Friday 3 April 2015

செய்திகள்-28.03.15

செய்திகள்-28.03.15
------------------------------------------------------------------------------------------------------

1. புனித அவிலா தெரேசாவின் வாழ்வு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைப் புதுப்பிக்க உதவுகிறது

2. திருத்தந்தை-முதுபெரும் தந்தை Dinkha, ஞானமுள்ள, துணிவுள்ள மேய்ப்பர்  

3. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குருத்து ஞாயிறு நிகழ்வுகள்

4. தலைமை நீதிபதிகளின் புனித வெள்ளி கூட்டம் குறித்து CBCI கடிதம்

5. பயங்கரவாதிகளை ஆதரிப்போருக்கு எதிராகச் சட்டங்கள் அவசியம்

6. மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் பாதுகாக்கப்பட ஐ.நா.வுக்கு அழைப்பு

7. அல்பினிச நோயாளிகள் கொலைக்கு மலாவி ஆயர்கள் கண்டனம்

8. மதத்தீவிரவாதத்தை எதிர்க்க ஐரோப்பிய முஸ்லீம்களின் புதிய இணைய இதழ்

9. விண்வெளி நிலையத்தில் 342 நாள்கள் இரு விண்வெளி வீரர்கள்
------------------------------------------------------------------------------------------------------

1. புனித அவிலா தெரேசாவின் வாழ்வு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைப் புதுப்பிக்க உதவுகிறது

மார்ச்,28,2015. தன்னையே முழுமையாக கடவுளுக்கு அர்ப்பணித்த புனித அவிலா தெரேசாவின் வாழ்வு, இக்காலத்தில் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைப் புதுப்பிப்பதற்கு உதவுகின்ற மாபெரும் சொத்து என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 28, இச்சனிக்கிழமையன்று அவிலா நகர் புனித தெரேசா அவர்கள் பிறந்ததன் 500ம் ஆண்டு நிறைவு சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, காலணி அணியாத அனைத்துலக கார்மேல் சபை தலைவர் அருள்பணி Saverio Cannistrà அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
புனித அவிலா தெரேசா, முதலில் செபத்தின் ஆசிரியர் என்று விவரித்துள்ள திருத்தந்தை, புனித அவிலா தெரேசாவின் செபம், ஒரு காலத்துக்கு, ஒரு கட்டத்துக்கு மட்டும் ஏற்றது அல்ல, மாறாக, இச்செபம் பல்வேறு தருணங்களில் செபிக்கப்படுகின்றது, இப்புனிதர் இடைவிடாச் செபத்தில் அசையாத பற்றுறுதி கொண்டிருந்தார் என்று கூறியுள்ளார்.
ஆன்ம வறட்சி காலத்திலும், வாழ்வில் துன்பங்களை எதிர்கொள்ளும்போதும் நாம் செபத்தில் உறுதியாய் இருக்குமாறு அழைப்புவிடுக்கும் இப்புனிதர், உண்மையான குழுவாழ்வின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறார் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு கடைப்பிடிக்கப்படும் இவ்வாண்டில் இப்புனிதர் பிறந்ததன் 5ம் நூற்றாண்டு நிறைவு சிறப்பிக்கப்படுவது பொருத்தமாக உள்ளது, கடந்த காலத்தை நன்றியோடு திரும்பிப் பார்த்து சபைகளை ஆரம்பித்தவர்களின் உள்தூண்டுதல்களைக் கண்டுணருவதற்கு இந்நிகழ்வு நல்லதொரு காரணமாக உள்ளது  என்று கூறியுள்ளார் திருத்தந்தை.
இஸ்பெயின் நாட்டின் அவிலாவில் 1515ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி பிறந்த புனித தெரேசா, தியானயோகி மற்றும் கார்மேல் சபையைச் சீர்திருத்தியவர். இயேசுவின் தெரேசா எனவும் அழைக்கப்படும் இப்புனிதரை 1970ம் ஆண்டில் திருஅவையின் மறைவல்லுனராக அறிவித்தார் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 6ம் பவுல். மிகவும் புகழ்பெற்ற The Interior Castle என்ற ஆன்மீக நூல் உட்பட பல கிறிஸ்தவ ஆன்மீக மற்றும் தியானயோக நூல்களை எழுதியுள்ளார் புனித அவிலா தெரேசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை-முதுபெரும் தந்தை Dinkha, ஞானமுள்ள, துணிவுள்ள மேய்ப்பர்  

மார்ச்,28,2015.  அசீரிய கீழை வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை நான்காம் Mar Dinkha அவர்கள் உயிரிழந்ததையொட்டி, கிழக்கின் அசீரியத் திருஅவை முதுபெரும் தந்தை Mar Aprem Locum Tenens அவர்களுக்கு இரங்கல் தந்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அசீரியத் திருஅவையினர் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, முதுபெரும் தந்தை Mar Dinkha அவர்கள், அதிகச் சவால்கள் நிறைந்த காலக்கட்டத்தில் தனது சமூகத்தை ஞானத்துடனும் துணிச்சலுடனும் வழிநடத்திய மேய்ப்பர் என்று பாராட்டியுள்ளார்.
கிறிஸ்தவ உலகம் ஒரு முக்கியமான தலைவரை இழந்துள்ளது என்றும், மத்திய கிழக்கில், குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியாவில் ஒவ்வொரு நாளும் அடக்குமுறைகளால் துன்புறும் கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் குறித்து முதுபெரும் தந்தை Mar Dinkha அவர்கள் அதிகமாகத் துன்புற்றார் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
79 வயது நிரம்பிய முதுபெரும் தந்தை கத்தோலிக்கோஸ் Mar Dinkha அவர்கள் இவ்வியாழனன்று மரணமடைந்தார். இவரது அடக்கச்சடங்கு வருகிற ஏப்ரல் 8ம் தேதி இடம்பெறும்.
மேலும், கிறிஸ்துவின் சீடர்களாக இருக்கும் நாம், மிகவும் நலிந்தவர்களின்  நன்மை குறித்து எப்படி அக்கறை கொள்ளாதிருக்க முடியும்?” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் குருத்து ஞாயிறு நிகழ்வுகள்

மார்ச்,28,2015. இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் ஒலிவ மரக்கிளைகளையும் குருத்தோலைகளையும் ஆசீர்வதித்து,   குருத்து ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கர்தினால்கள், ஆயர்கள், பொதுநிலையினர் ஆகியோருடன் பவனியாகச் சென்று குருத்து ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெறும் குருத்தோலைப் பவனியில் பங்குபெறும் கர்தினால்கள், ஆயர்கள், பொதுநிலையினர் என அனைவருக்கும் வழங்குவதற்கென கைவேலைப்பாடுகள் நிறைந்த குருத்தோலைகளை இத்தாலியின் சன்ரேமோ நகர் வழங்குகிறது.
குருத்து ஞாயிறு திருவழிபாட்டுக்கென குருத்தோலைகளை திருத்தந்தைக்கு நன்கொடையாக வழங்கும் பழக்கம், 2003ம் ஆண்டில் சன்ரேமோ குருத்தோலை ஆய்வு  மற்றும் சமூக மையத்தால் தொடங்கப்பட்டது. திருத்தந்தைக்கு வழங்கப்படும் கைவண்ண குருத்தோலை மூவொரு கடவுளைக் குறிக்கும் விதத்தில்  தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்புனித நாளில் வத்திக்கான் வளாகத்திலும் மற்ற இடங்களிலும் வைக்கப்படும் ஒலிவ மரங்களையும், விசுவாசிகளுக்கு விநியோகிக்கப்படும் ஒலிவக் கிளைகளையும் தென் இத்தாலியின் Puglia மாநிலத்தின் Cerignola-Ascoli Satriano மறைமாவட்டம் வழங்குகிறது. இது அம்மறைமாவட்ட ஆயர் Felice di Molfetta அவர்களின் முயற்சியாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. தலைமை நீதிபதிகளின் புனித வெள்ளி கூட்டம் குறித்து CBCI கடிதம்

மார்ச்,28,2015. இந்தியாவின் அனைத்து தலைமை நீதிபதிகளுக்கும் புனித வெள்ளியன்று மூன்று நாள் கூட்டம் ஒன்று தொடங்கவிருப்பது குறித்து தனது கவலையைத் தெரிவித்து இந்திய தலைமை நீதிபதி H L Dattu அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது இந்திய ஆயர் பேரவை.
இந்தியாவில் நூற்றாண்டளவாக காக்கப்பட்டுவரும் அனைத்து மதத்தவரின், குறிப்பாக, சிறுபான்மை மதத்தவரின் புனித நாள்கள் குறித்த விசுவாசத்தை இந்நடவடிக்கை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
உலகிலுள்ள அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் ஆண்டின் மிக முக்கிய நாள்களில் ஒன்றான புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்து மனித சமுதாயத்தின் மீட்புக்காகத் தம்மையே தியாகம் செய்த மிக உன்னத செயல் மிகுந்த பக்தியோடு நினைவுகூரப்படுகின்றது என்று அக்கடிதம் கூறுவதாக, CBCI என்ற இந்திய ஆயர் பேரவையின் உதவிப் பொதுச் செயலர் அருள்பணி Joseph Chinnayyan அவர்கள் கூறினார்.
கிறிஸ்மஸ் நாளை நல்லாட்சி தினமாக இந்திய அரசு மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளவேளை, கிறிஸ்மஸ், புனித வெள்ளி, உயிர்ப்புப் பெருவிழா ஆகிய நாள்களின் முக்கியத்துவத்தை வேண்டுமென்றோ அல்லது அவ்வாறு இல்லாமலோ குறைத்து மதிப்பிடுவது கிறிஸ்தவ சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கும் என்று எச்சரித்தார் அருள்பணி Chinnayyan

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி

5. பயங்கரவாதிகளை ஆதரிப்போருக்கு எதிராகச் சட்டங்கள் அவசியம்

மார்ச்,28,2015. பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு அவையை கேட்டுக்கொண்டார் பாக்தாத் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ.
ஈராக்கிலும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் நசுக்கப்படும் கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் குறித்து, பிரான்ஸ் நாட்டின் முயற்சியால், இவ்வெள்ளியன்று நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு அவையில் உரையாற்றிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் இவ்வாறு வலியுறுத்தினார்.
பயங்கரவாதத்தை எதிர்க்கும் புனித நூல்கள் குறித்த சீர்திருத்த கல்விக்கு ஆதரவான நடவடிக்கைகள் தேவை என்று கேட்டுக்கொண்ட முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஈராக் மற்றும் குர்திஸ்தான் அதிகாரிகளுக்கு ஆதரவாக அனைத்துலக சமுதாயம் செயல்படும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.
அரபு வசந்தம் என்ற எழுச்சி, அமைதி, உறுதியான தன்மை, முன்னேற்றம் ஆகியவற்றை ஏற்படுத்தாமல், ஈராக் மக்கள்மீது எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் முதுபெரும் தந்தை சாக்கோ.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

6. மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் பாதுகாக்கப்பட ஐ.நா.வுக்கு அழைப்பு

மார்ச்,28,2015. மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் உயிர்வாழ்வதற்கான அச்சத்தை எதிர்கொள்வதால், இவர்களைப் பாதுகாப்பதற்கு ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மத்திய கிழக்கில், இன அல்லது மதத்தின் அடிப்படையில் தாக்குதல்களுக்கும் உரிமை மீறல்களுக்கும் பலியாகும் மக்கள் என்ற தலைப்பில், ஐ.நா. பாதுகாப்பு அவையில் இவ்வெள்ளியன்று நடைபெற்ற பொது விவாதத்தில் இவ்வாறு தனது வேண்டுகோளை முன்வைத்தார் பேராயர் Bernardito Auza.
ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் Auza அவர்கள், இன அல்லது மதத்தின் அடிப்படையில் மக்கள் மேலும் தாக்குதல்களுக்கும், உரிமை மீறல்களுக்கும் பலியாகாமல் தடுப்பதற்கு, அனைத்துலக சமுதாயம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறு கேட்டுள்ளார். 
இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு, இன அழிப்பைத் தூண்டும் நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தடுப்பதற்குக் காலம் தாழ்த்தாது உடனடியாகச் செயல்படுமாறு, மத்திய கிழக்குப் பகுதியிலும், உலகெங்கிலும் வாழும் நன்மனம் கொண்ட தலைவர்களையும், மக்களையும் கேட்டுக் கொண்டுள்ளார் பேராயர் Auza.
ஒரு நாடு தனது மக்களை இத்தகைய குற்றங்களிலிருந்து பாதுகாப்பதற்கு இயலாமல் அல்லது அதில் விருப்பம் காட்டாமல் இருந்தால், ஐ.நா. ஒப்பந்தத்துக்கு ஒத்தவகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்துலக சமுதாயம் தயாராக இருக்க வேண்டுமெனவும் கூறினார் பேராயர் Auza.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. அல்பினிச நோயாளிகள் கொலைக்கு மலாவி ஆயர்கள் கண்டனம்

மார்ச்,28,2015. மலாவி நாட்டில் அல்பினிசம் எனப்படும் வெண்மைத் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கடத்தி கொலைசெய்யும் நடவடிக்கைகள் மிகுந்த கவலை தருவதாக அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஆப்ரிக்க நாடான மலாவியில், செல்வ வளம், பணம் போன்ற ஆசைகளால் தவறாக வழிகாட்டப்பட்டு, அல்பினிச நோயாளிகள் கொலை செய்யப்படுகின்றனர் என்றுரைக்கும் அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை, இக்கொலைகளை எக்காரணங்கள் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளது.
தங்களின் உடல் உறுப்புக்களில் புதிரான அல்லது மந்திர சக்திகளைக் கொண்டிருக்கும் அல்பினிச நோயாளிகள், யாராவது ஒருவரை செல்வந்தராக்க முடியும் என்ற மூட நம்பிக்கையில் மலாவி நாட்டில் இந்நோயாளிகள் கொலை செய்யப்படுகின்றனர்.
மேலும், அல்பினிச நோயாளிகளைத் தாக்குவோருக்கு எதிராக கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள மலாவி அரசுத்தலைவரைப் பாராட்டியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம், இக்குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு அல்பினிச நோயாளிகள் பாதுகாக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளது.
மலாவியில் கடந்த வாரத்தில் மட்டும் கடத்தப்பட்ட 3 பேர் உட்பட, கடந்த ஆறு மாதங்களில் குறைந்தது 15 அல்பினிச நோயாளிகள் கடத்தப்பட்டு காயப்படுத்தப்பட்டனர் அல்லது கொலை செய்யப்பட்டனர்.
அல்பினிசம் எனப்படும் வெண்மைத் தோல் நோய், குறைபாடுடைய நிறமிகள் தோலில் தோன்றுவதால் ஏற்படுகிறது. இது ஒரு மரபணுக் குறைபாட்டு நோய். இவர்களுக்கு வெண்பொன் நிறமான தலைமயிர், பார்வைக் குறைபாடு, ஒளி வெறுப்பு போன்ற தன்மைகள் ஏற்படும். இவர்களது தோலில் அதிக அளவு சூரிய ஒளியால் புற்றுநோய்ப் புண்கள் தோன்ற வாய்ப்புண்டு.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

8. மதத்தீவிரவாதத்தை எதிர்க்க ஐரோப்பிய முஸ்லீம்களின் புதிய இணைய இதழ்

மார்ச்,28,2015. மதத்தீவிரவாதத்தை எதிர்க்கும் நோக்கத்தில் ஐரோப்பா முழுவதிலும் உள்ள 120க்கும் மேற்பட்ட முஸ்லிம் தலைவர்கள் இணைந்து ஓர் இணைய இதழைத் தொடங்கியுள்ளனர்
இலண்டனில் கூட்டம் நடத்திய இத்தலைவர்கள், இஸ்லாம் மதத்தின் பெயரால் தவறாக நடத்தப்படும் கொடுஞ்சயல்களுக்கு எதிராக, தங்களின் கண்டனத்தையும் தெரிவித்தனர். 
இக்கூட்டத்தில் இத்தலைவர்கள் தொடங்கியுள்ள இந்த இணைய இதழ், மதத் தீவிரவாதத்தில் ஈடுபடும் ஐஎஸ் இஸ்லாமிய அரசு போன்ற குழுக்களுக்கு எதிராக எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
Imamsonline.com எனப்படும் இந்த இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ள 'Haqiqah' அல்லது 'The Truth', என்று அழைக்கப்படும் இணைய இதழின் நோக்கம் மதத்தீவிரவாத இயக்கங்கள் குறித்த உண்மையை இளைய தலைமுறையினருக்கு அறிவுறுத்துவதேயாகும்.
இணையதளத்தில் தீவிரவாத பிரச்சாரத்தின் தாக்கம் குறித்து தாங்கள் கவலையடைந்திருப்பதாகவும், இதனால் உருவாகின்ற தீய முறைகேடான மனநிலையை சரிசெய்ய இந்தப் புதிய இணைய இதழ்தான் ஒரேவழி என்றும் அத்தலைவர்கள் இலண்டன் கூட்டத்தில் கூறினர்.

ஆதாரம் : BBC/ IANS / வத்திக்கான் வானொலி

9. விண்வெளி நிலையத்தில் 342 நாள்கள் இரு விண்வெளி வீரர்கள்

மார்ச்,28,2015. பூமியைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தொடர்ந்து 12 மாதங்கள் தங்கவிருக்கும் இருவர் உட்பட மூன்று விண்வெளி வீரர்களை இரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் அந்த விண்வெளி நிலையத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டவரான 51 வயது Scott Kellyயும், இரஷ்யரான 54 வயது Mikhail Kornienkoவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில், 342 நாள்களுக்கு, பன்னாட்டு விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருப்பார்கள்.
பொதுவாக விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்களுக்குத்தான் ஒருவர் தங்கவைக்கப்படுவார். ஆனால் புவியீர்ப்பு விசையின் தாக்கம் குறைவதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக இவர்கள் அதிக காலம் தங்க வைக்கப்படுகின்றனர்.
விண்ணில் உடல் எடை உணரப்படாததால் கெல்லி அவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள், அவருடன் இரட்டையராகப் பிறந்தவருக்கு இங்கே பூமியில் உடலில் ஏற்படும் மாற்றங்களோடு ஒப்பிடப்படும்.
எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதரை அனுப்பும் திட்டத்திற்கான தகவல் சேகரிப்புக்காக நாசா இந்தச் சோதனையை நடத்துகிறது.

ஆதாரம் : BBC/ வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...