Tuesday, 21 August 2012

Catholic News in Tamil - 16/08/12

1. நைஜீரியப் பேராயருக்கு அகில உலக Pax Christi விருது

2. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும், போலந்து கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்

3. உலகில் வன்முறைகள் பெருகி வருவது குறித்து Ecumenical முதுபெரும் தலைவர் கவலை

4. மங்களூர் மறைமாவட்டத்தின் 125வது ஆண்டு நிறைவையொட்டி நிலமற்ற வறியோருக்கு வீடுகள்

5. பிலிப்பின்ஸ் நாட்டில் HIV/AIDS நோயின் தாக்கம் கூடிவருவது கவலையைத் தருகிறது - மணிலா பேராயர்

6. மனித உயிருக்கு ஆதரவாக அமெரிக்க இளையோர் நாடு முழுவதும் மேற்கொண்ட நடைபயணம்

7. சிகரெட் விற்பனைக்கு ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ள புதிய அரசாணைகளுக்கு WHO பாராட்டு

8. எச்.ஜ.வி நோயிலிருந்து குறைந்த விலையில் இனி விடுதலை பெறலாம்

------------------------------------------------------------------------------------------------------

1. நைஜீரியப் பேராயருக்கு அகில உலக Pax Christi விருது

ஆக.16,2012. ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் Abuja பேராயராகப் பணியாற்றும் John Onaiyekan அவர்களுக்கு அக்டோபர் மாதம் 31ம் தேதி அகில உலக Pax Christi விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளற்ற உலகை உருவாக்குதல், அமைதி, நீதி, போன்ற உயர்ந்த கொள்கைகளுக்காகப் பணியாற்றி வருவோருக்கு Pax Christi அமைப்பு விருதுகள் வழங்கி வருகிறது. 2012ம் ஆண்டுக்கான இவ்விருதை Abuja பேராயர் Onaiyekan அவர்களுக்கு வழங்க Pax Christi அமைப்பு முடிவு செய்துள்ளது.
வன்முறைகளைச் சந்தித்துவரும் நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் உருவாக்க பேராயர் Onaiyekan மேற்கொண்டுவரும் முயற்சிகளைப் பாராட்டி இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
உரையாடல் மூலம் மக்களிடையே ஒற்றுமையை கொணர முடியும் என்ற கொள்கைக்கு Abuja பேராயர் Onaiyekan அவர்கள் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று Pax Christi விருதுக்குழுவினர் கூறியுள்ளனர்.
உலக அமைதிக்காக உழைத்த மகாத்மா காந்தி, மார்டின் லூத்தர் கிங் ஜூனியர், Dorothy Day ஆகியோரை அகில உலக Pax Christi அமைப்பினர் எடுத்துக்காட்டுக்களாகப் பறைசாற்றிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


2. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும், போலந்து கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்

ஆக.16,2012. இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவரும், போலந்து கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரும் வரலாற்று சிறப்பு மிக்க ஓர் ஒப்பந்தத்தில் இவ்வேள்ளியன்று கையெழுத்திடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரஷ்யாவுக்கும், போலந்துக்கும் இடையே வரலாற்றில் நிகழ்ந்த பல கசப்பான பகைமை நிகழ்வுகளிலிருந்து இரு நாடுகளும் வெளியேறுவதற்கு ஒரு முதல் முயற்சியாக, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் தலைவர் முதலாம் Kirill போலந்துக்கு இவ்வியாழனன்று பயணம் மேற்கொண்டார்.
இந்த முயற்சியை ஓர் அரசியல் முயற்சியென்று அர்த்தம் கொள்வதற்குப் பதிலாக, கிறிஸ்து காட்டும் மன்னிப்பின் வழியில் செல்வதற்கு இரு திருஅவைகளும் மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகக் காணவேண்டும் என்று  போலந்து கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Jozef Michalik கூறினார்.
இவ்விரு நாடுகளுக்கும் இடையே உள்ள கசப்பான வரலாற்றை மறந்துவிட முடியாது என்றாலும், அந்த வரலாற்றின் காயங்களை நற்செய்தி படிப்பினைகளின் ஒளிகொண்டு மன்னிக்கமுடியும் என்பதற்கு இம்முயற்சி ஓர் அடையாளம் என்று போலந்து ஆயர் பேரவையின் சார்பில் பேசிய அருள்தந்தை Jozef Kloch கூறினார்.
வியாழன் முதல் ஞாயிறு வரை நடைபெறும் இந்தச் சந்திப்பின்போது, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் திருஅவையும் போலந்து கத்தோலிக்கத் திருஅவையும் இணைந்து பல விடயங்களைக் கலந்தாலோசிக்க உள்ளன.


3. உலகில் வன்முறைகள் பெருகி வருவது குறித்து Ecumenical முதுபெரும் தலைவர் கவலை

ஆக.16,2012. இன்றைய உலகில் அமெரிக்கா முதல் ஆப்ரிக்கா வரையிலும், ஐரோப்பா மற்றும் ஆசியப்பகுதிகளிலும் வன்முறைகள் பரவிவருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் Ecumenical முதுபெரும் தலைவர் Bartholomew.
இன்றைய உலகம் சகிப்பற்ற தன்மைகளை எதிர்கொள்வதால் உலக அமைதியும் நிலையான தன்மையும் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, மனித மாண்பு மறுக்கப்படுவதும் இடம்பெறுகிறது என்றார் முதுபெரும் தலைவர் Bartholomew.
நிறவெறிக் கொலைகள், இனப் படுகொலைகள், இன ஒழிப்பு, யூத விரோதப்போக்கு, வழிபாட்டுத்தலங்கள் சேதமாக்கப்படல் போன்றவை வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டும், அதிலும் குறிப்பாக, மதப்போர்வையில் அவைகள் நியாயப்படுத்தப்பட முயலும்போது கண்டனங்கள் தீவிரமாக இருக்கவேண்டும் என்றார் முதுபெரும் தலைவர்.
மத்தியக்கிழக்குப் பகுதியிலிலும், நைஜீரியா, சூடான் போன்றவைகளிலும் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நிலவும் வன்முறைகள் நிறுத்தப்படவும், சிரியாவின் அமைதிக்கு அனைவரும் உழைக்கவும் அழைப்புவிடுத்த முதுபெரும் தலைவர் Bartholomew, அமைதி, மாற்றம், ஒப்புரவு ஆகியவைகளை அடைவதற்கு, கலந்துரையாடலே முக்கியப் பாதை  என்பதையும் வலியுறுத்தினார்.


4. மங்களூர் மறைமாவட்டத்தின் 125வது ஆண்டு நிறைவையொட்டி நிலமற்ற வறியோருக்கு வீடுகள்

ஆக.16,2012. இப்புதனன்று கொண்டாடப்பட்ட இந்திய சுதந்திர நாளன்று மங்களூர் ஆயர் Aloysius Paul D'Souza, 28 வீடுகள் கட்டும்  பணிகளை, Talapady என்ற பங்குதளத்தில் துவக்கிவைத்தார்.
மங்களூர் மறைமாவட்டம் தனது 125வது ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடிவருகிறது. இந்த ஜுபிலி ஆண்டின் ஒரு முக்கிய நிகழ்வாக இம்மறைமாவட்டம் நிலமற்ற வறியோருக்கு வீடுகள் கட்டும் திட்டத்தை அறிவித்திருந்தது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புதனன்று 28 வீடுகள் அமைக்கும் பணியை ஆயர் Paul D'Souza துவக்கி வைத்தார்.
ஒரு வாரத்திற்கு முன், இத்திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட 100வது இல்லத்தை ஆயர் அவர்கள் Ranipur எனுமிடத்தில் ஆசீர்வதித்தார். இப்புதனன்று துவக்கப்பட்டுள்ள 28 வீடுகளையும் சேர்த்து, இத்திட்டத்தின் கீழ் இதுவரை 165 வீடுகள் உருவாகிவருகின்றன என்று மங்களூர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.


5. பிலிப்பின்ஸ் நாட்டில் HIV/AIDS நோயின் தாக்கம் கூடிவருவது கவலையைத் தருகிறது - மணிலா பேராயர்

ஆக.16,2012. HIV/AIDS நோயைப் பற்றிய தெளிவான அறிவு கத்தோலிக்க மக்களுக்கும், துறவியருக்கும் இருக்க வேண்டும் என்று மணிலா உயர்மறைமாவட்டப் பேராயர் Luis Antonio Tagle கூறினார்.
அமைதியாகப் பரவிவரும் இந்தக் கொள்ளை நோயைப்பற்றிய அறிவும், இந்நோய் கண்டோருக்கு ஆற்றக்கூடிய பணிகள்பற்றியத் தெளிவும் அனைவருக்கும் அவசியம் என்று பேராயர் Tagle இப்புதனன்று வெளியிட்ட ஒரு சுற்றுமடலில் கூறியுள்ளார்.
பிலிப்பின்ஸ் நலத்துறையின் கணிப்புப்படி ஒவ்வொரு நாளும் 9 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறிய பேராயர் Tagle, உலகெங்கும் இந்நோயின் தாக்கம் குறைந்துவரும் வேளையில், பிலிப்பின்ஸ் நாட்டில் இந்நோயின் தாக்கம் கூடிவருவது கவலையைத் தருகிறது என்று கூறினார்.
பிலிப்பின்ஸ் நலத்துறை அண்மையில் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, 2010ம் ஆண்டு இந்நோய் கண்டோரின் எண்ணிக்கை 1591 ஆக இருந்ததென்றும், இவ்வாண்டு ஜூன் மாதத்திற்குள் இந்நோய் கண்டோரின் எண்ணிக்கை 1600ஐத் தாண்டிவிட்டதென்றும் தெரிகிறது.
எய்ட்ஸ் நோய் கண்டதால் நம்பிக்கை இழந்து வாழும் மக்களுக்கு நம்பிக்கை தரும் பணியில் கத்தோலிக்கத் திருஅவை பரிவுடன் ஈடுபடவேண்டும் என்றும், திருஅவையில் பணிபுரிவோருக்கும், அருள்பணி பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளோருக்கும் இந்நோய் பற்றிய அடிப்படை விவரங்கள் தெரிந்திருப்பது அவசியம் என்றும் பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை சென்ற ஆண்டு வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில், வலியுறுத்தியது.


6. மனித உயிருக்கு ஆதரவாக அமெரிக்க இளையோர் நாடு முழுவதும் மேற்கொண்ட நடைபயணம்

ஆக.16,2012. மனித உயிருக்கு ஆதரவு தரும் நோக்கத்துடன் 40க்கும் மேற்பட்ட அமெரிக்க இளையோர் நாடு முழுவதும் மேற்கொண்ட நடைபயணம் அண்மையில் வாஷிங்டன் நகரில் நிறைவு பெற்றது.
கிறிஸ்துவ மறையின் தூண்களாக விளங்கும் திருத்தூதர்கள், உயிர்களைப் போற்றும் கலாச்சாரத்தை வளர்த்ததுபோல், இளையோரும் உயிரைப் போற்றி வளர்க்கவேண்டும் என்று 1993ம் ஆண்டு திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் உலக இளையோர் நாளில் விடுத்த அழைப்பின் அடிப்படையில் 1995ம் ஆண்டு Crossroads என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.
மனித உயிரை மதிக்காமல், கருக்கலைப்பு, கருத்தடை போன்ற செயல்பாடுகள் பெருகிவரும் அமெரிக்க மண்ணில், மனித உயிர்களை மதிக்கவேண்டும் என்ற விருதுவாக்குடன் Crossroads அமைப்பைச் சேர்ந்த இளையோரால் இவ்வாண்டு மேமாதம் 19ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்குக் கடற்கரையில் ஆரம்பமான இந்த நடைப்பயணம், 40 மாநிலங்கள் வழியே மேற்கொள்ளப்பட்டது.
இந்த முயற்சியில் ஈடுபட்ட இளையோர், ஒவ்வொரு மாநிலத்திலும் பல ஆலயங்களில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அதேநேரம், அப்பகுதிகளில் அமைந்திருந்த கருகலைப்பு மருத்துவமனைகளுக்கு முன் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.
Crossroads அமைப்பையொத்த மற்ற இளையோர் அமைப்புக்கள் கனடா, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் துவக்கப்பட்டுள்ளன என்று CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.


7. சிகரெட் விற்பனைக்கு ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ள புதிய அரசாணைகளுக்கு WHO பாராட்டு

ஆக.16,2012. புகையிலைப் பொருட்களை விற்கும் முறைகளில் ஆஸ்திரேலிய அரசு விதித்துள்ள அரசாணைகளை எதிர்த்து, புகையிலை நிறுவனங்கள் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்து, அரசின் முடிவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ள ஆஸ்திரேலிய உச்சநீதி மன்றத்தை ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம் WHO பாராட்டியுள்ளது.
சிகரெட் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி சிகரெட் பெட்டிகளை அமைப்பதை நிறுத்திவிட்டு, அனைத்து நிறுவனங்களும் ஒரேவிதமாக, இளம்பச்சை நிறத்தில் பெட்டிகளை அமைத்து, சிகரெட் குடிப்பதால் விளையும் தீமைகளைக் காட்டும் படங்களை அப்பெட்டிகளில் பிரசுரிக்கவேண்டும் என்று ஆஸ்திரேலிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அரசின் இவ்வாணை 2012ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. அரசின் இவ்வாணையை நீக்க வேண்டும் என்று புகையிலை நிறுவனங்கள் வழக்கு தொடுத்தன. இவ்வழக்கை விசாரித்த ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம், அரசுக்கு ஆதரவாகத் தன் தீர்ப்பை இப்புதனன்று வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசும், உச்ச நீதி மன்றமும் காட்டியுள்ள துணிவைப் பாராட்டிப் பேசிய WHO உலக நலவாழ்வு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Margaret Chan, இதே துணிவை மற்ற நாடுகளும் பின்பற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புகையிலை பயன்பாட்டால் ஒவ்வோர் ஆண்டும் 60 மக்கள் இறக்கின்றனர் என்று கூறும் WHO அறிக்கை, இந்த மரணங்கள் தடுக்கக்கூடிய ஒன்று என்றும், புகையிலை நிறுவனங்களின் அளவுக்கு மீறிய விளம்பரங்களைத் தடுக்காவிடில் இந்த மரணங்கள் விரைவில் 80 இலட்சமாக மாறும் என்றும் கூறியுள்ளது.


8. எச்.ஜ.வி நோயிலிருந்து குறைந்த விலையில் இனி விடுதலை பெறலாம்

ஆக.16,2012. Switzerland நாட்டில் உள்ள பேசல் (Basel) பல்கழைக்கழகம் எச்.ஜ.வி (HIV) நோய் குறித்து மேற்கொண்ட ஆய்வில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு சேர்க்கைகள் அடங்கிய மருந்துக்களை நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்துவதால், 90 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 16,000 நோயாளிகளில், மதுவுக்கும், போதைக்கும் அடிமையானவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் என எச்.ஜ.வி நோயுடன் சேர்த்து மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டு, முற்றிலும் எச்.ஜ.வி நோய்கிருமிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 1957 பேர் மட்டுமே ஆய்விற்குப் பயன்படுத்தப்பட்டனர்.
ஆய்வின் முடிவில், அனைத்து நோயாளிகளும் 90 விழுக்காடு குணமடைந்திருப்பதாக அனைத்துலக மருத்துவக் காப்பகம் இச்செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிக விலை கொடுத்து வாங்கும் மருந்துக்களின் அதே பலனை பல்வேறு சேர்க்கைகள் அடங்கிய இந்த மருந்துக்கள் குறைந்த விலையில் தருகின்றன என்றும், இதனால் அனைத்து வகுப்பினராலும் மருந்துகளை வாங்கவும் நோயிலிருந்து குணமடையவும் இந்த ஆய்வு உதவுகிறது என்றும் ஆய்வின் தலைவர் Manuel Battegay தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...