மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
“வாழ்வின் ஆண்டவர், நாம் வாழ்வை முழுமையாக வாழுமாறு விரும்புகிறார், அவர், வாழ்வின் இரகசியத்தை நமக்குச் சொல்கிறார், அந்த வாழ்வை மற்றவருக்குக் கொடுத்து வாழும்போது மட்டுமே, அந்த வாழ்வை நாம் உடைமையாக்கிக் கொள்கிறோம்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பாதுகாவலரான புனித ஜார்ஜ் திருநாளான, இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 23, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட, மறைசாட்சியான புனித ஜார்ஜ் அவர்களின் பெயரைக் கொண்டிருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாளில் வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில், நாம் கடவுளிடமிருந்து பெற்ற வாழ்வெனும் கொடையை, மற்றவருக்கு கொடையாக வழங்கி வாழுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
திருத்தந்தைக்கு திருநாள் வாழ்த்து
மேலும், இஸ்பானிய மொழியில், ஹோர்கே, (Jorge Mario Bergoglio) அதாவது, ஜார்ஜ் என்ற இயற்பெயரைக் கொண்டிருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாதுகாவலர் திருநாளைச் சிறப்பிக்கும் விதமாக, உரோம் மாநகரில் வாழும், ஏறத்தாழ 600 வறிய, மற்றும், வீடற்ற மக்களுக்கு, இரண்டாவது முறையாக, கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்ட இடத்திற்கு, திருத்தந்தை சென்று, அவர்கள் அனைவரையும் மகிழ்வித்துள்ளார்.
ஏப்ரல் 23, இவ்வெள்ளி, உரோம் நேரம் காலை 10.30 மணிக்கு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்திற்குச் சென்று, அங்கு தடுப்பூசிகளை வழங்கியவர்கள், தன்னார்வலர்கள், மற்றும், அவற்றை பெற்றவர்களைச் சந்தித்து வாழ்த்தியதோடு, அவர்களுக்கு, சாக்லேட்டு இனிப்புகள் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு திருத்தந்தைக்கு, திருநாள் வாழ்த்துப் பாடலையும், அனைவரும் பாடி மகிழ்ந்தனர்.
தடுப்பூசி வழங்கிய இத்தகவலை அறிவித்த, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான, கர்தினால் Konrad Krajewski அவர்கள், இவ்வாண்டு புனித வாரத்தில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில், கோவிட் 19 தடுப்பூசிகளை முதல் முறையாகப் பெற்ற 1,400 பேரில், 600 பேரே, இவ்வெள்ளியன்று, இரண்டாவது முறையாகத் தடுப்பூசிகளை, பெற்றவர்கள் என்று அறிவித்தார்.
2020ம் ஆண்டு, ஏப்ரல் 23ம் தேதி, புனித ஜார்ஜ் திருநாள் சிறப்பிக்கப்பட்ட வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலி, இஸ்பெயின், ரொமேனியா நாடுகளில், கோவிட்-19 நோயுற்றோருக்கு உதவிகள் செய்துவந்த மருத்துவமனைகளுக்கு பல மருத்துவ உதவிகளை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment