாரோ அவ்வாறே இப்போதும் செயல்புரிகின்றார் என்றும் அருள்பணி di Paola கூறினார்.
அர்ஜென்டினாவில் முப்பது ஆண்டுகள் அருள்பணியாளராகப் பணியாற்றி வரும் அருள்பணி di Paola தனது வாழ்வின் பெரும்பகுதியை Buenos Aires மாநகரின் சேரி மக்களுக்குச் சேவை செய்வதில் செலவழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அருள்பணி di Paola, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆதாரம் : CNA

4. ஒரிசாவில் அடக்குமுறைக்கு உள்ளான கிறிஸ்தவர்கள் மத்தியில் விசுவாசம் வளர்ந்துள்ளது, பேராயர் பார்வா

ஆக.,24,2013. ஒரிசாவின் கந்தமாலில் இடம்பெற்ற திட்டமிட்ட வன்செயல்கள், கிறிஸ்தவச் சமூகத்தின் வாழ்வையும் வீடுகளையும் புனித இடங்களையும் அழித்துள்ளன, ஆனால் அவை, அச்சமூகத்தின்  விசுவாசம் மலர்ந்து வளர உதவியுள்ளன என, கட்டாக்-புபனேஷ்வர் பேராயர் ஜான் பார்வா கூறினார்.
கந்தமாலில் கிறிஸ்தவர்க்கெதிரான திட்டமிட்ட படுகொலைகளும் வன்செயல்களும் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி இஞ்ஞாயிறன்று நினைவுகூரப்படுவதையொட்டி ஃபீதெஸ் மற்றும் ஆசியச் செய்தி நிறுவனங்களிடம் இவ்வாறு கூறினார் பேராயர் பார்வா.
மேலும், இவ்வடக்குமுறைகள், கிறிஸ்தவர்கள் மத்தியில் இனம், மதம் என்ற வேறுபாடின்றி சகோதரத்துவ உணர்வையும் வளர்த்துள்ளன எனவும் பேராயர் தெரிவித்தார்.
மறைசாட்சிகளின் இரத்தம் கிறிஸ்தவர்களின் வித்து என்ற திருஅவைத் தந்தை தெர்த்தூலியன் அவர்களின் புகழ்மிக்க கூற்று, கந்தமால் திருஅவையின் வளர்ச்சியில் உண்மையாகியுள்ளது என்றும் பேராயர் பார்வா கூறினார்.
2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி கந்தமாலில் இடம்பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான திட்டமிட்ட வன்செயல்களில் ஏறக்குறைய 400 கிறிஸ்தவக் கிராமங்களில் 6,000த்துக்கு மேற்பட்ட வீடுகளும் 340 ஆலயங்களும் பள்ளிகளும் மருந்தகங்களும் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் காயமடைந்தனர். ஓர் அருள்சகோதரி உட்பட பல பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகினர். ஆண்கள், பெண்கள், சிறார் என ஏறக்குறைய அறுபதாயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.

ஆதாரம் : Fides/AsiaNews

5. மியான்மார் கத்தோலிக்கர் : சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு மத சுதந்திரமும் இனங்களுக்கிடையே அமைதியும் அடித்தளங்கள்

ஆக.,24,2013. மியான்மார் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சி, தனிமனிதச் சுதந்திரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று யாங்கூன் பேராயர் உள்ளிட்ட அந்நாட்டின் கத்தோலிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
யாங்கூன் பேராயர் Charles Bo, உலகளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டுக் கழகத்தின்(CSW) உறுப்பினர் Benedict Rogers ஆகிய இருவரும் இணைந்து, மியான்மாரின் இன்றைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு  அனுப்பியுள்ள செய்தியில், அந்நாட்டில் உண்மையான அமைதி ஏற்படுவதற்கு பல்வேறு இன மற்றும் மதங்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளனர்.
2012ம் ஆண்டில் ரக்கின் மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை தொடங்கியதிலிருந்து முஸ்லீம்களுக்கு எதிரானப் பிரச்சாரமும் வன்முறையும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், கச்சின் மாநிலத்தில் தற்போது இடம்பெற்றுவரும் சண்டை உடனடியாக நிறுத்தப்பட்டு, கச்சின் சுதந்திர நிறுவனத்தோடு(KIO) உரையாடல் தொடங்கப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளனர்.
ரக்கின் மாநிலத்தில் இடம்பெயர்ந்துள்ள 1,30,000 முஸ்லீம்கள் கொடூரமான சூழலில் வாழ்வதாகவும், அவர்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டுமெனவும் அக்கத்தோலிக்கத் தலைவர்கள் கேட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides/AsiaNews

6. பங்களாதேஷின் நெருக்கடிநிலை நீங்குவதற்கு உரையாடலும் ஒத்துழைப்பும் அவசியம், பல்சமயத் தலைவர்கள்

ஆக.,24,2013.  பங்களாதேஷின் தற்போதைய அரசியல் தொய்வுநிலை மற்றும் சமூக நெருக்கடிகளைக் களைவதற்கு, அந்நாட்டின் மதங்கள் மத்தியில் ஒன்றிப்பும், ஒத்துழைப்பும், உரையாடலும் அவசியம் என்று அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள் கூறினர்.
பங்களாதேஷின் தற்போதைய நிலைமை குறித்து கலந்து பேசுவதற்கென டாக்காவில் இடம்பெற்ற பல்சமயக் கருத்தரங்கில் கலந்து கொண்ட தலைவர்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டனர்.
பங்களாதேஷின் இந்து, முஸ்லீம், புத்தம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் பேசிய கத்தோலிக்கப் பேராசிரியர் Mabel Gomes, சிறுபான்மை சமய மற்றும் இனத்தவர் நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய மிதவாத இஸ்லாமிய நாடாக பங்களாதேஷ் உருவாக முடியும் என்று கூறினார்.
இக்கருத்தரங்கில் நூறு பேர் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : AsiaNews

7. எகிப்துத் திருஅவை கடந்த 1,600 ஆண்டுகளில் முதன்முறையாக, திருப்பலியை இரத்து செய்துள்ளது

ஆக.,24,2013. எகிப்தில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் வெறுப்புமிகுந்த தாக்குதல்களில் கிறிஸ்தவர்கள் மையப்படுத்தப்படுவதால், அந்நாட்டின் Minyaவிலுள்ள ஆலயம் ஒன்றில் கடந்த 1,600 ஆண்டுகளில் முதன்முறையாக, தற்போது ஞாயிறு திருப்பலி இரத்து செய்யப்பட்டுள்ளது. 
கடந்த 1,600 ஆண்டுகளில் முதன்முறையாக, தற்போது ஞாயிறு செபங்களைத் தாங்கள் நடத்தவில்லையென்று Minyaவின் தெற்கேயுள்ள Degla துறவு இல்லத்தின் அருள்பணி இப்ராம் கூறினார்.
ஆட்சி கவிழ்க்கப்பட்ட எகிப்திய அரசுத்தலைவர் முகமது மோர்சியின் ஆதரவாளர்கள் இந்தத் துறவு இல்லத்திலுள்ள மூன்று ஆலயங்கள் உட்பட அவ்வில்லத்தை அழித்துள்ளனர் எனவும் அருள்பணி இப்ராம் தெரிவித்தார்.
எகிப்திய மக்கள்தொகையில் 10 முதல் 12 விழுக்காட்டினர் காப்டிக் கிறிஸ்தவர்கள்.

ஆதாரம் : UCAN

8. ஏப்ரல் 6, வளர்ச்சிக்கும், அமைதிக்குமான அனைத்துலக விளையாட்டு நாள்

ஆக.,24,2013. வளர்ச்சிக்கும், அமைதிக்குமான அனைத்துலக விளையாட்டு நாளாக ஏப்ரல் 6ம் தேதியை இவ்வெள்ளியன்று அறிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை.
ஐ.நா. பொது அவையின் இவ்வறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த, ஐ.நா. பொது அவையின் தலைவர் Vuk Jeremic, உலகெங்கும் கலாச்சாரத் தடைகளை அகற்றி மக்களை ஊக்கப்படுத்துவதற்கு உதவும் சக்தியாக விளையாட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை இவ்வறிவிப்பு காட்டுகின்றது என்று கூறினார்.
விளையாட்டு, உலகின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் முக்கிய பங்காற்ற முடியும் எனவும் Vuk Jeremic கூறினார்.

ஆதாரம் : UN

9. புலம்பெயர்ந்த இலங்கை மக்களை ஆஸ்திரேலியா தடுத்து வைத்தது கொடூரச் செயல்: ஐநா

ஆக.,24,2013. புலம்பெயர்ந்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் 46 பேரை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி ஆஸ்திரேலியா காலவரையின்றி தடுத்து வைத்திருப்பது, கொடூரமான, மனிதத் தன்மையற்ற மற்றும் இழிவுபடுத்தும் விதமான செயல் என்று ஐ.நா. குறைகூறியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் இச்செயல் காரணமாக தடுத்துவைக்கப்பட்டவர்கள் கடுமையான உளவியல் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று இவர்களது வழக்குகளை ஆய்வுசெய்த ஐ.நா. குழுவொன்று கண்டறிந்துள்ளது.
குறைந்தது இரண்டரை ஆண்டுகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர்களை ஆஸ்திரேலியா உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்களுக்கு இழப்பீடும், புனர்வாழ்வும் அளிக்க வேண்டும் என ஜெனீவாவிலிருந்து இயங்கும் மனித உரிமைகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் 42 பேர், மியான்மாரின் ரோஹிஞ்சாக்கள் 3 பேர், குவைத் குடிமகன் ஒருவர் என இந்த 46 பேர் தாங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஐநா மனித உரிமைக் குழுவிடம் முறையிட்டிருந்தனர்.
மேலும், தாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஆஸ்திரேலிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடர, தங்களுக்கு வழியில்லாமல் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : UN

10. சீரான உணவுப் பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்

ஆக.,24,2013. பிரிட்டனைச் சேர்ந்த, 59 வயது நபர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட சர்க்கரை நோயை, உணவுக் கட்டுப்பாட்டின்மூலம் 11 நாட்களில் குணப்படுத்தியுள்ள இவரின் செயல், உலக சர்க்கரை நோயாளிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது எனக் கூறப்படுகின்றது.
இலண்டனைச் சேர்ந்த 59 வயதான Richard Doughty என்பவர் அதிகப்படியான கலோரிகள் உடைய உணவுப் பொருட்களை உட்கொண்டதாலேயே அவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
"குறைந்த கலோரிகள் உடைய உணவை உட்கொள்வதின்மூலம், எட்டு வாரங்களில் சர்க்கரை நோயைக் குணப்படுத்தலாம்' என, Newcastle பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் வகுத்த, அட்டவணைப்படி, ஒரு நாளைக்கு, 800 கலோரிகளைத் தரும் உணவை மட்டுமே உட்கொள்ள ரிச்சர்டு திட்டமிட்டு தனது நோயைக் குணமாக்கியுள்ளார்.

ஆதாரம் : Deccan

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...