Friday, 16 April 2021

யூத தொழுகைக்கூடத்திற்குச் சென்ற முதல் திருத்தந்தை

 உரோம் தொழுகைக்கூடத்தின் தலைமைக்குரு, ரபி எலியோ தொஆப், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களை வரவேற்றபோது...


2010ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், 2016ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரிலுள்ள யூத தொழுகைக்கூடத்திற்கு சென்றுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

35 ஆண்டுகளுக்கு முன், 1986ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, கிறிஸ்தவ-யூத உறவுகள் வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கும்வண்ணம், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், உரோம் நகரில் உள்ள யூத தொழுகைக்கூடத்திற்குச் சென்ற முதல் திருத்தந்தை என்ற பெயர் பெற்றார்.

பழமைவாய்ந்த உரோம் தொழுகைக்கூடம்

மேற்கத்திய நாடுகளில் துவக்கப்பட்ட முதல் யூத குழுமங்களில் ஒன்றான உரோம் யூத குழுமத்தின் அடையாளமாக விளங்கும் உரோம் தொழுகைக்கூடத்திற்கு திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள் சென்ற வேளையில், அவரை வரவேற்க, ஆயிரக்கணக்கான யூதர்களும், உலகின் பல்வேறு ஊடகப் பிரதிநிதிகளும் காத்திருந்தனர்.

இத்தொழுகைக்கூடத்தின் தலைமைக்குருவாக பணியாற்றிய ரபி எலியோ தொஆப் (Elio Toaff) அவர்கள், தொழுகைக்கூட வாசலில் திருத்தந்தையை அரவணைத்து அழைத்துச் சென்றார்.

தொழுகைக்கூடத்தில் நடைபெற்ற வழிபாட்டில், திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்களும், ரபி எலியோ தொஆப் அவர்களும், திருப்பாடல்கள் நூலிலிருந்து ஒரு சில பகுதிகளை மாறி, மாறி வாசித்தனர்.

யூதர்கள், கிறிஸ்தவர்களின் மூத்த உடன்பிறப்புகள்

"யூத மதம், கிறிஸ்தவ மதத்தின் முன்னோடியாக அமைந்துள்ளது. யூத மதத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் மூத்த உடன்பிறப்புகள். வேறு எந்த மதத்தினரையும் எங்களால் இவ்வாறு அழைக்கமுடியாது" என்று, திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள் இந்த வழிபாட்டில் கூறினார்.

“யூதர்களுக்கு எதிராக எழுந்த அனைத்து வெறுப்பையும், வன்முறைகளையும் கத்தோலிக்கத் திருஅவை, இன்று என் வழியே, வன்மையாகக் கண்டனம் செய்கிறது” என்று கூறிய திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், 1979ம் ஆண்டு தான் Auschwitz வதைமுகாமுக்குச் சென்ற வேதனையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

உரோம் நகரில் வாழ்ந்த 2,091 யூதர்கள், நாத்சி படைவீரர்களால், வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர் என்பதையும், திருத்தந்தை 2ம் யோவான் பவுல் அவர்கள், தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பைத் தொடர்ந்து, 2010ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், 2016ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரிலுள்ள யூத தொழுகைக்கூடத்திற்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...