Monday, 13 August 2012

Catholic News in Tamil - 08/08/12


1. கிறிஸ்தவர்கள், வாழ்நாள் முழுவதும் வன்முறையின் வடுக்களைத் தாங்கி வாழவேண்டியுள்ளது - கர்தினால் பீட்டர் டர்க்சன்

2. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை அபுஜா பேராயர்

3. நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலையொட்டி Sierra Leone ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள சுற்றுமடல்

4. மனித முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எந்த அறிவியல் முயற்சியையும் திருஅவை வரவேற்கிறது - வத்திக்கான் வானியல் ஆய்வு மையத்தின் இயக்குனர்

5. "இணையதளம் மீது இளையோர் கொண்டுள்ள கட்டுப்பாடற்ற ஈர்ப்பு" - கத்தோலிக்கக் கருத்தரங்கு

6. நல்லாயன் துறவு சபைக் அருட்சகோதரிகளைப் பற்றிய ஓர் ஆவணப்படம்

7. கிழக்கு ஆசியா, பசிபிக் பகுதி நாடுகளில் வாழும் குழந்தைகள் வன்முறைகளால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் - UNICEF அறிக்கை

8. அழிந்துவரும் அரியலூர் ஆழ்கடல் படிமங்கள்

------------------------------------------------------------------------------------------------------
1. கிறிஸ்தவர்கள், வாழ்நாள் முழுவதும் வன்முறையின் வடுக்களைத் தாங்கி வாழவேண்டியுள்ளது - கர்தினால் பீட்டர் டர்க்சன்

ஆக.08,2012. வன்முறைகளைச் சந்தித்துவரும் கிறிஸ்தவர்கள் உடலளவில் மட்டுமல்ல, உள்ளத்தளவிலும் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் வன்முறையின் வடுக்களைத் தாங்கி வாழவேண்டியுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நைஜீரியாவில் ஆகஸ்ட் 6ம் தேதி கிறிஸ்தவக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, வத்திக்கான் செய்தித்தாள் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில், நீதி மற்றும் அமைதிக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் இவ்வாறு கூறினார்.
2013ம் ஆண்டு உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியின் மையக்கருத்து "அமைதியை உருவாக்குபவர்கள் பேறுபெற்றோர்" என்பதையும் கர்தினால் டர்க்சன் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவ அமைப்புக்கள் ஆயுதங்கள் தாங்காத குழுக்கள் என்பது உலகறிந்த உண்மை என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன், இதனால், ஏனைய வன்முறை அமைப்புக்களுக்கு கிறிஸ்தவர்கள் எளிதான ஓர் இலக்காக மாறி வருவது வேதனை தருகிறது என்று கூறினார்.
நைஜீரியாவில் மட்டுமல்ல, பொதுவாகவே ஆப்ரிக்காவின் பல நாடுகளிலும், புறநகர்களிலும், கிராமங்களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் கிறிஸ்தவ கோவில்கள் அமைக்கப்பட்டிருப்பதும் இந்தத் தாக்குதல்களுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கர்தினால் டர்க்சன் சுட்டிக்காட்டினார்.


2. நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை அபுஜா பேராயர்

ஆக.08,2012. ஆகஸ்ட் 6, இத்திங்களன்று நைஜீரியாவின் Okene எனுமிடத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க அந்நகரில் பெரும்பான்மையினராய் இருக்கும் இஸ்லாமியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் Abuja பேராயர் John Onaiyekan.
நைஜீரியாவில் அண்மைய மாதங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் வன்முறைகளைக் குறித்து வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில், இவ்வன்முறைகள் மத சார்பானவை என்று கூறுவதை விட, அரசியல் உள்நோக்கங்கள் கொண்டதென்பதை உணரலாம் என்று பேராயர் Onaiyekan கூறினார்.
அரசியல் கலந்துள்ள இந்த வன்முறைகளிலிருந்து மக்களைக் காப்பதற்கு அரசு வலுவிழந்திருப்பதுபோல் தெரிகிறது என்ற தன் கவலையையும் வெளியிட்டார் பேராயர் Onaiyekan.
இந்த வன்முறைகளிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, கிறிஸ்தவர்களும் ஆயதம் தாங்கவேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை என்பதை வலியுறுத்திக் கூறிய பேராயர் Onaiyekan, வன்முறைகளுக்குக் காரணமானவர்களை அடையாளம் காண, இஸ்லாமியர்கள் உதவினால் மட்டுமே இந்த வன்முறையைக் களையமுடியும் என்று எடுத்துரைத்தார்.


3. நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலையொட்டி Sierra Leone ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள சுற்றுமடல்

ஆக.08,2012. நாட்டில் நிகழும் அரசியல் நடவடிக்கைகளில் தலத் திருஅவையும் இணைந்திருக்கும், ஆனால், எந்த ஒரு கட்சியையும், தனிப்பட்டவர்களையும் சார்ந்து இருக்காது என்று Sierra Leone ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.
இவ்வாண்டு நவம்பர் மாதம் அந்நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலையொட்டி ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள சுற்றுமடலில், கிறிஸ்தவர்கள் அனைவரும் தேர்தலில் முழுமையாகப் பங்கேற்கவேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பல்வேறு இன, மொழி பாகுபாடுகளின் அடிப்படையில் வாக்குகளை வழங்காமல், பொதுநலனை முன்னிறுத்தி மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரங்களின்போதும், தேர்தல் நிகழும்போதும் எவ்வகை வன்முறைகளும் இல்லாமல் தேர்தல்கள் நடைபெற வேண்டுமென்றும், தேர்தல் முடிவுகளை கண்ணியமான முறையில் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயர்கள் தங்கள் சுற்றுமடலில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


4. மனித முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எந்த அறிவியல் முயற்சியையும் திருஅவை வரவேற்கிறது - வத்திக்கான் வானியல் ஆய்வு மையத்தின் இயக்குனர்

ஆக.08,2012. அறிவியல் உலகம் தீர ஆய்வு செய்து வெளியிடும் ஒவ்வொரு உண்மையையும் திருஅவை திறந்த மனதுடன் வரவேற்கிறது என்று வத்திக்கான் வானியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை Jose Gabriel Funes,  கூறினார்.
ஆகஸ்ட் 5, இஞ்ஞாயிறன்று அமெரிக்க NASA மையத்தின் Curiosity என்ற ஓர் ஆய்வு ஊர்தி செவ்வாய் கோளத்தில் வெற்றிகரமாக இறக்கப்பட்டதையோட்டி வத்திக்கான் வானொலிக்கு பேட்டியளித்த அருள்தந்தை Funes, இந்த அறிவியல் சாதனை உலகமனைத்திற்கும் மகிழ்வைத் தருகிறது என்று கூறினார்.
2011ம் ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கோளம் நோக்கி பயணம் துவக்கிய Curiosity, இஞ்ஞாயிறு இரவில் அங்கு தரையிறங்கியுள்ளது. அடுத்த ஈராண்டுகள் இந்த ஆய்வு ஊர்தி செவ்வாய் கோளத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
வானியல் ஆய்வு மையம் ஒன்று வத்திக்கான் பெயரால் இயங்கிவருகிறது என்பதே, திருஅவை அறிவியலைக் கண்டு அஞ்சுவதில்லை, மாறாக, மனித முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எந்த அறிவியல் முயற்சியையும் திருஅவை உற்சாகப்படுத்தி வருகிறது என்பதற்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டு என்று அருள்தந்தை Funes கூறினார்.


5. "இணையதளம் மீது இளையோர் கொண்டுள்ள கட்டுப்பாடற்ற ஈர்ப்பு" - கத்தோலிக்கக் கருத்தரங்கு

ஆக.08,2012. Facebook, Twitter போன்ற இணையதள நடவடிக்கைகளில் இளையோர் அளவுக்கதிகமான நேரம் செலவழிப்பதால், அவர்கள் அடையவேண்டிய வளர்ச்சியும், வாழ்வில் பெறவேண்டிய உறவுகளும் பெருமளவு பாதிக்கப்படுகின்றன என்று கத்தோலிக்க பல்கலைக் கழக மாணவர் அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகளின் கத்தோலிக்க பல்கலைக் கழக மாணவர் அமைப்பு, Tai Pei நகரில் அண்மையில் நடத்திய ஒரு வாரக் கருத்தரங்கில் "இணையதளம் மீது இளையோர் கொண்டுள்ள கட்டுப்பாடற்ற ஈர்ப்பு" என்ற தலைப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
ஜப்பான், தென்கொரியா, தாய்வான், ஹாங்காங் என்ற பல நாடுகளிலிருந்து இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள், இணையதளத்தில் இளையோர் அளவுக்கு அதிகமான நேரம் செலவிடுவதால் அவர்களது விசுவாச வாழ்வு உட்பட வாழ்வின் பல்வேறு அம்சங்களில் கவலை தரும் போக்கு அதிகரித்துள்ளது என்பதைக் குறித்து பேசினார்கள்.
ஜப்பான் சுனாமி நேரத்தில் சொந்தங்களைத் தேடுவதற்கு இணையதளங்கள் பெருமளவில் உதவிகள் செய்தன என்பதை மறுக்கமுடியாது என்று கூறிய இளையோர், கணணி, இணையதளம்  போன்ற முன்னேற்றங்கள் மனித சமுதாயத்திற்கு பெரும் பயன்களை வழங்கியுள்ளன என்றாலும், அவற்றின் மூலம் விளைந்துள்ள ஆபத்துக்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன என்பதையும் எடுத்துரைத்தனர்.


6. நல்லாயன் துறவு சபைக் அருட்சகோதரிகளைப் பற்றிய ஓர் ஆவணப்படம்

ஆக.08,2012. குடும்பங்களுக்குள் வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களையும், குழந்தைகளையும் மீட்டு, அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நல்லாயன் துறவு சபைக் அருட்சகோதரிகளைப் பற்றிய ஓர் ஆவணப்படம் அண்மையில் வெளியானது.
Taiwan நாட்டின் Taipei, Kaohsiung ஆகிய இரு பெரும் நகரங்களில் உழைத்து வரும் இவ்வருட்சகோதரிகளின் பணி பற்றிய ஆவணப்படத்தின் பெயர் சீன மொழியில் Pingan hao rizi, அதாவது, ஓர் அமைதியான வாழ்வு.
குடும்பங்களில் வன்முறைகளைச் சந்தித்த ஆறு பெண்களைப்பற்றிய இந்த ஆவணப்படத்தின் மூலம், தாய்வான் நாட்டில் நடைபெற்றுவரும் ஓர் ஆபத்தான போக்கு வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
ஐ.நா. அமைப்பு மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி, தாய்வான் நாட்டில் 2008ம் ஆண்டு 75,438 என்ற அளவில் இருந்த குடும்ப வன்முறைப் புகார்கள், 2010ம் ஆண்டு 98,720 என்ற அளவில் வளர்ந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
1987 ம் ஆண்டு Taipei பேராயர் விடுத்த அழைப்பின்பேரில் அங்கு சென்ற நல்லாயன் துறவுசபை அருள்சகோதரிகள், குடும்ப வன்முறைகளுக்கு ஆளான பெண்களையும், குழந்தைகளையும் காக்கும் இல்லம் ஒன்றை உருவாக்கி நடத்தி வருகின்றனர் என்று ஆசிய செய்திக் குறிப்பு கூறுகிறது.


7. கிழக்கு ஆசியா, பசிபிக் பகுதி நாடுகளில் வாழும் குழந்தைகள் வன்முறைகளால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் - UNICEF அறிக்கை

ஆக.08,2012. குழந்தைகள் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படும்போது, அவர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பங்களும், அவர்கள் வாழும் சமுதாயமும் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றன என்று, குழந்தைகளின் கல்வி, கலை இவைகளை வளர்க்க உருவாக்கப்பட்டுள்ள ஐ.நா. நிதி அமைப்பான UNICEF  இப்புதனன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கிழக்கு ஆசியா, பசிபிக் பகுதிகளில் உள்ள நாடுகளில் வாழும் குழந்தைகள் இந்த வன்முறைகளால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
உலகில் வாழும் குழந்தைகளில் நான்கில் ஒரு பகுதியினர், அதாவது 58 கோடி குழந்தைகள், இப்பகுதிகளில் வாழ்கின்றனர் என்று கூறும் இவ்வறிக்கை, மக்கள் நெரிச்சல் அதிகம் உள்ள பகுதிகளிலும், பல்வேறு கலாச்சாரங்களைச் சார்ந்தவர்கள் மத்தியிலும் இக்குழந்தைகள் வளரவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தபடுகின்றனர் என்றும் கூறுகிறது.
இப்பகுதிகளில் வாழும் குழந்தைகளில் 14 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாகின்றனர் என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இப்புதனன்று நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் இவ்வறிக்கை ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது.


8. அழிந்துவரும் அரியலூர் ஆழ்கடல் படிமங்கள்

ஆக.08,2012. தமிழ்நாட்டிலுள்ள அரியலூர் பகுதி கடந்தகாலத்தில் ஆழ்கடலுக்குள் மூழ்கியிருந்தபோது அங்குவாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் ‘Fossils’ எனப்படும் அரியவகை தொல்படிமங்கள் அந்த பகுதியின் சிமெண்ட் தொழிற்சாலைகளால் அழிந்துவருவதாக கவலைகள் அதிகரித்துவருகின்றன.
தமிழ்நாட்டின் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படும் இன்றைய அரியலூர் மாவட்டத்தின் பெரும்பகுதி 65 முதல் 146 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் முழ்கியிருந்தது என்பது பலருக்கும் தெரியாத செய்தி.
ஆனால் உலகின் பல நாடுகளைச்சேர்ந்த புவியியல் நிபுணர்கள் மத்தியில் அரியலூரில் கிடைக்கும் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிலவியல் மற்றும் கடலியல் நிபுணர்கள் இந்த படிமங்களை கண்டறிவதிலும், வகைப்படுத்துவதிலும், ஆராய்வதிலும் ஈடுபட்டுவருகிறார்கள்.
அதேசமயம், அரியலூரில் செயற்பட்டுவரும் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருளை வெட்டியெடுக்கும்போது இந்த அரியவகை படிமங்களும் அழிவதாக கூறப்படுகிறது.
இப்படி அழிந்துவரும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களின் தொல்படிமங்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆய்வாளர் எஸ் எம் சந்தரசேகர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...