Friday, 9 April 2021

ஏழை நாடுகளுக்குரிய நிதியுதவிகள் குறைக்கப்படுவது நியாயமல்ல

 கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ், மற்றும், ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி


ஏழை நாடுகளுக்கு வழங்கிவந்த நிதி உதவிகளின் அளவை தங்கள் நாடு குறைத்துள்ளது குறித்து கவலையை வெளியிட்ட இங்கிலாந்து கிறிஸ்தவத் தலைவர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஏழை நாடுகளின் வளர்ச்சிக்கு இங்கிலாந்து வழங்கிவந்த நிதி உதவிகளை குறைத்துள்ளது குறித்து, இங்கிலாந்தின் கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவரும் ஏமன், சிரியா, தென் சூடான் போன்ற ஏழை நாடுகளுக்கு வழங்கி வந்த நிதி உதவிகளின் அளவை குறைத்துள்ளது குறித்து வெஸ்ட் மின்ஸ்டர் பேராயர், கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ், கான்டர்பெரி ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டை வழங்கிவந்ததை, தற்போது, 0.5 விழுக்காடாக குறைத்துள்ளது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் எழை நாடுகளின் வளர்ச்சிக்கென இங்கிலாந்தின் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காட்டை வழங்கவேண்டும் என, 2015ம் ஆண்டு சட்டம் வழியாக தீர்மானம் கொணரப்பட்டாலும், தற்போதைய பெருந்தொற்று பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, இந்த உதவியை, 0.5 ஆக குறைத்துள்ளதால், ஒவ்வோர் ஆண்டும் 400 கோடி பவுண்ட்களை இங்கிலாந்து சேமிக்க உள்ளது.

பெருந்தொற்றைக் காரணம்காட்டி, ஏழை நாடுகளின் தோள்களில் சுமையை தூக்கிவைப்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது எனக்கூறும் கிறிஸ்தவத் தலைவர்கள், ஏற்கனவே பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை நாடுகளுக்கு நிதியுதவிகளைக் குறைப்பது, மேலும் துயரத்தையே வழங்கும் எனவும் கவலையை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் நிதி நிலைமைகள் சீரடைந்தவுடன் மொத்த வருமானத்தில் 0.7 விழுக்காடு  வழங்கப்படுவது துவக்கப்படும் என அரசு அறிவித்துள்ளபோதிலும், தற்போதைய ஏழை நாடுகளின் நிலைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டுமென விண்ணப்பித்துள்ளனர் கிறிஸ்தவத் தலைவர்கள்.

ஒருவர் ஒருவரைச் சார்ந்திருக்கும் நிலையை நமக்கு உணர்த்தியுள்ள இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில், தடுப்பூசி போடுவதில் மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக செயல்பட்டுள்ள இங்கிலாந்து நாடு, சுற்றுச்சூழலைக் காத்தல், மற்றும் ஏழை நாடுகளுக்கு உதவுவதல் போன்ற விடயங்களிலும், முதலிடத்தில் நின்று வழிகாட்ட வேண்டும் என கர்தினால் நிக்கோல்ஸ், மற்றும் பேராயர் வெல்பி ஆகியோர் இணைந்து தங்கள் அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...