Tuesday, 21 August 2012

Catholic News in Tamil - 14/08/12

1. இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்து திருப்பீடப் பேச்சாளர்

2. ஒப்புரவுக்கான பணியில் திருச்சபை மீதே மக்களின் நம்பிக்கை

3. பிலிப்பீன்ஸில் வெள்ள‌ப்பெருக்கால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌ காரித்தாஸ் விண்ணப்பம்

4. யாழில் மட்டும் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர்: யாழ் ஆயர்

5. நிதி பற்றாக்குறையால் வடக்கு இலங்கையில் ஐ.நா தொண்டு நிறுவனங்களின் பணி இடைநிறுத்தம்

6. இஸ்பெயினின் பல்வேறு நகர்களில் வாழ்வுக்கு ஆதரவான பேரணிகள்

7. கடினமாக உழைப்பவர்களின் பட்டியலில் இந்தியர்களுக்கு 2வது இடம் என்கிறது சர்வதேச ஆய்வு

------------------------------------------------------------------------------------------------------
1. இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்து திருப்பீடப் பேச்சாளர்

ஆக.14,2012. திருப்பீட இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டது தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணைகள் துவக்கப்படுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, பிரச்னைகளை வெளிப்படையாகவும் தீவிரமாகவும் அணுகுவதற்கான உறுதியான வழிமுறை என்றார் திருப்பீடப் பேச்சாளர்.
திருப்பீட இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டது தொடர்புடைய குற்றச்சாட்டு அதிகாரப்பூர்வமாகப் பதிவுச்செய்யப்பட்டுள்ளது, தொடரும் விசாரணைகள் குறித்த கடைசி வார்த்தையோ அல்லது இந்த நிகழ்வின் அர்த்தமோ, அது எவ்வாறு துவங்கியது என்பதன் விளக்கமோ அல்ல என்றார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை ஃபெதரிக்கோ லொம்பார்தி.
ஒருவர் இதில் நேரடியாக ஈடுபட்டார் எனவும், இன்னொருவர் மறைமுகமாக இதற்கு உதவியுள்ளார் எனவும் இருவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்று கூறிய திருப்பீடப்பேச்சாளர், அவர்களின் பெயர்களையும் உள்ளடக்கிய நீண்ட வெளிப்படையான அறிக்கையை இத்திங்களன்று திருப்பீடம் வெளியிட்டுள்ளது அதன் வழக்கமான அணுகுமுறைகளிலிருந்து வேறுபட்டதாக உள்ளது எனவும் கூறினார்.
இவ்விசாரணைகளுக்குத் திருத்தந்தை வழங்கி வரும் ஊக்கம் அவர் நீதித்துறையின் மீது கொண்டுள்ள மதிப்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என மேலும் கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.


2. ஒப்புரவுக்கான பணியில் திருச்சபை மீதே மக்களின் நம்பிக்கை

ஆக.14,2012. கென்யாவில் ஒப்புரவுச்சூழலை உருவாக்குவதில் அரசைவிட தலத்திருஅவை மீதே அதிக நம்பிக்கைக்கொண்டுள்ளதாக அந்நாட்டின் 53.4 விழுக்காட்டு மக்கள் அறிவித்துள்ளனர்.
தலைநகர் நைரோபியிலுள்ள "Hakimani" என்ற இயேசு சபை சமூக மையம் கடந்த மூன்று மாதங்களாக கென்யாவின் 30 மாவட்டங்களில் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.
கென்யாவின் அரசுத்தலைவர் தேர்தலைத் தொடர்ந்து அந்நாட்டில் 2007 மற்றும் 2008ல் துவங்கிய வன்முறைகளின் விளைவுகள் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டு இயேசு சபையினர் எடுத்துள்ள இந்த ஆய்வில் கலந்துகொண்டோருள் 93 விழுக்காட்டினர், நாட்டில் ஒப்புரவு இடம்பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உரையாற்றிய கென்ய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் பேராயர் Zacchaeus Okoth, 2007 மற்றும் 2008ம் ஆண்டின் வன்முறைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதை சுட்டிக்காட்டி, மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இன்னும் மக்கள் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வருவதாக எடுத்துரைத்த பேராயர், குற்றமிழைத்தவர்களுக்கும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஒருநாள் நிச்சயம் நீதி வழங்கப்படும் என்பதில் திரு அவை உறுதியான நம்பிக்கைக்கொண்டிருப்பதாக மேலும் கூறினார்.


3. பிலிப்பீன்ஸில் வெள்ள‌ப்பெருக்கால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌ காரித்தாஸ் விண்ணப்பம்

ஆக.14,2012. பிலிப்பீன்ஸ் நாட்டில் அண்மைய வெள்ள‌ப்பெருக்கால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌ ந‌ல்ம‌ன‌ம்ப‌டைத்தோரின் நிதியுத‌விக‌ள் தேவைப்ப‌டுவ‌தாக‌ த‌ல‌த்திருஅவை அறிவித்துள்ள‌து.
திருஅவையின் பிற‌ர‌ன்பு ப‌ணிக‌ளுக்கென‌ க‌ட‌ந்த‌ குருத்து ஞாயிறன்று கோவில்களில் திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ப‌ண‌ம் த‌ற்போது வெள்ள‌ப்பெருக்கால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு செல‌வ‌ளிக்க‌ப்ப‌டும் என்றார், காரித்தாஸ் அமைப்பின் தேசிய‌ செய‌ல‌ர் அருள்தந்தை Edu Gariguez.
மணிலாவுக்கு அருகிலுள்ள மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உரைத்த அருள்தந்தை Gariguez, ஏற்கனவே திரட்டப்பட்ட தொகையைக்கொண்டு ஆரம்பப்பணிகளை ஆற்ற முடிகின்றபோதிலும், மேலும் நிதியுதவிகள் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
மணிலாவுக்கு அருகேயுள்ள Iba பகுதியில் மட்டும் குறைந்தபட்சம் 2,700 குடும்பங்கள் அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. San Fernando மற்றும் Pampanga மாவட்டங்களில் 11 நகர்களும் 160 கிராமங்களும் இன்றும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.


4. யாழில் மட்டும் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர்: யாழ் ஆயர்

ஆக.14,2012. இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் போருக்குப் பின்னர் குறைக்கப்பட்டு மீண்டும் தத்தம் இடங்களுக்குத் திரும்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கைக்கு எதிராக தற்போது  யாழ்ப்பாணத்தை மட்டும் கிட்டத்தட்ட நாற்பதினாயிரம் இராணுவத்தினர் சூழ்ந்திருக்கிறார்கள் என யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
இராணுவம் மேலும் அதிகமாகக் குவிக்கப்பட்டிருப்பது, மக்களின் இயல்பு வாழ்க்கையை முழுமையாகப் பாதிக்கிறது என உரைத்த ஆயர், சில இடங்களில் தமிழர்களை மீன்பிடிக்கக் கூட இராணுவம் அனுமதிக்காத நிலையில், சிங்கள மீனவர்கள் இராணுவத்தின் உதவியோடு மீன்பிடிப்பது, தமிழ் மக்கள் மத்தியில் கசப்பான உணர்வுகளை எழுப்பியுள்ளது என கவலையை வெளியிட்டார்.
வன்னிப் பகுதிகளில் நிலைமை கடுமையாக இருப்பதாகவும், புலிகள் மீண்டும் வந்துவிடுவார்களோ என்ற அச்சம் இராணுவத்தினர் மத்தியில் காணப்படுவதாகவும் ஆயர் சௌந்தரநாயகம் மேலும் கூறினார்.


5. நிதி பற்றாக்குறையால் வட இலங்கையில் ஐ.நா தொண்டு நிறுவனங்களின் பணி இடைநிறுத்தம்

ஆக.14,2012. இலங்கையின் வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுவரும்  ஐக்கிய நாடுகள் அவையின் தொண்டு நிறுவனங்கள் தமது பணிகளை நிதி பற்றாக்குறை காரணமாக தொடரமுடியாமல் இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு முன்னர் உதவிகளை வழங்கியவர்கள் தற்போது இலங்கைக்கு உதவ முன்வருதில்லை என ஐ.நாவின் மனிதாபிமான உதவிகளுக்கான செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஜிங் தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ள 1470 கோடி டாலர் நிதி தேவைப்படுவதாக கொழும்பிலுள்ள ஐ.நா. தூதரகம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் 18.4 விழுக்காட்டு நிதியே இதுவரை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


6. இஸ்பெயினின் பல்வேறு நகர்களில் வாழ்வுக்கு ஆதரவான பேரணிகள்

ஆக.14,2012. வாழ்வுக்கு ஆதரவான 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து அக்டோபர் மாதத்தில் இஸ்பெயினின் பல்வேறு நகர்களில் பேரணிகளை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்பெயின் நாட்டில் கருக்கலைத்தல்களை அனுமதிக்கும் சட்டம் திருப்பப் பெறப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்டோபர் 7ம் தேதி தலைநகர் மத்ரித்திலும் அந்நாட்டின் ஏனைய 60 நகர்களிலும் 'வாழ்வதற்கான உரிமை' என்ற கோரிக்கையுடன் பேரணிகள் நடத்தப்பட உள்ளன.
இஸ்பெயின் நகர்களிலும் உலகம் முழுவதும் உள்ள இஸ்பானிய தூதரகங்களின் முன்னிலையிலும் இப்பேரணிகள் அக்டோபர் மாதம் 7ம் தேதி நண்பகல் 12 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


7. கடினமாக உழைப்பவர்களின் பட்டியலில் இந்தியர்களுக்கு 2வது இடம் என்கிறது சர்வதேச ஆய்வு

ஆக.14,2012. சீனர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்களே பணியிடங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
பணியிடங்களில் சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக உள்ள ரீகஸ் நிறுவனம் 86 நாடுகளில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
குடும்ப உறுப்பினர்களுடன் இருப்பதே மகிழ்ச்சி என்று 59 விழுக்காட்டினரும், பணியிடத்தில் இருப்பதே மகிழ்ச்சியாக உள்ளது என்று 69 விழுக்காட்டினரும் இந்த ஆய்வில் கூறியுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.
குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவிடுவதைவிட, பணியிடங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதில் சீனர்களும் இந்தியர்களும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர் எனவும், இதற்கு எதிர்மாறாக, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் உள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...