Tuesday, 6 April 2021

மதம் சார்ந்த இடங்கள் பாதுகாப்பிற்கு ஐ.நா. தீர்மானம்

 சிலே நாட்டில் தீ வைத்து எரிக்கப்பட்ட சிற்றாலயம்


வழிபாட்டுத் தலங்கள், நினைவுச்சின்னங்கள், புனிதப்பொருள்கள், திருத்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஐ.நா.பொது அவை கண்டனம்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மதம் சார்ந்த இடங்களை, பயங்கரவாதச் செயல்களிலிருந்து பாதுகாப்பதற்கு பெருமளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, சனவரி 21, இவ்வியாழனன்று அழைப்பு விடுத்துள்ளது.

“அமைதிக் கலாச்சாரத்தை ஊக்குவித்தல், மற்றும், மதம் சார்ந்த இடங்களைப் பாதுகாப்பதற்கு சகிப்புத்தன்மை” என்ற தலைப்பில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிய, ஐ.நா.பொது அவை, இந்த தீர்மானத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் வழிகள் குறித்து ஆய்வுசெய்வதற்கு, பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றைக் கூட்டுமாறு, ஐ.நா. தலைமைப் பொதுச்செயலருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும், உலகெங்கும் இருக்கின்ற குழுமங்களின் வரலாறு, சமுதாய நல்லிணக்கம், மற்றும், மக்களின் மரபுகள் பற்றி மதம் சார்ந்த இடங்கள் எடுத்துரைக்கின்றன என்றும், அந்த இடங்கள் முழுமையாய் மதிக்கப்படவேண்டும் என்றும், அத்தீர்மானம் கூறுகிறது.

கலாச்சாரம் மற்றும், ஆன்மீக முறையில் முக்கியமான இடங்களாக உள்ளவை, பயங்கரவாதிகள் மற்றும், புரட்சியாளர்களால் அதிகமதிகமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன என்றும், இவர்கள், அவ்வப்போது மதம் சார்ந்த சொத்துக்களை அழித்து வருகின்றனர், மற்றும், கலைப்பொருள்களை, சட்டத்திற்குப் புறம்பே வர்த்தகம் செய்கின்றனர் என்றும், அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், நினைவுச்சின்னங்கள், புனிதப்பொருள்கள், திருத்தலங்கள் உட்பட, மதம் சார்ந்த அனைத்து இடங்கள் மீது நடத்தப்படும் எல்லாத் தாக்குதல்களுக்கும் எதிரான, தன் வன்மையான கண்டனத்தையும், ஐ.நா.பொது அவை, தன் தீர்மானத்தில் வெளியிட்டுள்ளது. (UN)

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...