Wednesday, 28 August 2013

Catholic News in Tamil / கத்தோலிக்கச்செய்திகள் - 22/08/13


1. எர்ணாகுளம்-அங்கமலி சீரோ மலபார் உயர்மறைமாவட்டத்துக்குப் புதிய  துணை ஆயர்

2. டுவிட்டரில் திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவரே, எங்களைவிட்டு வெளியே வர எமக்குக் கற்பித்தருளும்

3. வத்திக்கான் : மனித வியாபாரம், நவீன அடிமைத்தனம் குறித்தப் பரிசீலனைக் கூட்டம்

4. சிரியாவில் வேதியத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறித்த செய்திகளுக்கு வத்திக்கான் அதிகாரி எச்சரிக்கை

5. முதுபெரும் தந்தை Raï: மத்திய கிழக்கில் இடம்பெறும் சண்டையில் கிறிஸ்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

6. எகிப்தில் வன்முறை முடிவுக்கு வர கிறிஸ்தவத் தலைவர்கள் செபம்

7. பாகிஸ்தான் பேராயர் : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூண்டுதலின் விலைமதிப்பில்லா ஊற்றாக இருக்கிறார்

8. நவீன அடிமைத்தனம் ஒழிக்கப்பட ஐ.நா. பொதுச்செயலர் அழைப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. எர்ணாகுளம்-அங்கமலி சீரோ மலபார் உயர்மறைமாவட்டத்துக்குப் புதிய  துணை ஆயர்

ஆக.,23,2013. கேரளாவின் எர்ணாகுளம்-அங்கமலி சீரோ-மலபார் உயர்மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக அருள்பணி Jose Puthenveettil அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்குத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்அனுமதியுடன் கேரளாவின் புனித தாமஸ் மலையில் கூடிய சீரோ-மலபார் வழிபாட்டுமுறை பேரவை, அருள்பணி Jose Puthenveettil அவர்களை, எர்ணாகுளம்-அங்கமலி சீரோ-மலபார் உயர்மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
1961ம் ஆண்டு கேரளாவின் Edappally பிறந்த புதிய துணை ஆயர் Puthenveettil, 1987ம் ஆண்டில் குருவானார். பெல்ஜியத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், Vadavathoor குருத்துவக் கல்லூரியில் பத்தாண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 
திருஅவை சட்டப்படி, கீழை வழிபாட்டுமுறைகளின் பேரவைகள் அந்தந்தத் திருஅவைகளின் ஆயர்களைத் தேர்வு செய்கின்றன. இதற்கு திருத்தந்தை ஒப்புதல் அளிக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. டுவிட்டரில் திருத்தந்தை பிரான்சிஸ் : ஆண்டவரே, எங்களைவிட்டு வெளியே வர எமக்குக் கற்பித்தருளும்

ஆக.,23,2013. ஆண்டவரே, நாங்கள் எங்களைவிட்டு வெளியே வரவும்,  நாங்கள் தெருக்களுக்குச் சென்று உமது அன்பை வெளிப்படுத்தவும் எமக்குக் கற்றுத்தாரும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், நாம் ஒவ்வொருவரும் நமது சுயத்தைவிட்டு வெளியே வந்து கிறிஸ்துவின் அன்பை பொதுவில் வெளிப்படுத்த வேண்டுமென்று கேட்டுள்ளார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Lumen Fidei என்ற முதல் திருமடல், இத்தாலியில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் நூல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
இத்திருமடல் விற்பனைக்கு வந்த கடந்த ஜூலை 5ம் தேதியிலிருந்து இதுவரை இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Libreria Editrice Vaticana என்ற வத்திக்கானின் அதிகாரப்பூர்வ நூல் வெளியீட்டு நிறுவன அதிகாரியின் கூற்றுப்படி, இந்நிறுவனத்தில் மட்டும் Lumen Fidei திருமடலின் இரண்டு இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன எனத் தெரிகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. வத்திக்கான் : மனித வியாபாரம், நவீன அடிமைத்தனம் குறித்தப் பரிசீலனைக் கூட்டம்

ஆக.,23,2013. உலக அளவில் அதிகரித்துவரும் மனித வியாபாரம் மற்றும் நவீன அடிமைத்தனத்தை ஒழிப்பதற்குச் சிறந்த வழிமுறைகளை ஆய்வு செய்யும் நோக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளின்பேரில் வத்திக்கான் வல்லுனர்கள் வருகிற நவம்பரில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
இக்கூட்டம் குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய, திருப்பீட சமூக அறிவியல் கழகத்தின் தலைவர் ஆயர் Marcelo Sánchez Sorondo, இக்காலச் சமூகத்தை மிகவும் பாதித்துள்ள மனித-வியாபாரச் சீர்கேட்டை கத்தோலிக்க நிறுவனங்களால் ஒழிக்க முடியும் என்பதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.
உலக அளவில் அதிகரித்துவரும் மனித வியாபாரக் குற்றத்தை இரண்டாயிரமாம் ஆண்டில்தான் ஐக்கிய நாடுகள் நிறுவனம் உணர ஆரம்பித்தது என்றும் கூறினார் ஆயர் Sánchez Sorondo.
திருப்பீட சமூக அறிவியல் கழகமும், கத்தோலிக்க மருத்துவக் கழகங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பும் இணைந்து வருகிற நவம்பர் 2,3 தேதிகளில் வத்திக்கானில் இக்கூட்டத்தை நடத்தவுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய 2 கோடியே 90 இலட்சம் பேர் மனித வியாபாரக் குற்றத்தில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், உலகில் ஆண்டுதோறும் பாலியல் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்படும் ஏறக்குறைய 20 இலட்சம் பேரில் 60 விழுக்காட்டினர் சிறுமிகள் என்று மனித வியாபாரம் குறித்த ஐ.நா. அலுவலகத்தின் 2012ம் ஆண்டின் அறிக்கை கூறுகிறது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. சிரியாவில் வேதியத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறித்த செய்திகளுக்கு வத்திக்கான் அதிகாரி எச்சரிக்கை 

ஆக.,23,2013. போர் மற்றும் மோதல்கள் இடம்பெறும் காலங்களில் தீர்ப்பிடுவதற்கு விரைவது, குறிப்பாக ஊடகத்துறையினர் விரைந்து தீர்ப்பிட முயற்சிப்பது ஒருபோதும் உண்மைக்கு இட்டுச்செல்லாது மற்றும் அமைதியைக் கொண்டு வராது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
சிரியாவின் தமஸ்கு நகருக்கு வெளியே வேதிய ஆயுதத் தாக்குதல்கள் இடம்பெற்றன என்ற செய்திகள் வெளியான பின்னர் வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு எச்சரித்துள்ளார்.
சிரியாவின் அரசுப் படைகள் நச்சுகலந்த வாயுக்களைப் பயன்படுத்தின என்ற குற்றச்சாட்டை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி மறுத்துள்ள அதேவேளை, இந்த வேதியத் தாக்குதல்களில் ஆயிரத்துக்கு அதிகமானோர் இறந்துள்ளனர் என சிரியாவின் எதிர்தரப்புப் படைகள் கூறுகின்றன என்றும் பேராயர் கூறினார்.
சிரியாவில் நடந்துள்ள தாக்குதல்களில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது சரியாகத் தெளிவாக்கப்பட வேண்டும் என்றுரைத்த பேராயர் தொமாசி, மோதல்கள் இடம்பெறும் இடங்களில் உடனடியாக ஒரு தீர்வுக்கு வருவது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் எனவும் தெரிவித்தார்.
சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இடம்பெற்றுவரும் சண்டையில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 10 இலட்சம் சிறார் உட்பட 17 இலட்சத்துக்கு மேற்பட்டோர் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என ஐ.நா. கூறியுள்ளது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. முதுபெரும் தந்தை Raï: மத்திய கிழக்கில் இடம்பெறும் சண்டையில் கிறிஸ்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

ஆக.,23,2013. மத்திய கிழக்குப் பகுதியின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகின்றது என்று அந்தியோக்கியாவின் மாரனைட் முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Boutros Raï கூறினார்.
மத்திய கிழக்கின் இன்றையநிலை குறித்து இவ்வெள்ளியன்று வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் Raï, எகிப்தில், சிரியாவில், ஈராக்கில் என இக்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறும் சண்டைகள் இரு கூறுகளைக் கொண்டுள்ளன எனத் தெரிவித்தார்.
ஈராக்கிலும், சிரியாவிலும் சுன்னி மற்றும் ஷியைய்ட் இஸ்லாம் மதப் பிரிவுகளுக்கு இடையேயும், எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புக்கும் மிதவாத முஸ்லீம்களுக்கும் இடையேயும் சண்டைகள் முடிவின்றி நடைபெறுகின்றன, ஆயினும் இச்சண்டைகள் மேலும் தீவிரமடைவதற்கு முக்கியமாக மேற்கத்திய நாடுகள் காரணம் என்று தெரிவித்தார் கர்தினால் Raï.
இச்சண்டைகளுக்கு கிழக்கத்திய நாடுகளும் காரணம் என்று தெரிவித்த கர்தினால் Raï, இப்பகுதிகளில் 1400 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும், இங்கு மனித, ஒழுக்க மதிப்பீடுகள் வளரக் கிறிஸ்தவர்கள் ஒரு பிணைப்பாக இருந்துள்ளனர் என்றும் கூறினார்.
1400 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் கட்டியெழுப்பிய அனைத்தும் இக்காலத்தில் நடைபெறும் சண்டைகளால் அழிந்து வருகின்றன, முஸ்லீம்களுக்கு இடையே இடம்பெறும் இச்சண்டைகளுக்கு கிறிஸ்தவர்கள் பலிகடா ஆகின்றனர் என்று கவலை தெரிவித்தார் கர்தினால் Raï.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. எகிப்தில் வன்முறை முடிவுக்கு வர கிறிஸ்தவத் தலைவர்கள் செபம்

ஆக.,23,2013. எகிப்தில் இடம்பெறும் இரத்தம் சிந்தும் வன்முறை முடிவுக்கு வரவும், குடியரசு, மாண்பு, சமயச்சுதந்திரம் ஆகிய விழுமியங்கள் பாதுகாக்கப்படவும் வேண்டுமென எருசலேமில் கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், ஆங்லிக்கன் மற்றும் லூத்தரன் சபைகளின் தலைவர்கள் செபித்தனர்.
எருசலேமிலுள்ள கிறிஸ்தவ சபைகளின் 13 முதுபெரும் தந்தையரும் தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், எகிப்தின் இன்றையநிலை குறித்தும், அந்நாட்டில் கிறிஸ்தவ ஆலயங்களின் தூய்மைத்தன்மைக்கு கேடு நடந்திருப்பது குறித்தும் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ அப்பாவி மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் பயங்கரவாதச் செயல்கள், திட்டமிட்ட வன்முறைகள், உட்பிரிவுகள் ஆகியவற்றால் எகிப்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் அத்தலைவர்களின் அறிக்கை கூறுகின்றது.
எகிப்தில் சண்டையிடும் அனைத்துக் கட்சிகளும் வன்முறையையும் கொலைகளையும் நிறுத்தி தேசிய ஒற்றுமைக்காக உழைக்குமாறு கேட்டுள்ள அத்தலைவர்கள், இதற்கான அர்ப்பணமில்லாமல் இருந்தால், அந்நாடு உள்நாட்டுச் சண்டையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளனர். 

ஆதாரம் : CNS

7. பாகிஸ்தான் பேராயர் : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூண்டுதலின் விலைமதிப்பில்லா ஊற்றாக இருக்கிறார்

ஆக.,23,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தாழ்மைப் பண்பு,  விலைமதிப்பில்லாத் தூண்டுகோலாக நம் அனைவருக்கும் இருக்கின்றது என்று, பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் கூறினார் கராச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ்.
"Jesus Youth Pakistan"(JYP) என்ற கத்தோலிக்க இளையோர் கழகம், கராச்சியின் Notre Dame நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்த, சமூக மாற்றம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் கூட்ஸ், ஒருவர் சமூக மாற்றத்தில் உண்மையாகவே அக்கறை கொண்டிருந்தால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்வுமுறையை அவர் உன்னிப்பாய்க் கவனித்து வரவேண்டுமென்று கூறினார்.
பட்டதாரிகள், பல்வேறு தொழில்புரிவோர், அரசியல் தலைவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்ட இக்கருத்தரங்கில் பேசிய பேராயர் கூட்ஸ், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சக்தி, அரசியல் சார்ந்தது அல்ல, மாறாக, அன்பும் சேவையும் சார்ந்தது என்று தெரிவித்தார். 

ஆதாரம் : Fides                         

8. நவீன அடிமைத்தனம் ஒழிக்கப்பட ஐ.நா. பொதுச்செயலர் அழைப்பு

ஆக.,23,2013. இன்றைய நமது உலகில் நிலவும் அடிமைத்தனம் களையப்படவும், மனித வியாபாரத்துக்குப் பலியானவர்களின் மாண்பு மதிக்கப்படவுமான நடவடிக்கைகளில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் அடிமை வியாபாரத்துக்குப் பலியானவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாளான இவ்வெள்ளிக்கிழமையன்று இவ்வாறு கேட்டுள்ளார் பான் கி மூன்.
இந்த அனைத்துலக நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இலட்சக்கணக்கான ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபட உதவிய ஆபிரகாம் லிங்கன் அவர்களின் அடிமை ஒழிப்புச் சட்டம் அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு, இந்த 2013ம் ஆண்டில் சிறப்பிக்கப்படுவதையும் குறிப்பிட்டுள்ளார்.
ஏறக்குறைய 400 ஆண்டுகளாக இடம்பெற்ற அட்லாண்டிக் பெருங்கடல் அடிமைவியாபாரத்தில் ஒரு கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் எனவும், இந்த அடிமைத்தனத்தின் பாதிப்பு இன்றும் இருக்கின்றது என்றும் பான் கி மூன் கூறியுள்ளார்.
170 ஆண்டுகளுக்கு முன்னர் கானடா, பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நன்னம்பிக்கை முனையிலும்,  165 ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்சிலும், 160 ஆண்டுகளுக்கு முன்னர் அர்ஜென்டினாவிலும், 150 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் டச்சு காலனிகளிலும், 125 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசிலிலும் அடிமைவியாபாரம் ஒழிக்கப்பட்டது இவ்வாண்டில் நாம் நினைவுகூருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1791ம் ஆண்டு ஆகஸ்ட் 22க்கும் 23க்கும் இடைப்பட்ட இரவில் Santo Domingoவில்(தற்போதைய Haiti மற்றும் Dominican Republic இருக்குமிடம்) முதன் முதலாக அடிமை வியாபாரத்துக்கு எதிரான கிளர்ச்சி எழுந்தது. இதைமுன்னிட்டு, அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் அடிமைவியாபாரத்துக்குப் பலியானவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 23ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...