உலக கைவினை நகரமாக மாமல்லபுரம் தேர்வு: அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகும.
உலகளாவிய கைவினை சிற்பக் கலை நகரமாக மாமல்லபுரம் தேர்வு
செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம்
வெளியாகும் எனவும் தமிழ்நாடு கைவினை மேம்பாட்டு இயக்குநரக வட்டாரங்கள்
தெரிவித்தன.
உலக கைவினை நகர அமைப்பு, உலகளாவிய கைவினை சிற்பக் கலைகள் மிகுந்த நகரை
தேர்வு செய்யும் பணியை மேற்கொண் டுள்ளது. இதற்காக, இந்தியா, சீனா,
வங்கதேசம், குவைத் ஆகிய 4 நாடுகளில் கைவினையை பறை சாற்றும் சிற்பங்கள்
அமைந்துள்ள நகரில் நேரில் ஆய்வு மேற் கொண்டது.
இதில், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில், உலக கைவினை நகர அமைப்பின்
கமிட்டி உறுப்பினர்களான காடா ஹிஜ்ஜாவி கதூமி (குவைத்), கெவின் மர்ரே
(ஆஸ்திரேலியா), ரூமி கஸ்னாவி (வங்கதேசம்) மற்றும் தமிழ்நாடு கைவினை
மேம்பாட்டு மேலாண் இயக்குநர் சந்தோஷ் பாபு ஆகியோர் அடங்கிய குழுவினர்,
கடந்த மார்ச் 12-ம் தேதி ஆய்வு செய்தனர். கடற்கரை மற்றும் குடைவரை
கோயில்கள், ஐந்து ரதம், வராக மண்டபம், அர்ஜூனன் தபசு மற்றும் அரசு
அருங்காட்சியகம், சிற்பக் கலைக் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.
இந்நிலையில், சிற்பக்கலை நகரமாக மாமல்லபுரம் தேர்வு
செய்யப்பட்டுள்ளதாகவும், அதற் கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும்
எனவும் தமிழ்நாடு கைவினை மேம்பாட்டுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து, அந்த வட்டாரங்கள் கூறியதாவது: உலக கைவினை நகர அமைப்பினர்,
கற்களால் ஆன சிற்ப நகரை தேர்வு செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
மாமல்லபுரம் கற்களால் ஆன சிற்பங்களால் நிறைந்துள்ளது. உலக கைவினை ஆய்வுக்
குழுவினர் இங்குள்ள சிற்பங்களை நேரில் ஆய்வு செய்தனர். பல
நூற்றாண்டுகளுக்கு முன்பே யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத
வெகுசிறந்த கட்டமைப்புகளுடன் கட்டப்பட்ட குடைவரை கோயில்கள், சிற்பங்களைக்
கண்டு ஆச்சர்யம் அடைந்தனர்.
உலகளாவிய சிற்ப நகரமாக மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட் டுள்ளதாக உலக கைவினை
நகர அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில்
வெளியாக உள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சுற்றுப்புற கிராமங்கள் மேம்படும்
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறியதாவது:
மாமல்லபுரம் ஏற்கெனவே சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தற் போது
உலக சிற்பக் கலை நகரமாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில், அப்பகுதியில் உள்ள
கிராமங்கள் மேம்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ
அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு கைவினை மேம்பாட்டு இயக்குநரகம்
தெரிவித்துள்ளது என்றார்.Source: The HINDU (Tamil).
No comments:
Post a Comment