Tuesday, 21 August 2012

Catholic News in Tamil - 18/08/2012

1.எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவரின் மறைவுக்குத் திருத்தந்தை ஆழ்ந்த அனுதாபம்

2. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் முதலாம் Kirillம், போலந்து பேராயர் Michalikம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்திற்குக் கர்தினால் Erdő பாராட்டு

3. சொல்லாலும் செயலாலும் நீதிக்குச் சாட்சியாக வாழ அழைப்பு

4. சாஹெல் பகுதியின் மனிதாபிமான உதவிகளுக்கு Christian Aid அமைப்பு மீண்டும் விண்ணப்பம்

5. இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு ஐ.நா.பாராட்டு

6. ஐ.நா. அதிகாரிகள் குழு அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம்

7. மாலி நாட்டில் சிறார்ப் படைவீரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு : யுனிசெஃப்

8. ஆஸ்திரேலியாவில் கடற்கரைகளில் தடுப்பு முகாம்களைத் திறப்பது மனித உரிமைக்கு எதிரான செயல் : ஐ.நா. எச்சரிக்கை

------------------------------------------------------------------------------------------------------
1.எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவரின் மறைவுக்குத் திருத்தந்தை ஆழ்ந்த அனுதாபம்

ஆக.18,2012. எத்தியோப்பிய Tewahedo ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் முதுபெரும் தலைவர் Abuna Paulosன் மறைவையொட்டித் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
எத்தியோப்பிய Tewahedo ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் அருட்பணியாளர்கள், துறவிகள் மற்றும் விசுவாசிகளுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், அத்தலத்திருஅவையை ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகத் தலைமையேற்று வழிநடத்திவந்த முதுபெரும் தலைவர் Paulos, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கென எடுத்த முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.
முதுபெரும் தலைவர் Paulos, வத்திக்கானுக்கு மேற்கொண்ட பயணங்களை, சிறப்பாக, 2009ம் ஆண்டில் ஆப்ரிக்க சிறப்பு ஆயர் மாமன்றத்தில் அவர் ஆற்றிய உரையை மகிழ்வோடு நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு வழியாக, எத்தியோப்பிய Tewahedo ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே ஒன்றிப்பு ஏற்படுவதற்கு அவர் தன்னை ஈடுபடுத்தியிருந்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எத்தியோப்பியாவின் ஏறக்குறைய 8 கோடியே 30 இலட்சம் மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் Tewahedo ஆர்த்தடாக்ஸ் திருஅவையைச் சார்ந்தவர்கள்.
எத்தியோப்பிய-எரிட்ரியா எல்லைச் சண்டையின் போது ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக இரண்டாயிரமாம் ஆண்டில் ஐ.நா.வின் நெல்சன் மண்டேலா விருதைப் பெற்றிருப்பவர் முதுபெரும் தலைவர் Paulos. இவர் நீண்டகால நோய்க்குப் பின்னர் ஆகஸ்ட் 17, இவ்வியாழனன்று இறைபதம் அடைந்தார்.
சுமார் 56 கோடிக் கிறிஸ்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள 349 கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பான உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.


2. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் முதலாம் Kirillம், போலந்து பேராயர் Michalikம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்திற்குக் கர்தினால் Erdő பாராட்டு

ஆக.18,2012. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் முதுபெரும் தலைவர் முதலாம் Kirillம், போலந்து கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Józef Michalikம் கையெழுத்திட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்திற்குத் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார் ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் Péter Erdő.
இவ்வெள்ளியன்று இவ்விரு தலைவர்களுக்கும் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ள Esztergom-Budapest பேராயர் கர்தினால் Erdő, ஐரோப்பா முழுவதும் உண்மையான மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களைப் பரப்புவதற்கு இவ்வொப்பந்தம் உதவியாக இருக்கும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பா முழுவதும் ஆன்மீக மற்றும் சமூக வாழ்வில் பெரும் குழப்பம் காணப்படும் இக்காலத்தில், இவ்வொப்பந்தம் நம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கின்றது என்றும் அக்கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Erdő.
இவ்வெள்ளியன்று போலந்தின் Warsawவில் கையெழுத்திடப்பட்ட இவ்வொப்பந்தத்தில், இரஷ்யா, போலந்து ஆகிய இருநாடுகளுக்கிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்துள்ள பகைமை உணர்வுகளால் விளைந்துள்ள காயங்களைக் குணமாக்கவும், ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒப்புரவில் வளரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

3. சொல்லாலும் செயலாலும் நீதிக்குச் சாட்சியாக வாழ அழைப்பு

ஆக.18,2012. இந்தியக் கத்தோலிக்கர் அனைவரும் சொல்லாலும் செயலாலும் நீதிக்குச் சாட்சியாக வாழ வேண்டுமென இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் முன்னேற்ற ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
ஆகஸ்ட்19, இஞ்ஞாயிறன்று இந்தியாவில் நீதி ஞாயிறு கடைப்பிடிக்கப்படுவதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள இவ்வாணையம், கத்தோலிக்க நிறுவனங்கள் நீதிக்குச் சாட்சிகளாக எவ்வாறு வாழ முடியும் என்பதைச் சிந்திக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியத் தலத்திருஅவையில், 1983ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பின்வரும் ஞாயிறு நீதி ஞாயிறாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

4. சாஹெல் பகுதியின் மனிதாபிமான உதவிகளுக்கு Christian Aid அமைப்பு மீண்டும் விண்ணப்பம்

ஆக.18,2012. மேற்கு ஆப்ரிக்காவின் சாஹெல் பகுதியில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியைக் களைவதற்கு பன்னாட்டு உதவிகளுக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளது “Christian Aid” என்ற கிறிஸ்தவ மனிதாபிமான அமைப்பு.
சாஹெல் பகுதியில் ஏறக்குறைய ஒரு கோடியே 90 இலட்சம் மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகக் கூறியுள்ள இவ்வமைப்பின் இயக்குனர் Nick Guttmann, பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் துன்புறுகின்றனர் என்று கூறியுள்ளார்.
இப்பகுதியில் உதவிகள் தேவைப்படும் 7,90,000 குடும்பங்களுக்கென 7 கோடி டாலர் நிதியுதவிக்கு ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்திருந்ததையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
2012ம் ஆண்டு தொடக்கத்தில் திருப்பீடமும் சாஹெல் பகுதியின் 9 நாடுகளுக்கென 20 இலட்சம் டாலரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

5. இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கு ஐ.நா.பாராட்டு

ஆக.18,2012. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இடம்பெற்று வரும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் முன்னேற்றம் காணப்படுவதாக ஐ.நா.பேச்சாளர் Subine Nandy கூறினார்.
இலங்கையில் 2009ம் ஆண்டில் போர் முடிந்திருந்தாலும், கிராமங்களிலும், காடுகளிலும், சாகுபடி நிலங்களிலும் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகள் மக்களின் உயிர்வாழ்வுக்குக் கடும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்றுரைத்த Nandy, இவ்வெடிகளை அகற்றும் தற்போதைய பணிகளை நோக்கும் போது, இவ்வெடிகள் விரைவில் அகற்றப்படக்கூடும் என்ற நம்பிக்கை தெரிவதாகக் கூறினார்.
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி இவ்வாண்டு ஜூன்வரை, ஏறக்குறைய 5 இலட்சம் நிலக்கண்ணி வெடிகளும், பீரங்கிகளைத் தாக்கும் 1,395 வெடிகளும், ஏறக்குறைய 4 இலட்சம் வெடிக்காத சிறிய குண்டுகளும் அகற்றப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.  

6. ஐ.நா. அதிகாரிகள் குழு அடுத்த மாதம் இலங்கைக்குப் பயணம்

ஆக.18,2012. வருகிற செப்டம்பர் 14ம் தேதி ஐ.நா மனித உரிமைகள் அவை அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை நேரில் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவந்த நிலையில், ஐ.நா மனித உரிமைகள் அவையின் மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு அடுத்து மாதம் அந்நாடு செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.  
இந்தக் குழுவினர் இலங்கையின் வடபகுதிகளுக்கு மட்டுமன்றி, தென்பகுதிக்கும் சென்று அங்குள்ள மனித உரிமைகள் நிலை குறித்து மதிப்பீடு செய்யவுள்ளனர் என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது.

7. மாலி நாட்டில் சிறார்ப் படைவீரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு : யுனிசெஃப்

ஆக.18,2012. மாலி நாட்டின் வடபகுதியில் போரிடும் ஆயுதக் கும்பல்கள் சிறார்களைப் பெருமளவில் இராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளில் பயன்படுத்தி வருகிறார்கள் என ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் குற்றம் சாட்டியுள்ளது.
12 க்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட குறைந்தது 175 சிறார் ஆயுதக் கும்பல்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்று கடந்த மாதம் கூறிய யுனிசெஃப் நிறுவனம், இவ்வெண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துவருவதாக கூறுகிறது.
மாலியில் போரிடும் குழுக்கள் சிறாரைப் படைப்பிரிவில் சேர்ப்பதைத் தவிர்க்குமாறும் யுனிசெப் நிறுவனம் கேட்டுள்ளது.
மாலியில் கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற தன்மையினால் 2,50,000க்கு மேற்பட்டோர் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர். ஏறத்தாழ 1,74,000 பேர் நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் ஆயுதக் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன.
18 வயதுக்குட்பட்ட சிறாரைப் படையில் சேர்ப்பது அனைத்துலகச் சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. 15 வயதுக்குட்பட்ட சிறாரைப் படையில் சேர்ப்பது போர்க் குற்றமாகும் மற்றும் மனித சமுதாயத்துக்கு எதிரானக் குற்றமுமாகும். 

8. ஆஸ்திரேலியாவில் கடற்கரைகளில் தடுப்பு முகாம்களைத் திறப்பது மனித உரிமைக்கு எதிரான செயல் : ஐ.நா. எச்சரிக்கை

ஆக.18,2012. ஆஸ்திரேலியாவுக்குக் கடல் பயணம் செய்து குடியேறுவோருக்கும் அடைக்கலம் தேடுவோருக்குமென கடற்கரைகளில் தடுப்பு முகாம்களை மீண்டும் திறக்கும் திட்டம் குறித்து எச்சரித்துள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் அவை இயக்குனர் நவிபிள்ளை.
குடியேற்றதாரர் மற்றும் புகலிடம் தேடுவோர் குறித்த கொள்கையை ஆஸ்திரேலிய அரசு மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ள நவிபிள்ளை, கடற்கரைகளில் தடுப்பு முகாம்களைத் திறப்பது மனித உரிமைகளை மீறுவதாக நோக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
கடினமான பயணம் செய்து கரையேறுபவர்களைத் தடுப்பு முகாம்களில் வைப்பது உடல் மற்றும் உளவியல் ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் நவிபிள்ளை கூறினார். 

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...