Tuesday, 27 April 2021

பூமிக்கோளப் பாதுகாப்பிற்கு காலந்தாழ்த்தாமல் செயல்பட...

 உலக பூமிக்கோள நாள்


இயற்கை, பாதுகாக்கப்படுவதற்குத் தகுதியுடையது என்பதை, இந்த பெருந்தொற்று காலத்தில் உலகினர் அதிகமதிகமாக உணர ஆரம்பித்துள்ளனர் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நமது பூமிக்கோளத்தைப் பாதுகாப்பதற்கு உலக அளவில் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்பதை வலியுறுத்தி, ஏப்ரல் 22, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட '51வது உலக பூமிக்கோள நாள்’ மற்றும், காலநிலை மாற்றம் பற்றிய உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு ஆகிய இரு நிகழ்வுகளுக்கு, இரு காணொளிச் செய்திகளை அனுப்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 22, பூமிக்கோள நாள் 2021

கோவிட்-19 பெருந்தொற்றும், காலநிலை மாற்றமும் உலக அளவில் பேரழிவுகளை உருவாக்கியுள்ளவேளை, நம் உலகை பாதுகாப்பதற்கு, உலகின் அனைத்து தலைவர்களும், காலத்தைக் கடத்தாமல், உடனடியாகவும், நீதியோடும், துணிவோடும், நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தலைவர்கள், தங்களின் நடவடிக்கைகளில் எப்போதும் உண்மையைக் கூறும்போது, அதைக் கேட்கும் மக்களும், பூமிக்கோளத்தின் அழிவினின்று எவ்வாறு தங்களைக் காப்பாற்றிக்கொள்வது என்பதுபற்றியும், மனிதர்களாகிய நம்மால் அழிவை எதிர்கொள்ளும், பூமிக்கோளத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதுபற்றியும் அறிந்துகொள்வார்கள் என்று, திருத்தந்தையின் காணொளிச் செய்தி கூறுகிறது.

காலநிலை மாற்றம் பற்றிய மெய்நிகர் மாநாடு

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்களின் முயற்சியினால், நடைபெற்ற, காலநிலை மாற்றம் பற்றிய மெய்நிகர் மாநாட்டில் கலந்துகொண்ட, நாற்பது நாடுகளின் தலைவர்களிடம், மற்றொரு காணொளிச் செய்தி வழியாக, தன் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதருக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையேயுள்ள தொடர்பைக் குறிப்பிட்டு, ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலுக்கு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, மனிதரின் செயல்பாடுகள், கடவுளின் பன்முக உயிர்களை, மிகுந்த அக்கறையோடு பராமரிப்பதாயும்,  மதிப்பதாயும் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

பன்முக உயிர்களைப் பாதுகாப்பது, இயற்கையைப் பாரமரிப்பதாகும் என்றும், இயற்கை, பாதுகாக்கப்படுவதற்குத் தகுதியுடையது என்பதை, இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் அதிகமதிகமாக உணர ஆரம்பித்துள்ளோம் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த பூமிக்கோளத்தைப் பகிர்ந்துகொள்வதில், நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம் என்பதை கோவிட்-19 பெருந்தொற்று நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது என்றும், பெருந்தொற்றும், காலநிலை மாற்றமும் உலக அளவில் உருவாக்கியுள்ள பேரழிவுகள், நீதியும், நியாயமும், பாதுகாப்பும் நிறைந்த சுற்றுச்சூழலைக் கொண்ட ஒரு பூமியை உருவாக்கவேண்டிய அவசியத்தையும், இவ்விவகாரத்தில், இனிமேலும் காலந்தாழ்த்தாமல், உடனடியாக செயலில் இறங்கவேண்டும் என்பதையும் உணர்த்துகின்றன என்று, திருத்தந்தை, தன் செய்தியில் கூறியுள்ளார்.

அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்கள் ஏற்பாடு செய்த, காலநிலை மாற்றம் பற்றிய உலக மெய்நிகர் மாநாட்டில், சீனாவின் அரசுத்தலைவர் Xi Jinping அவர்கள் உட்பட, நாற்பது நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம், வருகிற நவம்பர் மாதத்தில், கிளாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கும் காலநிலை பற்றிய உச்சி மாநாட்டிற்குத் தயாரிப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...