Wednesday, 28 August 2013

Catholic News in Tamil / கத்தோலிக்கச்செய்திகள் - 27/08/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நம் ஒவ்வொருவருக்கும் மீட்பைத் திறக்கும் வாயில்

2. புனித அகுஸ்தீன் துறவு சபைப் பொதுப்பேரவையின் தொடக்க நிகழ்வாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பலி

3. சிரியாவின் தற்போதைய நெருக்கடிக்குப் பதிலளிக்க வேண்டியது அனைத்துலக சமுதாயத்தின் கடமை, திருப்பீடத் தூதர்

4. அமெரிக்க ஐக்கிய நாடு, எகிப்துக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க ஆயர்கள் வலியுறுத்தல்

5. வருகிற அக்டோபரில், அமேசான் பகுதி குறித்த மாபெரும் கருத்தரங்கு

6. முத்திப்பேறுபெற்ற அன்னை தெரசாவின் 103வது பிறந்த நாள்

7. சிறார் தொழில் முறைகளைக் களைவதற்கு ஐ.நா.வின் புதிய வழிகாட்டிகள்

8. உணவுப் பாதுகாப்பு மசோதா மூலம் 82 கோடி மக்கள் பயன்பெறுவர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு நம் ஒவ்வொருவருக்கும் மீட்பைத் திறக்கும் வாயில்

ஆக.,27,2013. இயேசு நம் ஒவ்வொருவருக்கும் மீட்பைத் திறக்கும் வாயில். தன்னலம், அக்கறையின்மை, குறுகிய மனப்பான்மை ஆகியவற்றைப் புறந்தள்ளி  நமது வாழ்வில் இயேசுவை அனுமதிப்போம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், ப்ரெஞ்ச், போலந்து, அரபு ஆகிய ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜோர்டன் அரசர் Abdallah Ibn Husayn அவர்களை வருகிற வியாழனன்று வத்திக்கானில் சந்திக்கவுள்ளார் என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் இச்செவ்வாயன்று அறிவித்தது.
இச்சந்திப்பு, ஜோர்டன் அரசருக்கும், திருத்தந்தைக்கும் இடையே வத்திக்கானில் நடைபெறும் முதல் சந்திப்பாக இருக்கும்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் 2009ம் ஆண்டில் புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டபோது அரசர் Abdallah, Ammanல் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. புனித அகுஸ்தீன் துறவு சபைப் பொதுப்பேரவையின் தொடக்க நிகழ்வாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருப்பலி

ஆக.,27,2013. புனித அகுஸ்தீன் துறவு சபையினரின் பொதுப்பேரவையை, திருப்பலி நிகழ்த்தி தொடங்கிவைக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித அகுஸ்தீன் திருவிழாவான இப்புதனன்று உரோம் Campo Marzioவிலுள்ள புனித அகுஸ்தீன் பசிலிக்காவில் திருப்பலி நிகழ்த்தி புனித அகுஸ்தீன் துறவு சபையினரின் பொதுப்பேரவையை ஆரம்பித்துவைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித அகுஸ்தீன் அவர்களின் அன்னையாகிய புனித மோனிக்காவிடம் திருத்தந்தை பிரான்சிஸ் மிகுந்த பக்தி கொண்டவர் எனவும், திருத்தந்தை, இப்புனிதரின் கல்லறையை அடிக்கடி தரிசித்து செபிப்பது வழக்கம் எனவும் புனித அகுஸ்தீன் துறவு சபையின் கர்தினால் Prospero Grech கூறினார்.
இப்புதனன்று தொடங்கும் புனித அகுஸ்தீன் துறவு சபையின் 184வது பொதுப்பேரவையில் உலகெங்கிலுமிருந்து ஏறக்குறைய நூறு பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்பொதுப் பேரவையில் அச்சபையின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
தொடக்ககாலக் கிறிஸ்தவ சமூகங்கள் வாழ்ந்த வாழ்வை வாழ்ந்து அதனை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ஹிப்போ நகர் ஆயர் புனித அகுஸ்தீன் அவர்களின் போதனைகளின் அடிப்படையில் 1244ம் ஆண்டு புனித அகுஸ்தீன் துறவு சபை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இச்சபையினர் 5 கண்டங்களின் 50 நாடுகளில் பணியாற்றுகின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. சிரியாவின் தற்போதைய நெருக்கடிக்குப் பதிலளிக்க வேண்டியது அனைத்துலக சமுதாயத்தின் கடமை, திருப்பீடத் தூதர்

ஆக.,27,2013. சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின் அழுகுரலுக்கு முன்பாக அனைத்துலகச் சமுதாயம் மௌனம் காக்கக் கூடாது என்று சிரியாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் மாரியோ செனாரி கூறினார்.
சிரியாவில் கடந்த சில நாள்களில் இடம்பெற்ற பயங்கரமானத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலர் பலியாகியுள்ளவேளை, இத்தாக்குதல்கள் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் செனாரி, சிரியாவின் தற்போதைய நெருக்கடிக்குப் பதிலளிக்க வேண்டியது அனைத்துலகச் சமுதாயத்தின் கடமை என்று கூறினார்.
சிரியாவில் இடம்பெற்றுள்ள அண்மைத் தாக்குதல்களின் பாதிப்புக்கள் நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன என்றுரைத்த பேராயர் செனாரி, அப்பாவிச் சிறாரின் அழுகுரல்களைத் தான் கேட்டதாகவும், இக்குரல்கள் இறைவனையும், அனைத்துலகச் சமுதாயத்தையும் நோக்கி எழும்பும் அழுகுரல்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், சிரியாவின் தற்போதைய நெருக்கடிநிலை, உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் முன்வைக்கப்படும் மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி Lakhdar Brahimi கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. அமெரிக்க ஐக்கிய நாடு, எகிப்துக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க ஆயர்கள் வலியுறுத்தல்

ஆக.,27,2013. எகிப்தில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு சட்டமும் மக்களாட்சியும் கொண்டுவரப்படுவதற்கு அந்நாட்டினர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாக, அமெரிக்க ஐக்கிய நாடு அனைத்துலக சமுதாயத்துடன் சேர்ந்து செயல்படுமாறு கேட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.
இது குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுச் செயலர் John Kerryக்கு கடிதம் அனுப்பியுள்ள, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் Richard Pates, எகிப்தில், அமைதி, மனித உரிமைகள் மற்றும் சமய சுதந்திரத்தை ஊக்குவிக்கும் உரையாடல் மற்றும் ஒப்புரவின் பாதை மேற்கொள்ளப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
எகிப்தில் இடம்பெறும் இரத்தம் சிந்தும் வன்முறைகளுக்கு மத்தியில், அந்நாட்டின் கிறிஸ்தவர்கள், தீவிரவாதிகளுக்குப் பலிகடாக்களாகிவருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ள ஆயர் Pates, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து அந்நாட்டில் துன்புறும் மக்களுக்காக அமெரிக்க ஆயர்களும் செபிப்பதாகத் தெரிவித்துள்ளார்.  
அமெரிக்க ஐக்கிய நாடு, எகிப்துக்கான மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை அதிகரிக்குமாறு கேட்டுள்ள ஆயர் Pates, எகிப்தின் அரசியல் குழப்பம் மற்றும் கடும் வன்முறைகளுக்கு ஏழைகளும் அப்பாவி மக்களும் பலிகடா ஆகக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம் : Zenit                        

5. வருகிற அக்டோபரில், அமேசான் பகுதி குறித்த மாபெரும் கருத்தரங்கு

ஆக.,27,2013. பிரேசில் தலத்திருஅவை மற்றும் அந்நாட்டு நிறுவனங்களின் பணிகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி, பிரேசிலின் அமேசான் பகுதி என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதையடுத்து அமேசான் ஆயர் பேரவை வருகிற அக்டோபரில் பணிஆய்வுக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
அமேசான் பகுதியின் பூர்வீக இன மக்கள் மற்றும் அப்பகுதியின் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்குப் பிரேசில் ஆயர்கள் எடுத்துவரும் முயற்சிகளைத் திருத்தந்தை பாராட்டியதோடு, அப்பகுதியின் குருக்களை உருவாக்குவதில் தலத்திருஅவை இதுவரை எட்டியுள்ள பலன்கள் குறித்து சீர்தூக்கிப் பார்க்குமாறும் கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஜூலையில் பிரேசிலுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின்போது இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தையின் வேண்டுகோளுக்கிணங்கி அமேசான் மாநிலத் தலைநகர் Manausல், கர்தினால் Claudio Hummes அவர்கள் தலைமையில் வருகிற அக்டோபர் 28 முதல் 31 வரை இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
2007ம் ஆண்டில் பிரேசிலுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அமேசான் ஆயர் பேரவைக்கு 2 இலட்சம் டாலரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. முத்திப்பேறுபெற்ற அன்னை தெரசாவின் 103வது பிறந்த நாள்

ஆக.,27,2013. முத்திப்பேறுபெற்ற அன்னை தெரசாவின் 103வது பிறந்த நாள் இத்திங்களன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அன்னை தெரசா ஆரம்பித்த பிறரன்பு மறைபோதகச் சபையின் கொல்கத்தா தலைமையில்லத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் நன்றி கூறிய அச்சபையின் தலைமைச் சகோதரி பிரேமா, இறந்துகொண்டிருப்போர், ஏழைகள் மற்றும் துன்புறுவோருக்கு அன்னை தெரசா காட்டிய அன்பு எக்காலமும் நினைவுகூரப்படும் என்று கூறினார்.
மேலும், அமைதி, சகோதரத்துவம், மனித சமுதாயத்துக்குத் தொண்டு ஆகியவற்றின் திருத்தூதராக, சிறப்பாக, ஒதுக்கப்பட்டோர் மற்றும் ஏழைகளின் திருத்தூதராக அன்னை தெரசா விளங்கினார் என்று முதல்வர் மம்தா பானர்ஜி இந்நிகழ்வில் பேசினார்.
1910ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி தற்போதைய மாசிடோனியக் குடியரசின் Skopjeல் பிறந்த Agnes Gonxha Bojaxhiu, துறவு சபையில் தெரேசா என்ற பெயரை ஏற்று 1929ம் ஆண்டிலிருந்து 68 ஆண்டுகள் கொல்கத்தாவில் பணியாற்றியுள்ளார் அன்னை தெரசா. 1979ம் ஆண்டில் அமைதி நொபெல் விருதுபெற்ற அன்னை தெரசா, 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி காலமானார்.  

ஆதாரம் : IANS

7. சிறார் தொழில் முறைகளைக் களைவதற்கு ஐ.நா.வின் புதிய வழிகாட்டிகள்

ஆக.,27,2013. அடிமைத்தனம், சிறார் பாலியல் தொழில், போதைப்பொருள் வியாபாரம் உட்பட சிறார் தொழிலின் பல்வேறு அமைப்புமுறைகளை 2016ம் ஆண்டுக்குள் அகற்றும் நோக்கத்தில் நாடுகளுக்கு உதவும் புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது ஐ.நா.வின் அனைத்துலக தொழில் நிறுவனம். 
பல்வேறு சிறார் தொழில் அமைப்புமுறைகளுக்கு எதிரான நாடுகளின் நடவடிக்கைகளுக்கும், அனைத்துலக மற்றும் அரசு-சாரா நிறுவனங்களுக்கும் உதவும் வழிகாட்டிகளையும், பயிற்சிமுறைகளையும்  தயாரித்துள்ளது ILO என்ற  அனைத்துலக தொழில் நிறுவனம்.
பிரேசிலில் வருகிற அக்டோபர் 8 முதல் 10 வரை நடைபெறவிருக்கும் அனைத்துலக சிறார் தொழில் கருத்தரங்குக்கு முன்தயாரிப்பாக இவ்வழிகாட்டி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.  
ILO நிறுவனத்தின் கணிப்புப்படி உலகில் 11 கோடியே 50 இலட்சம் சிறார் பல கடினமான வேலைகளைச் செய்து வருகின்றனர்.

ஆதாரம் : UN

8. உணவுப் பாதுகாப்பு மசோதா மூலம் 82 கோடி மக்கள் பயன்பெறுவர்

ஆக.,27,2013. இந்தியாவில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு மசோதா, இத்திங்களன்று லோக்சபாவில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இத்திட்டத்தின்படி, 82 கோடி மக்களுக்கு, ஒரு ரூபாயிலிருந்து, மூன்று ரூபாய் வரையிலான விலையில், மாதம்தோறும், 5 கிலோ உணவுப் பொருட்கள் கிடைக்கும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, மத்திய அரசுக்கு ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவாகும். கிராமப்புறங்களிலுள்ள 75 விழுக்காட்டு மக்களும், நகர்ப்புறங்களில் உள்ள, 50 விழுக்காட்டு மக்களும் இதனால் பயன்பெறுவர்.
பொது வினியோக முறைமூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு, 6 கோடியே 20 இலட்சம் டன் உணவுத்தானியம் தேவைப்படும்.
யார் இந்த மலிவு விலைத் தானியத்துக்குத் தகுதி உடையவர்கள் என்பதை மத்திய அரசின் வரையறைகளுக்கு ஏற்ப மாநில அரசு அடையாளம் காணும்.

ஆதாரம் : BBC

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...