Friday, 16 April 2021

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை கொடுத்துதவும் திட்டம்

ஏழை நாடுகளுடன் தடுப்பூசி பகிர்தல்

பெருந்தொற்றால் உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடியான சூழலை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, உலகின் ஏழைகளுக்கு உதவும் கொரிய ஆயர்களின் திட்டங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை கொடுத்து உதவும் திட்டத்திற்கென வத்திக்கானில் உருவாக்கப்பட்டுள்ள நிதி திரட்டும் முயற்சிக்கு, தென் கொரிய மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கவேண்டும் என  விண்ணப்பித்துள்ளது, Seoul  உயர்மறைமாவட்டம்.

கொரியாவின் முதல் கத்தோலிக்க அருள்பணியாளர் புனித Andrew Kim Tae-gon அவர்களின் 200வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும்வண்ணம், கொரியாவில் கொண்டாடப்படும் யூபிலி ஆண்டின் இறுதி நாளான நவம்பர் 27ம் தேதிவரை இந்த நிதி திரட்டும் முயற்சி கொரியாவில் இடம்பெறும் என Seoul உயர்மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

இவ்வாண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று வழங்கப்பட்ட ‘ஊர்பி எத் ஓர்பி’ வாழ்த்துச் செய்தியின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதற்கு உலக நாடுகள் உறுதிப்பாட்டுடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  விண்ணப்பித்ததை சுட்டிக்காட்டிய Seoul பேராயர், கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் திட்டத்தை கொரிய ஆயர்கள் துவக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

பெருந்தொற்றால் நெருக்கடியான ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இச்சூழலை, உதவி செய்வதற்கு தகுந்த ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, ஏழை நாடுகளின் பங்குத்தளங்கள், நிறுவனங்கள், மற்றும் துறவு இல்லங்கள் வழியாக, உலகின் ஏழைகளுக்கு உதவும் திட்டங்களை கொரிய ஆயர் பேரவைத் தீட்டியுள்ளதாகத் தெரிவித்தார், கர்தினால் Yeom Soo-jung.

ஏழை நாடுகளின் தடுப்பூசித் திட்டங்களுக்கென கொரிய மக்களின் நிதியுதவியைக் கேட்டு, பல்வேறு விழிப்புணர்வுத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றது, கொரிய தலத்திருஅவை.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...