Friday, 30 April 2021

முதலாம் யோவான் பவுல் அறக்கட்டளை – முதல் ஆண்டு

 திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்


திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் எண்ணங்கள், எழுத்துக்கள், மற்றும், வாழ்வு எடுத்துக்காட்டுக்கள், அனைவரையும் சென்றடைய உதவும் நோக்கத்துடன், உருவாக்கப்பட்ட அறக்கட்டளை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2020ம் ஆண்டு, ஏப்ரல் 28ம் தேதி நிறுவப்பட்ட திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அறக்கட்டளை, இவ்வாண்டு, ஏப்ரல் 28, இப்புதனன்று, தன் முதல் ஆண்டு நிறைவை சிறப்பித்துள்ளது.

திருஅவையில், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல் செப்டம்பர் 28ம் தேதி முடிய, 34 நாள்களே திருத்தந்தையாக பணியாற்றி இறையடி சேர்ந்த திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்களின் எண்ணங்கள், எழுத்துக்கள், மற்றும், வாழ்வு எடுத்துக்காட்டுக்கள், அனைவரையும் சென்றடைய உதவும் நோக்கத்துடன், இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் விட்டுச்சென்ற கலாச்சார, மற்றும், ஆன்மீக பாரம்பரியத்தைக் கட்டிக்காத்தல், அவர் குறித்த கருத்தரங்குகள், ஆய்வுகள் போன்றவற்றை ஊக்குவித்தல், அவரை மையப்படுத்திய ஆய்வுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, விருதுகள் போன்றவற்றை உருவாக்குதல், ஆகிய நோக்கங்களைக் கொண்டு, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அறக்கட்டளை, ஓராண்டளவாகச் செயலாற்றி வருகிறது.

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் பணியாற்றிய 1978ம் ஆண்டு, வத்திக்கான் தொலைக்காட்சி நிலையம் உருவாகாத நிலையில், அவ்வாண்டில், இத்திருத்தந்தையின் செயல்பாடுகளை பதிவுசெய்து வந்த Rai என்ற இத்தாலிய தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து, இந்த அறக்கட்டளை, காணொளிப் பதிவுகளை வாங்கி, பாதுகாத்துவருகிறது.

மேலும், ஏப்ரல் 30 வருகிற வெள்ளியன்று, வெனிசுவேலா நாட்டில், இறையடியார் José Gregorio Hernández அவர்கள், அருளாளராக உயர்த்தப்படும் திருப்பலியை தலைமையேற்று நடத்துவதாக இருந்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கோவிட் பெருந்தொற்று நெருக்கடியின் காரணமாக, அங்கு செல்லமாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக, வெனிசுவேலாவின் திருப்பீடத்தூதர், பேராயர் Aldo Giordano அவர்கள் தலைமையில், இத்திருப்பலி நடைபெறும் என்றும், திருப்பீடம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...