Saturday, 3 August 2013

Catholic News in Tamil - 01/08/13

1. கத்தோலிக்க நாடென்று அழைக்கப்படும் பிரேசிலுக்கு சிறந்ததொரு சாட்சியமாக உலக இளையோர் நாள் அமைந்தது - ரியோ பேராயர் Orani Tempesta

2. 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகள் குறித்த புள்ளிவிவரங்கள்

3. உலக இளையோர் நாள் நிகழ்வுகளைத் தொடர்ந்து, 5,000க்கும் அதிகமான இளையோர் அருள் பணியாளர்களாகவும்,  துறவியராகவும் வாழ முடிவு

4. இளைமையில் கற்றுக்கொண்ட பழக்கங்கள் நம்மை நல்ல நிலையில் காப்பாற்றும் - மணிலா பேராயர் கர்தினால் Tagle

5. ஊடகத்துறையில் உருவாகியுள்ள மாற்றங்கள் திருஅவையின் வரலாற்றிலும் பாதிப்புக்களை உருவாக்குகிறது - பேராயர் Claudio Maria Celli

6. அன்னைமரியாவின் மாசற்ற இதயத்திற்கு அயர்லாந்து நாடு அர்ப்பணிக்கப்படும் - அயர்லாந்து ஆயர்கள் பேரவை

7. வத்திக்கான் வங்கியின் ஒளிவுமறைவற்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக ஓர் இணையதளம் ஆரம்பம்

8. குழந்தைகளுக்கு எதிராக மறைவில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை வெளிச்சத்திற்குக் கொணர UNICEF முயற்சி

------------------------------------------------------------------------------------------------------

1. கத்தோலிக்க நாடென்று அழைக்கப்படும் பிரேசிலுக்கு சிறந்ததொரு சாட்சியமாக உலக இளையோர் நாள் அமைந்தது - ரியோ பேராயர் Orani Tempesta

ஆக.01,2013. பிரேசில் நாட்டில் நிகழ்ந்த 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகள், நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லதொரு மாற்றாக அமைந்ததைக் காட்டிலும், கத்தோலிக்க நாடென்று அழைக்கப்படும் பிரேசிலுக்கு சிறந்ததொரு கத்தோலிக்க சாட்சியமாக அமைந்தது என்று ரியோ தெ ஜனய்ரோ பேராயர் Orani Tempesta அவர்கள் கூறினார்.
இந்த உலக நிகழ்வுக்கென உழைத்த தன்னார்வத் தொண்டர்கள், அயல்நாட்டிலிருந்து வந்திருந்த இளையோருக்கு வரவேற்பளித்த குடும்பங்கள், நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியவர்கள் அனைவருக்கும் நன்றி கூறும்  வகையில் பேராயர் Tempesta அவர்கள், இச்செவ்வாயன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
இளையோர் நாள் நிகழ்வுகளை அறிவித்தது ஒரு திருத்தந்தையாகவும், இதனை முன்னின்று நடத்தியது மற்றொரு திருத்தந்தையாகவும் இருப்பினும், எவ்வித தடங்கலுமின்றி இந்த உலக நாள் நிகழ்வுகள் நடைபெற்றதை பேராயர் சிறப்பாக எடுத்துரைத்தார்.
மேலும், இளையோர் இலட்சக்கணக்கில் கூடும் நேரங்களில் வழக்கமாக எதிர்பார்க்கப்படும் வரம்புமீறல்கள், வன்முறைகள் என்று எதுவும் நிகழாமல், இந்த இளையோர் நாட்களை கண்ணியமான வகையில் நடத்தித் தந்ததற்காக, பேராயர் Tempesta அவர்கள், இளையோர் அனைவரையும் பாராட்டினார்.
இத்தகைய இளையோரிடம் வருங்காலத்தை ஒப்படைப்பதற்கு எவ்விதத் தயக்கமும் தேவையில்லை என்றும் இவ்வுலக நாள் நிகவுகளின் தலைமை அமைப்பாளர் பேராயர் Tempesta இக்கூட்டத்தில் அறிவித்தார்.
175 நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோர், பெரும்பாலும் 19 வயதுக்கும், 34 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும், உலக நாள் நிகழ்வுகளுக்கு 55 விழுக்காட்டு பெண்களும், 45 விழுக்காட்டு ஆண்களும் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர் என்ற விவரத்தையும் பேராயர் தெரிவித்தார்.

ஆதாரம் : CNA/EWTN

2. 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகள் குறித்த புள்ளிவிவரங்கள்

ஆக.01,2013. 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்டோர் குறித்த புள்ளிவிவரங்களை அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இப்புள்ளி விவரங்களின்படி, ஜூலை 23ம் தேதி 6 இலட்சம் இளையோர் கலந்துகொண்ட முதல் நிகழ்வுகளிலிருந்து, ஒவ்வொரு நாளும் இளையோரின் எண்ணிக்கை கூடி, ஜூலை 28, ஞாயிறன்று 37 இலட்சம் இளையோர் பங்கேற்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
175 அயல் நாடுகளிலிருந்து பதிவு செய்திருந்த இளையோரின் எண்ணிக்கை 4,27,000 என்றும், இவர்களில் பெரும்பாலானோர் ஆர்ஜென்டீனா, அமெரிக்க ஐக்கிய நாடு, சிலே, இத்தாலி, வெனிசுவேலா, பிரான்ஸ், பாராகுவே, பெரு, மெக்சிகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
57 நாடுகளிலிருந்து வந்திருந்த 6,500க்கும் அதிகமான செய்தியாளர்கள் இந்நிகழ்வுகளைப் பதிவு செய்து வந்தனர்.
28 கர்தினால்கள் உட்பட, 644 ஆயர்கள், 7814 அருள் பணியாளர்கள், மற்றும் 632 தியாக்கொன்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.
28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளால் பிரேசில் நாட்டிற்கு 180 கோடி Reais, அதாவது, 79 கோடியே 20 இலட்சம் டாலர்கள் அளவுக்கு பொருளாதாரம் புழக்கத்தில் இருந்தது என்று பிரேசில் நாட்டு சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. உலக இளையோர் நாள் நிகழ்வுகளைத் தொடர்ந்து, 5,000க்கும் அதிகமான இளையோர் அருள் பணியாளர்களாகவும்,  துறவியராகவும் வாழ முடிவு

ஆக.01,2013. ஜூலை 28, கடந்த ஞாயிறன்று சிறப்புடன் முடிவுற்ற 28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளைத் தொடர்ந்து, கடந்த திங்களன்று 50,000க்கும் அதிகமான இளையோர் கலந்துகொண்ட இறையழைத்தல் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
ரியோ தெ ஜனெய்ரோ நகரின் காங்கிரஸ் மையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ரியோ பேராயர் Orani Tempesta தலைமைத் தாங்கினார்.
வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn, பாஸ்டன் பேராயர் கர்தினால் Sean O’Malley, சிட்னி பேராயர் George Pell, Sao Paulo பேராயர் கர்தினால் Odilo Scherer ஆகியோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், 75 ஆயர்களும் கலந்துகொண்டனர்.
Neocatechumenal Way என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில், 3,000க்கும் அதிகமான இளையோர் அருள் பணியாளர்களாகவும், 2,000க்கும் அதிகமான இளம் பெண்கள் அருள் சகோதரிகளாகவும் வாழ்வைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்தனர்.

ஆதாரம் : Zenit

4. இளைமையில் கற்றுக்கொண்ட பழக்கங்கள் நம்மை நல்ல நிலையில் காப்பாற்றும் - மணிலா பேராயர் கர்தினால் Tagle

ஆக.01,2013. இளைமையிலேயே கிறிஸ்துவை நெருங்கி வர கற்றுக்கொண்டால், வாழ்வின் ஒரு சில வேளைகளில் வேறு யாரிடமும் நெருங்கிச் செல்ல முடியாதபோது, இறைவனிடம் நெருங்கிவர முடியும் என்று மணிலா பேராயர் கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் இளையோரிடம் கூறினார்.
28வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் இறுதி நாளையொட்டி, கடந்த ஞாயிறன்று, பிலிப்பின்ஸ் நாட்டின் Makati நகரில் நடைபெற்ற பிலிப்பின்ஸ் இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட கர்தினால் Tagle அவர்கள், இளையோர் செபத்தின் வழியாக இறைவனை நெருங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
5000க்கும் அதிகமான இளையோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பேசிய கர்தினால் Tagle அவர்கள், இளைமை என்ற நிலை கடந்து போனபிறகும், இளைமையில் கற்றுக் கொண்ட பழக்கங்கள் நம்மை நல்ல நிலையில் காப்பாற்றும் என்று கூறினார்.
ரியோ நகரிலிருந்து பல்லாயிரம் மைல்கள் தள்ளி நாம் இருந்தாலும், இறைவன் மீதும், அவரது நற்செய்தியின் மீதும் நாம் கொண்டுள்ள ஆர்வம் நம்மை ஒருங்கிணைக்கிறது என்று Parañaque ஆயர் Jesse Mercado அவர்கள், இக்கூட்டத்தில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. ஊடகத்துறையில் உருவாகியுள்ள மாற்றங்கள் திருஅவையின் வரலாற்றிலும் பாதிப்புக்களை உருவாக்குகிறது - பேராயர் Claudio Maria Celli

ஆக.01,2013. ஊடகத்துறையில் உருவாகியுள்ள மாற்றங்கள், வெறும் தொழிநுட்ப மாற்றங்களாக மட்டுமின்றி, கலாச்சார மாற்றங்களாகவும் இருப்பதால், திருஅவையின் வரலாற்றிலும் பாதிப்புக்களை உருவாக்குகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆகஸ்ட் 1, இவ்வியாழன் முதல் இச்சனிக்கிழமை முடிய தென் அமெரிக்காவின் ஈக்குவதோர் நாட்டின் Quito நகரில் நடைபெறும் இலத்தீன் அமெரிக்கக் கத்தோலிக்க ஊடகவியலாளர்கள் கூட்டத்திற்கென, சமூகத்தொடர்பு திருப்பீடத் துறை தலைவர் பேராயர் Claudio Maria Celli அவர்கள் அனுப்பியுள்ள ஒலி-ஒளி வடிவச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
தொழிநுட்பத்தின் வளர்ச்சியால் மக்கள் தொடர்புகளில் ஆழமானப் பிரிவுகளை உருவாக்கிவரும் உலகப் போக்கிற்கு எதிராக, கத்தோலிக்கத் தொடர்பாளர்கள் ஒருங்கிணைப்பை உருவாக்குவதில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று பேராயர் Celli அவர்கள், தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
இளையோரை தகுந்த முறையில் வழிகாட்டத் தவறும் உலக ஊடகங்களுக்கு மாற்றாக, திருஅவை செயல்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரைகளில் கூறியுள்ளதை பேராயர் Celli அவர்கள் தன் செய்தியில் சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. அன்னைமரியாவின் மாசற்ற இதயத்திற்கு அயர்லாந்து நாடு அர்ப்பணிக்கப்படும் - அயர்லாந்து ஆயர்கள் பேரவை

ஆக.01,2013. இம்மாதம் 15ம் தேதி, அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று, அன்னைமரியாவின் மாசற்ற இதயத்திற்கு அயர்லாந்து நாடு அர்ப்பணிக்கப்படும் என்று அயர்லாந்து ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் அயர்லாந்தில் ஆகஸ்ட் மாதத்தில் Knock நகர் நமது அன்னை என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நவநாள் பக்தி முயற்சிகளின் சிகரமாக ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி Knock அன்னை மரியா திருவிழா கொண்டாடப்படும்.
இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள இத்திருவிழாவின் நவநாள் பக்திமுயற்சிகளின்போது, Armagh பேராயரும், அயர்லாந்து திருஅவையின் தலைவருமான கர்தினால் Seán Brady அவர்கள் அயர்லாந்து நாட்டை அன்னைக்கு அர்ப்பணிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய கர்தினால் Brady அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வழங்கிய விசுவாச ஒளி சுற்றுமடலில் அன்னை மரியாவை நமது விசுவாசத்தின் அன்னையாகவும், எடுத்துக்காட்டாகவும் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அனைத்து ஆயர்கள், அருள் பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் Knock அன்னையின் திருத்தலத்தில் கூடி, இந்த அர்ப்பணிப்பில் கலந்து கொள்ளுமாறு கர்தினால் Brady அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. வத்திக்கான் வங்கியின் ஒளிவுமறைவற்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக ஓர் இணையதளம் ஆரம்பம்

ஆக.01,2013. வத்திக்கான் நிதி நிறுவனம் எவ்விதம் செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள விழையும் அனைவருக்கும் உதவியாக இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளோம் என்று இந்நிறுவனத்தின் தலைவர் திருவாளர் Ernst von Freyburg அவர்கள் கூறியுள்ளார்.
வத்திக்கான் வங்கி என்று முன்னரும், சமயப் பணிகள் நிறுவனம் என்று தற்போதும் அழைக்கப்படும் வத்திக்கான் நிதி நிறுவனம் இப்புதனன்று ஒரு புதிய இணையதளத்தை ஆரம்பித்துள்ளது.
இவ்விணையதளத்தின் நோக்கம் குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில், Freyburg அவர்கள், இந்நிறுவனத்தின் ஒளிவுமறைவற்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த இணையதளம் அமையும் என்று கூறினார்.
ஊடங்களும், செய்தியாளர்களும் மட்டுமல்லாது, திருஅவையின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் இந்த இணையதளத்தின் வழியாக வத்திக்கான் நிதி நிறுவனத்தை அணுகமுடியும் என்று Freyburg அவர்கள் தன் பேட்டியில் தெளிவுபடுத்தினார்.
வத்திக்கான் நிதி நிறுவனத்தின் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்வதற்கும், தேவைப்பட்டால், இந்நிறுவனத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் ஒரு குழுவை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit

8. குழந்தைகளுக்கு எதிராக மறைவில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை வெளிச்சத்திற்குக் கொணர UNICEF முயற்சி

ஆக.01,2013. குழந்தைகளுக்கு எதிராக மறைவில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை வெளிச்சத்திற்குக் கொணர்வது சமுதாயத்தின் இன்றியமையாத கடமை என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் குழந்தைகளுக்கு எதிராக வன்முறைகள் நடைபெறுகின்றன என்று UNICEF எனப்படும் ஐ.நா. குழந்தைகள் நிதி அமைப்பின் தலைமை இயக்குனர் Anthony Lake அவர்கள் இப்புதனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மறைவில் இழைக்கப்படும் இந்த வன்முறைகளை உலகறியச் செய்வதற்கு, UNICEF அமைப்பு, புதிய முயற்சியொன்றை மேற்கொள்கிறது என்று கூறிய Lake அவர்கள், 14 வயது சிறுமி Malala Yousafzaiக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்ததால், பல்லாயிரம் குழந்தைகள் பயனடைந்தனர் என்று கூறினார்.
UNICEF மேற்கொண்டுள்ள இந்தப் புதிய முயற்சியை வெளிப்படுத்தும் ஒலி-ஒளி காட்சி ஒன்றில், புகழ்பெற்ற நடிகர் Liam Neesan அவர்கள் உலகெங்கும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைப் பற்றி விவரிக்கிறார்.
மறைவில் நடைபெறும் இவ்வன்முறைகளால் குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உள்ளத்தில் வடுக்களைத் தாங்கி வாழவேண்டியுள்ளது என்றும், இந்தக் கொடுமையை நிறுத்தாமல் போனால், அடுத்தத் தலைமுறை காயப்பட்ட தலைமுறையாக வாழும் என்றும் நடிகர் Neesan அவர்கள் வலியுறுத்திக் கூறுகிறார்.
ஆதாரம் : UN

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...