Thursday, 2 August 2012

Catholic News in Tamil - 02/08/12

1. ஆடுகள் மீது உண்மையான அக்கறை கொண்ட மேய்ப்பர்களாக திருஅவையின் ஆயர்கள் பணியாற்றவேண்டும் - திருப்பீடச் செயலர்

2. பன்னாட்டுச் சமுதாயத்தின் மனிதாபிமான உதவிகள் சிரியாவுக்கு மிக, மிக அவசியமாக உள்ளது - திருப்பீடத் தூதர்

3. நற்செய்தியைப் புதிய வழிகளில் பரப்புதல்: போலந்து நாட்டில் மாநாடு

4. டில்லியில் தலித் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட போராட்ட ஊர்வலம்

5. சிலோன் விவிலியக் கழகத்தின் 200வது ஆண்டு நிறைவு விழா

6. ஹிட்லரின் அரசால் கொல்லப்பட்ட 5 இலட்சத்திற்கும் அதிகமான Roma மக்களின் நினைவாக இலண்டன் நகரில் நினைவு கூட்டம்

7. கெய்ரோவுக்கருகே கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே மோதல்

8. போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு நேரடி உதவிகள்


------------------------------------------------------------------------------------------------------

1. ஆடுகள் மீது உண்மையான அக்கறை கொண்ட மேய்ப்பர்களாக திருஅவையின் ஆயர்கள் பணியாற்றவேண்டும் - திருப்பீடச் செயலர்

ஆக.02,2012. இயேசு நற்செய்தியில் கூறியிருப்பதுபோல், கூலி பெறுவதற்காக வேலை செய்யும் மேய்ப்பர்களாக இல்லாமல், ஆடுகள் மீது உண்மையான அக்கறை கொண்ட மேய்ப்பர்களாக திருஅவையின் ஆயர்கள் பணியாற்றவேண்டும் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே கூறினார்.
ஜூலை 2, இவ்வியாழனன்று கொண்டாடப்படும் Vercelliயின் புனித Eusebius அவர்களின் திருநாளையொட்டி, அப்பகுதியில் உள்ள Introd என்ற பங்குக் கோவிலில் திருப்பலியாற்றிய கர்தினால் பெர்தோனே தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
Vercelliயின் ஆயராக இருந்த புனித Eusebius, தேவைகள் எங்கெங்கு எழுந்ததோ அங்கெல்லாம் சென்று நற்செய்தியைப் பரப்பினார் என்று கூறிய கர்தினால் பெர்தோனே, இந்தக் கடினமான பயணங்களில் புனிதர் காட்டிய பொறுமையும், விடாமுயற்சியும் நமக்குப் பாடமாக அமைகின்றன என்றும் எடுத்துரைத்தார்.
கடவுளை மறந்துவரும் நமது இன்றைய உலகில் மனிதர்கள் தங்களையே புரிந்துகொள்ளாமல் வாழ்வது ஆபத்து என்றும், இந்த ஆபத்தை நீக்க அவர்கள் மீண்டும் இறைவனைத் தேடிவருவதே சிறந்த வழி என்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் Caritas in veritate என்ற சுற்றுமடலில் கூறியுள்ளதை கர்தினால் பெர்தோனே தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
வருகிற அக்டோபர் மாதம் திருத்தந்தை அவர்களால் துவக்கிவைக்கப்படும் விசுவாச ஆண்டு, நமது இன்றையச் சூழலில் இறைவன் நமக்கு வகுத்துள்ள திட்டங்களை கண்டறிய மற்றொரு முக்கியத் தருணமாக அமையவேண்டும் என்று கர்தினால் பெர்தோனே கூறினார்.


2. பன்னாட்டுச் சமுதாயத்தின் மனிதாபிமான உதவிகள் சிரியாவுக்கு மிக, மிக அவசியமாக உள்ளது - திருப்பீடத் தூதர்

ஆக.02,2012. சிரியாவில் நடைபெறும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், அங்கு துன்புறும் மக்களுடன் தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மூவேளை செப உரையில் கூறியது பெரும் ஆறுதலைத் தந்துள்ளது என்று சிரியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார்.
சிரியாவில் நிலவி வரும் சூழல் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், பன்னாட்டுச் சமுதாயத்தின் மனிதாபிமான உதவிகள் தங்கள் நாட்டுக்கு மிக, மிக அவசியமாக உள்ளது என்றும், பேராயர் செனாரி வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அண்மையில் இலண்டன் மாநகரில் துவங்கிய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உலகளாவிய ஒன்றிப்பை எடுத்துக்காட்டும் ஓர் அடையாளமாக இருந்தாலும், அதற்கு நேர்மாறான ஒரு நிலையை சிரியாவில் வாழும் மக்கள் உணர்ந்து வருகின்றனர் என்று பேராயர் செனாரி சுட்டிக்காட்டினார்.
எவ்விதச் சுழல்காற்றிலும் அணையாமல் எரியும் ஒலிம்பிக் சுடர் ஒற்றுமையை வலியுறுத்தி நிற்பது நம்பிக்கையைத் தருவதைப் போல், பல்வேறு முரண்பாடுகளால் சூழப்பட்டுள்ள சிரியா நாட்டு மக்களும் அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தளராமல் காக்கவேண்டும் என்று திருப்பீடத் தூதர் பேராயர் செனாரி வேண்டுகோள் விடுத்தார்.


3. நற்செய்தியைப் புதிய வழிகளில் பரப்புதல்: போலந்து நாட்டில் மாநாடு

ஆக.02,2012. நற்செய்தியைப் புதிய வழிகளில் பரப்புதல் என்பது குருக்களுக்கு மட்டும் விடுக்கப்பட்டுள்ள பணியல்ல, மாறாக, இப்பணியில் அனைத்து கிறிஸ்தவர்களும் இணைய அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
போலந்து நாட்டில் Kostrzyn எனும் நகரில் இச்செவ்வாய் முடிய நடைபெற்ற ஒரு மாநாட்டின் துவக்கத் திருப்பலியில் மறையுரையாற்றிய நற்செய்தியைப் புதிய வழிகளில் பரப்பும் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Salvatore Fisichella இவ்வாறு கூறினார்.
நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த மாநாட்டில் போலந்தின் 350க்கும் மேற்பட்ட கத்தோலிக்க அமைப்புக்களிலும், குழுமங்களிலும் இருந்து வந்திருந்த 1200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இன்றைய உலகில் வாழும் மனிதர்களுக்கு நல்ல செய்திகள் சென்றடைய வேண்டும் என்பதை நாம் அனைவருமே உணர்கிறோம், எனவே எக்காலத்திற்கும் பொருளுள்ளதாக இருக்கும் நற்செய்தியை புதிய வழிகளில் பரப்புவது நம் அனைவருக்கும் தரப்பட்டுள்ள அழைப்பு என்று பேராயர் Fisichella தன் மறையுரையில் வலியுறுத்தினார்.


4. டில்லியில் தலித் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட போராட்ட ஊர்வலம்

ஆக.02,2012. அரசின் சலுகைகளைப் பெறும் இந்து தலித் மக்களுடன் கிறிஸ்தவர்களையும்  இந்திய அரசு இணைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் தங்களுக்கு உண்டு என்று இந்திய ஆயர் பேரவையின் தலித் உரிமைகள் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை தேவ சகாயராஜ் கூறினார்.
தொடர்ந்து பெய்த மழையையும் பொருட்படுத்தாது, தலைநகர் டில்லியில் 3000 க்கும் அதிகமான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இப்புதனன்று மேற்கொண்ட ஒரு போராட்ட ஊர்வலத்தின்போது, செய்தியாளர்களிடம் பேசிய அருள்தந்தை சகாயராஜ் இவ்வாறு கூறினார்.
தற்போது நடைபெற்றுவரும் மழைக்கால பாராளுமன்ற அமர்வின்போது தலித் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் அரசின் சலுகைகள் கிடைக்கும் வண்ணம் அரசின் சட்டம் இயற்றப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறினார் அருள்தந்தை சகாயராஜ்.
இதுவரைத் தாமதம் செய்துவந்துள்ள மத்திய அரசு, இனியும் தாமதிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றினால், நாடுதழுவிய போராட்டங்களைத் தலித் மக்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அருள்தந்தை சகாயராஜ் எடுத்துரைத்தார்.


5. சிலோன் விவிலியக் கழகத்தின் 200வது ஆண்டு நிறைவு விழா

ஆக.02,2012. CBS என்றழைக்கப்படும் சிலோன் விவிலியக் கழகத்தின் 200வது ஆண்டு நிறைவு விழா இலங்கையின் கொழும்புவில் இப்புதனன்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவின் துவக்கத்தில், கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற நன்றி வழிபாட்டில் கத்தோலிக்க ஆயர்கள், குருக்கள், துறவியர், பொது நிலையினர், மற்றும் பிற கிறிஸ்தவ சபையினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இருந்த இலங்கையில் 1812ம் ஆண்டு சிலோன் விவிலியக் கழகம் துவக்கப்பட்டது. விவிலியத்தை மொழிபெயர்ப்பு செய்தல், அச்சிடுதல், விநியோகம் செய்தல் ஆகிய செயல்பாடுகளில் இக்கழகம் கடந்த 200 ஆண்டுகள் ஈடுபட்டுள்ளது.
இவ்விழாவையொட்டி, தமிழிலும் சிங்களத்திலும் 10,000 விவிலியப் பிரதிகளை விநியோகம் செய்யும் ஒரு திட்டத்தில் இக்கழகம் தற்போது ஈடுபட்டுள்ளது.


6. ஹிட்லரின் அரசால் கொல்லப்பட்ட 5 இலட்சத்திற்கும் அதிகமான Roma மக்களின் நினைவாக இலண்டன் நகரில் நினைவு கூட்டம்

ஆக.02,2012. இலண்டன் நகரின் Hyde பூங்காவில் உள்ள இனவேள்வி நினைவுச் சின்னத்தின் முன் ஆகஸ்ட் 3, இவ்வெள்ளியன்று நினைவு நிகழ்வொன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது, பல்வேறு இனங்களை அழிக்கும் செயல்பாடுகளில் ஹிட்லரின் ஜெர்மனி ஈடுபட்டிருந்தது. அழிக்கப்பட்ட இனங்களில் ஒன்று Roma என்றழைக்கப்படும் நாடோடி இனத்தவர்.
இவ்வினத்தைச் சேர்ந்த 500,000க்கும் அதிகமானோர் நச்சுவாயு அறைகளில் கொல்லப்பட்டனர். இவர்களின் இறுதிக் குழுவாக நச்சுவாயு அறைகளுக்கு 3000 பெண்களும் சிறுவர், சிறுமியரும் 1944ம் ஆண்டு ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் கொல்லப்பட்டனர்.
ஹிட்லரின் அரசால் கொல்லப்பட்ட 5 இலட்சத்திற்கும் அதிகமான Roma மக்களின் நினைவாக நடத்தப்படும் இந்த நினைவு கூட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் நாட்சி வதை முகாம்களில் இருந்தவர்கள் அணிந்திருந்த அடையாள அட்டைகளைப் போன்ற அட்டைகளை அணிந்து, இறந்தோரின் நினைவாக வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் பூக்களை சமர்ப்பணம் செய்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Roma மக்கள் அன்று உடலளவில் கொல்லப்பட்டனர். இன்றும், இந்த மக்கள் ஊடகங்களால் தவறான வழிகளில் சித்தரிக்கப்பட்டு, மனதளவில் கொல்லப்படுகின்றனர். ஊடகங்கள் தரும் தவறான செய்திகளால் Roma மக்களுக்கு எதிராக மக்கள் காட்டும் பகைமை உணர்வு இன்று பெருமளவில் வளர்ந்துள்ளது என்று இவ்வமைப்பைச் சார்ந்தவர்கள் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளனர்.


7. கெய்ரோவுக்கருகே கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே மோதல்

ஆக.02,2012. எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு 40 கி.மி. தெற்கே உள்ள Dahshur என்ற கிராமத்தில், கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே இப்புதனன்று உருவான ஒரு மோதலில் பல கிறிஸ்தவ வீடுகளும், கடைகளும் தீக்கிரையாயின.
ஜூலை 27 அன்று காப்டிக் ரீதி கத்தோலிக்கர் ஒருவருக்கும், இஸ்லாமியர் ஒருவருக்கும் ஒரு கடையில் ஏற்பட்ட மோதல் இந்த வன்முறைக்குக் காரணமாக அமைந்ததெனக் கூறப்படுகிறது.
இந்தக் கலவரங்களால் அப்பகுதியில் வாழும் 100க்கும் அதிகமான காப்டிக் ரீதி கத்தோலிக்கக் குடும்பங்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த மோதலில் 16 பேர் காயமுற்றனர் என்றும், கிறிஸ்தவக் கோவில் ஒன்றும் தீக்கு இரையாகும் சூழல் உருவானது என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இஸ்லாமிய வன்முறை கும்பல் ஒன்று கிறிஸ்தவக் கோவிலைத் தாக்கச் சென்றபோது, அங்கிருந்த இஸ்லாமியக் குடும்பங்கள் ஒன்றிணைந்து இந்த முயற்சியைத் தடுத்தன என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
எகிப்தின் அரசுத் தலைவராக Mohammed Morsi பொறுப்பேற்றபின் நிகழும் முதல் வன்முறை இது என்பது குறிப்பிடத்தக்கது.


8. போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு நேரடி உதவிகள்

ஆக.02,2012. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இலங்கை அரசின் வழியாக இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சரியாகச் சென்றடையாத காரணத்தினால், நிதி உதவிகளை நேரடியாக அந்த மக்களிடமே வழங்குவது குறித்து இந்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி உதவியை வைப்பில் இடுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக புதுடில்லியிலிருந்து வெளியான தகவல்களைத் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி.சித்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக வீடமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல உதவிகளை இந்திய அரசு அறிவித்திருந்தது. இந்த உதவி நிதியை இலங்கை அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.
அண்மையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு இதனை நேரடியாகவே பார்த்து உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு நேரடியாகவே நிதி உதவிகளை வழங்குவது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி.சித்தன் தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...