Monday, 19 April 2021

மரணத்திலிருந்து வாழ்வு தளிர்விடும் என்பதில் நம்பிக்கை

 மியான்மார் துறவியர்


மியான்மாரில் மக்களாட்சியை நிலைநிறுத்த, மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டங்களைப் பார்க்கும்போது, இறைவனே நம் துணை என்ற எண்ணம் உறுதிப்படுத்தப்படுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இராணுவ ஆட்சியை எதிர்த்து மக்களாட்சிக்காக குரல் எழுப்பிவரும் மியான்மார் நாட்டு மக்கள், இறை இரக்கத்தில் தங்களை ஒப்படைத்துச் செயல்படுவதை காணமுடிகிறது என தெரிவித்துள்ளனர், அந்நாட்டு துறவியர்.

நாமனைவரும் கடவுளின் கைகளில் உள்ளோம், நம் நாடு இறைஇரக்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது, வருங்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையில் நாடு இருக்கும்போது, இறைவனே நம் பாறையாகச் செயல்படுகிறார் என தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மியான்மார் நாட்டு பெண் துறவியர், மக்களாட்சியை நிலைநிறுத்த, மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டங்களைப் பார்க்கும்போது, இறைவனே நம் துணை என்ற எண்ணம் உறுதிப்படுத்தப்படுகின்றது என அதில் தெரிவித்துள்ளனர்.

மரணத்திலிருந்து வாழ்வு முளைவிடும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக, நம்பிக்கையை பல்வேறு செயல்பாடுகளுடன் இணைத்து முன்னோக்கி நடைபோடுவோம் என்று மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங்க் போ அவர்கள் விண்ணப்பித்துள்ளதுபோல், அடக்கி ஒடுக்கப்பட்டோரையும், அடக்குமுறை மேற்கொண்டுள்ளோரையும் இறைவன் குணப்படுத்த வேண்டுமென இறைவேண்டல் செய்வோம் என விண்ணப்பித்துள்ளனர் மியான்மார் பெண் துறவியர்.

அண்மையில் சிறப்பிக்கப்பட்ட புனித வெள்ளியை நினைவுகூர்ந்து கார்தினால் போ அவர்கள், சிலுவைப் பாதையின் 13ம் நிலையில் அன்னை மரியா தன் மகனின் மரணம் குறித்து வெளிப்படுத்திய சோகத்தைப்போல், இன்றைய மியான்மாரில் எண்ணற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் மரணம், மற்றும் வருங்காலம் குறித்து கவலையுடன் வாழ்ந்து வருவதையும் கவலையுடன் வெளியிட்டது குறித்தும் தங்கள் அறிக்கையில் தெரிவித்துத்துள்ளனர் அந்நாட்டு துறவியர்.

மியான்மார் நாட்டின் நெருக்கடி காலத்தில் துறவியர், அருள்பணியாளர்கள், கிறிஸ்தவ பொதுநிலையினர் வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையின் ஆழமான சான்றுகள், கத்தோலிக்கத் திருஅவையின் இரக்கம் நிறைந்த முகத்தை வெளிப்படுத்துவதாக உள்ளன என்ற மியான்மார் துறவியர், இராணுவத்தினர் முன்பு துணிச்சலுடன் மண்டியிட்டு வேண்டிய அருள்சகோதரி Ann Rose Nu Tawng அவர்களின் சான்று, கத்தோலிக்கத் திருஅவையின் அர்ப்பணத்தின் எடுத்துக்காட்டாக இருந்தது என தெரிவித்துள்ளனர்

இருளின் காலத்தில் மன்னிப்பையும், பகைமைகளின் காலத்தில் அன்பையும் வெளிப்படுத்துமாறு புனித Faustina Kowalskaவுக்குத் தோன்றியபோதெல்லாம் வெளிப்படுத்திய இயேசுவைக் குறித்து கர்தினால் போ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதையும் குறிப்பிட்ட மியான்மார் துறவியர், சவால்கள் நிறைந்த இருளான இந்த வேளையில் இறைஇரக்கத்தை நோக்கி வேண்டுவோம் என்ற கர்தினால்களின் வார்த்தைகளுடன் தங்கள் செய்தியை நிறைவு செய்துள்ளனர். (Fides)

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...