Tuesday, 6 April 2021

வளரும் நாடுகளின் கடன்கள் இரத்துசெய்யப்பட நடவடிக்கை

 ஐ.நா. தலைமை பொதுச் செயலர், அந்தோனியோ கூட்டேரஸ்

நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்த்து உறுதியான வருங்காலத்தை அமைக்கமுடியும் - கூட்டேரஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வளரும் நாடுகளின் வெளிநாட்டுக் கடன்பளுவைக் குறைப்பதற்கு, உலக அளவில் உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்று, ஐக்கிய நாடுகள் நிறவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கோவிட்-19 உலகப் பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகளால், வளரும் நாடுகளின், கடன்களைக் குறைப்பதற்கு, உலக அளவில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலும், அவை, அந்நாடுகளின் பொருளாதாரம், மற்றும், நிலையான தன்மையை மீண்டும் அமைப்பதற்குப் போதுமானதாக இல்லை என்று, கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.  

உலகினர், ஓராண்டுக்கு மேலாக பெருந்தொற்று அச்சுறுத்தலில் வாழ்ந்துவரும்வேளை,  வெளிநாட்டுக் கடன்களின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து, ஆறு வளர்ந்த நாடுகள், பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவந்த 27 வளரும் நாடுகள், 9 மிகவும் வளர்ச்சி குன்றிய நாடுகள் உட்பட, 42 நாடுகளின் பொருளாதாரம் சரிவைக் கண்டிருக்கிறது என்று கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், இந்நிலை தொடர்ந்தால், 2030ம் ஆண்டின் ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட இலக்கை எட்டுவது கடினம் என்றும் கூறியுள்ளார்.

கடன்களை இரத்துசெய்வதன் வழியாக, முதலீடுகளுக்கு வாய்ப்பு வழங்கமுடியும் என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், நாடுகளின் பிரச்சனைகளைத் தீர்த்து உறுதியான வருங்காலத்தை அமைக்கமுடியும் என்றும், கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார். (UN)

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...