Tuesday 27 April 2021

பன்முக உயிரியல் - இணையவழி கருத்தரங்கு

 பன்முக உயிரியல் - இணையவழி கருத்தரங்கில், கர்தினால் பீட்டர் டர்க்சன்


பன்முக உயிர்களின் காவலர்களாக திகழும் பழங்குடியினர் நமக்குச் சொல்லித்தரும் சுற்றுச்சூழலியல் நோக்கிய மனமாற்றத்தை நாம் பயிலவேண்டும் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுற்றுச்சூழலியல் நோக்கிய மனமாற்றமும், நம் பொதுவான இல்லமான பூமிக்கோளத்தின் பராமரிப்பும், இன்றைய உலகின் மிக முக்கியத் தேவைகளாக உள்ளன என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், இணைய வழி கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையும், கோவிட்-19 மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டு திருப்பீடக் கழகமும் இணைந்து, ஏப்ரல் 20, செவ்வாயன்று ஏற்பாடு செய்திருந்த இணையவழி கருத்தரங்கில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இவ்வாண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் பன்முக உயிரியல் கருத்தரங்கு COP15, மற்றும் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் உச்சி மாநாடு COP26 ஆகிய பன்னாட்டு கூட்டங்களுக்கு தயாரிப்பாக, "COP15ஐ நோக்கிய பாதை" என்ற தலைப்பில், இந்த இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த இணையவழி கருத்தரங்கில், கர்தினால் டர்க்சன் அவர்களும், ஐ.நா.வின் அமைதி தூதரும், ஜேன் குட்டால் (Jane Goodall) நிறுவனத்தின் தலைவருமான, முனைவர் ஜேன் குட்டால் அவர்களும் சிறப்புரைகள் வழங்கினர்.

விலங்குகளிடமிருந்து மனிதருக்கு தோற்றிய நோயாக கோவிட்-19 பெருந்தொற்று கருதப்படுவதால், நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கை நோயுறும்போது, மனிதர்களாகிய நாமும் நோயுறுகிறோம் என்ற பாடத்தை, இந்த உலகளாவிய பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள், தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

பன்முக உயரியல் என்பது, படைப்பின் துவக்கத்திலிருந்தே கடவுளால் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை என்பதை, விவிலியம் நமக்குத் தெளிவாக உணர்த்தியுள்ளது என்று கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

பன்முக உயிர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மனிதருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்த கர்தினால் டர்க்சன் அவர்கள், ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன், பன்முக உயிர்கள் ஒவ்வொன்றையும் படைத்த இறைவன், தொடர்ந்து அவற்றைப் படைத்து வருகிறார் என்று எடுத்துரைத்தார்.

கடவுளின் படைப்பை சிறிது, சிறிதாக மனிதர்கள் சிதைத்து வந்துள்ளனர் என்பதை தன் உரையில் வருத்தத்துடன் குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன் அவர்கள், சிதைக்கப்பட்ட படைப்பு அனைத்தும், உலகின் வறியோரும் எழுப்பும் அழுகுரலைக் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இறைவா உமக்கே புகழ்' என்று பொருள்படும் 'Laudato si' திருமடலில் கூறியுள்ளார் என்பதை நினைவுறுத்தினார்.

பன்முக உயிர்களின் காவலர்களாக திகழும் பழங்குடியினரைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை என்றும், இவர்கள் நமக்குச் சொல்லித்தரும் சுற்றுச்சூழலியல் நோக்கிய மனமாற்றத்தை நாம் பயிலவேண்டும் என்றும் திருத்தந்தை தன் திருமடலில் கூறியுள்ளதை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...