Monday, 6 August 2012

Catholic News in Tamil - 03/08/12


1. திருத்தந்தை : சமயத்தலைவர்கள் அமைதிக்காக உழைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது 

2. நாசரேத்தூர் இயேசு என்ற தனது நூலின் மூன்றாவது பாகத்தை எழுதி முடித்துள்ளார் திருத்தந்தை

3. கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் இளையோருக்கு, நீதி மற்றும் அமைதிக்கான கல்வி கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் - திருப்பீட பல்சமய உரையாடல் அவை

4. ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவர் : அமைதியின் பாதை, மனித வாழ்வைப் பாதுகாத்து அதை மதிக்கும் பாதை

5. அணுஆயுதமற்ற உலகுக்கு இந்திய தேசிய கிறிஸ்தவ அவை அழைப்பு

6. காங்கோ ஆயர்களின் நம்பிக்கைப் பேரணி

7. தாய்வான் தலத்திருஅவை பூர்வீக மக்கள் தினத்தைச் சிறப்பித்தது

8. மனிதாபிமான உலக நாளையொட்டி, மனிதாபிமானச் செயல் ஒன்றில் ஈடுபட ஐ.நா. உயர் அதிகாரி அழைப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : சமயத்தலைவர்கள் அமைதிக்காக உழைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது 

ஆக.03,2012. சமயத்தலைவர்கள் அமைதிக்காக உழைக்க வேண்டியது தற்போதைய சமூகத்திற்கு மிக முக்கியம் என்று, ஜப்பானின் Hiei மலையில் நடைபெற்று வரும் உலக அமைதிக்கான 25வது பல்சமய செபக்கூட்டத்திற்கு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்  திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Kyotoவுக்கு வடகிழக்கிலுள்ள Hiei மலையில் ஜப்பானின் Tendai புத்தமதப் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள இரண்டு நாள் உலக அமைதிக்கானச் பல்சமய செபக் கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் கலந்து கொள்ளும் திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் முன்னாள் செயலர் பேராயர் Pier Luigi Celata, இக்கூட்டத்திற்கெனத் திருத்தந்தை வழங்கிய தந்திச்செய்தியை வாசித்தார்.
1986ம் ஆண்டில் இத்தாலியின் அசிசியில் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க உலக அமைதிக்கான பல்சமய செபக்கூட்டத்தின் உணர்வில் தற்போது Hiei மலையில் நடைபெற்று வரும் உலக அமைதிக்கானச் செபக் கூட்டம் மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் சமயத் தலைவர்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இயற்கைப் பேரிடர்கள் சமயத்தில் சமயத் தலைவர்களின் பங்கேற்பு குறித்து இக்கருத்தரங்கில் கலந்து பேசப்படுவதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, கடந்த ஆண்டு வடகிழக்கு ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் கடும் விளைவுகளைத் தான் நினைத்துப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, Tendai புத்தமதப் பிரிவின் தலைமைக்குரு Kojun HANDAவுக்கு அனுப்பியுள்ளார்.
பேராயர் Pier Luigi Celata , கடந்த ஜூலை 31ம் தேதியிலிருந்து இம்மாதம் 11ம் தேதி வரை ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.


2. நாசரேத்தூர் இயேசு என்ற தனது நூலின் மூன்றாவது பாகத்தை எழுதி முடித்துள்ளார் திருத்தந்தை

ஆக.03,2012. காஸ்தெல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தில் தற்போது ஓய்வெடுத்து வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நாசரேத்தூர் இயேசு என்ற அவரது நூலின் மூன்றாவது பாகத்தை எழுதி முடித்துள்ளார் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்நூல் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்றும் அவ்வலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும், வருகிற அக்டோபரில் தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டையொட்டி புதிய திருமடல் ஒன்றைத் திருத்தந்தை வெளியிடக்கூடும் என்று கர்தினால் பெர்த்தோனே கூறினார்.
2005ம் ஆண்டில் Deus caritas est,  2007ம் ஆண்டில் Spe salvi , 2009ம் ஆண்டில் Caritas in veritate ஆகிய திருமடல்களையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


3. கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் இளையோருக்கு, நீதி மற்றும் அமைதிக்கான கல்வி கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் - திருப்பீட பல்சமய உரையாடல் அவை

ஆக.03,2012. நீதியையும் அமைதியையும் நேர்மையுடன் அறிவிக்கும் பொருட்டு உண்மை மற்றும் சுதந்திரத்தை வளர்த்துக் கொள்ளுமாறு. கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் இளையோருக்கு அழைப்பு விடுத்துள்ளது திருப்பீட பல்சமய உரையாடல் அவை.
ஒவ்வொரு குடிமகனின் மாண்பையும் உரிமைகளையும் மதிக்கும் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புகிறவர்களாகவும் இவ்விளையோர் செயல்படுமாறு கேட்டுள்ள இத்திருப்பீட அவை, இவற்றை இவர்கள் தங்கள் வாழ்வில் அடைவதற்கு, ஏமாற்றும் குறுக்கு வழிகளைப் பின்செல்லாமல் பொறுமை மற்றும் விடாஉறுதியைக் கொண்டிருக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
இம்மாதிரியான வாழ்வில் உண்மையிலேயே நம்பிக்கை வைத்துள்ள மனிதர்களால் மட்டுமே நீதியும் அமைதியும் ஆட்சி செய்யும் சமூகங்களைச் சமைக்க முடியும் என்றும் அவ்வவை கூறியுள்ளது.
கடந்த ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 18 வரை கடைப்பிடிக்கப்படும் ரமதான் மாதத்தின் இறுதியில் சிறப்பிக்கப்படும் ‘Id al-Fitr விழாவுக்கெனச் செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய உரையாடல் அவை இவ்வாறு கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் இளையோரிடம் கேட்டுள்ளது.
ஒருங்கிணைந்த முழுமனிதரின் தனித்துவத்தால் மட்டுமே நீதியை உறுதி செய்ய முடியும் எனவும், சின்னாபின்னமாகியுள்ள இன்றைய நமது உலகில் அமைதி குறித்து இளையோருக்கு கற்றுக் கொடுப்பது அவசரத் தேவையாக இருக்கின்றது எனவும் அச்செய்தி வலியுறுத்துகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 20ம் தேதியன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பிக்கப்படுகின்றது.


4. ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவர் : அமைதியின் பாதை, மனித வாழ்வைப் பாதுகாத்து அதை மதிக்கும் பாதை

ஆக.03,2012. அமைதியின் பாதை, மனித வாழ்வை ஆதரித்து, பாதுகாத்து அதை மதிக்கும் பாதையாகும் என்று ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவர் இயேசு சபைப் பேராயர் Leo Jun Ikenaga கூறினார்.
1981ம் ஆண்டு பிப்ரவரியில் அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் ஜப்பானுக்குத் திருப்பயணம் மேற்கொண்டபோது ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில், போர் மனிதரின் வேலை; போர், மனித வாழ்வை அழிக்கின்றது; போர் மரணமாகும் என்று சொல்லி அமைதிக்காக அழைப்பு விடுத்தார்.
உலகில் அணு ஆயுதப் போர்கள் கண்டனம் செய்யப்பட்டு, அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டு அனைவரும் அமைதிக்காகத் தங்களை அர்ப்பணிக்குமாறும் திருத்தந்தை உலகினரை வலியுறுத்தினார்.
இதற்குப்பின், ஜப்பான் தலத்திருஅவையும், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 15 வரை அமைதிக்கானப் பத்து நாள்கள் எனப் பெயரிட்டு அமைதிக்காகக் குரல் கொடுத்து வருகிறது.
இவ்வாண்டின் இந்தப் பத்து நாள்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட ஒசாகா பேராயர் Ikenaga, நாடுகளில் அணுஉலைகள் உடனடியாக மூடப்பட்டு, மக்களின் வாழ்வு பாதுகாக்கப்படும் அமைதி நிறைந்த சமுதாயம் உருவாக்கப்படுமாறு கேட்டுள்ளார்.
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு போடப்பட்டது. இதில் ஏறக்குறைய 1,40,000 பேர் கொல்லப்பட்டனர். இதன் 67வது ஆண்டு நிறைவு வருகிற திங்களன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டு போடப்பட்டது. இதில் சுமார் 75 ஆயிரம் பேர் இறந்தனர்.


5. அணுஆயுதமற்ற உலகுக்கு இந்திய தேசிய கிறிஸ்தவ அவை அழைப்பு

ஆக.03,2012. ஹிரோஷிமா தினத்தைக் கடைப்பிடிப்பதற்கு உலகம் தயாரித்துவரும்வேளை, அணு ஆயுதமற்ற உலகு உருவாகுவதற்குச் செபிக்குமாறு தனது அங்கத்தினர்களைக் கேட்டுள்ளது இந்திய தேசிய கிறிஸ்தவ அவை.
ஜப்பானின் ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டைப் போட்ட, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி மனிதக் கலாச்சாரத்தில் ஒரு கறுப்பு நாள் என்று இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது இந்திய தேசிய கிறிஸ்தவ அவை.
வரலாற்றில் 67 வருடங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த நிகழ்வாக மட்டும் இதனை நோக்க முடியாது, ஏனெனில் இன்றும் ஜப்பானில் மக்கள் அணுக்கதிர்வீச்சால் துன்புறுகின்றனர் என்று கூறும் இவ்வறிக்கை, தங்களையே அழித்துக் கொள்ளும் அணுஆயுதங்களைத் தயாரிப்பதற்கு மனிதர்கள் ஏன் இவ்வளவு வேகம் காட்டுகிறார்கள் எனவும் கேட்டுள்ளது.
அணு இல்லாத இந்தியா உருவாக கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 5ம் தேதி ஞாயிறன்று சிறப்பாகச் செபிக்குமாறும் இந்திய தேசிய கிறிஸ்தவ அவை கேட்டுள்ளது.


6. காங்கோ ஆயர்களின் நம்பிக்கைப் பேரணி

ஆக.03,2012. மத்திய ஆப்ரிக்காவில் மிகப் பெரிய நாடான காங்கோ குடியரசில் அமைதியும் ஒன்றிப்பும் ஏற்படுவதற்கென அந்நாட்டு ஆயர்கள்  நம்பிக்கைப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
காங்கோ குடியரசை பிரிக்க முயற்சிக்கும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டின் 47 மறைமாவட்டங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 2 இலட்சம் மக்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்து கொண்டனர். 
காங்கோ குடியரசில் 1996ம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் உள்நாட்டுச் சண்டையில் 54 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளவேளை, தற்போது அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் புதிதாகச் சண்டை தொடங்கியுள்ளது. இதில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். புரட்சியாளர்கள், ருவாண்டா நாட்டு ஆதரவுடன் போரிட்டு வருகின்றனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.


7. தாய்வான் தலத்திருஅவை பூர்வீக மக்கள் தினத்தைச் சிறப்பித்தது

ஆக.03,2012. தாய்வான் தீவு நாட்டின் பூர்வீக மக்கள் தினத்தை இப்புதனன்று சிறப்பித்தது அந்நாட்டுத் தலத்திருஅவை.
தாய்வானில் வாழும் ஏறக்குறைய 5 இலட்சம் பூர்வீக மக்களின் மரபுக் கலாச்சாரமும் மொழியும், திருமண வாழ்வும் பாதுகாக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுத்த ஆயர்கள், அம்மக்களில் இறையழைத்தல்கள் அதிகம் உருவாக வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
ஒவ்வொரு சமுதாயத்தின் தாய்மொழியானது அச்சமுதாய மக்களின் தனித்துவத்தைக் காட்டுகின்றது எனக் கூறிய ஆயர்கள், இந்தப் பூர்வீக மக்களின் வரலாறும் கலாச்சாரமும் விழுமியங்களும் பாதுகாக்கப்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
தாய்வானில் நூற்றாண்டளவாய் ஓரங்கட்டப்பட்டு வந்த இம்மக்களின் வாழ்வை மேம்படுத்தும் முயற்சிகள் தற்போது இடம்பெற்று வருவதையும் ஆயர்கள் அவ்விழாவில் சுட்டிக்காட்டினர்.


8. மனிதாபிமான உலக நாளையொட்டி, மனிதாபிமானச் செயல் ஒன்றில் ஈடுபட ஐ.நா. உயர் அதிகாரி அழைப்பு

ஆக.03,2012. ஆகஸ்ட் 19ம் தேதி கடைப்பிடிக்கப்படவிருக்கும் மனிதாபிமான உலக நாளுக்கென ஒரு கொள்கைப்பரப்பு திட்டத்தை ஐ.நா. அவை இவ்வியாழனன்று வெளியிட்டது.
இத்திட்டத்துடன் iwashere.org என்ற இணையதளத்தையும் வெளியிட்டுப் பேசிய ஐ.நா. உயர் அதிகாரி Valerie Amos, மனிதாபிமான உலக நாளன்று ஒவ்வொரு மனிதரும் சிறிதோ, பெரிதோ எதோ ஒரு வகையில் மனிதாபிமானச் செயல் ஒன்றில் ஈடுபட்டு, அதனை இந்த வலைதளத்தில் பதிவு செய்யலாம் என்ற பரிந்துரையை வெளியிட்டார்.
2003ம் ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி, பாக்தாத் நகரில் உள்ள Canal உணவு விடுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்டனர், மற்றும் 150 பேர் காயமுற்றனர். இவர்கள் நினைவாக, அந்நாளை மனிதாபிமான உலக நாளாக ஐ.நா. அவை 2008ம் ஆண்டில் அறிவித்தது.
கலவரங்கள் நிறைந்துள்ள உலகின் பல இடங்களில் மக்களைக் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள பல தன்னார்வத் தொண்டர்களையும், பிறரன்புப் பணியாளர்களையும் இந்நாளில் நினைவு கூறவேண்டும் என்ற வேண்டுகோளை ஐ.நா. விடுத்துள்ளது.
நான் இங்கு இருந்தேன் என்ற பொருள்படும் I Was Here என்ற பாடலை புகழ்பெற்ற பாடகர் Beyoncé ஐ.நா. பொதுஅவை அரங்கத்தில் பாடுவார் என்றும், அந்தப் பாடல் ஓர் இசை ஒளிக்கோப்பாக உலகெங்கும் வெளியிடப்படும் என்றும் ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...