Monday, 3 December 2012

Catholic News in Tamil - 03/12/12


1. இன்றைய உலகின் சுயநலக் கொள்கைகள் மனிதரின் மாண்பைக் கீழ்மைப்படுத்துகின்றன - திருத்தந்தை

2. இங்கிலாந்து, மற்றும் வேல்ஸ் குருத்துவக் கல்லூரியின் அங்கத்தினர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

3. திருத்தந்தையின் மூவேளை செபஉரை.

4. தேவசகாயம் பிள்ளையின் முத்திப்பேறு பட்டமளிப்பு விழாத் திருப்பலியில் இலட்சக்கணக்கான பக்தர்கள்

5. டுவிட்டரில் (Twitter) திருத்தந்தை

6. இருபது ஆண்டுகளில் உலகில் அதிகக் கிறிஸ்தவர்களைக் கொண்டுள்ள நாடாக சீனா இருக்கும்

7. எய்ட்ஸ் நோய் குறித்து "மேலும் சமூக விழிப்புணர்வு தேவை"

------------------------------------------------------------------------------------------------------

1. இன்றைய உலகின் சுயநலக் கொள்கைகள் மனிதரின் மாண்பைக் கீழ்மைப்படுத்துகின்றன - திருத்தந்தை

டிச.03,2012. அனைத்தையும் அனுபவித்து வாழத்துடிக்கும் இன்றைய உலகின் சுயநலக் கொள்கைகள் மனிதரின் மாண்பைக் கீழ்மைப்படுத்துவதாக உள்ளன என்று உரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, உறவுகளை ஊக்குவிக்கும் முடிவற்ற வலைத்தொடர்புகளும், சமூகத் தொடர்புகளும் இன்றைய உலகில் குவிந்து காணப்படுகிற போதிலும், பெரும்பான்மை நேரங்களில் மனிதர்கள் தனிமையின் வெறுமையை உணர்கின்றனர் என்று கூறினார்.
இத்தகையச் சூழல்களில் புதிய நற்செய்தி அறிவிப்பின் தேவை எத்தகையது என்பதை நாம் உணர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இன்றைய உலகில், சமூக அக்கறை, குடும்பங்களின் முக்கியத்துவம், பொதுநலனையும், அமைதியையும் வளர்க்கும் முயற்சிகளில் பங்கேற்றல் போன்றவைகளின் தேவை குறித்தும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற கருத்தையும் எடுத்தியம்பி, அதன் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக்காட்டியத் திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவிப்பின் மூலம் புதிய மனிதாபிமானத்தைப் பெறமுடியும் எனவும் கூறினார்.


2. இங்கிலாந்து, மற்றும் வேல்ஸ் குருத்துவக் கல்லூரியின் அங்கத்தினர்கள் திருத்தந்தையுடன் சந்திப்பு

டிச.03,2012. திருநற்கருணை முன்பாக, தினமும் செபிக்கவும், இறைவார்த்தைக்குக் கவனமுடன் செவிமடுக்கவும் குருக்களும், குருமாணவர்களும் கற்றுக் கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் நகரில் உள்ள இங்கிலாந்து, மற்றும் வேல்ஸ் குருத்துவக் கல்லூரியின் அங்கத்தினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியத் திருத்தந்தை, இயேசுவின் நண்பர்களாக அழைக்கப்பட்டுள்ள நீங்கள், உலகிற்கு மீட்பைக் கொணரவேண்டிய உங்கள் பணியை உணர்ந்து, இறைவனிடம் முற்றிலுமாக உங்களைக் கையளியுங்கள் என்று விண்ணப்பித்தார்.
ஏற்கனவே நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி மேற்கொள்ளப்படவேண்டியதன் தேவை குறித்தும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மக்களிடம் காணப்படும் ஆன்மீகப் பசிக்கு உண்மையான உணவை வழங்கவேண்டிய குருக்களின் கடமையையும் சுட்டிக்காட்டி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் குருக்களுக்கும், குருமாணவர்களுக்கும் உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


3. திருத்தந்தையின் மூவேளை செபஉரை.

டிச.03,2012. தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்தில் இஞ்ஞாயிறன்று முத்திப்பெற்றவராக உயர்த்தப்பட்டுள்ள தேவசகாயம், மிகப்பெரிய, அதேவேளை உன்னத, இந்திய நாட்டின் கிறிஸ்தவர்களின் விசுவாசம் கட்டிக்காக்கப்பட உதவுவாராக என இஞ்ஞாயிறு மூவேளை செபஉரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தேவசகாயம்பிள்ளையின் முத்திப்பேறுப்பட்டம் குறித்து மகிழும் கோட்டாறு மக்களுடன் இணைந்து நாமும் மகிழ்ச்சி கொள்வோம் என்ற திருத்தந்தை, அம்மக்களுக்கான என் சிறப்பான வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன் என்றார். திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறில் இடம்பெறும் இந்த நிகழ்வு, கிறிஸ்துவுக்கான அவரின் சாட்சிய வாழ்வின் எடுத்துக்காட்டை நமக்குத் தருவதாக உள்ளது என மேலும் கூறினார் பாப்பிறை.
தன் மூவேளை செப உரையின்போது, 'திருவருகை' என்ற வார்த்தையின் அர்த்தம் குறித்து விளக்கிக்கூறியத் திருத்தந்தை, இத்திங்களன்று உலகில் சிறப்பிக்கப்பட்ட உலக மாற்றுத்திறனாளிகள் தினம் குறித்தும் மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.
கடவுளின் வருகை, இவ்வுலகில் கடவுளின் இருப்பைக் குறிக்கின்றது என்ற திருத்தந்தை, முதல் வருகை என்பது மனிதனாக பிறப்பெடுத்தது, இரண்டாம் வருகை என்பதோ, உலக முடிவில் மாட்சியோடு வருவது என்று கூறி விளக்கினார்.


4. தேவசகாயம் பிள்ளையின் முத்திப்பேறு பட்டமளிப்பு விழாத் திருப்பலியில் இலட்சக்கணக்கான பக்தர்கள்

டிச.03,2012. நாகர்கோவிலில் இடம்பெற்ற தேவசகாயம் பிள்ளையின் முத்திப்பேறு பட்டமளிப்பு விழாத் திருப்பலியில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புனிதர் பட்ட நிலைகளுக்கானத் திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Angelo Amato, இறையடியார் தேவசகாயத்தை முத்திப்பெற்றவர் என அறிவித்தத் திருப்பலியில் இந்தியாவின் கர்தினால்கள் Oswald Gracias, Telespore Toppo, George Alenchery, புதிய கர்தினால் Baselios Cleemis உட்பட, நாற்பதுக்கும் அதிகமான பேராயர்களும், ஆயர்களும் கலந்து கொண்டனர்.
கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், கர்தினால் Amato வுடன் முன்னிலை வகிக்க, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குருக்களும், அருள் சகோதரிகளும் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.
அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில், தமிழக வனத்துறை அமைச்சர் KT பச்சைமால், கன்னியாகுமரி பாராளுமன்ற அங்கத்தினர் Helen Davidson , நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.


5. டுவிட்டரில் (Twitter) திருத்தந்தை

டிச.03,2012. நவீன சமூகத்தொடர்புசாதனங்களில் திருஅவையின் இருப்பை வலியுறுத்தும் விதமாக இணையதள டுவிட்டர் (Twitter) பக்கத்தில் திருத்தந்தை நேரடியாக கலந்துகொள்ளும் பகுதி ஒன்று திறக்கப்படும் என திருப்பீடப் பத்திரிகையாளர் கூட்டத்தில் இத்திங்களன்று அறிவிக்கப்பட்டது.
சமூகத்தொடர்புகளுக்கானத் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் கிளவ்தியோ மரிய செல்லி, திருப்பீடப்பேச்சாளர் இயேசுசபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி உட்பட பல்வேறு முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் கூட்டத்தில், நவீன சமூகத்தொடர்பு தொழில்நுட்பத்தில் திரு அவையின் இருப்பை வலியுறுத்தும் விதமாகவே டுவிட்டரில் திருத்தந்தையின் இருப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
குவாதாலூப்பே நமதன்னை திருவிழா இடம்பெறும் இம்மாதம் 12ம் தேதி திருத்தந்தையின் டுவிட்டர் பக்கம் துவக்கப்படும் என்ற திருப்பீட அதிகாரிகள், அதற்கு முன், மக்கள் திருத்தந்தையை நோக்கி விசுவாசம் மற்றும் நம்பிக்கைகள் குறித்த கேள்விகளை டுவிட்டரில் அனுப்பலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலம், இஸ்பானியம், இத்தாலியம், போர்த்துக்கீசியம், செர்மன், போலந்து, அராபியம், ஃப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் மக்கள் டுவிட்டரில் தங்கள் கேள்விகளை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மொழிகள் பின்னர் சேர்க்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


6. இருபது ஆண்டுகளில் உலகில் அதிகக் கிறிஸ்தவர்களைக் கொண்டுள்ள நாடாக சீனா இருக்கும்

டிச.03,2012. இன்னும் இருபது ஆண்டுகளில் உலகில் அதிகக் கிறிஸ்தவர்களைக் கொண்டுள்ள நாடாக சீனா இருக்கும் என்று அறிவித்துள்ளார் புகழ்பெற்ற இறையியலாளர் Harvey Cox.
'உலக மதங்களில் கத்தோலிக்கர்களின் ஈடுபாடு' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகத்தை உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தில் வெளியிட்டு உரையாற்றிய இறையியலாளர் Cox, கிறிஸ்துவத்தை இனிமேல் மேற்கத்திய மதம் என்று சொல்ல இயலாது என்றும், கிறிஸ்தவம் தற்போது வேகமாகப் பரவிவரும் நாடுகள், கிறிஸ்தவக் கலாச்சாரத்தையோ, பாரம்பரியத்தையோ கொண்டிராதவை என்றும் கூறினார்.
சீனாவில் ஏறத்தாழ தினமும் மதங்களிடையே கலந்துரையாடல்கள் இடம் பெற்றுவருகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய Harvard Divinity பள்ளியின் பேராசியர் Harvey Cox, உலகின் அதிக எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் இருக்கும் நாடாக, சீனா இன்னும் 20 ஆண்டுகளில் மாறும் என்று கூறினார்.


7. எய்ட்ஸ் நோய் குறித்து "மேலும் சமூக விழிப்புணர்வு தேவை"

டிச.03,2012. ஹெச்.ஐ.வி. நோயிலிருந்து நம்மை நாம் எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பான அனைத்து உண்மைகளையும் அனைவரும் அறிந்திருக்கிறார்கள் என்று கூறுவதற்கில்லை எனவும், ஹெச்.ஐ.வி. வந்தவர்களை சமூகம் எப்படிப் பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பது தொடர்பாக, போதிய விழிப்புணர்வு இல்லை எனவும் சமூகப்பணி வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் எய்ட்ஸ் நோயாளிகள் நிலை குறித்து பாஸிடிவ் விமன் நெட்வொர்க் என்ற சென்னை ஹெச்.ஐ.வி. நோயாளிகள் தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் கௌசல்யா பெரியசாமி உரைக்கையில், தமிழ் நாட்டில் எய்ட்ஸ் நோயாளிகளை ஒதுக்குகின்ற சமூக மனப்பாங்கு இன்றளவும் காணப்படுவதாக கவலையை வெளியிட்டார்.
மக்களால் ஒதுக்கப்படுகின்ற, வெறுக்கப்படுகின்ற பல சந்தர்ப்பங்களை ஹெச்.ஐ.வி. பாதிப்பு வந்தவர்கள் எதிர்கொள்ள நேரிடுவதால், பாதிப்பு குறித்த உண்மையை வெளியில் சொல்லத் தயங்குகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவ வசதிகள் தொடர்பிலும், உரிமைக்காக குரல்கொடுப்பது தொடர்பிலும் எய்ட்ஸ் நோயாளிகளின் நிலை மேம்பட்டுள்ளது என்பதையும் பாஸிடிவ் விமன் நெட்வொர்க் ஒருங்கிணைப்பாளர் கௌசல்யா பெரியசாமி ஒப்புக்கொண்டார்.
1981க்கும் 2007க்கும் இடைப்பட்ட கால் நூற்றாண்டு காலத்தில் இரண்டரை கோடி பேருக்கும் அதிகமானவர்கள் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளனர் என்பதும், உலகெங்கிலும் தற்போது சுமார் 3கோடியே 40 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயை உண்டாக்கவல்ல ஹெச்.ஐ.வி. கிருமித் தொற்றுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...