ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
உலகை வதைத்துவரும் கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரவேண்டும் என்ற வேண்டுதலுடன், உலகெங்கும் உள்ள திருத்தலங்களிலிருந்து செபமாலை பக்தி முயற்சி மேற்கொள்ளப்படும் என்பதை, ஏற்கனவே அறிவித்திருந்த திருப்பீடம், பல்வேறு நாடுகளிலிருந்து, இம்முயற்சியில் இணையும் 30 திருத்தலங்களின் பெயர்களை, ஏப்ரல் 28, இப்புதனன்று வெளியிட்டுள்ளது.
அனைத்து கண்டங்களிலிருந்தும் திருத்தலங்கள்
இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலம், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலம், போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை மரியா திருத்தலம், உட்பட, உலகின் அனைத்து கண்டங்களிலிருந்தும் இத்திருத்தலங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
"திருஅவை முழுவதிலுமிருந்து இறைவனை நோக்கி இடைவிடாத செபம் எழுந்தது" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உலகளாவிய முயற்சியை, மே மாதம் முதல் நாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கிவைப்பார் என்றும், மே மாதம் 31ம் தேதி, இந்த பக்தி முயற்சியை அவர் நிறைவு செய்துவைப்பார் என்றும், புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை அறிவித்துள்ளது.
நேரடியாக ஒளிபரப்பாகும் செபமாலை
மே 1, வருகிற சனிக்கிழமை முதல், ஒவ்வொரு நாளும், உரோம் நேரம் மாலை 6 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த பக்தி முயற்சி, திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வமான அலைவரிசைகளின் வழியே, நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
புனித பூமியின் நாசரேத்தில் உள்ள கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு பெருங்கோவில், இத்தாலியின் பொம்பேயி செபமாலை அன்னை திருத்தலம், லொரேத்தோவில் அன்னை மரியாவின் இல்லத்தைக் கொண்டுள்ள திருத்தலம், தென் அமெரிக்காவின் மெக்சிகோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குவாதலூப்பே அன்னை மரியா திருத்தலம், பிரேசில் நாட்டின் Aparecida திருத்தலம், அர்ஜென்டீனா நாட்டின் Lujan திருத்தலம் ஆகியவை திருப்பீடம் அறிவித்துள்ள 30 திருத்தலங்களில் இடம்பெற்றுள்ளன.
அத்துடன், போஸ்னியாவின் Medjugorje, போலந்து நாட்டின் Częstochowa, துருக்கியின் Meryem Ana, அயர்லாந்தின் Knock, இங்கிலாந்தின் Walsingham ஆகிய இடங்களில் அமைந்துள்ள புகழ்பெற்ற அன்னை மரியா திருத்தலங்களும் இந்த செபமாலை பக்தி முயற்சியில் இணைகின்றன.
No comments:
Post a Comment