Monday, 13 August 2012

Catholic News in Tamil - 13/08/12


1. திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை

2. பிலிப்பின்ஸ், சீனா, ஈரான் மக்களுக்காக திருத்தந்தையின் விண்ணப்பம்

3. ஈரானில் காரித்தாஸ் அமைப்பின் உதவிகள்

4. இறைவனின் இருப்பை இயற்பியல் வழி நிரூபிக்க இயலும்

5. நேபாளக் கத்தோலிக்கக் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

6. பாகிஸ்தானில் மத சிறுபான்மையுயினர் தினம்

7. கடல்பகுதிகளைக் காப்பதற்கான ஐ.நா.வின் புதிய திட்டம்


------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை

ஆக.13,2012. ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த இயேசுவின் புதுமையைப்பற்றி இவ்வாரமும் தன் மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இறைவனால் வாக்களிக்கப்பட்ட நாட்டைநோக்கிச் செல்லும் பாதையில், இஸ்ரயேல் மக்களுக்கு வானிலிருந்து 'மன்னா' எனும் உணவு வழங்கப்பட்டதைக் குறித்தும், தன்னிடம் வந்த பெருந்திரளான மக்களுக்கு 'மன்னா'வைத் தாண்டிய முடிவற்ற உணவு தானே என்பதை இயேசு எடுத்துரைத்ததையும் தன் செப உரையில் திருத்தந்தை குறிப்பிட்டார்.
திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான Castel Gondolfoவிலிருந்து அவர் வழங்கிய உரையில், மனிதருக்கு முழு நிறைவான வாழ்வை வழங்கவும், மனிதரை இறை வாழ்வுக்கு அறிமுகம் செய்யவும் இறைமகன் வானிலிருந்து உணவாக மண்ணுலகுக்கு இறங்கிவந்தார் என்று கூறினார்.
தங்களுக்கு ஊட்டம் தரும் உண்மையான உணவு சட்டமே, அதாவது, மோசே வழியாக இறைவன் வழங்கிய வார்த்தையே என்பது இஸ்ரயேல் மக்களின் எண்ணம்; ஆனால், தற்போது இயேசு, தானே மனுவுருவான இறைவார்த்தை என தன்னை வெளிப்படுத்துகிறார் என மேலும் தன் மூவேளை செப உரையின்போது குறிப்பிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. பிலிப்பின்ஸ், சீனா, ஈரான் மக்களுக்காக திருத்தந்தையின் விண்ணப்பம்

ஆக.13,2012. தன் மூவேளை செப உரையின் இறுதியில் பிலிப்பின்ஸ், சீனா மற்றும் ஈரான் மக்களுடன் விசுவாசிகள் தங்கள் ஒருமைப்பாட்டை வெளியிடவேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பு விடுத்தார்.
பிலிப்பின்ஸிலும், சீனாவிலும் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், ஈரானில் நில நடுக்கத்தால் துயருக்குள்ளாகியிருக்கும் மக்களையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, பெரும் எண்ணிக்கையில் இந்நாடுகளில் இறந்துள்ள மக்களுக்காகச் செபிக்குமாறும், இவ்வியற்கைப் பேரிடர்களால் காயமடைந்தோர், மற்றும் புலம்பெயர்ந்தோருடன் ஒருமைப்பாட்டை அளிக்குமாறும் விண்ணப்பித்தார்.
துன்புறும் மக்களுக்கு நம் உதவிகளையும், ஒருமைப்பாட்டையும் வழங்குவோம் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
பிலிப்பின்ஸ் நாட்டில் அண்மையில் பெய்த பெருமழையால் ஏறத்தாழ 100 பேர் உயிரிழந்தனர், 15 இலட்சம் பேர் தங்கள் இல்லங்களை இழந்து, வேறு இடங்களில் தங்கவேண்டியுள்ளது. சீனாவிலும் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர், 8,67,000 பேர் தங்கள் உறைவிடங்களை இழந்துள்ளனர்.
இதேபோல், ஈரானின் வடமேற்குப் பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் ஏறத்தாழ 250 பேர் இறந்திருக்கலாம் என்றும், 2000க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இந்நிலநடுக்கத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலும் அழிவுக்குள்ளாகியுள்ளன.


3. ஈரானில் காரித்தாஸ் அமைப்பின் உதவிகள்

ஆக.13,2012. ஈரான் நாட்டில் நில நடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரங்களிலேயே அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் பணிகளைத் துவக்கியுள்ளதாக அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு அறிவித்தது.
வடமேற்கு ஈரான் பகுதியான Tabrizல் இடம்பெற்ற நில அதிர்ச்சியில் Ardebil, Meskhinshahr - Ahar, மற்றும் Varzeghan  கிராமங்களின் 80 விழுக்காட்டு வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகக் கூறும் கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு, நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளதாகவும், ஆயிரக்கணக்கில் குடும்பங்கள் தங்கள் உறைவிடங்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.
இயற்கைப்பேரிடர்களில் காயமுற்றோருக்கு புனர்வாழ்வுத்திட்டங்களை வகுத்தல், வேலைகளை இழந்தோருக்கு பயிற்சி அளித்தல், விதவைகளுக்கு உதவியளித்தல், பள்ளிகள், மருத்துவ மனைகள் மற்றும் கழிவறைகள் கட்டிக்கொடுத்தல், சுத்தமான குடிநீர் வழங்குதல் போன்றவற்றிலும் காரித்தாஸ் பணியாளார்கள், ஈரானில் ஈடுபட்டுவருவதாக காரித்தாஸ் அமைப்பு தெரிவித்தது.
2003ம்ஆண்டு டிசம்பர் மாதம் ஈரானின் Bam நகரில் இடம்பெற்ற பெரும் நில அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவக் காரித்தாஸ் அமைப்பு, நான்கு கல்விக்கூடங்களைக் கட்டிக்கொடுத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.


4. இறைவனின் இருப்பை இயற்பியல் வழி நிரூபிக்க இயலும்

ஆக.13,2012. அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு இறைவனின் இருப்பை நாம் நிரூபிக்க முடியும் என அறிவித்துள்ளார் மெய்யியல் வல்லுனரும் திரைப்படத் தயாரிப்பாளருமான இயேசு சபை குரு Robert Spitzer.
இயற்பியலிலிருந்து இறைவனுக்கான ஆதாரங்களை வழங்கும் நிகழ்வு சமூகத்தொடர்பு சாதனங்கள் வழி முற்றிலுமாக இடம்பெற்றதில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் அருள்தந்தை Spitzer, இயற்பியல் தரும் ஆதாரங்கள் இறைவனின் இருப்பை உறுதிப்படுத்துகின்றனவே அன்றி, மறுப்பதில்லை எனவும் கூறினார்.
இந்த அகிலம் என்பது வெறுமையிலிருந்து வருவது அல்ல, மற்றும் எவ்வித நோக்கமற்றதும் அல்ல என்பதை அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்றும் அருள்தந்தை Spitzer கூறினார்.
இன்றைய நவீன இயற்பியல் தத்துவங்களின் மத்தியிலும், இயற்பியலாளர்கள், இவ்வுலகத்தின் துவக்கத்தையும், அதன் காரணத்தையும் மறுக்கவில்லை என்று கூறிய இயேசு சபை குரு Spitzer, ஒன்றுமில்லாமையிலிருந்து இவ்வுலகம் தானே பிறக்கவில்லை, அதை உருவாக்க ஒரு சக்தி வேண்டும், அவரே அதன் படைப்பாளி என்றார்.
இந்த எண்ணங்களைத் தாங்கி, “Cosmic Origins” என்ற தலைப்பில் அருள்தந்தை Spitzer உருவாக்கியுள்ள 49 நிமிட ஆவணப்படத்தில் எட்டு புகழ்பெற்ற இயற்பியலாளர்கள் அகிலத்தின் ஆரம்பங்கள் பற்றிய தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.


5. நேபாளக் கத்தோலிக்கக் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆக.13,2012. நேபாளத்தலைநகர் காத்மண்டுவின் அன்னைமரி விண்ணேற்புக் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக மத தீவிரவாதக்குழு ஒன்று தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, அக்கோவிலுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேபாள பாதுகாப்பு இராணுவம் என தன்னை அழைத்துக்கொள்ளும் இந்து தீவிரவாத அமைப்பு ஒன்றின் தலைவர், விண்ணேற்பு அன்னை மரியா கோவில் பங்குத்தந்தை இராபின் இராயை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்களுக்கு உதவி வழங்கவில்லையெனில் கோவிலை மீண்டும் ஒருமுறை தாக்க உள்ளதாக மிரட்டியுள்ளார்.
ஏற்கனவே 2009ம் ஆண்டு இதே கோவில், வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டதில் ஒரு 14 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கடந்த வெள்ளியன்று இக்கோவில் பங்குத்தந்தை பெற்ற மிரட்டலைத்தொடர்ந்து, தற்போது இக்கோவில் மற்றும் ஏனைய கிறிஸ்தவக் கட்டிடங்களுக்கான நேபாள காவல்துறையின் கண்காணிப்பு அதிகரித்துள்ளது.


6. பாகிஸ்தானில் மத சிறுபான்மையுயினர் தினம்

ஆக.13,2012. வெவ்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும் பாகிஸ்தான் மக்கள் அனைவரும் வளம் நிரம்பிய ஒன்றிணைந்த பாகிஸ்தானை உருவாக்க இணைந்து உழைத்து வருவதாக உரைத்தார் அந்நாட்டு பிரதமரின் சிறப்பு ஆலோசகர் Paul Bhatti.
"சிறுபான்மையினர் தினம்" பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட, தேசிய இணக்க வாழ்விற்கான பிரதமரின் சிறப்பு ஆலோசகர் Paul Bhatti, கல்வி, நல ஆதரவு மற்றும் பாதுகாப்பு தொடர்புடையவைகளில் சிறுபான்மையினர் நாட்டிற்கு வழங்கியுள்ள பெரும்பங்கைச் சுட்டிக்காட்டினார்.
தீவிரவாதம், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் கவலையை வெளியிட்ட அவர், முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ மற்றும் தன் சகோதரர் முன்னாள் அமைச்சர் Shahbaz Bhatti ஆகியோர் கொலைச்செய்யப்பட்டதையும் எடுத்தியம்பினார்.
தீவிரவாதத்திற்குப் பலியான இவர்களிருவரும் குடியரசுக் கொள்கைகளுக்கும், சரிநிகர் சமூக அமைதிக்கெனவும் தங்களை அர்ப்பணித்தவர்கள் எனவும் எடுத்தியம்பினார்.
சிறுபானமியினருக்கான அமைச்சராக இருந்த Shahbaz Bhatti,  பாகுபாட்டு நிலைகள், சகிப்பற்ற தன்மைகள் மற்றும் மத தீவிரவாதத்திற்கு எதிரானப் பணிகளுக்கு தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் என்பதை மேலும் எடுத்தியம்பினார் Paul Bhatti.


7. கடல்பகுதிகளைக் காப்பதற்கான ஐ.நா.வின் புதிய திட்டம்

ஆக.13,2012. உலகில் கடல் பகுதிகளையும் அதை நம்பியிருக்கும் மக்களையும் காப்பாற்றும் நோக்கில் புதிய திட்டம் ஒன்றை இஞ்ஞாயிறன்று தென்கொரியாவில் துவக்கிவைத்தார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
கடல் சட்டம் குறித்த ஐ.நா. ஒப்பந்தம், கையெழுத்திற்கு அழைப்பு விடப்பட்டதன் 30ம் ஆண்டை சிறப்பிக்கும் விழாவில் தென்கொரியாவின் Yeosu நகரில் உரையாற்றிய ஐ.நா. பொதுச்செயலர், பல்வேறு வளங்களைக் கொண்டிருக்கும் கடல் இன்று எதிர்நோக்கி வரும் அச்சுறுத்தல்கள் குறித்து தன் கவலையை வெளியிட்டார்.
கடல் சார்ந்த சட்டங்களை அமல்படுத்துவதைப் பலப்படுத்துவது மற்றும் அதற்கு ஆதரவளிப்பது தொடர்புடைய இசைவு இன்றைய சூழலில் மிகவும் அவசியம் என்ற ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், 1982ம் ஆண்டு கையெழுத்திற்கென முன்வைக்கப்பட்ட ஒப்பந்தம் இதுவரை 161 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அவையின் ஆதரவைப் பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...