Wednesday, 1 August 2012

Catholic news in Tamil - 28/07/12

1. திருத்தந்தை : Ghana அரசுத்தலைவர் Atta Mills இறப்புக்கு இரங்கல்

2. இலண்டன் கிறிஸ்தவத் தலைவர்கள் ஒலிம்பிக் குழுக்களுக்கு வரவேற்பு

3. அருள்தந்தை லொம்பார்தி : ஒலிம்பிக்ஸ் தங்கத்தைவிட

4. நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பங்கேற்ற போபால் சிறப்பு ஒலிம்பிக்ஸ்

5. பிலிப்பீன்ஸ் ஆயர்கள் : குழந்தை பிறப்பைக் கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு அரசுத்தலைவர் வழங்கும் ஆதரவு தவறாக வழிநடத்தும்

6. கிறிஸ்தவ பிறரன்பு நிறுவனங்கள் அசாமில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச்  செல்ல இயலவில்லை

7. ஆறு மாதத்தில் 5,000 பேருக்கு சிகிச்சை: கல்லீரல் நோய்ப் பாதிப்பு அதிகரிப்பு

8. கடந்த ஆண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் 3 இலட்சம் அமெரிக்கருக்கு வேலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : Ghana அரசுத்தலைவர் Atta Mills இறப்புக்கு இரங்கல்

ஜூலை,28,2012. Ghana அரசுத்தலைவர் John Evans Atta Mills இறந்ததற்கு அனுதாபம் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
John Evans Atta Mills  ஆற்றிய பொதுநலப் பணிகளை நினைவுகூரும் இவ்வேளையில் அவர் சனநாயகக் கொள்கைகளுக்காகத் தன்னை அர்ப்பணித்திருந்ததை நினைவுகூர்வதாக அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அவரின் இறப்பு, நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் தருணமாக அமையுமாறு கேட்டுக் கொண்டார்.
Ghanaவின் புதிய அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ள John Dramani Mahamaவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த கானா நாட்டு மக்களுக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவித்திருப்பதோடு, அந்நாடு அமைதியிலும் வளமையிலும் ஆசிர்வதிக்கப்படும்படியாகத் தான் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.  
அரசுத்தலைவர் John Evans Atta Mills இம்மாதம் 24ம் தேதி திடீரென நோயுற்று மரணமடைந்தார்.

2. இலண்டன் கிறிஸ்தவத் தலைவர்கள் ஒலிம்பிக் குழுக்களுக்கு வரவேற்பு

ஜூலை,28,2012. ஒவ்வொரு மனிதரும் தனது வாழ்க்கையில் உண்மை, நன்மைத்தனம், திறமைகளை நிறைவு செய்தல் ஆகியவற்றைத் தேடும் பயணியாகவே இறுதியில் இருக்கிறார், இந்தப் பயணம் உண்மையாகவே வாழப்படும்போது இது மற்றவரோடு உரையாடலுக்கானப் பாதையைத் திறக்கின்றது என்று இலண்டன் Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறினார்.
ஒவ்வொரு மனிதரும் அமைதியின் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டியிருப்பதால் இந்த உரையாடலில் யாரையும் ஒதுக்கக் கூடாது என்றும் பேராயர் நிக்கோல்ஸ் கூறினார்.
இலண்டனில் இவ்வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள 30வது ஒலிம்பிக்சில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளை வரவேற்பதற்கென பேராயர் நிக்கோல்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து கிறிஸ்தவத் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பழங்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் உணர்வில் அமைதி மற்றும் ஒப்புரவுக்கான முயற்சிகளில் எல்லா மதத்தினரும்  ஈடுபடுவார்கள் என்று தாங்கள் நம்புவதாக அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர் அத்தலைவர்கள்.
மேலும், அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் ஒலிம்பிக்ஸ் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற ஐ.நா.பொது அவையின் தீர்மானத்தையும் அவ்வறிக்கைச் சுட்டிக்காட்டியுள்ளது.  
ஐ.நா.பொதுச்செயலரும் அமைதி, உரையாடல், வளர்ச்சி, ஒப்புரவு ஆகியவற்றை இந்த ஒலிம்பிக்ஸ் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

3. அருள்தந்தை லொம்பார்தி : ஒலிம்பிக்ஸ் தங்கத்தைவிட

ஜூலை,28,2012. ஒலிம்பிக் போர்நிறுத்தம் குறித்து தொன்மைகால மரபில் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பது போல, இவ்வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள இலண்டன் ஒலிம்பிக்ஸ் அனைத்துலக சமுதாயத்துக்கு அமைதியைக் கொண்டு வருவதாய் இருக்கட்டும் என்று வத்திக்கான் தொலைக்காட்சி இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களின் உடல் அழகைப் பார்த்து வியக்கும் அதேவேளை, மனித உடலானது, மனம், விருப்பம், அதனுள் இருக்கும் ஆர்வம் ஆகியவற்றால் பயிற்சிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம் என்றும் கூறினார் அவர்.
இதனால், ஒலிம்பிக்ஸை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் விளையாட்டுடன் இணைத்திருப்பது சரியானதே என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
வத்திக்கான் தொலைக்காட்சி மற்றும் வத்திக்கான் வானொலியில் வார நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய அருள்தந்தை லொம்பார்தி, ஒலிம்பிக்ஸ் சூழல் மற்றும் ஆர்வத்தில் இறையாட்சியை ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் ஆர்வத்தில்,  1992ம் ஆண்டு பார்செலோனா விளையாட்டுக்களுக்குப் பின்னர்  இவாஞ்சலிக்கல், பாப்பிடிஸ்ட், மெத்தோடிஸ்ட், எப்பிஸ்கோப்பல் ஆகிய கிறிஸ்தவ சபைகள் தங்கத்தைவிட என்ற புதிய முயற்சியில் ஈடுபட்டன, இவ்வாண்டு பிரிட்டன் கத்தோலிக்கத் திருஅவையும் இந்த முயற்சியில் இணைந்தது என்றும் கூறினார்.
இவ்வெள்ளிக்கிழமை காலை இலண்டனிலுள்ள அனைத்துக் கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஒரேநேரத்தில் மணிகளை ஒலித்து ஒலிம்பிக் வீரர்களுக்குத் தங்களது வரவேற்பை தெரிவித்தன என்றும் வார நிகழ்ச்சியில் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
      
4. நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பங்கேற்ற போபால் சிறப்பு ஒலிம்பிக்ஸ்

ஜூலை,28,2012. இலண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியை போபால் நச்சுவாயுக் கசிவுக்கு காரணமான டவ் வேதிய நிறுவனம் ஸ்பான்சர் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போபாலில் நடத்தப்பட்ட சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியில், நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்ற குழந்தைகள் பங்கேற்றனர்.
இலண்டன் ஒலிம்பிக் போட்டியை டவ் வேதிய நிறுவனம், மற்ற நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் உரிமையை இரத்து செய்ய வேண்டுமென்று போபால் மக்கள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த டவ் வேதிய நிறுவனத்தை இப்பொறுப்பிலிருந்து அகற்றுவதற்கு ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தும் அமைப்பு மறுத்துவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், போபாலில் சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தன. இதில், போபால் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டோருக்கு உடல் ஊனமுற்ற நிலையில் பிறந்த குழந்தைகள் கலந்து கொண்டனர். முதலில் அணிவகுப்பும் அதைத் தொடர்ந்து நச்சுவாயுக் கசிவால் தொடரும் பாதிப்பை விளக்கும் நாடகமும் நடந்தன. இதைத் தொடர்ந்து சக்கர நாற்காலி போட்டி, நடைப்போட்டி, நண்டு நடை போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.

5. பிலிப்பீன்ஸ் ஆயர்கள் : குழந்தை பிறப்பைக் கட்டுப்படுத்தும் மசோதாவுக்கு அரசுத்தலைவர் வழங்கும் ஆதரவு தவறாக வழிநடத்தும்
ஜூலை,28,2012. குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் பொறுப்பான பெற்றோர் என்ற மசோதாவுக்கு பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் Benigno Aquino வெளிப்படையாக ஆதரவு அளிப்பதைக் குறை கூறியுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
பிலிப்பீன்ஸ் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள வளங்கள் பற்றாக்குறைப் பிரச்சனை மாணவர்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தால் அப்படியே இருக்கும், இந்தப் பிரச்சனை நீங்குவதற்குப் பொறுப்பான பெற்றோர் குறித்த மசோதா உதவும் என்று கல்வி குறித்து நாட்டுக்கு ஆற்றிய உரையில் அரசுத்தலைவர்  Aquino குறிப்பிட்டார்.
இம்மசோதா அங்கீகரிக்கப்பட்டால் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதற்கும், குடும்பக் கட்டுப்பாட்டுக்கும், மற்ற இவை சார்ந்த நடவடிக்கைகளுக்கும், 5ம் வகுப்பு தொடங்கி சிறார்க்குப் பாலியல் கல்விப் பாடத்தைச் சொல்லித்தரவும் வழி அமைக்கும் என்று ஆயர்கள் கூறினர்.
அரசுத்தலைவரின் இவ்வுரை குறித்து கருத்து தெரிவித்த San Pablo ஆயர் Leo Murphy Drona, மக்கள் தொகையைக் குறைப்பதற்கு குழந்தைகளையும் கருவில் வளரும் சிசுக்களையும் கொல்வதற்கு எடுக்கும் நடவடிக்கை நாட்டுக்கு நல்லது என்ற அரசுத்தலைவரின் எண்ணம் நாட்டினரைத் தவறாக வழிநடத்தும் என்று கூறினார்.

6. கிறிஸ்தவ பிறரன்பு நிறுவனங்கள் அசாமில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச்  செல்ல இயலவில்லை
 
ஜூலை,28,2012. கலவரங்கள் மிகுந்துள்ள அசாமின் Kokrajhar மாவட்டத்தில் கண்டதும் சுடுவதற்கு அனுமதியளிக்கும் ஊரடங்குச் சட்டம் அமலில் இருப்பதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல இயலாமல் இருக்கின்றது என்று கிறிஸ்தவ பிறரன்பு நிறுவனங்கள் கூறுகின்றன.
அசாம் மாநிலத்தில் தனித்தியங்கும் போடோ இன மக்களின் தலைமையிடமான Kokrajharல் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இன மற்றும் சமய வன்முறைகள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. அசாமின் போடோ இன மக்களில் சுமார் 10 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.
இம்மாதம் 20ம் தேதி தொடங்கிய கலவரத்தில் 45 பேர் இறந்தனர். வீடுகளை இழந்துள்ள 2 இலட்சத்துக்கு மேற்பட்டோர் நிவாரண முகாம்களாகச் செயல்பட்டு வரும் ஆலயங்கள் மற்றும்  பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

7. ஆறு மாதத்தில் 5,000 பேருக்கு சிகிச்சை: கல்லீரல் நோய்ப் பாதிப்பு அதிகரிப்பு

ஜூலை,28,2012. தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் 5,000 பேர் கல்லீரல் நோய்க்காகச் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று சென்னை பொது மருத்துவமனை கல்லீரல் துறைத் தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஜூலை 28ம் தேதி இச்சனிக்கிழமையன்று உலக கல்லீரல் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை சுகாதார நலத்துறை அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
இக்கண்காட்சியில் கல்லீரல், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் இரத்தக் கட்டி, கல்லீரல் சுருக்கம் உட்பட, 12 வகையான கல்லீரல்கள் வைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டனர்.
மேலும், கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலியும் நடந்தது.

8. கடந்த ஆண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் 3 இலட்சம் அமெரிக்கருக்கு வேலை

ஜூலை,28,2012. இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் கடந்த ஆண்டில் மட்டும் 2.8 இலட்சம் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைத்ததாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஆசிய அமைப்பின் கூட்டத்தில் பேசிய அவர், அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன. நிறுவனங்களை வாங்கியது மற்றும் பெரிய திட்டங்களில் கடந்த ஆண்டில் அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் 500 கோடி டாலர் அன்னிய நேரடி முதலீடு செய்தன. அதன்மூலம், 2.8 இலட்சம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்புப் பெற இந்திய நிறுவனங்கள் உதவியுள்ளன என்று அறிவித்தார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...