Wednesday, 28 August 2013

உலகின் மிகப்பெரிய ஆலயம்

உலகின் மிகப்பெரிய ஆலயம்

கம்போடியா நாட்டிலுள்ள Angkor Wat புத்தமத ஆலயம், உலகில் இதுவரை கட்டப்பட்டுள்ள ஆலயங்களுள் மிகப்பெரிய ஆலயம் எனச் சொல்லப்படுகிறது. Angkor Wat என்பதற்கு கெமெர் மொழியில் ஆலய நகரம் அல்லது ஆலயங்களின் நகரம் என்று பொருள். கெமெர் (Khmer) பேரரசின் தலைநகராக விளங்கிய யசோதரபுராவில், ஏறக்குறைய 500 ஏக்கர் நிலபரப்பில் கி.பி.1113ம் ஆண்டுக்கும் 1150ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டது. கெமெர் அரசர் 2ம் சூர்யவர்மனால், தேசிய ஆலயமாகவும், கல்லறையிடமாகவும், ஆதிகால திராவிடக் கட்டடக் கலையை மையமாக வைத்து இது எழுப்பப்பட்டுள்ளது. முதலில் விஷ்ணு கடவுளுக்கென எழுப்பப்பட்ட இந்த Angkor Wat ஆலயம், 14ம் நூற்றாண்டில் புத்தமத ஆலயமாக மாற்றப்பட்டு புத்தரின் சிலைகளும் வைக்கப்பட்டன. இது, ஏற்கனவே கலையழகில் சிறந்து விளங்கிய அவ்வாலயத்தின் பெருமைக்கு மெருகூட்டியது. அக்காலத்திய மிக நவீன கட்டடக்கலையின் அடையாளமாகவும் இது விளங்குகிறது. 65 மீட்டர் உயரமுடைய இவ்வாலயத்தின் நடுக்கோபுரம், நான்கு சிறிய கோபுரங்களாலும், பல சுவர்களாலும் சூழ்ந்துள்ளது. இவ்வாலய வாசல் மேற்கு நோக்கி இருப்பதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன. மேற்கு திசை விஷ்ணு கடவுளோடு தொடர்புடையது என்பது ஒரு காரணமாகவும், அரசர் 2ம் சூர்யவர்மனின்  அடக்கச்சடங்குக்கு ஏற்றதாக அமைக்கப்பட்டிருப்பது அடுத்த காரணமாகவும் சொல்லப்படுகின்றன. இவ்வாலயம் அமைந்திருக்கும் Angkor நகரத்தில் பத்து இலட்சம் பேர்வரை வாழ்ந்தனர். இந்நகரம், உலகில் தொழிற்புரட்சி ஏற்படும்வரை உலகின் மிகப்பெரிய நகரமாக இருந்தது. ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் 200 மீட்டர் அகலத்தில் அமைந்துள்ள அகழி நான்கு மீட்டர் ஆழம் கொண்டது. இது இவ்வாலயத்தின் அடித்தளத்துக்கு உதவுவதாக உள்ளது. இவ்வாலயத்தைப் பாதுகாப்பதற்கு 1980களிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடு, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

ஆதாரம் : விக்கிப்பீடியா

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...