மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், ‘திருமணத்தில் அன்பு’ என்ற நான்காம் பிரிவின், 91,92ம் பத்திகளில் 'அன்பு பொறுமையுள்ளது' என்ற துணைதலைப்பில், அவர் கூறியுள்ள கருத்துக்கள்...
அன்பு பொறுமையுள்ளது (1கொரி.13:4) என்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள முதல் கிரேக்க சொல்லாடல் makrothyméi என்பதாகும். இச்சொல், “அனைத்தையும் வெறுமனே பொறுத்துக்கொள்வது” அல்ல என்பதை வெளிப்படுத்தும் கருத்து, பவுலடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடல் 13ம் பிரிவின் 7ம் வசனத்தின் முடிவில் கூறப்பட்டுள்ளது. கடவுள் ‘சினம் கொள்ள தாமதிப்பவர்’ என்ற, இதன் அர்த்தம், பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில், தெளிவுபடுத்தப்பட்டுள்ளது (வி.ப.34:6; எண்.14:18). அதாவது, இது, உணர்ச்சிவசப்படாமல் செயல்படுகின்ற, மற்றும், கோபமூட்டுவதைத் தவிர்க்கின்ற ஒருவரின், குணநலனைக் குறிக்கிறது. இந்த, தமது குணநலனை, குடும்ப வாழ்விலும் பின்பற்றுமாறு, உடன்படிக்கையின் கடவுள், நமக்கு அழைப்பு விடுக்கின்றார். புனித பவுலடிகளாரின் திருமடலில் பயன்படுத்தப்பட்டுள்ள இச்சொல்லை, சாலமோனின் ஞானம் என்ற நூலின் (காண்க.11:23;12:2,15-18) ஒளியில் நாம் வாசிக்கவேண்டும். மனிதர்கள் தங்களுடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பும் பொருட்டே கடவுள் அவற்றைப் பார்த்ததும் பாராமல் இருக்கின்றார். ஆயினும், அவரது இரக்கச்செயல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, அவர் தம் ஆற்றலை வலியுறுத்துகிறார். கடவுள், பாவிகள் மீது காட்டும் “பொறுமை”, அவரது உண்மையான ஆற்றலின் அடையாளம். (அன்பின் மகிழ்வு 91).
பொறுமையாய் இருப்பது என்பது, மற்றவர் தொடர்ந்து நம்மை மோசமாக நடத்துவதற்கு, அல்லது, மற்றவர் நம்மைப் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பது, உடலளவில் துன்புறுத்தப்படுவதைச் சகித்துக்கொள்வது என்ற அர்த்தம் அல்ல. நம் உறவுகளில், அல்லது, மக்களில், எல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று நாம் நினைக்கும்போது, அல்லது, அனைத்திலும் நம்மையே மையப்படுத்தும்போது, மற்றும், அனைத்தும் நமது வழியில் நடக்கவேண்டும் என எதிர்பார்க்கும்போது, நாம் பிரச்சனைகளைச் சந்திக்கிறோம். அதனால் அவை அனைத்தும் நம்மை பொறுமையற்றவர்களாக ஆக்குகின்றன, மற்றும், அவை, முரட்டுத்தனமாகவும் நம்மை செயல்பட வைக்கின்றன. எனவே நாம் பொறுமை என்ற பண்பை வளர்த்துக்கொள்ளவில்லையென்றால், கோபமாகச் செயல்படுவதற்கு எப்போதும் சாக்குப்போக்குகளைத் தேடுவோம். இறுதியில், ஒன்றிணைந்து வாழத் திறனற்றவர்களாக, சமுதாயத்தின் எதிரிகளாக, நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாக ஆகிவிடுவோம். நம் குடும்பங்களும் போர்த்தளங்களாக மாறும். அதனாலேயே கடவுள், “மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும், தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்” (எபே.4:31) என்று நம்மிடம் கூறுகிறார். மற்றவரும் அவர்கள் இருப்பதுபோலவே, இந்த உலகத்தில் வாழ்வதற்கு உரிமையுடையவர்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படும்போது, பொறுமை, அனைத்தையும் பொறுத்துக்கொள்ளத் துவங்குகிறது. அப்போது, மற்றவர், தங்களது, செயல், அல்லது சிந்தனையால், நம்மை எரிச்சல்படுத்தினாலும், அவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அவ்வாறு இல்லாமலும், அவர்கள் நமது திட்டங்களுக்குத் தடைகளாகவும், நமது வளர்ச்சிக்குத் தடங்கலாகவும் இருந்தாலும், அவை நம்மை ஒன்றும் செய்துவிடாது. அன்பு எப்போதும் ஆழமான பரிவன்பைக் காட்டுவதாகும். அத்தகைய அன்பு, மற்றவர் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று நாம் விரும்பும்போதும், அவர்கள் வித்தியாசமாய் செயல்படும்போதும்கூட, அவர்கள் இவ்வுலகத்தின் ஓர் அங்கம் என்பதை ஏற்கச் செய்கின்றது. (அன்பின் மகிழ்வு 92)
No comments:
Post a Comment