Thursday 9 April 2015

தமிழர்கள் சுட்டுக்கொலை: வைகோ அதிர்ச்சி… திருமா எச்சரிக்கை… சீமான் ஆவேசம்

தமிழர்கள் சுட்டுக்கொலை: வைகோ அதிர்ச்சி… திருமா எச்சரிக்கை… சீமான் ஆவேசம்

Tamil CNN. s1ஆந்திர காவல்துறையினரால் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இனியும் தொடர்ந்தால் நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையான போராட்டங்களைக் கையிலெடுக்கும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
ஸ்ரீவாரு மெட்டு சேசாலம் வனப்பகுதியில் ஆந்திர காவல்துறையினரால் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
மரங்களை வெட்டிக் கடத்துகின்ற பெரும் திமிங்கலங்களும், பண முதலைகளும் எதிலும் சிக்காமல் தப்பித்துக் கொள்கின்றனர், அன்றாடம் உழைக்கின்ற அப்பாவி கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுதான் முறையாகும்.
காடுகளில் உலவும் விலங்குகள், பறவைகளைக்கூட சுட்டுப் பொசுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், 12 தமிழர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஆந்திர காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இப்படுகொலையில் ஈடுபட்ட காவல்துறையினருக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டு பணி நீக்கம் செய்வதுடன், கைது செய்யப்பட வேண்டும். பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தக்க நிவாரணத்தை ஆந்திர மாநில அரசு வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
“ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்லி 20 கூலித் தொழிலாளர்கள் ஆந்திர வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதில் 12 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆயுதம் எதுவும் அற்ற கூலித் தொழிலாளர்களை எவ்வித முகாந்திரமும் இல்லாமல் சுட்டுப்படுகொலை செய்திருக்கும் ஆந்திர வனத்துறையின் வெறிச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இதற்காக ஆந்திர முதலமைச்சர் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இந்தப் பிரச்னையில் இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் உச்ச நீதிமன்றம் தாமே முன்வந்து தற்போது பணியிலிருக்கும் நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களைத் தாக்குவது என்பது ஆந்திரக் காவல்துறையினரின் அண்மைக்காலச் செயல்பாடாக இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து வேலை தேடிச் செல்லும் கூலித் தொழிலாளர்களைக் கைது செய்வதும், ஈவிரக்கமின்றித் தாக்குவதும், அண்மைக் காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகத்தினரைக்கூட ஆந்திரக் காவல்துறை கடுமையாகத் தாக்கிக் கொடுமைப்படுத்தியதை நாம் அறிவோம். இந்தச் செயல்களைக் கண்டிக்கவோ கட்டுப்படுத்தவோ ஆந்திர அரசோ, முதலமைச்சரோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது இரண்டு மாநில மக்களுக்கிடையிலான நட்புறவைக் கெடுத்து பகைமையை வளர்ப்பதற்கே வழிவகுக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். எனவே, ஆந்திர வனத்துறையின் இந்த அத்துமீறிய படுகொலைக்காக ஆந்திர முதலமைச்சர் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.
சென்னையில் அடுக்குமாடிக் கட்டிட விபத்தில் ஆந்திரத் தொழிலாளர்கள் உயிரிழந்தபோது அந்த மாநில முதலமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டார். அதைப் போல படுகொலை செய்யப்பட்டிருக்கும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் சடலங்களை தமிழக முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆந்திர-தமிழக மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நீண்ட நெடுங்காலமாக, சகோதரர்களாய் அன்போடு வாழ்ந்து வருகிறார்கள். அதனைக் கெடுக்கும் வகையில் இந்தப் படுகொலை நடந்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் ஆந்திர மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரிக்கக்கூடும். அது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.
எனவே, உச்ச நீதிமன்றம் தாமே முன்வந்து இரண்டு மாநில மக்களுக்கிடையிலான நல்லுறவைக் காக்கும்வகையில் தற்போது பணியிலிருக்கும் நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து இந்தப் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
“செம்மரக் கடத்தல் விவகாரத்தில் முதலாளிகளாக இருக்கும் ஆந்திர முதலைகளை விட்டுவிட்டு மரம் வெட்டும் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படும் தமிழர்கள் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் பாய்ச்சியும் தாக்குதல் நடத்தியும் வெறியாட்டம் போடும் ஆந்திர அதிகாரிகள், உச்சபட்ச கொடூரமாக 12 தமிழர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஆந்திர அதிகாரிகளின் இந்த மனசாட்சியற்ற கொடூரத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.
திருப்பதி சேசாத்திரி மலையில் ஸ்ரீவாரிமெட்டு ஈசகுண்டா பகுதியில் மரம் வெட்டும் கும்பல் செம்மரங்களை வெட்டி கடத்தியதாகவும் அப்போது ஆந்திர வனதுறையினருக்கும் அவர்களுக்கும் மோதல் நடந்ததாகவும் இதில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் திரைக்கதைகளையே மிஞ்சக்கூடிய அளவுக்கு கற்பனைக் கதையை சித்தரித்து 20 பேரைக் கொன்று வெறியாட்டம் போட்டிருக்கிறது ஆந்திர அதிகாரத் தரப்பு. முதலில் வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றதாகக் கசிந்த தகவல் அடுத்த சில மணி நேரங்களிலேயே ஆந்திர மாநில சிறப்பு பிரிவு காவல் துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூடாக மாற்றப்பட்டிருக்கிறது.
கொல்லப்பட்ட 20 பேர்களில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் என்பது நெஞ்சை நொறுக்கக்கூடிய துயரமாக ஒவ்வொரு தமிழர்களையும் கொதிக்க வைத்திருக்கிறது. மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி தமிழர்களைச் சிட்டுக் குருவிகளைப் போல் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மரம் வெட்டுவது தவறு என்பது மறுக்க முடியாது. அதற்காக மனிதர்களை வெட்டுவது நியாயமாகிவிடுமா? வெட்டப்பட்ட மரத்தை நாளைக்கு ஒரு கன்று வைத்து நாம் உருவாக்கிவிடலாம். ஆனால், சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களை ஆந்திர அதிகாரிகளால் மீட்டுத்தந்துவிட முடியுமா? ஒரு மரக்கட்டைக்குக் கொடுக்கிற மரியாதை மனித உயிருக்குக் கிடையாதா?
அப்பாவித் தொழிலாளர்கள் மீது கொலைத்தாக்குதல் நடத்திய ஆந்திர அதிகாரிகள் செம்மரக் கடத்தலின் முதலாளிகள் மீது என்றைக்காவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? ஒவ்வொரு முறையும் மரம் வெட்டியதாகச் சொல்லி தொழிலாளர்களைக் கைது செய்யும் ஆந்திர அரசு, அந்தத் தொழிலாளர்கள் யாருக்காக மரம் வெட்டினார்கள், அவர்களை மரம் வெட்டப் பணித்தது யார் என்பதை எல்லாம் என்றைக்காவது விசாரித்து அந்த முக்கியப் புள்ளிகளை என்றைக்காவது கைது செய்திருக்கிறார்களா?
தமிழனுக்குச் செல்லும் இடமெல்லாம் அடி என்கிற நாதியற்ற நிலைமை நாளுக்கு நாள் தொடருவதை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. மேக்கேதாட்டூ அணை கட்டக்கூடாது என்பதற்காக கர்நாடகா செல்லும் தமிழன் அடி வாங்குகிறான். முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமக்கான உரிமையைக் கேட்ட பாவத்துக்காக கேரளா செல்லும் தமிழன் அடி வாங்குகிறான். சிங்கள இனவெறிக்கு ஆளாகி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் தமிழன் அடிவாங்கி வருகிறான். இந்நிலையில் செம்மரக் கடத்தல் எனக் கூறி அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது நாற்புறமும் தமிழனுக்கான பாதுகாப்பற்ற சூழலும் கேட்கத் துப்பற்ற நிராதரவையுமே காட்டுகிறது.
12 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை வெறும் மரக்கடத்தல் பிரச்னையாக மட்டும் பார்க்க முடியாது. இந்திய இறையாண்மையை கூறுபோடத்தக்க கொடூரத்தை சர்வசாதாரணமாக நிகழ்த்தி இருக்கிறார்கள் ஆந்திர அதிகாரிகள். அப்பாவித் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டிகளாகச் சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில அதிகாரிகள் அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் என்ன நடந்தது என்பதை நியாயமான மனித உரிமைக் குழுக்களை வைத்து விசாரிக்க வேண்டும். நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவித் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பாற்ற உடனடியாக உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் இனியும் தொடர்ந்தால் நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையான போராட்டங்களைக் கையிலெடுக்கும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (07-04-2015)அதிகாலை ஆந்திர மாநிலம் ஸ்ரீவாரு மெட்டு சேசாலம் வனப்பகுதியில் 12 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்களை ஆந்திர போலீசார் சுட்டு படுகொலை செய்தனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதே நேரம் செம்மரக்கட்டை கடத்தலில் பெரும் புள்ளிகளும் அரசியல்வாதிகளும் பின்னணியில் உள்ளனர். அவர்களை கண்டறிந்து கைது செய்வதை விடுத்து சாதாரண கூலித்தொழிலாளர்களை காக்கை குருவிகளை சுட்டுக் கொள்வதை போன்று சுடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. நிராயுதபாணிகளை கண் மூடித்தனமாக சுட்டு கொள்வது அநியாயமானது. காட்டுமிராண்டித்தனமானது. மனித உரிமைகளுக்கு எதிரானது.
இதற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்மரக்கட்டை கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...