Wednesday, 7 April 2021

இயலாதது என்று எதுவுமே இல்லை என நம்புங்கள்

 முதுபெரும்தந்தை பிட்சபாலா - எருசலேமில் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலி

கி.பி.335ம் ஆண்டில் முதலில் அர்ச்சிக்கப்பட்ட எருசலேம் திருக்கல்லறை ஆலயம், கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறையால் மூடப்பட்டு, தற்போது திறக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

துணிவோடிருங்கள், மற்றும், இயலாதது என்று எதுவுமே இல்லை என நம்புங்கள் என்று, எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை பியெர்பத்திஸ்தா பிட்சபாலா அவர்கள், புனித பூமி கிறிஸ்தவர்களிடம் உயிர்ப்புப் பெருவிழாவன்று கூறினார்.

ஏப்ரல் 04, உயிர்ப்புப் பெருவிழாவன்று, எருசலேம் திருக்கல்லறை ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய, முதுபெரும்தந்தை பிட்சபாலா அவர்கள், கடந்த ஆண்டில், கொரோனா பெருந்தொற்றால் பெருந்துயரை அடைந்துள்ள, புனித பூமி கிறிஸ்தவ சமுதாயம், கடந்தகாலக் காயங்களிலே வாழ்ந்துகொண்டிருக்காமல், நம்பிக்கையுடன் வருங்காலத்தை எதிர்நோக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

கடந்தகாலத் துயரங்களிலே வாழ்ந்துகொண்டிருந்தால், உயிர்த்த கிறிஸ்துவை நம்மால் காணமுடியாது என்றும், இதுவல்ல நம் உயிர்ப்புப் பெருவிழா என்றும் கூறிய முதுபெரும்தந்தை பிட்சபாலா அவர்கள், இயேசுவின் திருக்கல்லறை இருந்த இந்த இடத்திலே, நம் தேடலை வழிநடத்துகின்ற, மற்றும், நம் கண்களைத் திறக்கின்ற, உயிர்த்த ஆண்டவரின் பேருண்மையான குரலைக் கேட்கிறோம் என்று கூறினார்.

நமக்குத் தெரியாத, அதேநேரம், இயலக்கூடிய நம் வருங்காலம் பற்றி நம்மோடு பேசும் உயிர்த்த ஆண்டவரின் குரலை நாம் கேட்டால், அக்குரல், நம்மைப் பின்னோக்கி அல்ல, மாறாக, இறைத்தந்தையிடமும், நம் சகோதரர் சகோதரிகளிடமும் முன்னோக்கிச் செல்வதற்கு வழிநடத்தும் என்றுரைத்த முதுபெரும்தந்தை பிட்சபாலா அவர்கள், உயிர்ப்புப் பெருவிழா வழங்கும் மிகப்பெரும் புதுமையையும் நம்மால் கண்டுணர முடியும் என்று எடுத்துரைத்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றாலும், அச்சம், மரணம், துயரம் போன்ற பல்வேறு சூழல்களாலும் சோர்வுற்றும், காயப்பட்டும் இருக்கின்ற இவ்வுலகத்திற்கு, மரணத்தின் அடையாளங்கள் மத்தியிலும்கூட, வாழ்வின் நம்பிக்கைக் கீற்றுக்களை எவ்வாறு பார்ப்பது என்பதை அறியச் செய்வதற்கு, திருஅவை ஒன்று தேவைப்படுகின்றது என்றும், முதுபெரும்தந்தை பிட்சபாலா அவர்கள் கூறினார்.

கி.பி.335ம் ஆண்டில் முதலில் அர்ச்சிக்கப்பட்ட எருசலேம் திருக்கல்லறை ஆலயம், கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறையால் மூடப்பட்டு, தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதற்குமுன், கறுப்பு மரணம் என்ற பெருந்தொற்று பரவிய காலத்தில், 1349ம் ஆண்டில், இந்த ஆலயம் நீண்டதொரு காலத்திற்கு மூடப்பட்டிருந்தது. (CNA)

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...