Wednesday, 28 August 2013

Catholic News in Tamil / கத்தோலிக்கச்செய்திகள் - 22/08/13


1. உரையாடலும், ஒப்புரவும் மட்டுமே எகிப்து நாட்டு அமைதிக்குச் சிறந்த வழிகள் - கர்தினால் சாந்த்ரி

2. நாம் காட்டும் ஒருமைப்பாடு நமது துயரத்தை நட்பாக மாற்றும் - மணிலா பேராயர் கர்தினால் தாக்லே

3. ஆகஸ்ட் 22, அன்னை மரியாவின் விண்ணேற்பு விழா கொண்டாடப்படும் - Luxor ஆயர் Zakaria

4. நைஜீரியாவில் கிறிஸ்தவ இஸ்லாமிய உறவை வளர்க்கும் முயற்சி

5. கிறிஸ்தவர்கள் வாழும் கந்தமால் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

6. மக்களாட்சியின் அடிப்படை வேர் கிராமப் பஞ்சாயத்து அமைப்பு - கோவா தலத்திருஅவை

7. பூமியின் தெற்கு கோளத்தில் உள்ள நாடுகள் மத்தியில் கூட்டுறவு அதிகமாகவேண்டும் - FAOவின் இயக்குனர்

8. பல ஆண்டுகளுக்குப்பின் முகநூலின் வழி இணைந்த சகோதரிகள்

------------------------------------------------------------------------------------------------------
1. உரையாடலும், ஒப்புரவும் மட்டுமே எகிப்து நாட்டு அமைதிக்குச் சிறந்த வழிகள் - கர்தினால் சாந்த்ரி

ஆக.22,2013. எகிப்து நாடு, அமைதியில் மீண்டும் கட்டியெழுப்பப்படுவதற்கு உரையாடலும், ஒப்புரவும் மட்டுமே சிறந்த வழிகள் என்று கீழை வழிபாட்டு முறை திருப்பீட பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள் கூறியுள்ளார்.
எகிப்தில் அமைதி நிலவ அனைத்துலகத் திருஅவை செபிக்கவேண்டுமென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பித்து வருவதைச் சுட்டிக்காட்டி, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு கர்தினால் சாந்த்ரி அவர்கள் இப்புதனன்று அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் செய்தியில், எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 2ம் Tawadros அவர்களுக்கும், எகிப்தில் உள்ள ஏனைய கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களுக்கும் தன் செபம் கலந்த ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
எகிப்தின் உண்மையான அமைதியையும், வளர்ச்சியையும் விரும்பும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் அந்நாட்டில் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியன என்பதையும் கர்தினால் சாந்த்ரி தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை இயேசுவும், திருக்குடும்பமும் தங்கள் சொந்த நாட்டிலிருந்து அகதிகளாய் வெளியேறியபோது அவர்களுக்குத் தஞ்சம் அளித்த எகிப்து நாடு, துயரத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுப்பிவரும் செபங்களால் மீண்டும் அமைதியைச் சுவைக்கும் என்ற தன் நம்பிக்கையையும் கர்தினால் சாந்த்ரி அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. நாம் காட்டும் ஒருமைப்பாடு நமது துயரத்தை நட்பாக மாற்றும் - மணிலா பேராயர் கர்தினால் தாக்லே

ஆக.22,2013. வெள்ளத்தின் கொடுமைகளைத் தாங்க நாம் காட்டும் ஒருமைப்பாடு நமது துயரத்தை, நட்பை வளர்க்கும் நேரமாக மாற்றும் என்று மணிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக பிலிப்பின்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவைத் தாக்கிவரும் பெருமழையால் 1 கோடியே 20 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், கர்தினால் தாக்லே அவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகள் செய்ய விடுத்துள்ள விண்ணப்பத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
தங்கள் உறவுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளோர், நாம் காட்டும் ஆதரவால் ஓரளவாகிலும் ஆறுதல் அடைவர் என்று கர்தினால் தாக்லே அவர்கள், வெரித்தாஸ் வானொலியில் வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் மணிலாவைத் தாக்கிய Maring என்றழைக்கப்படும் இந்தப் புயல் இதுவரை அந்நகர் கண்டிராத அளவு வலிமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது.
Paranaque மற்றும் Balanga மறைமாவட்டங்களைச் சேர்ந்த அருள் பணியாளர்களும், துறவியரும், பொது நிலையினரும் துயர் துடைப்புப் பணிகளில் முழு வீச்சுடன் ஈடுபட்டுள்ளனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews

3. ஆகஸ்ட் 22, அன்னை மரியாவின் விண்ணேற்பு விழா கொண்டாடப்படும் - Luxor ஆயர் Zakaria

ஆக.22,2013. வன்முறையைத் தூண்டிவந்த ஒரு சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளதையடுத்து, எகிப்தின் Luxor பகுதியில் ஓரளவு இயல்பு நிலை திரும்பியுள்ளது என்றும், எனவே, ஆகஸ்ட் 22, இவ்வியாழனன்று அன்னை மரியாவின் விண்ணேற்பு விழா கொண்டாடப்படும் என்றும் எகிப்தின் ஆயர் ஒருவர் கூறினார்.
ஜூலியன் நாள்காட்டியின்படி ஆகஸ்ட் 22 கொண்டாடப்படும் அன்னை மரியாவின் விண்ணேற்பு விழா இவ்வாண்டு கொண்டாடப்படாது என்று இரு நாட்களுக்கு முன் அறிவித்த Luxor ஆயர் Youhannes Zakaria அவர்கள், பாதுகாப்பு நிலைமை சற்று முன்னேறியுள்ளதால், இவ்விழா எளிமையான வகையில் கொண்டாடப்படும் என்று Fides செய்திக்கு அளித்த குறிப்பில் கூறியுள்ளார்.
எகிப்தில் அமைதி திரும்பும்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விடுத்து வரும் விண்ணப்பங்களைக் கேட்டு, பல நாடுகளிலிருந்தும் ஆயர்கள் தன்னை தொலைபேசியில் அழைத்து, தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருவது தங்களுக்கு மிகுந்த வலிமையைத் தந்துள்ளது என்று ஆயர் Zakaria கூறினார்.
எகிப்தில் வாழும் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒன்றித்து வாழ்வதையே விரும்புகின்றனர் என்றும் ஆயர் Zakaria தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : Fides

4. நைஜீரியாவில் கிறிஸ்தவ இஸ்லாமிய உறவை வளர்க்கும் முயற்சி

ஆக.22,2013. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் நம்பிக்கையே நம்மிடையே நட்பை வளர்க்கவும், இந்நாட்டில் முன்னேற்றத்தைக் கொணரவும் வழி வகுக்கும் என்று நைஜீரியாவின் ஆயர் ஒருவர் கூறினார்.
நைஜீரியாவில் கிறிஸ்தவ இஸ்லாமிய உறவை வளர்க்கும் ஒரு முயற்சியாக, அபுஜாவில் நடைபெற்ற ஓர் ஒருமைப்பாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama அவர்கள் இவ்வாறு கூறினார்.
உரையாடல் ஒப்புரவு அமைதி மையம் என்ற இடத்தில் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் இணைந்து நடத்திய இந்தக் கருத்தரங்கில், இவ்விரு மதத்தினருக்கும் இடையே நம்பிக்கையும், மதிப்பும் வளரவேண்டும் என்றும், வரவிருக்கும் தேர்தல் நேர்மையான முறையில் முழுச் சுதந்திரத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
கிறிஸ்தவ, இஸ்லாமிய மோதல்களின் விளைவாக சேதமாக்கப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் கட்டியெழுப்பப்படவேண்டும் என்றும் தலைவர்கள் விண்ணப்பித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. கிறிஸ்தவர்கள் வாழும் கந்தமால் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

ஆக.22,2013. ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆளுனர் Tirumala Nayak அவர்கள் கூறினார்.
2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி, கந்தமால் பகுதியில், இந்து அடிப்படைவாத வன்முறை கும்பலால் கிறிஸ்தவர்கள் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாயினர்.
அந்த வன்முறையின் 5ம் ஆண்டு நிறைவு நெருங்கிவரும் வேளையில், மீண்டும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் நிகழாதவாறு காவல்துறையினர் முயற்சிகள் எடுத்துவருவதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த 5ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 25ம் தேதி, ஞாயிறன்று, ஓடிஸ்ஸாவின் தலைநகர் புவனேஸ்வரில் கருத்தரங்குகளும், அமைதியான ஊர்வலங்களும் மேற்கொள்ளப்படும் என்று, இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்கும் அருள் பணியாளர் அஜய் குமார் சிங் UCAN செய்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
மிகவும் வெளிப்படையான முறையில் நிகழ்ந்த இந்த வன்முறைகளில் இதுவரை தகுந்த நீதி கிடைக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் சரிவர கிடைக்கவில்லை என்றும் அருள் பணியாளர் சிங் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : UCAN

6. மக்களாட்சியின் அடிப்படை வேர் கிராமப் பஞ்சாயத்து அமைப்பு - கோவா தலத்திருஅவை

ஆக.22,2013. மக்களாட்சியின் அடிப்படை வேரான கிராமப் பஞ்சாயத்து அமைப்பை கோவா மாநில அரசு சரிவரப் புரிந்துகொள்ளாமல் செயல்படுகிறது என்று கோவா தலத்திருஅவை குறை கூறியுள்ளது.
கிராமங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்களைப் புறந்தள்ளிவிட்டு, மாநில அரசு முடிவுகள் எடுப்பது குடியரசின் அடிப்படையைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்று கோவா தலத்திருஅவையின் சமுதாய நீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் (CSJP) செயலர், அருள் பணியாளர் சாவியோ பெர்னாண்டஸ் கூறினார்.
கோவா மாநிலத்தில் அமைந்துள்ள 200க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்து அமைப்புக்களுடன் கடந்த சில ஆண்டுகளாக மாநில அரசு தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டுள்ளது என்பதையும் அருள் பணியாளர் பெர்னாண்டஸ் எடுத்துரைத்தார்.
பஞ்சாயத்து அரசு என்ற சட்டத்தில் மாற்றங்களை உருவாக்க கோவா மாநில அரசு ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : FirstPost / UCAN

7. பூமியின் தெற்கு கோளத்தில் உள்ள நாடுகள் மத்தியில் கூட்டுறவு அதிகமாகவேண்டும் - FAOவின் இயக்குனர்

ஆக.22,2013. பூமியின் தெற்கு கோளத்தில் உள்ள நாடுகளுக்கிடையே வேளாண்மையில் கூட்டுறவு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது, வளரும் நாடுகளுக்கு நன்மை விளைவிக்கும் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆகஸ்ட் 20, இச்செவ்வாய் முதல் 23, இவ்வெள்ளி முடிய அர்ஜென்டினா நாட்டின் Buenos Aires நகரில் சஹாரா நாடுகள் மற்றும் அர்ஜென்டினா நாட்டின் வேளாண்மை அமைச்சர்கள் மத்தியில் கருத்தரங்கு ஒன்று நடைபெறுகிறது.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் இயக்குனர் José Graziano da Silva அவர்கள், இக்கருத்தரங்கில் உரையாற்றியபோது, பூமியின் தெற்கு கோளத்தில் உள்ள நாடுகள் மத்தியில் கூட்டுறவு அதிகமாகவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
FAO அமைப்பினால் 1996ம் ஆண்டு 'தெற்கு-தெற்கு கூட்டுறவு' (FAO’s South-South Cooperation initiative) என்ற முயற்சி துவக்கப்பட்டது. இதுவரை இம்முயற்சியில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன.

ஆதாரம் : UN

8. பல ஆண்டுகளுக்குப்பின் முகநூலின் வழி இணைந்த சகோதரிகள்

ஆக.22,2013. பிரான்ஸ் நாட்டில் பெண் ஒருவர் 44 வருடங்களுக்கு முன்பு பிரிந்துபோன தன்னுடைய சகோதரி ஒருவரை, பேஸ்புக் என்றழைக்கப்படும் முகநூலின் உதவியால் கண்டுபிடித்துள்ளார்.
பிரான்சில் உள்ள Douai என்னும் இடத்தில் வாழும் Muriel Vanderveken என்ற 66 வயது நிறைந்த பெண்ணுக்கு Liliane, Dorothée என்ற இரு சகோதரிகள் உள்ளனர்.
சிறு வயதில் தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்த Muriel, பல ஆண்டுகளுக்கு பின்பு தன்னுடைய குடும்பத்தினரை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் அவை தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இந்நிலையில், 66 வயதான Muriel, புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எனவே, தான் இறப்பதற்குள் தன்னுடைய சகோதரிகளை சந்தித்து விடவேண்டும் என்று நினைத்த இவர், முகநூலின் மூலம் தனது சகோதரிகளைத் தேட ஆரம்பித்தார்.
தற்போது அவருடைய சகோதரிகளில் ஒருவரான Dorothée என்பவரை கண்டுபிடித்துள்ளார் Muriel. தன்னுடைய மற்றொரு தங்கை Lilianeஐத் தேடிக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது தனக்கு வருத்தமளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம் : TamilWin

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...