Monday, 19 April 2021

பிரேசில் நாடு விவரிக்க முடியாத துன்பங்களை எதிர்கொள்கிறது

 பிரேசிலில் கோவிட்-19ஆல் இறந்தவர்கள் கல்லறை


கிறிஸ்துவில் நாம் வைத்துள்ள நம்பிக்கை, இந்த துயரம்நிறைந்த காலத்தைக் கடக்கமுடியும் என்பதை நமக்குக் காட்டுகின்றது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரேசில் நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றால் பலரின் வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளவேளை, அந்நாடு ஒப்புரவு பெறவும், ஆறுதல் அடையவும், ஆயர்கள் உதவுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு ஆயர் பேரவைக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

ஏப்ரல் 12, இத்திங்களன்று, தன் 58வது பொதுப் பேரவையை இணையம் வழியாக துவக்கிய பிரேசில் ஆயர் பேரவைக்கு, ஏப்ரல் 15, இவ்வியாழன் மாலையில், காணொளிச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, பிரேசில் நாடு, தன் வரலாற்றில், மிகவும் இன்னல்நிறைந்த சோதனைகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

பிரேசில் ஆயர்கள் வழியாக, அந்நாட்டினர் அனைவருக்கும் இச்செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, கோவிட்-19 பெருந்தொற்றில் தங்கள் அன்புறவுகளை இழந்துள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, தன் அருகாமையை வெளிப்படுத்தியுள்ளார்.

விவரிக்க முடியாத துன்பங்கள்

பெருந்தொற்று உருவாக்கியுள்ள துன்ப சோதனைகள், இளையோர், வயது முதிர்ந்தோர், தந்தையர், அன்னையர், நலவாழ்வுப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், திருஅவைப் பணியாளர்கள், செல்வந்தர், வறியோர் என, எவரையும் பாதிக்காமல் விட்டுவைக்கவில்லை என்று, திருத்தந்தை கவலை தெரிவித்துள்ளார்.

Johns Hopkins பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, பிரேசிலில், 1 கோடியே 36 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள், கோவிட்-19 பெருந்தொற்றால் தாக்கப்பட்டுள்ளனர், மற்றும், 3,61,000க்கு அதிகமான மக்கள், இப்பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இப்பெருந்தொற்ரால் உயிரிழந்த ஆயர்களை, குறிப்பாக நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, இறந்த அனைவரின் ஆன்மாக்கள் நிறையமைதியடைய, தான் செபிப்பதாகவும், தங்களின் அன்புறவுகளை இழந்து துயரங்களில் இருக்கும் குடும்பங்களுக்கு, தனது ஆறுதலைத் தெரிவிப்பதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

தங்களின் அன்புறவுகளின் கடைசி நேரத்தில்கூட பார்க்க இயலாமல் இருந்துள்ளது, உயிரிழந்தவர்களுக்கும், அவர்களின் உறவுகளுக்கும் மிகப்பெரும் துன்பங்கள் எனவும் கூறியுள்ள திருத்தந்தை, கிறிஸ்துவின் உயிர்ப்பில் நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கிறிஸ்துவின் உயிர்ப்பில் நம்பிக்கை

கிறிஸ்துவில் நாம் வைத்துள்ள நம்பிக்கை, இந்த துயரம்நிறைந்த காலத்தைக் கடக்க முடியும் என்பதை நமக்குக் காட்டுகின்றது என்றும், அனைவரும் ஒன்றித்திருந்தால் மட்டுமே, பெருந்தொற்றையும், அதன் எதிர்விளைவுகளையும் நம்மால் முறியடிக்க முடியும் என்றும், பிரேசில் ஆயர் பேரவை, இந்நேரத்தில் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார. 

2013ம் ஆண்டில், பிரேசிலுக்கு தான் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, ஆயர்கள், பிரிவினைகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு, ஒப்புரவை ஊக்குவிப்பதே, அவர்களின் மறைப்பணி என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நம்முன் உள்ள சவால் பெரியது, ஆயினும், ஆண்டவர் நம் அனைவரோடும் நடக்கிறார் என்றும், இயேசுவில் நம் அடித்தளத்தையும், சக்தியையும், ஒன்றிப்பையும் காண்கிறோம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் மக்கள் அனைவருக்கும் தன் ஆசீரை அளித்துள்ளார்.

பிரேசில் ஆயர் பேரவையின் இணையவழி 58வது பொதுப் பேரவை, ஏப்ரல் 16, இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது. 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...