Monday, 27 April 2015

செய்திகள்-24.04.15

செய்திகள்-24.04.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, செக் குடியரசுத்தலைவர் Zeman சந்திப்பு

2. திருத்தந்தை, நமீபியா, லெசோத்தோ குடியரசுகளின் ஆயர்கள் சந்திப்பு

3. திருத்தந்தை - இயேசுவோடு நடந்த நம் முதல் சந்திப்பை மறக்கக் கூடாது

4. தகவல் தொழில்நுட்பங்கள், வெறுப்புச் செய்திகளைப் பரப்புவதற்குச் சாதகம்

5. மனிதரின் வளர்ச்சிக்கு எல்லாச் சூழல்களும் சம வாய்ப்புக்களை வழங்குவதில்லை

6. உறுதியான சமூகங்கள் உருவாக வாசிப்பும் எழுத்தறிவும் முக்கியம், ஐ.நா.

7. தகவல் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட வலியுறுத்தல்

8. உலகில் மிக மகிழ்வான நாடு சுவிட்சர்லாந்து

9. Gallipoli தாக்குதலின் நூறாம் ஆண்டு நினைவுகள்
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, செக் குடியரசுத்தலைவர் Zeman சந்திப்பு

ஏப்.24,2015. திருப்பீடத்துக்கும், செக் குடியரசுக்கும் இடையே நிலவும் உறவை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கத்தில், செக் குடியரசு அரசுத்தலைவர் Miloš Zeman அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
ஏறக்குறைய முப்பது நிமிடங்கள் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் Paul Gallagher ஆகிய இருவரையும் சந்தித்தார் செக் குடியரசுத் தலைவர் Zeman.
திருப்பீடத்துக்கும், அப்போதைய செக் மற்றும் சுலோவாக் கூட்டு குடியரசுக்கும் இடையே அரசியல் உறவு ஏற்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவாக (ஏப்ரல்19,1990) இச்சந்திப்பு நடைபெற்றது என்று அறிவித்தார் திருப்பீட செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி.
தற்போதை செக் குடியரசுக்கும் திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் உறவு திருப்தியாக உள்ளது என்றும், செக் நாட்டுக்கும் தலத்திருஅவைக்கும் இடையே ஒத்துழைப்பை, குறிப்பாக, கல்வி, கலாச்சாரம் மற்றும் பொதுநலப் பணிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் விருப்பமும் இச்சந்திப்புக்களில் வெளிப்படுத்தப்பட்டது என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.
உலகில் கிறிஸ்தவரின் நிலை மற்றும் மத்திய கிழக்கில் சிறுபான்மையினரின் நிலைமையும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டுள்ளன.
இன்னும், மூன்று வண்ணங்களில் கைப்பைகளை திருத்தந்தைக்கு வழங்கிய செக் அரசுத்தலைவர், தான் எடுத்து வந்திருந்த பிரேக் நகர் குழந்தை இயேசு திருவுருவத்தை ஆசிர்வதிக்குமாறும் கூறினார். வாழ்வின் இறுதிக் கட்டத்திலுள்ள நோயாளிகளுக்கென செக் குடியரசில் கட்டப்படவுள்ள முதல் இல்லத்தில் இத்திருவுருவம் வைக்கப்படும் எனவும் திருத்தந்தையிடம் அவர் கூறினார் 
மேலும், பிரேசில் நாட்டுக் கல்வியாளர் Ana Maria Freire மற்றும் அவருடன் சென்றிருந்த நான்கு பேரையும் இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை, நமீபியா, லெசோத்தோ குடியரசுகளின் ஆயர்கள் சந்திப்பு

ஏப்.24,2015. நமீபியா மற்றும் லெசோத்தோ குடியரசுகளின் ஆயர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமண முறிவு, பிரிந்து வாழ்தல் உட்பல சில காரணங்களால் பிரச்சனைகளைச் சந்திக்கும் கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு உதவிசெய்து வழிநடத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அத் லிமினாவை முன்னிட்டு இந்நாடுகளின் எட்டு ஆயர்களைச் சந்தித்து ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்ட கருத்துக்களுக்குக் கவனமுடன் செவிமடுத்த திருத்தந்தை, தரமான குடும்பங்களில் பிள்ளைகள் நிபந்தனையில்லாமல் அன்புகூரப்படுவதை உணர்கின்றனர் மற்றும் பிள்ளைகளும் அதேபோல் அன்பு கூருகின்றனர் என்று தெரிவித்தார்.
இத்தகைய குடும்பங்களிலிருந்து குருத்துவ மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தேர்ந்து கொள்ளும் பிள்ளைகள், திருஅவையின் குடும்பத்துக்கு நிபந்தனையற்ற தொண்டுபுரியத் தயாராய் இருப்பார்கள் என்றும் உரைத்த திருத்தந்தை, இறையழைத்தல் குறைந்து வரும் இக்காலத்தில், கிறிஸ்துவுக்காக வாழ்வை அர்ப்பணிப்பதில் கிடைக்கும் நிறைவான மற்றும் மகிழ்வான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவது முக்கியம் என்றும் கூறினார்.
கற்பில் கன்னிமை, உலகப் பொருள்களிலிருந்து பற்றறுத்தல், குருத்துவ அர்ப்பணத்தை உண்மையிலும் மகிழ்விலும் வாழ்தல் ஆகிய ஆயர்களின் தொடர்ந்த எடுத்துக்காட்டான வாழ்வு மூலம் கிறிஸ்தவ சமூகங்கள் உருவாக்கப்பட்டால், குருத்துவ மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைப் பெருமளவில் இளையோர் தேர்ந்துகொள்வார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆழ்ந்த மற்றும் இடைவிடாமல் செபிக்கும் மனிதர்களாக ஆயர்கள் வாழுமாறும் வலியுறுத்திய திருத்தந்தை, நீரூற்றின் அருகில் நடப்பட்ட மரங்களாக மிகுந்த கனிதருமாறும் நமீபியா மற்றும் லெசோத்தோ குடியரசுகளின் ஆயர்களைக் கேட்டுக்கொண்டார்.
நமீபியா, தெற்கு ஆப்ரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடலை ஓர் எல்லையாகக் கொண்டுள்ள ஒரு நாடாகும். லெசேத்தோ தென் ஆப்ரிக்காவுக்குள் இருக்கும் நாடாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை - இயேசுவோடு நடந்த நம் முதல் சந்திப்பை மறக்கக் கூடாது

ஏப்.24,2015. நாம் முதல் முறையாக இயேசுவைச் சந்தித்த நாளை அவர் ஒருபோதும் மறப்பதில்லை, ஆதலால் இதனை நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்பதற்கு இறைவனின் அருளை இறைஞ்ச வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளியன்று நிறைவேற்றிய திருப்பலியில், புனித பவுலடிகளார் அழைப்பின்  பற்றிய இத்திருப்பலியின் முதல் வாசகத்தை மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சந்திப்பு என்றால், நம் வாழ்வை மாற்றுவதற்கு இயேசு தேர்ந்தெடுக்கும் வழிகளாகும், இதற்கு, எதிர்க் கிறிஸ்துவாக இருந்து கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய தர்சு நகர் பவுல் நல்ல எடுத்துக்காட்டு என்று கூறிய திருத்தந்தை, நற்செய்தியில் காணப்படும் பல்வேறு சந்திப்புகள் பற்றியும் குறிப்பிட்டார்.
திருத்தூதர்கள் யோவான், அந்திரேயா, பேதுரு, சமாரியப் பெண், குணமான தொழுநோயாளி, இயேசுவின் ஆடையின் விளிம்பைத் தொட்டுக் குணமான நோயாளிப்பெண் இப்படி இயேசுவைச் சந்தித்த பலரின் வாழ்வு மாறியது பற்றியும் விளக்கினார் திருத்தந்தை.
நாம் நம் அகவாழ்வை நேர்மையாக உற்றுநோக்கி, இயேசுவே, நீர் எனது வாழ்வை மாற்றிய அதனை எப்போது என்னிடம் கூறினீர்? என் வாழ்வில் ஓர் அடி முன்னோக்கி எடுத்து வைக்க எப்போது அழைத்தீர்? என இயேசுவிடம் கேட்போம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்து நம்முடன் உறவு ஏற்படுத்த விரும்பிய அந்த நேரத்தை நாம் மறக்கக் கூடாது, அந்த முதல் சந்திப்பை, அந்த முதல் அன்பை நாம் மறக்காமல் இருப்பதற்கு வரம் கேட்போம் என்று தனது மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
 
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. தகவல் தொழில்நுட்பங்கள், வெறுப்புச் செய்திகளைப் பரப்புவதற்குச் சாதகம்

ஏப்.24,2015. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களின் உயர்ந்த கலாச்சாரத்தையும், மரபுகளையும் கற்றுக்கொண்டு, நண்பர்களை உருவாக்குவதற்கு இளையோருக்கு இன்டெர்னெட் மற்றும் சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன என்று   திருப்பீட அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் இவ்வியாழனன்று கூறினார்.
இளையோர் வாழ்வில் சமூக வலைத்தளங்களின் பங்கு குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள்  இவ்வாறு தெரிவித்தார்
வன்முறை நிறைந்த தீவிரவாதத்துக்கு எதிராகச் செயல்பட்டு அமைதியை ஊக்குவிப்பதில் இளையோரின் பங்கு குறித்தும் விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில், உலகெங்கும் வேகமாக முன்னேறிவரும் தகவல் தொழில்நுட்பங்கள், இளையோர் மத்தியில், வெறுப்பு மற்றும் வன்முறைச் செய்திகளைப் பரப்புவதற்கும் சாதகமாக அமைந்துள்ளன என்று கவலை தெரிவித்தார் பேராயர் அவுசா.
பிரிந்த குடும்பங்கள், திருப்தியின்மை, சமூகத்தோடு ஒன்றிணையாமை,  வாழ்வதற்கான வாய்ப்புகளைத் தவறவிட்டநிலை, சமூக-கலாச்சார தனித்துவமின்மை போன்ற நெருக்கடிகளில் வாழும் இளையோரில், தீவிரவாத வன்முறைகள் தூண்டப்பட்டு அவர்கள் தீவிரவாத அமைப்புகளில் சேர்க்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் அவுசா.
இளையோரில் உருவாகியுள்ள பல்வேறு தீவிரவாத எண்ணங்கள் களையப்படுவதற்கு, குடும்பங்களோடு இணைந்து, ஒருவரையொருவர் மதிக்கும் உரையாடலின் மதிப்பீடுகளில் சிறாருக்கும், இளையோருக்கும் மதிப்பீட்டுக் கல்வி வழங்கப்படுவது இன்றியமையாதது என்றும் கூறினார் பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. மனிதரின் வளர்ச்சிக்கு எல்லாச் சூழல்களும் சம வாய்ப்புக்களை வழங்குவதில்லை

ஏப்.24,2015. வளர்ச்சிக்கு நிதியுதவி செய்வதற்கும், 2015ம் ஆண்டுக்குப் பிறகு இடம்பெறும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் இடையேயுள்ள உறவுகள் குறித்து ஐ.நா.வில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள், மனிதரின் வளர்ச்சிக்கு எல்லாச் சூழல்களும் சம வாய்ப்புக்களை வழங்குவதில்லை என்று தெரிவித்தார்.
உலக சமுதாயம், 2015ம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கும்போது, மில்லென்ய வளர்ச்சித் திட்டங்களில் கிடைத்த அனுபவங்களிலிருந்து கிடைத்த பாடத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று திருப்பீடம் விரும்புவதாகத் தெரிவித்தார் பேராயர் அவுசா.
மனிதர் வாழ்கின்ற வளர்ச்சிச் சூழல்களில் மனிதரின் மாண்பு விளக்கப்படவில்லை எனினும், மனிதரின் வளமைக்கு எல்லாச் சூழல்களும் சம வாய்ப்புக்களை வழங்குவதில்லை என்றும் கூறினார் பேராயர் அவுசா.
அனைவரும் தங்களின் முழுத் திறமைகளையும் அடைவதற்குரிய வாயப்புகளைக் கொண்டிருப்பதற்கு, 2015ம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய நம் விவாதங்களில் இடமளிக்க வேண்டியது நமது கடமை என்பதையும் பேராயர் சுட்டிக் காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


6. உறுதியான சமூகங்கள் உருவாக வாசிப்பும் எழுத்தறிவும் முக்கியம், ஐ.நா.

ஏப்.24,2015. சமூகங்களில் முன்னேற்றம் இடம்பெறும் இக்காலத்தில், சுதந்திரத்தையும் சகிப்புத்தன்மையையும் புறக்கணிக்கும் மனிதர்கள் எப்போதும் பள்ளிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துகின்றனர் என்று யுனெஸ்கோ நிறுவனம் குறை கூறியுள்ளது.
வாழ்வின் தரத்தை முன்னேற்றுவதற்கு புத்தகங்களின் வல்லமை உணரப்பட வேண்டும் என்றுரைத்த யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள், அண்மைய மாதங்களில் பள்ளிகளில் சிறார் தாக்கப்பட்டதையும், புத்தகங்கள் பொது இடங்களில் எரிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
ஏப்ரல் 23, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக புத்தக மற்றும் காப்புரிமை தினத்தன்று இவ்வாறு தெரிவித்த பொக்கோவா அவர்கள், எழுத்தறிவின்மை மற்றும் ஏழ்மைக்கெதிரான நடவடிக்கையில், எல்லாவிதமான வாசிப்பு மற்றும் எழுதும் திறமையை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இன்று உலகில் 17 கோடியே 50 இலட்சம் வளர்இளர் பருவத்தினர் ஒரு வரிகூட வாசிக்க இயலாமல் உள்ளனர் என்றும் கூறினார் பொக்கோவா.
1995ம் ஆண்டில் யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்த உலக புத்தக மற்றும் காப்புரிமை தினம், ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23ம் தேதியன்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள், பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புக்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
1616ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று Cervantes, Shakespeare, Inca Garcilaso de la Vega ஆகியோர் இறந்தனர். மேலும், இதே ஏப்ரல் 23, Maurice Druon, Vladimir Nabokov, Manuel Mejía Vallejo போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பிறந்த அல்லது இறந்த நாளாகும்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

7. தகவல் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட வலியுறுத்தல்

ஏப்.24,2015. வியக்கத்தக்க வகையில் அதிவேகமாக வளர்ந்துவரும் கணினி மற்றும் தொடர்பு தொழில்நுட்பத் துறை(ICT), ஆர்வத்தைத் தூண்டுகின்ற, முக்கியமான மற்றும் நல்ல ஊதியத்தைக் கொண்ட வேலை வாய்ப்புக்களை வழங்குகின்றது என்று கூறியது அனைத்துலக தொலைத்தொடர்பு கழகம்.
ஏப்ரல் 23, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக கணினி மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் தினத்திற்னெ அறிக்கை வெளியிட்ட அனைத்துலக தொலைத்தொடர்பு கழகமான ITUவின் பொதுச் செயலர் Houlin Zhao அவர்கள், தகவல் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார்.
இத்துறையில் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவது குறித்து இவ்வாண்டு உலக தினத்தில் வலியுறுத்தப்பட்டது எனவும் கூறினார் Zhao.
ICT துறையில் சிறுமிகளை அனுமதிப்பது, அவர்கள் தங்களின் படைப்பாற்றலைப் பயன்படுத்தி, பன்னாட்டுச் சூழலில் வேலை செய்யவும், வருங்காலத்தை அமைப்பதில் பங்குகொள்ளவும் உதவும் என்றும், இக்கால வேலைவாய்ப்புகளில் 95 விழுக்காடு டிஜிட்டல் துறையைச் சார்ந்ததாக உள்ளது என்றும் கூறினார் Zhao.
உலக ICT தினம், ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் நான்காவது வியாழனன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

8. உலகில் மிக மகிழ்வான நாடு சுவிட்சர்லாந்து

ஏப்.24,2015. சாக்லேட்டுகள், விலையுயர்ந்த கைக் கடிகாரங்கள், தனியார் வங்கிகள், பனிச்சறுக்கு விளையாட்டுகள் போன்றவற்றுக்குப் புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து நாடு, உலகில் மிக மகிழ்வான நாடாக ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
ஐ.நா.வின் முயற்சியால், உறுதியான வளர்ச்சித் தீர்வு வலையமைப்பு SDSN நடத்திய ஆய்வில் உலக மகிழ்வு குறியீட்டில் சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தது. ஆயினும் தற்போது Gallup World Poll, 158 நாடுகளில் நடத்திய ஆய்வில் சுவிட்சர்லாந்து நாடு முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் மகிழ்வான முதல் ஐந்து நாடுகளாக, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க், நார்வே, கானடா ஆகியவற்றையும், மகிழ்வு மிகவும் குறைந்த ஐந்து நாடுகளாக டோகோ, புருண்டி, சிரியா, பெனின், ருவாண்டா ஆகியவற்றையும் அறிவித்துள்ளது அந்த ஆய்வு.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி

9. Gallipoli தாக்குதலின் நூறாம் ஆண்டு நினைவுகள்

ஏப்,24,2015. முதலாம் உலகப் போரின்போது அதிகமான மனிதர்களின் இரத்தம் சிந்தப்பட்ட போர்க்களங்களில் ஒன்றான Gallipoli வளைகுடாப் பகுதியில் போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டு நிகழ்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.
Dardanelles கால்வாய்ப் பகுதியைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் நேசநாடுகளின் படைகளும் ஓட்டமான் படைகளும் 1915ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி Gallipoliல் தாக்குதலைத் தொடங்கின. ஒன்பது மாதங்கள் நடைபெற்ற கடுமையான அத்தாக்குதலில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கு அதிகமான படைவீரர்கள் உயிரிழந்தனர்.
அக்காலத்து ஓட்டமான் பேரரசின் தலைநகராகவும், தற்போதைய துருக்கியின் ஒரு பகுதியாகவும் உள்ள கான்ஸ்டாண்டிநோப்பிளைக் கைப்பற்றும் நோக்கத்தில், 1915ம் நேசநாடுகளின் படைகள், நிலம் மற்றும் நீர் மார்க்கமாக Gallipoli வளைகுடாப் பகுதியில் தாக்குதலைத் தொடங்கினர்.
இத்தாக்குதலில் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து Anzac இராணுவத்தின் பத்தாயிரம் படைவீரர்கள் உயிரிழந்தனர். Anzac நாள் என ஆஸ்திரேலியா இதனை இச்சனிக்கிழமை நினைவுகூர்கின்றது. பிரிட்டனின் 3 இலட்சத்து 50 ஆயிரம் படைவீரரில் 35 ஆயிரம், பிரான்சின் 79 ஆயிரம் படைவீரரில் பத்தாயிரம், Anzacன் 74 ஆயிரம் படைவீரரில் பத்தாயிரம், துருக்கியின் 4 இலட்சம் படைவீரரில் 86 ஆயிரம் படைவீரர் உயிரிழந்தனர்.
அத்தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தியது எனினும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தேசிய உணர்வுகளை இது மேலோங்கச் செய்தது என்றும், அத்தாக்குதல் துருக்கிக்கும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றும் கூறப்படுகின்றது.
அப்போதுதான் Mustafa Kemal Atatürk ஓர் இராணுவத் தளபதியாக முன்னிலைப் பெற்று புகழ் அடைந்தார். அதன் பின்னர் அவர் நவீன துருக்கிக் குடியரசையும் உருவாக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...