Friday, 30 April 2021

ஒளிவு மறைவற்ற, வத்திக்கான் நிதி விடயங்கள் வேண்டும்

 புனித பேதுரு பெருங்கோவில்


திருப்பீடத்தின் மிக உயர்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவரும், எவ்வித குற்றமும் சுமத்தப்படாதவர்கள் என்றும், ஒளிவு மறைவற்ற நிலையில், தங்கள் நிதித்தொடர்பான விடயங்கள் இருக்கின்றன என்றும், அறிக்கை வெளியிடவேண்டும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

“மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர், பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர், பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்” (லூக்கா 16:10) என்று, லூக்கா நற்செய்தியில், இயேசு விடுத்த எச்சரிக்கை சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 29, இவ்வியாழனன்று 'Motu proprio' எனப்படும் சுயவிருப்ப திருத்தூது மடல் ஒன்றை துவக்கியுள்ளார்.

திருப்பீடத்தின் மிக உயர்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவரும், தாங்கள் எவ்வித குற்றமும் சுமத்தப்படாதவர்கள் என்றும், தங்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும், ஒளிவு மறைவற்ற நிலையில், தங்கள் நிதித்தொடர்பான விடயங்கள் இருக்கின்றன என்றும், ஒரு பொது அறிக்கையை வெளியிடவேண்டும் என்று, திருத்தந்தை, இந்த மடல் வழியே பணித்துள்ளார்.

அத்துடன், வரிகள் விதிக்காது புகலிடம் வழங்கும் நிறுவனங்களிலும், திருஅவையின் படிப்பினைகளுக்கு எதிராகச் செயல்படும் நிறுவனங்களிலும் தாங்கள் நிதி சேமிப்பு வைத்திருக்கவில்லை என்றும், அவர்களது அறிக்கை உறுதி செய்யவேண்டும் என்று, திருத்தந்தை ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும், திருப்பீடத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், 40 யூரோவுக்கு அதிகமான மதிப்புள்ள பரிசுப்பொருள்களை யாரிடமிருந்தும் பெறுவதற்கு, இந்த 'Motu proprio' மடல் வழியே திருத்தந்தை தடைவிதித்துள்ளார்.

ஊழலுக்கு எதிராக, ஐ.நா.நிறுவனம் விதித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருப்பீடம், ஒளிவு மறைவற்ற முறையில் தன் பொருளாதார செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்ற வண்ணம், 2020ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'Motu proprio' திருத்தூது மடலின் ஒரு தொடர்ச்சியாக, இவ்வியாழனன்று வெளியான மடல் அமைந்துள்ளது.

ஒளிவு மறைவற்ற முறையில், திருப்பீடமும், வத்திக்கான் நாடும் தன் பணிகளைத் தொடர்வதற்கு உதவியாக, அனைத்து துறைகளின் தலைவர்களாக பணியாற்றும் கர்தினால்கள், ஆயர்கள், பொதுநிலையினர் ஆகியோரும், அவர்களுக்கு உதவி செய்யும் ஏனையோரும், தங்கள் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை நிலவுவதை உறுதி செய்யும் வண்ணம், அறிக்கையொன்றை வெளியிட வேண்டும் என்பது திருத்தந்தை விடுத்திருக்கும் மிக முக்கிய ஆணையாகும்.

இந்த அறிக்கையில் உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அவர்கள், பணிநீக்கம் செய்யப்படுவர் என்றும், அவர்களால் ஏற்பட்ட இழப்பை, அவர்களே ஈடு செய்யவேண்டும் என்றும், திருத்தந்தையின் ஆணை வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...