Monday, 27 April 2015

செய்திகள்-25.04.15

செய்திகள்-25.04.15
------------------------------------------------------------------------------------------------------

1. நேபாளம்-நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை செபம்

2. ஒருமைப்பாட்டுணர்வு எப்போதும் செயல் வடிவம் பெற வேண்டும்

3. இறைவனின் கருணை, கனிவை அனைவருக்கும் வழங்க அழைப்பு

4. போர்கள், அமைதிக்காக மேலும் உழைக்க நம்மைத் தூண்டுகின்றன

5. பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து திருத்தந்தை அஞ்சவில்லை

6. இந்து மகாசபா அறிக்கைக்கு இந்திய ஆயர்கள் கண்டனம்

7. Dachau முகாமில் மறைசாட்சிகளான குருக்களுக்கு அஞ்சலி

8. தென் சூடானில் சிறார் படை வீரர் விடுதலைக்கு யூனிசெப் பாராட்டு

9. இந்தியாவில் திருநங்கைகள் மசோதா நிறைவேறியது

------------------------------------------------------------------------------------------------------

1. நேபாளம்-நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருத்தந்தை செபம்

ஏப்.25,2015. நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டுவில் இச்சனிக்கிழமை காலையில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது செபத்தையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார்.
இப்பேரிடர் குறித்து தான் ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும், இதில் பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களில் தானும் பங்குகொள்வதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
7.9 ரிக்டர் அளவுகோலில், ஒன்றரை நிமிடங்களுக்கு மேல் இடம்பெற்ற  நிலநடுக்கத்தால் காட்மாண்டுவில் பல இடங்களில் கட்டடங்கள் இடிந்துள்ளன மற்றும் 700க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
நேபாளத்தில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு, இந்தியாவின் ராஞ்சி, ஜெய்ப்பூர், கௌஹாத்தி, உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளிலும், சிக்கிம், பிஹார் மாநிலங்களிலும், பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் உணரப்பட்டது.
உள்ளூர் நேரப்படி காலை 11.56க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காட்மண்டுவிலிருந்து வடமேற்கில் 83 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக காட்மாண்டு விமானநிலையம் மூடப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு 6.2 ரிக்டர் அளவுக்கு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இதன் பாதிப்பும் நேபாளத்திலும் வட இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. ஒருமைப்பாட்டுணர்வு எப்போதும் செயல் வடிவம் பெற வேண்டும்

ஏப்.25,2015. ஒருமைப்பாட்டுணர்வு என்ற சொல், இக்காலத்தில் இறைவாக்குச் சக்தியைக் கொண்டுள்ளது என்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் பெயரிலான நிறுவன உறுப்பினர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சனிக்கிழமையன்று இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என 120 பேரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் புனிதர்பட்ட நிகழ்வு, இந்நிறுவனத்தின் பணிக்குப் புதிய உந்துதலைக் கொடுத்து, இது உலக அளவில் இன்னும் விரிவடையவும் உதவியுள்ளது என்று கூறினார்.
புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் மிகவும் அன்புகூர்ந்த இளையோரின் கல்விக்கும், அவர்களுக்கான மேய்ப்புப்பணிக்கும் இந்நிறுவனம் அதிகம் உதவி வருவதைப் பாராட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற வளமையான சமூகக் கோட்பாடுகளை எப்போதும் நடைமுறைப்படுத்தவும் இந்நிறுவனத்தினரை ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1981ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புனித 2ம் ஜான் பால் நிறுவனம், கல்வி, அறிவியல், கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்த துறைகளில் பிறரன்புப் பணிகளை ஆற்றி வருகின்றது. இது வத்திக்கானில் உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. இறைவனின் கருணை, கனிவை அனைவருக்கும் வழங்க அழைப்பு

ஏப்.25,2015. இறைவனின் கருணையையும் கனிவையும் அனைவருக்கும் வழங்குவதற்கு, கிறிஸ்தவர்களாகிய நாம் நம் சுயத்தைவிட்டு வெளியேற அழைக்கப்படுகிறோம் என்று இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வருகிற மே முதல் தேதி இத்தாலியின் மிலானில் துவங்கும் எக்ஸபோ 2015 தொடக்க நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் நேரடி ஒளிபரப்பின் மூலமாக கலந்து கொள்வார் என மிலான் உயர்மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
இத்தாலிய ராய் தொலைக்காட்சி நிறுவனம், வத்திக்கான் தொலைக்காட்சி நிறுவனம் ஆகிய இரண்டின் ஒத்துழைப்பால் இது இடம்பெறவுள்ளது.
இன்னும், இஞ்ஞாயிறன்று உலகளாவியத் திருஅவையில் 52வது இறையழைத்தல் ஞாயிறு சிறப்பிக்கப்படும்வேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 19 தியாக்கோன்களை அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்துவார்.
இஞ்ஞாயிறு காலை 9.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றும் திருப்பலியில், திருநிலைப்பெறவுள்ள 19 தியாக்கோன்களில் 13 பேர், உரோம் மறைமாவட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்; ஏனைய 6 பேரில் ஒருவர் இந்தியர்.
மேலும், மெக்சிகோ நடிகர் Eduardo Verástegui அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார். நடிகர் Eduardo Verástegui அவர்கள், பாப்பிறை நிறுவனத்தில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருப்பதோடு, அந்நிறுவனத்தின் பிறரன்புப் பணிகளுக்கு நிதி ஆதரவும் வழங்கி வருகிறார்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. போர்கள், அமைதிக்காக மேலும் உழைக்க நம்மைத் தூண்டுகின்றன

ஏப்.25,2015. இன்றைய உலகில் இடம்பெறும் பல வன்முறைகளும், பல சண்டைகளும் நம்மை மிகவும் கவலையடையச் செய்கின்றன, ஆயினும், கடந்த உலகப் போரின் நினைவுகள், மக்களிடையே அமைதியும், நல்லிணக்கமும் ஏற்பட நாம் எல்லாரும் ஒன்றிணைந்து உழைக்க உந்தித் தள்ளுகின்றன என்று திருப்பீடச் செயலர் கூறினார்
வெனிஸ் நகரப் பாதுகாவலரான புனித மாற்கின் விழாவாகிய இச்சனிக்கிழமையன்று வெனிஸ் புனித மாற்கு பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அம்மக்களுக்குத் திருத்தந்தையின் வாழ்த்தையும், ஆசிரையும் தெரிவித்தார்.
மதம், இனம் அல்லது கருத்தின் அடிப்படையில் இடம்பெறும் பாகுபாடுகளும் அடக்குமுறைகளும் கடந்த கால நிகழ்வு மட்டுமல்ல, துரதிஷ்டவசமாக, அவை இந்த நம் காலத்திலும் இடம்பெறுகின்றன என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.
இத்தாலியில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் எழுபதாம் ஆண்டையும்,  1943ம் ஆண்டு செப்டம்பருக்கும் 1945ம் ஆண்டு ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த சகோதரத்துவக் கொலைகளையும் நினைவுகூர்ந்த கர்தினால், கடந்த எழுபது ஆண்டுகளில் இறைவன் இத்தாலிக்கு அமைதி அருளியதற்கு நன்றியும் தெரிவித்தார்.
இன்று கிறிஸ்தவ விசுவாசத்துக்காகப் பலர் கொல்லப்படுகின்றனர், மதங்களையும், கருத்துக்கோட்பாடுகளையும் தவறாகப் பயன்படுத்தவோர் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும் கூறினார் கர்தினால் பரோலின்.
வெனிஸ் நகரப் பாதுகாவலரான புனித மாற்கின் கல்லறை புனித மாற்கு பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து திருத்தந்தை அஞ்சவில்லை

ஏப்.25,2015. இத்தாலியில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வத்திக்கானைத் தாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தனர் என்று கூறப்படும்வேளையில், இச்செய்திகளுக்கு மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அச்சமின்றி அமைதியாக உள்ளார் என்று கூறினார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
சர்தீனியாவிலிருந்து செயல்படும் அல் கெய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பயங்கரவாதிகள், 2010ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வத்திக்கானைத் தாக்கத் திட்டமிட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாலிய அதிகாரிகளுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தியிருப்பது சரியானதாக இருந்தாலும், இது குறித்து அதிகமாக கவலைப்பட தேவையில்லை, ஆயினும், நாம் நிச்சயம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார் கர்தினால் பரோலின்.
இவ்வெள்ளியன்று பதுவா நகரில் Triveneto இறையியல் துறையைத் தொடங்கி வைத்து உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், பயங்கரவாதம், ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, கியூபா, ஆர்மேனிய இனப்படுகொலை, தீவிரவாத அச்சுறுத்தல் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்த திருத்தந்தையின் எண்ணங்களையும், திட்டங்களையும் பகிர்ந்துகொண்டார்.
ஆசியத் திருத்தூதுப் பயணங்களையடுத்து, ஆப்ரிக்காவுக்கு, குறிப்பாக போரினாலும், பிற நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்வது குறித்து திருத்தந்தை திட்டமிட்டு வருகிறார் என்றும் தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இந்து மகாசபா அறிக்கைக்கு இந்திய ஆயர்கள் கண்டனம்

ஏப்.25,2015. ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் அல்ல, ஆனால் அவை மனமாற்றம் இடம்பெறும் தொழிற்சாலைகள் என்ற இந்து மகாசபாவின் அறிக்கைக்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது இந்திய ஆயர் பேரவை.
Akhil Bharatiya Hindu Mahasabha பொதுச் செயலர் Munna Kumar Shukla அவர்களின் இக்கூற்று கடுங்கோபத்தை எழுப்பக்கூடியது மற்றும் இது, பொறுப்பற்ற முறையில் வெளியிடப்பட்டுள்ளது என்று இந்திய ஆயர்கள் தங்களின் கண்டன அறிக்கையில்   குறிப்பிட்டுள்ளனர்.
ஆலயத்தைத் தாக்குவது சட்டத்துக்குப் புறம்பானது அல்ல எனவும், ஆலயங்களைத் தாக்குவோருக்கு அரசு விருது வழங்க வேண்டுமென்று தான் விரும்புவதாகவும் Shukla அவர்கள் கூறியதாக ஊடகங்கள் கூறியுள்ளன.
Shukla அவர்களின் இக்கூற்றால், கிறிஸ்தவ சமூகம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது மற்றும் அதன் மென்மையான உணர்வுகள் காயப்பட்டுள்ளன என்றுரைக்கும் ஆயர்கள், இக்கூற்று இந்தியாவின் தரம், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முரணானவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் என, இந்திய ஆயர் பேரவையின் நிலைத்த குழுவைச் சேர்ந்த ஏறக்குறைய நாற்பது பேர் பெங்களூருவில் நடத்திய கூட்டத்தின் இறுதியில் இவ்வெள்ளியன்று இக்கண்டன அறிக்கையை வெளியிட்டனர்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

7. Dachau முகாமில் மறைசாட்சிகளான குருக்களுக்கு அஞ்சலி

ஏப்.25,2015. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியின் Dachau வதைப்போர் முகாமில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்களுக்கு அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுள்ளது போலந்து தலத்திருஅவை.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாத்சிகளால் அமைக்கப்பட்ட வதைப்போர் முகாம்களில் முதல் முகாமான Dachau, 1945ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டுப் படைகளால் விடுவிக்கப்பட்டது.
இதன் எழுபதாம் ஆண்டு நிறைவு நினைவுகளைக் கடைப்பிடிக்கவுள்ள போலந்து தலத்திருஅவை, Dachau முகாம் ஐரோப்பிய அருள்பணியாளர்களின் முக்கிய முகாமாக இருந்தது என்றும், இதில் கைதுசெய்யப்பட்டிருந்த 2,794 அருள்பணியாளர்களுள் 1,777 பேர் போலந்து நாட்டவர் என்றும், இவர்களில் 800க்கும் அதிகமானோர் அம்முகாமில் இறந்தனர் என்றும் கூறியது.
இவர்களில் 46 பேர் மறைசாட்சிகள் என, 1999ம் ஆண்டில் முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
Dachau வதைப்போர் முகாமில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு இலட்சம் பேரில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் போலந்து நாட்டவர். 

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

8. தென் சூடானில் சிறார் படை வீரர் விடுதலைக்கு யூனிசெப் பாராட்டு

ஏப்.25,2015. தென் சூடான் புரட்சிப் படைகள் தங்களிடம் கடைசியாக இருந்த 283 சிறார் படை வீரர்களையும், ஐ.நா.வின் யூனிசெப் குழந்தை நல நிறுவனத்திடம் இவ்வெள்ளியன்று ஒப்படைத்துள்ளன.
282 சிறுவர் மற்றும் ஒரு சிறுமி என 283 சிறார் படை வீரர்களை விடுதலை செய்திருப்பதன் மூலம், இவ்வாண்டில் இதுவரை 1,757 சிறார் படை வீரர்களை, தென் சூடான் புரட்சிப் படைகள் விடுதலை செய்துள்ளன.
இச்சிறாரை சமுதாயத்தில் ஒன்றிணைக்கும் நடவடிக்கைக்கு, ஒவ்வொரு சிறாருக்கும் 2,580 டாலர் தேவைப்படுகிறது என யூனிசெப் கணக்கிட்டுள்ளது.
தென் சூடானில் 2013ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய சண்டையினால், 2015ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 64 இலட்சம் பேருக்கு உணவுப் பாதுகாப்பு தேவைப்பட்டது என்று ஐ.நா. கூறுகிறது.    

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

9. இந்தியாவில் திருநங்கைகள் மசோதா நிறைவேறியது

ஏப்.25,2015.  இந்தியாவில் திருநங்கைகள் எதிர்நோக்கும் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவும், திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவுமென  மசோதா ஒன்று இவ்வெள்ளியன்று மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அவர்கள்,  திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க வகைசெய்யும் இந்தத் தனி நபர் மசோதா நிறைவேறியது மிக அரிதான ஒன்று என்று குறிப்பிட்டார்.
திருநங்கைகளுக்குத் தேசிய ஆணையமும், மாநில அளவில் ஆணையமும் அமைக்க வகை செய்யும் 'திருநங்கைகள் உரிமை மசோதா 2014' என்ற மசோதாவை மாநிலங்களவையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் கொண்டுவந்தார்.
அப்போது பேசிய சிவா அவர்கள், திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 29 நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டும் இல்லை என்றார்.
அனைவருக்கும் மனித உரிமை பற்றி பேசுகிறோம். ஆனால், சிலர் புறக்கணிக்கப்படுகின்றனர். பாலின அடையாளம் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் மனித உரிமைகள் உள்ளன. வாழ்வின் அனைத்துப் பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்து சமத்துவ சமுதாயம் ஏற்படுத்துவதற்கான சட்டம் ஏற்படுத்த தாக்கல் செய்ததாகவும் திருச்சி சிவா கூறினார்.
45 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றம் கிரிமினல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அதிகார வரம்பை விரிவுபடுத்துதல் தொடர்பாக 1970ம் ஆண்டு ஒரு தனிநபர் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment