மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈராக் திருத்தூதுப் பயணத்தின்போது முன்வைக்கப்பட்ட புதிய கருத்துரைகள் மற்றும், பரிந்துரைகளைச் செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆய்வுசெய்வதற்கு, ஈராக் அரசு, அமைச்சர் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.
இத்திருத்தூதுப் பயணத்தின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் அரசுத்தலைவர் Barham Salih அவர்களையும், பிரதமர் Mustafa al Kadhimi அவர்களையும் சந்தித்து கலந்துரையாடியபோது பரிந்துரைத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தில், உயர்மட்ட குழு ஒன்றை, அந்நாட்டு அரசு நியமித்துள்ளது என்று, Al Araby Al Jadeed செய்தித்தாள் கூறியுள்ளது.
போருக்குப்பின் நாட்டின் மீள்கட்டமைப்பில் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகள், பாதுகாப்பு, நீடித்த நிலையான பொருளாதாரம், குறிப்பாக, கிறிஸ்தவ மற்றும், ஏனைய சமுதாயங்களின் நிலைமை, நினிவே மற்றும், பாக்தாத் நிர்வாகங்கள் போன்ற பல்வேறு விவகாரங்கள், இத்தலைவர்களின் சந்திப்புக்களில் விவாதிக்கப்பட்டன.
நாட்டில் நீதியை நிலைநிறுத்தவும், கிறிஸ்தவ உடன்பிறப்புக்களின் சொத்துரிமைகளைப் பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஒரு குழுவை உருவாக்குமாறு, ஈராக் ஷியா மதப் பிரிவுத் தலைவர் Muqtada al Sadr அவர்கள், 2021ம் ஆண்டின் துவக்கத்திலிருந்தே அரசை வலியுறுத்தி வந்தார் என்று பீதேஸ் செய்தி கூறுகின்றது.
சதாம் ஹூசேன் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைமையில் நடைபெற்ற இராணுவ ஆக்ரமிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதையடுத்து, ஈராக் கிறிஸ்தவக் குடும்பங்களின் சொத்துக்களைத் திருடுவது, அரசால் கவனிக்கப்படாத நடைமுறைப் பழக்கமானது என்று பீதேஸ் செய்தி மேலும் கூறுகின்றது. (Fides)
No comments:
Post a Comment