Wednesday, 1 August 2012

Catholic news in Tamil - 01/08/12

1. அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்

2. இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் திருத்தந்தையும், திருப்பீடத்தின் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டிருந்த முக்கிய நிகழ்வுகள்

3. மனித வர்த்தகத்தைத் தடைசெய்ய கிறிஸ்தவ அமைப்புக்களின் ஒலிம்பிக் முயற்சிகள்

4. ஒலிம்பிக் வீரர்களின் கத்தோலிக்க விசுவாச அறிக்கைகள்

5. இலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்கா கவலை

6. பாலஸ்தீனியக் குழந்தைகளுக்கு உதவும் வகையில் பெத்லகேமில் மனநல உதவி மையம்

7. இரக்ஷாபந்தன் என்ற விழாவின்போது 10,000 மரக்கன்றுகளை நட்டுவைக்கும் விழா

8. விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்தாகும் உலர் திராட்சைகள்



------------------------------------------------------------------------------------------------------

1.அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்

ஆக.01,2012. அக்டோபர் மாதம் துவங்கவிருக்கும் விசுவாச ஆண்டுக்கு எழுபது நாட்களுக்கும் குறைவாக உள்ள இந்நிலையில், விசுவாச ஆண்டில் நிகழவிருக்கும் முக்கிய நிகழ்வுகளின் பாட்டியல் ஒன்றை திருப்பீடம் இச்செவ்வாயன்று வெளியிட்டது.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் நிகழ்ந்ததன் 50ம் ஆண்டு நினைவாக, அக்டோபர் மாதம் 11ம் தேதி, வியாழனன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் தலைமையில் நடைபெறும் ஒரு மாபெரும் கூட்டுத் திருப்பலியுடன் ஆரம்பமாகும் விசுவாச ஆண்டு, 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி நிறைவுபெறும்.
அக்டோபர் 7ம் தேதி முதல் 28ம் தேதி முடிய "கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துரைக்க, நற்செய்தி அறிவிப்பில் புதிய வழிகள்" என்ற மையக்கருத்துடன் 13வது ஆயர்கள் சிறப்பு மாமன்றம் வத்திகானில் நடைபெறும்.
இந்த மாமன்றத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுடனும், இன்னும் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் தலைவர்களுடனும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அக்டோபர் மாதம் 11ம் தேதி இந்த மாபெரும் கூட்டுத் திருப்பலியை நிகழ்த்துவார்.
அக்டோபர் மாதம் 21ம் தேதி ஆறு மறைசாட்சிகளை புனிதர் நிலைக்குத் திருத்தந்தை உயர்த்துவதும், 2013ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி முதல் 28ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளும் இவ்விசுவாச ஆண்டின் உச்சகட்டங்களாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் திருத்தந்தையும், திருப்பீடத்தின் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டிருந்த முக்கிய நிகழ்வுகள்

ஆக.01,2012. 2012ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் திருத்தந்தையும், திருப்பீடத்தின் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டிருந்த முக்கிய நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.
உலகெங்கும் தீவிரவாதம் பெருகுவதற்கு நிதி உதவிகள் செய்யப்படுவதை எதிர்த்து ஐ.நா. வெளியிட்டுள்ள விதிமுறைகளுக்கு இவ்வாண்டு ஜனவரி மாதத்தில், வத்திக்கான் தனது முழு ஒப்புதலை அளித்துள்ளது.
குருக்களுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக எழுந்துள்ள பாலியல் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யவும், இக்குறையை நீக்க திருஅவை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தவும் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் திருப்பீடத்தின் சார்பில் அகில உலகக் கருத்தரங்கு ஒன்று உரோம் நகரின் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதே பிப்ரவரி மாதத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கர்தினால்கள் அவையில் 22 புதிய கர்தினால்களை இணைத்தார்.
மார்ச் மாதம் 23ம் தேதி முதல் 28ம் தேதி முடிய திருத்தந்தை மெக்சிகோ, கியூபா ஆகிய நாடுகளில் மேற்கொண்ட மெய்ப்புப் பணி பயணம் வெற்றிகரமாக அமைந்தது.
மேமாதம் மிலான் நகரில் நடைபெற்ற குடும்பங்களின் 7வது உலக மாநாட்டில் கலந்துகொண்ட திருத்தந்தை, இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதிகளை ஜூன் மாத இறுதியில் சென்று பார்வையிட்டார்.

3. மனித வர்த்தகத்தைத் தடைசெய்ய கிறிஸ்தவ அமைப்புக்களின் ஒலிம்பிக் முயற்சிகள்

ஆக.01,2012. உலகில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் மனித வர்த்தகத்தைத் தடைசெய்யும் வண்ணம், இப்பிரச்சனை மீது மக்களின் கவனத்தைத் திருப்பும் வண்ணம், பல கிறிஸ்தவ அமைப்புக்கள் இணைந்து இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளின்போது முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
மனித வர்த்தகத்தைத் தடுக்க ஐ.நா. எடுத்துவரும் ஒரு முயற்சியான STOP THE TRAFFIK மற்றும் UN.GIFT என்ற திட்டத்துடன் கிறிஸ்தவ அமைப்புக்களும் இணைந்துள்ளன.
UN.GIFT என்ற கருத்துடன் 10 அடி உயரத்திற்கு பரிசுப் பெட்டிகள் வடிவில் அமைக்கப்பட்டுள்ள பெரும் பெட்டிகள் Westminster Abbey, இங்கிலாந்தின் மிகப் பழமையான கோவில் என்று கருதப்படும் Southwark பேராலயம், புனித பவுல் பேராலயம் ஆகிய புகழ்பெற்ற கோவில் வளாகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பெட்டிகளுக்குள் மனித வர்த்தகம் குறித்த விவரங்கள் அடங்கியுள்ளன. இவற்றைக் காண்பவர்கள் அதிர்ச்சியுடன் பெட்டிகளை விட்டு வெளியேறுவதைக் காண முடிகிறது என்று இந்த முயற்சியில் உதவும் தன்னார்வத் தொண்டர் காத்தரின் கூறினார்.
பரிசுப் பொருட்களைப் போல் மனிதர்களை ஈர்த்து, அவர்களை வர்த்தகமாக்கும் அநீதிகளை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று இத்திட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான James Parker கூறினார்.

4. ஒலிம்பிக் வீரர்களின் கத்தோலிக்க விசுவாச அறிக்கைகள்
ஆக.01,2012. கடந்த மூன்று ஆண்டுகள் என் பள்ளியில் உள்ள கோவிலில் இறைவனின் சந்நிதியில் நான் செலவிடும் நேரங்கள் மிகவும் முக்கியமான நேரங்கள் என்று இத்திங்களன்று ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற Missy Franklin என்ற இளம்பெண் கூறினார்.
அண்மையில் அமெரிக்காவின் திரைஅரங்கு ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டினால் ஆழ்ந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ள கொலொராடோ மாநில அரோராவில் இயேசு சபையினர் நடத்தும் Regis உயர்நிலைப் பள்ளியில் பயிலும் Missy Franklin, தனது பள்ளி வாழ்க்கையில் இறைவனுக்கு முதலிடம் கொடுக்க தான் கற்றுக்  கொண்டதாகக் கூறினார்.
இதேபோல், இச்செவ்வாயன்று ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குழுவில் ஒருவரான Jordyn Wieber, என்ற 17 வயது பெண், குடும்பத்துடன் தான் கோவில் வழிபாடுகளில் கலந்து கொள்வது தனக்கு மிகவும் உறுதிதரும் ஒரு பழக்கம் என்று கூறினார்.
வாழ்வில் நான் சந்தித்துள்ள பல பிரச்சனைகளில் இறைவன் என்னை வழிநடத்தி வந்துள்ளதை முழுவதும் நம்புகிறேன் என்று Lopez Lomong என்ற இளைஞர் கூறினார்.
சூடானில் பிறந்த Lopez Lomong, ஆறு வயதில் அந்நாட்டு போராளிகளால் கடத்தப்பட்டு, அங்கிருந்து தப்பியவர். அவர்கள் பிடியிலிருந்து தப்பிய Lopez, கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்களின் உதவியுடன் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சென்றடைந்து, தற்போது அந்நாட்டின் விளையாட்டு வீரர்களில் ஒருவராக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
கடவுள் எனக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார் என்பதை நான் ஒவ்வொரு நாளும் உணர்ந்து வருகிறேன் என்று Lopez Lomong, ICN என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இந்த ஒலிம்பிக் போட்டிகளின்போது, விளையாட்டு வீரர்களுடன் இறைவன் உடனிருக்கிறார் என்பதை வலியுறுத்தும் பல முயற்சிகள், இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்கத் திருஅவை ஏனைய கிறிஸ்தவ சபைகளுடன் இணைந்து நடத்தும் "தங்கத்திற்கும் மேலாக" ("More than Gold") என்ற அமைப்பின் வழியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

5. இலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்கா கவலை

ஆக.01,2012. இலங்கையில் கடந்த ஆண்டு பல மதவழிபாட்டுத் தலங்களும், சிறுபான்மை சமூகத்தினரும் தாக்குதலை சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தின் மீது கடந்த ஆண்டு பல தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அதேபோல், பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுமார் 70 விழுக்காடு அளவுக்கு பெரும்பான்மையினராக இருக்கும் சிங்கள மக்களாலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் அமெரிக்க அரசின் அந்த ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புத்தத் துறவிகள் தலைமையேற்று நடத்திய பல குழுக்கள், 2011ம் ஆண்டு, கிறிஸ்தவர்கள் மீது நடைபெற்ற பல தாக்குதல்கள் உள்ளூரில் இருக்கின்ற ஊடகங்களில் வெளிவராமலேயே போனது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


6. பாலஸ்தீனியக் குழந்தைகளுக்கு உதவும் வகையில் பெத்லகேமில் மனநல உதவி மையம்

ஆக.01,2012. இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பாலஸ்தீனப் பகுதியில் வாழும் குழந்தைகளின் மனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தாலும்அக்குழந்தைகளுக்குத் தேவையான மனநல உதவிகள் கிடைப்பதில்லை என்று மனநல உதவியாளர் Ursula Mukarker கூறினார்.
பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கப் பெண்மணி Ursula Mukarker, ஜெர்மன் நாட்டின் Wings of Hope என்ற ஓர் அமைப்புடன் இணைந்து பாலஸ்தீனியக் குழந்தைகளுக்கு உதவும் வகையில் பெத்லகேமில் மனநல உதவி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இராணுவ ஆக்கிரமிப்பின் விளைவுகளை ஒவ்வொரு நாளும் சந்தித்து வரும் பாலஸ்தீன குழந்தைகள் பல உள்மனக் காயங்களுடன் வாழ்ந்து வருகின்றனர் என்று கூறும் Ursula Mukarker, மனநல உதவிகளைத் தேடுவது அம்மக்களிடையே ஒரு குறையாகக் கருதப்படுவதால், பெரும்பாலான குழந்தைகளுக்கு இவ்வுதவிகளைத் தருவதற்குப் பெற்றோர் தயங்குகின்றனர் என்றும் கூறினார்.
இந்தத் தவறான எண்ணங்களைத் தகர்த்து, பாலஸ்தீனியக் குழந்தைகள் நல்ல மனனலத்துடன் வளர்வதற்கு உதவிகள் செய்வதே தன் வாழ்வின் இலக்கு என்று Ursula Mukarker, CNS கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருக்கும் பாலஸ்தீனப் பகுதியில் 700,000 குழந்தைகளுக்கு மனநல உதவிகள் தேவைப்படுவதாக, Palestine Trauma Center என்ற மையத்தால் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

7. இரக்ஷாபந்தன் என்ற விழாவின்போது 10,000 மரக்கன்றுகளை நட்டுவைக்கும் விழா

ஆக.01,2012. குடும்பத்து உறவுகளை உறுதிப்படுத்தும் இரக்ஷாபந்தன் என்ற விழாவின்போது குடும்ப உறவுகள் மட்டுமல்லாமல், இயற்கையுடன் நாம் கொண்டுள்ள உறவையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று GWAF என்ற சுற்றுச்சூழல் பாதுக்காப்பு அமைப்பின் செயலரான Navdeep Asija கூறினார்.
ஆகஸ்ட் 2ம் தேதி இவ்வியாழனன்று இந்தியாவிலும், இன்னும் உலகின் பிற நாடுகளிலும் இரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது வழக்கமாக பெண்கள் ஆண்களின் கைகளில் அலங்காரக் கயிற்றைக் கட்டுவது வழக்கம்.
இவ்வாண்டு இவ்விழாவின்போது, பஞ்சாபில் உள்ள Fazilka என்ற நகரில் உள்ள பெண்கள் ஆண்களிடமிருந்து மரக் கன்றுகளைப் பரிசாகப் பெறும் வகையில் GWAF அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம் பெண்கள் அப்பகுதியில் 10,000 மரக் கன்றுகளை நட்டுவைக்கும் விழா நடைபெறும் என்று இவ்வமைப்பினர் அறிவித்துள்ளனர்.

8. விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்தாகும் உலர் திராட்சைகள்

ஆக.01,2012. உலர் திராட்சைகள் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் மத்தியில் சாப்பிடக்கூடிய ஊக்க உணவாக பயன்படுத்துவது நன்மை பயக்கும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
விளையாட்டுப்போட்டிகளில், குறிப்பாக தொலைதூர ஓட்டப்பந்தயங்களில் தேவைப்படும்
உடல்வலிமையை பெறுவதற்காக போட்டியாளர்கள் பலவகையான வழிமுறைகளை கடைபிடிப்பார்கள். கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் செயற்கையான இனிப்பு மிட்டாய்களை மெல்வது போட்டியாளர்கள் பலரும் மேற்கொள்ளும் முறை.
செயற்கை இனிப்புக்களை மெல்வதை விட, இயற்கையான முறையிலேயே இப்படியான தாக்குப்பிடிக்கத்தக்க வலிமையை பெறமுடியும் என்று கலிபோர்னிய பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது உலர் திராட்சைப்பழங்களை மென்று சாப்பிடுவதன் மூலம் விளயாட்டுப்போட்டிகளில் தேவைப்படும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல் வலிமையை பெற முடியும் என்று இவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
உலர் திராட்சைகளில் காணப்படும் அதிகமான பொட்டாசியம் மற்றும் இரும்புசத்து, விளையாட்டு போட்டிகளுக்கு தேவைப்படும் நுண்ணிய சக்தியாக செயற்படுவதால் இவை போட்டியாளர்களுக்கு இயற்கையான ஊக்கமருந்தாக பயன்படுவதாகவும், செயற்கையான இனிப்புகளில் இருக்கும் கூடுதல் சர்க்கரை இதில் இல்லாமலிருப்பது கூடுதல் நன்மை பயக்கும் விடயம் என்றும் கூறுகிறார் சென்னையைச்சேர்ந்த உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...