1. திருத்தந்தை - இவ்வுலகம் தரவிழைந்த பதவிகளைவிட்டு இயேசு விலகிச்சென்றார்
2. 52வது சுதந்திர நாளைக் கொண்டாடும் Gabon குடியரசு மக்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி
3. அடிப்படைவாதக் குழுவினரின் ஆதிக்கத்தை நீக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளின் தலையீடு மிகவும் அவசியம் - நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர்
4. சிரியாவில் நிலவிவரும் பதட்ட நிலையின் எதிரொலி லெபனான் நாட்டிலும் உணரப்படுகிறது - Maronite கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தலைவர்
5. கிறிஸ்தவ, இஸ்லாமிய உறவுகள் வளர இன்றைய தலைமுறையினர் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் - அமெரிக்க ஆயர்
6. பாகிஸ்தானில் தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் 11 வயது நிரம்பிய சிறுமிக்குச் சிறைதண்டனை
7. அகில உலக மனிதாபிமான நாளுக்கு ஐ.நா. பொதுச்செயலரின் வாழ்த்துச் செய்தி
8. மியான்மாரில் 50 ஆண்டுகளாக நிலவிய செய்தி தணிக்கைச் சட்டம் நீக்கம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை - இவ்வுலகம் தரவிழைந்த பதவிகளைவிட்டு இயேசு விலகிச்சென்றார்
ஆக.20,2012. இவ்வுலகம் தனக்குத் தரவிழைந்த பதவிகளைவிட்டு விலகியதோடு நின்றுவிடாமல், தன் சீடர்களையும் புகழைத்தேடாத ஒரு வாழ்வைத் தேர்ந்துகொள்ளுமாறு இயேசு அழைத்தார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கடந்த
சில வாரங்களாக யோவான் நற்செய்தியின் ஆறாம் பிரிவில் இயேசு கூறிவரும்
வார்த்தைகளின் அடிப்படையில் தன் ஞாயிறு மூவேளை செப உரைகளை வழங்கிவந்த
திருத்தந்தை, அதன் தொடர்ச்சியாக இஞ்ஞாயிறன்றும் தன் சிந்தனைகளை வழங்கினார்.
திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான Castel Gandolfoவிலிருந்து திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரையில், 'வானின்று இறங்கிய உணவாக' தன்னையே மக்களுக்கு இயேசு அறிமுகப்படுத்தியதை, தியாக வாழ்வுக்கு அவர் விடுக்கும் ஓர் அழைப்பாக விளக்கினார்.
மக்களின் புகழை மட்டும் இயேசு தேடுபவராக இருந்திருந்தால், அவர்கள் ஏற்பதற்குக் கடினமான உணமைகளைச் சொல்லாமல் இருந்திருப்பார், ஆனால், தான்
எருசலேமில் படவிருக்கும் துன்பங்களை விளக்கும் கசப்பான உண்மைகளாய்
இயேசுவின் வார்த்தைகள் ஒலித்தன என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
நற்கருணை
என்ற அருள்சாதனத்தில் தாழ்ச்சியின் சிகரமாய் விளங்கும் இறைமகனைச் சந்திக்க
நாம் தயாராகவேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
2. சுதந்திர நாளைக் கொண்டாடும் Gabon குடியரசு மக்களுக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி
ஆக.20,2012. நாட்டை ஒருங்கிணைப்பதற்கு Gabon குடியரசு மக்கள் துணிவுடனும், ஆர்வத்துடனும் உழைப்பதை தான் பாராட்டுவதாகத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
52வது சுதந்திர நாளைக் கொண்டாடும் Gabon குடியரசுத் தலைவருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் திருத்தந்தை அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மத்திய ஆப்ரிக்கப் பகுதியில் அமைந்துள்ள Gabon குடியரசு, 1961ம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று ஒரு குடியரசு நாடானது.
ஏறத்தாழ 16 இலட்சம் மக்களைக் கொண்ட இந்நாட்டில் கிறிஸ்தவம், இஸ்லாம், மற்றும் ஆப்ரிக்கப் பழங்குடியினர் மதங்களைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
Gabon குடியரசின் தலைவர் Ali Bongo மீதும், அந்நாட்டு மக்கள் மீதும் இறைவனின் ஆசீர் நிறைவாய் வந்திறங்க வேண்டுமென திருத்தந்தை தன் செய்தியில் வாழ்த்தியுள்ளார்.
3. அடிப்படைவாதக் குழுவினரின் ஆதிக்கத்தை நீக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளின் தலையீடு மிகவும் அவசியம் - நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர்
ஆக.20,2012. Boko Haram என்ற
இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவினரின் ஆதிக்கத்தை நைஜீரியாவில் நீக்குவதற்கு
ஐரோப்பிய நாடுகளின் தலையீடு மிகவும் அவசியம் என்று நைஜீரிய ஆயர் பேரவையின்
தலைவர் பேராயர் Ignatius Kaigama கூறினார்.
இத்தாலியின் Rimini எனுமிடத்தில் ஆகஸ்ட் 19 இஞ்ஞாயிறு முதல் வருகிற சனிக்கிழமை முடிய நடைபெறும் ஒரு கருத்தரங்கில் இஞ்ஞாயிறு உரையாற்றிய பேராயர் Kaigama, அண்மையில் நைஜீரியாவில் Boko Haram குழுவினரின் வன்முறைகளால் கிறிஸ்தவர்கள் அனுபவித்து வந்துள்ள துன்பங்களை தன் உரையில் விளக்கினார்.
ஒவ்வொரு
முறையும் நான் என் வாகனத்தில் ஏறி வெளியேச் செல்லும்போது மீண்டும்
திரும்பி ஆயர் இல்லத்திற்கு வருவேனா என்ற சந்தேகத்துடன் நான் வாழ்ந்து
வருகிறேன் என்று கூறிய பேராயர் Kaigama, எதுவும், எந்த
நேரமும் நிகழலாம் என்று அச்சத்தில் வாழுந்து வரும் மக்கள் தொடர்ந்து
தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துவது ஆறுதலாக உள்ளது என்று
எடுத்துரைத்தார்.
"மதச் சுதந்திரம்: கொள்கையும், விளைவுகளும்" என்ற தலைப்பில் Riminiயில் நடைபெறும் கருத்தரங்கில் இத்தாலி, எகிப்து, கனடா ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளுடன், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகச் செயலாற்றும் பேராயர் Silvano Tomasi உட்பட பல வத்திக்கான் அதிகாரிகளும், பிரதிநிதிகளும் பங்கேற்று வருகின்றனர்.
4. சிரியாவில் நிலவிவரும் பதட்ட நிலையின் எதிரொலி லெபனான் நாட்டிலும் உணரப்படுகிறது - Maronite கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தலைவர்
ஆக.20,2012. சிரியாவில் தொடர்ந்து நிலவிவரும் பதட்ட நிலையின் எதிரொலி லெபனான் நாட்டிலும் உணரப்படுகிறது என்று Maronite கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தலைவர் Bechara Boutros Rai கூறினார்.
சிரியாவின் அரசுத் தலைவர் Assadக்கு ஆதரவாகவும், அவரை
எதிர்க்கும் போராட்டக் குழுக்களுக்கு ஆதரவாகவும் லெபனான் நாட்டில் இரு
வேறுபட்ட ஆதரவு அலைகள் தற்போது உருவாகிவருவதைச் சுட்டிக்காட்டி பேசிய
முதுபெரும் தலைவர் Boutros Rai, இந்த அலைகளால் கிறிஸ்தவர்கள் அலைக்கழிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.
லெபனான் நாட்டில் பொதுவாக கிறிஸ்தவர்கள் மீது இஸ்லாமியருக்கு பெரும் மதிப்பு உள்ளது என்று கூறிய முதுபெரும் தலைவர், இந்நாட்டின் கலாச்சாரத்திற்கும், அறிவு சார்ந்த வளர்ச்சிக்கும் கிறிஸ்தவர்கள் ஆற்றியுள்ள பணிகளை இஸ்லாமியர் மறப்பதில்லை என்றும் வலியுறுத்திக் கூறினார்.
லெபனானில்
தற்போது நிலவிவரும் இந்த பதட்டம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின்
வருகையால் தணியும் என்ற தன் நம்பிக்கையையும் முதுபெரும் தலைவர் Boutros Rai வெளியிட்டார்.
வருகிற செப்டம்பர் மாதம் 14 முதல் 16 முடிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லெபனான் நாட்டுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார்.
5. கிறிஸ்தவ, இஸ்லாமிய உறவுகள் வளர இன்றைய தலைமுறையினர் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் - அமெரிக்க ஆயர்
ஆக.20,2012. வருங்காலத்தில் அமெரிக்காவில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும்
இடையே உறுதியான உறவுகள் வளர இன்றைய தலைமுறையினர் ஆக்கப்பூர்வமான
செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்று அமெரிக்க ஆயர் ஒருவர் அழைப்பு
விடுத்துள்ளார்.
இஸ்லாமியர் கடைபிடித்துவந்த இரமதான் மாதம் நிறைவுற்றதைத் தொடர்ந்து, அம்மதத்தைச் சார்ந்தவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய அமெரிக்க ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் தலைவரான ஆயர் Denis Madden இவ்வாறு கூறினார்.
இரமதான் மாதம் கடைபிடிக்கப்படும் நோன்புகள், ஆன்மீகப் புத்துணர்ச்சியை வளர்க்கும் அதேநேரத்தில், தேவைகள்
அதிகம் உள்ள மக்களுக்குச் சேவை செய்வதும் இரமதான் சொல்லித்தரும் முக்கியக்
கருத்து என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் Barack Obama செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
6. பாகிஸ்தானில் தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் 11 வயது நிரம்பிய சிறுமிக்குச் சிறைதண்டனை
ஆக.20,2012. பாகிஸ்தானில் நிலவி வரும் தேவ நிந்தனைச் சட்டத்தின் கீழ் Rimsha Masih என்ற 11 வயது நிரம்பிய சிறுமி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அரேபிய மொழியையும், குரானையும் சொல்லித்தர உதவும் ஒரு நூலின் சில பக்கங்களை Rimsha Masih எரித்தார் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரைக் கொல்வதற்குத் திரண்ட மக்களிடமிருந்து காவல்துறை அச்சிறுமியை அப்புறப்படுத்தி, கைது செய்துள்ளது.
Rimsha மீது சாட்டப்பட்டுள்ள இக்குற்றம் நிரூபணமானால், அச்சிறுமிக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
Down's syndrome என்ற மனநிலைக் குறைவுள்ள Rimshaவின்
கைது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவத்தால்
வன்முறைகள் பெருகக்கூடும் என்ற அச்சத்தில் அப்பகுதியிலிருந்து 300க்கும்
மேற்பட்ட கிறிஸ்தவக் குடும்பங்கள் வெளியேறியுள்ளன என்று ஆசிய செய்தி
நிறுவனம் கூறியுள்ளது.
இஸ்லாமாபாத்
நகரின் சேரிப்பகுதியில் நடைபெற்றுள்ள இச்சம்பவத்தால் அப்பகுதியில்
வன்முறைகள் ஏற்பாடாமல் இருக்க பாகிஸ்தான் நல்லிணக்கத் துறை அமைச்சர் Paul Bhatti வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் 1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேவ நிந்தனைச் சட்டத்திற்குக் கீழ், இதுவரை குறைந்தது 1000 பேருக்கு மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 60க்கும் மேற்பட்டோர் சட்டங்களுக்குப் புறம்பாக மக்களின் வன்முறைகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
வயது குறைந்த ஒருவரை, தேவ
நிந்தனைச் சட்டத்திற்குக் கீழ் கைது செய்திருப்பது இதுவே முதல் முறை.
மனநலம் சரியில்லாத இவரைக் கைது செய்திருப்பதைக் கண்டு இஸ்லாமியரும்
அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
7. அகில உலக மனிதாபிமான நாளுக்கு ஐ.நா. பொதுச்செயலரின் வாழ்த்துச் செய்தி
ஆக.20,2012. தனிப்பட்டவர்களின் நல்லச் செயல்கள் சிறிதாகத் தெரியலாம், ஆயினும் அவை அனைத்தும் சேரும்போது, நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் சக்திவாய்ந்த ஓர் அலையாக மாறும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
அகில உலக மனிதாபிமான நாள் இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், பல்வேறு இன்னல்கள், இழப்புக்கள் மத்தியிலும் தொடர்ந்து நற்பணியாற்றிவரும் ஐ.நா. உழைப்பாளிகளையும், இன்னும் மற்ற நல்லுள்ளம் கொண்டோரையும் வாழ்த்தினார்.
2003ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி, ஈராக் நாட்டின் Canal உணவு விடுதியில் ஏற்பட்ட ஒரு குண்டுத் தாக்குதலில் மத்தியக் கிழக்குப் பகுதியில் ஐ.நா.சார்பில் உழைத்து வந்த தலைமை அதிகாரி Sergio Vieira de Mello உட்பட 22 ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நாளின் நினைவாக, 2009ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 19ம் தேதி அகில உலக மனிதாபிமான நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.
இவ்வாண்டு கடைபிடிக்கப்பட்ட இந்த நாளையொட்டி, 100 கோடி மக்களை ஏதாவது நற்செயல் செய்வதற்குத் தூண்டும் வகையில், “நற்செயல் ஒன்றில் ஈடுபட நானும் இங்கிருந்தேன்” என்ற பொருள்படும் “I Was Here.” என்ற ஒரு முயற்சியில் ஐ.நா. அவை ஈடுபட்டது.
புகழ்பெற்ற பாடகர் Beyoncé ன் பாடலுடன் துவக்கப்பட்ட இந்த முயற்சியின் வீடியோ இசைப்பதிவு Dubai, Geneva, Addis Ababa, New York பெருநகரம் என்ற பல இடங்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது.
8. மியான்மாரில் 50 ஆண்டுகளாக நிலவிய செய்தி தணிக்கைச் சட்டம் நீக்கம்
ஆக.20,2012. கடந்த 50 ஆண்டுகளாக மியான்மார் ஊடகங்கள் மீது நடைமுறையில் இருந்த செய்தி தணிக்கைமுறை நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
மியான்மாரில் செய்தியாளர்கள் தமது செய்திகளை அச்சிடுவதற்கு முன்னதாக அவற்றை அரசின் 'ஊடகங்கள் பற்றிய விசாரணை மற்றும் பதிவு திணைக்களத்துக்கு' அனுப்பி தணிக்கைக்கு உட்படுத்திய பின்னரே வெளியிட முடியும் என்ற சட்டம் இதுவரை இருந்துவந்தது.
கடந்த ஆண்டு இராணுவ அரசின் ஆட்சி முடிவுற்ற பின்னர், கடந்த 50 ஆண்டுகளாக இராணுவ அரசு ஊடகங்களை எல்லாவழிகளிலும் கட்டுப்படுத்தி வைத்திருந்த தணிக்கை நடைமுறை அவசியம் இல்லை என்பதால், பழைய சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக புதிய அரசு அறிவித்துள்ளது.
இருந்தபோதிலும், ஊடகவியலாளர்கள்
வெளியிடுகின்ற செய்திகளுக்காக அவர்களை தண்டிக்கும் கடுமையான சட்டங்கள்
தொடர்ந்து அங்கு நடைமுறையில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment