Tuesday, 27 April 2021

ஞானத்தை நோக்கி இளையோரை திறக்கும் கத்தோலிக்க கல்வி

 மிலான் நகர் திரு இதய கத்தோலிக்கப் பல்கலைக்கழக திருப்பலியில் கர்தினால் பரோலின்


தப்பிச் செல்வதாலோ, பலத்தின் வழியாகவோ, எந்த தீமையையும் வெற்றிகொள்ள முடியாது, அன்பின் வழியாக மட்டுமே வெற்றிகொள்ள முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வரலாற்றில் முதலாம் உலகப்போருக்கும் இரண்டாம் உலகப்போருக்கும் இடைப்பட்ட காலத்தின் சவால்களையும் தாண்டி, அந்த அனுபவத்தோடு வளர்ந்து வந்துள்ள கத்தோலிக்க கல்வி நிலையங்களின் எடுத்துக்காட்டு, வரவிருக்கும் காலங்களின் சவால்களை வெற்றிகொள்வதற்கு உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இத்தாலியின் மிலான் நகரில் அமைந்துள்ள திரு இதய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டதன் நூறாமாண்டு கொண்டாட்டங்களையும், கத்தோலிக்க கல்வியின் 97வது ஆண்டு தினத்தையும், இணைத்து, திரு இதய கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இஞ்ஞாயிறன்று திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், கல்விச்சூழல்களில் புதிய வாழ்வுமுறைகளுக்கும் ஆய்வுகளுக்குமான சவால்களை எதிர்நோக்கிய காலம்போல், இன்னும் சவால்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நினைவூட்டினார்

இளையோரின் மனதை அறிவின் அழகு நோக்கி திறப்பது என்பது, ஒரு பொருளைப்பற்றித் தெரிந்துகொள்வதோ, அல்லது, அறிவியல், தொழில்நுட்பத் திறமைகளைக் கைக்கொள்வதோடு நின்றுவிடுவதல்ல, மாறாக, ஞானத்தின் தேடுதல் நோக்கி அவர்களை திறக்க வைப்பதாகும் என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், அப்பணியே கத்தோலிக்க கல்வி நிலையங்களின் குறிக்கோளாக உள்ளது என்றார்.

துன்பங்களையும் துயர்களையும் அனுபவித்து இறந்த இயேசு, அனைத்து துன்பங்களையும் நம்மீது கொண்ட அன்பால் தாங்கி, வெற்றி வீரராக உயிர்த்தார் என்பதே இந்த உயிர்ப்புக் காலத்தில் நாம் பெறும் செய்தி என்று கூறிய திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், தப்பிச்செல்வதாலோ, பலத்தின் வழியாகவோ, எந்தத் தீமையையும் வெற்றிகொள்ள முடியாது, அன்பின் வழியாக மட்டுமே வெற்றிகொள்ள முடியும் என்பதை இயேசு கற்பித்துள்ளார் என கூறினார்.

நிச்சயமற்ற நிலைகளை எதிர்கொள்ளும்போது, அது குறித்து அச்சம் கொள்ளாமல், அன்பால் அவைகளை வெற்றிகண்டு, வருங்கால சமுதாயத்தை நன்முறையில் உருவாக்குவதில் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம் எனவும் அழைப்பு விடுத்தார், கர்தினால் பரோலின்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...