Thursday, 30 April 2015

செய்திகள்-29.04.15

செய்திகள்-29.04.15
------------------------------------------------------------------------------------------------------

1. மனித வர்த்தகத்தை வேரறுப்பது திருஅவையின் கடமை

2. மனித வர்த்தகத்திற்கு எதிராக திருப்பீடத்தின் அறிக்கை

3. காலநிலை மாற்றம் குறித்து திருப்பீடத்தின் எச்சரிக்கை

4. ஆயருக்குரிய முதல் பண்பு, பணிவுள்ள ஆடாக வாழப் பழகுவது

5. இனவெறி என்ற நோயைக் குணமாக்கும் ஒரே மருந்து, உண்மை

6. நேபாளத்திற்கு, காரித்தாஸ் 25 இலட்சம் யூரோக்கள் நிதி உதவி

7. நிலநடுக்கத்தின் தாக்கம்: 3 மீட்டர்கள் நகர்ந்த காத்மாண்டு

8. காற்று மாசுப்பாட்டினால் ஐரோப்பாவில் 600,000 பேர் மரணம்
------------------------------------------------------------------------------------------------------

1. மனித வர்த்தகத்தை வேரறுப்பது திருஅவையின் கடமை

ஏப்.29,2015. மனித வர்த்தகம் என்ற அநீதியை உலகின் கவனத்திற்குக் கொணர்வதும், இந்த அநீதியை முற்றிலும் களைவதும் கத்தோலிக்கத் திருஅவையின் தலையாயக் கடமைகளில் ஒன்று என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
குடிபெயர்ந்தோர் மற்றும் பயணிகள் நலனுக்கெனப் பணியாற்றும் திருப்பீட அவையும், அகில உலகக் காரித்தாஸ் அமைப்பும் இணைந்து, மனித வர்த்தகத்திற்கு எதிராக உருவாக்கியுள்ள ஓர் அறிக்கையை, இப்புதனன்று வெளியிட்ட நிகழ்வில் பேசிய இத்திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் அந்தோனியோ மரிய வேலியோ அவர்கள் இவ்வாறு கூறினார்.
இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், உலகெங்கிலும் பணியாற்றும் அனைத்து மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், இருபால் துறவியர் பணி நிலையங்கள், மற்றும் ஏனைய கிறிஸ்தவ இயக்கங்கள் அனைத்தின் வழியாகவும், மக்களைச் சென்றடையும் என்று கர்தினால் வேலியோ அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
மனித வர்த்தகம் என்ற அநீதியைக் களைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும் உலக அமைப்புக்கள் அனைத்திற்கும், கத்தோலிக்கத் திருஅவையின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு என்று கர்தினால் வேலியோ அவர்கள் உறுதியளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. மனித வர்த்தகத்திற்கு எதிராக திருப்பீடத்தின் அறிக்கை

ஏப்.29,2015. அடிமைத்தனத்தின் இன்றைய வெளிப்பாடாக, கட்டாயத் தொழில், பாலியல் தொழில், பிச்சையெடுத்தல் ஆகிய கொடுமைகளுக்கு மனிதர்கள் உள்ளாக்கப்படுகின்றனர் என்று திருப்பீடத்தின் அறிக்கையொன்று கூறுகிறது.
வத்திக்கானில், இப்புதனன்று, குடிபெயர்ந்தோர் மற்றும் பயணிகள் நலனுக்கென பணியாற்றும் திருப்பீட அவையும், அகில உலகக் காரித்தாஸ் அமைப்பும் இணைந்து, 'கடவுளின் சாயலில் படைக்கப்பட்டு, அடிமைகளாக நடத்தப்படுதல் - கிறிஸ்தவ அர்ப்பணிப்பு' என்ற மையக் கருத்துடன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் அனைத்துலக தொழில் நிறுவனமான ILOவின் கணிப்புப்படி, இன்றைய உலகில் 24 இலட்சம் பேர் மனித வர்த்தகத்தின் பாதிப்புக்களை ஒவ்வொரு நாளும் உணர்ந்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
உலக அளவில் மிகவும் ஆதாயம் ஈட்டித்தரும் மனித வர்த்தகத்தை வேரறுக்க, கத்தோலிக்கத் திருஅவையின் அனைத்து நிறுவனங்களும், அமைப்புக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியத்தையும் இவ்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.
"மனிதர்கள் விலைப்பொருள்களைப் போல், வாங்கப்படுவதும், விற்கப்படுவதும் இவ்வுலகில் ஒருபோதும் நிகழக்கூடாது. இத்தகைய வர்த்தகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடுவோர் அனைவரும், அநீதிக்குத் துணைபோகின்றனர்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு கூற்று, இவ்வறிக்கையின் ஆரம்ப வரிகளாக அமைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. காலநிலை மாற்றம் குறித்து திருப்பீடத்தின் எச்சரிக்கை

ஏப்.29,2015. காலநிலை மாற்றம் என்ற ஆபத்து, மனிதர்களால் உருவாக்கப்பட்ட துன்பம் என்பதால், அதைச் சீரமைப்பதும் மனிதர்கள் ஒவ்வொருவக்கும் உள்ள தார்மீகக் கடமை என்று திருப்பீட அறிக்கை ஒன்று கூறுகிறது.
பாப்பிறை அறிவியல் கழகமும், அமைதிக்கான மதங்கள் என்ற அனைத்துலக அமைப்பும் இணைந்து, இச்செவ்வாயன்று வத்திக்கானில் நடத்திய ஒரு கருத்தரங்கின் இறுதியில், இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.
'உலகைக் காப்பதும், மனிதகுலத்தை மாண்புறச் செய்வதும்' என்ற தலைப்பில் இச்செவ்வாயன்று நடைபெற்ற கருத்தரங்கின் இறுதியில், மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், வர்த்தகர்கள், அறிவியலாளர்கள் அனைவரும் இணைந்து இவ்வறிக்கையை வெளியிட்டனர்.
காலநிலை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி, பெருமழை, வெள்ளம், கடல் மட்ட உயர்வு, வெப்பக்காற்று வீசுதல் ஆகிய அனைத்து சீற்றங்களாலும், அதிக அளவு பாதிக்கப்படுவோர், வறியோரே என்பதையும் இவ்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.
காலநிலை மாற்றத்தை மையப்படுத்தி, இவ்வாண்டின் இறுதியில், பாரிஸ் மாநகரில் நடைபெறவிருக்கும் அகில உலகக் கருத்தரங்கில், ஆக்கப்பூர்வமான, திட்டவட்டமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஆயருக்குரிய முதல் பண்பு, பணிவுள்ள ஆடாக வாழப் பழகுவது

ஏப்.29,2015. ஆடுகளை மேய்க்கும் ஆயருக்குரிய முதல் பண்பு, பணிவுள்ள ஓர் ஆட்டைப் போல வாழப் பழகுவது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஏப்ரல் 27, இத்திங்கள் முடிய, கியூபா நாட்டில் மேய்ப்புப்பணிப் பயணம் மேற்கொண்ட, அருள் பணியாளர் பேராயத்தின் தலைவர், கர்தினால் பெனியமீனொ ஸ்டெல்லா அவர்கள், ஹவானா உயர் மறைமாவட்ட அருள் பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
சீடர், ஆயர், இறைவாக்கினர் என்பவை, அருள் பணியாளர்களுக்குத் தேவையான மூன்று பண்புகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, கர்தினால் ஸ்டெல்லா அவர்கள், தன் உரையின் ஆரம்ப எண்ணமாகக் குறிப்பிட்டார்.
கடவுளைப் பற்றி மனிதர்களிடமும், மனிதர்களைப் பற்றி கடவுளிடமும் எடுத்துச் சொல்லும் பாலமாக அமைவது, அருள் பணியாளர்களின் முக்கியப் பணி என்றும், கர்தினால் ஸ்டெல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு, திருத்தூதுப் பயணம் செல்லும் வழியில், கியூபாவிற்கும் செல்வார் என்று திருப்பீடம் அண்மையில் அறித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இனவெறி என்ற நோயைக் குணமாக்கும் ஒரே மருந்து, உண்மை

ஏப்.29,2015. அமெரிக்க ஐக்கியநாட்டுச் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் இனவெறி என்ற நோயைக் குணமாக்கும் ஒரே மருந்து, உண்மை என்று பால்டிமோர் (Baltimore) பேராயர், வில்லியம் லோரி அவர்கள் கூறியுள்ளார்.
பால்டிமோரில் ஏப்ரல் 12ம் தேதி கைது செய்யப்பட்டு, காவல்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்ட Freddie Gray என்ற 25 வயது இளைஞர், ஏப்ரல் 19ம் தேதி இறந்ததையடுத்து அந்நகரில் பெருமளவு கலவரங்கள் ஏற்பட்டன.
இந்த மரணம் எவ்வகையில் நிகழ்ந்ததென்ற முழுமையான உண்மை வெளியாகவேண்டும் என்பதை வலியுறுத்தி பால்டிமோர் பேராயர் லோரி அவர்கள் இத்திங்களன்று அறிக்கையொன்றை வெளியிட்டார்.
இளையவர் Freddie பற்றிய முழுமையான உண்மைகள் வெளியாகக் காத்திருக்கும் வேளையில், Freddieஐ இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு செபங்களைச் சமர்ப்பிப்போம் என்று பேராயரின் அறிக்கை விண்ணப்பித்துள்ளது.
காவல் துறையினர் தங்கள் பணியை பொறுப்புடனும், நேர்மையுடனும் மேற்கொள்வதற்கு நமது தேவை என்பதையும், பேராயர் லோரி அவர்கள் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
இதற்கிடையே,வெள்ளையினத்தைச் சேர்ந்த காவல் துறையினரால் கறுப்பின மனிதர்கள் பலர், அண்மைய மாதங்களில் கொல்லப்பட்டு வருவதைக் குறித்து இச்செவ்வாயன்று பேசிய அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைவர், பாரக் ஒபாமா அவர்கள், 'நம் நாடு அழ்ந்ததோர் ஆன்மீகத் தேடலில் ஈடுபடுவது அவசியம்' என்று குறிப்பிட்டார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

6. நேபாளத்திற்கு, காரித்தாஸ் 25 இலட்சம் யூரோக்கள் நிதி உதவி

ஏப்.29,2015. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு, காரித்தாஸ் அமைப்பு இதுவரை 25 இலட்சம் யூரோக்கள், அதாவது, 17 கோடியே, 50 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நிதி உதவி வழங்கியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகள் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன என்றும், பெரும்பாலான மக்கள், மழையிலும், பனியிலும் கூடாரங்களில் தங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் நேபாள காரித்தாஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், அருள்பணி பயஸ் பெருமனா (Pius Perumana) அவர்கள் கூறினார்.
மக்கள் தங்குவதற்கு, தற்காலிகமான கூடாரங்கள் அமைப்பது, குடிநீர், உணவு வழங்குவது ஆகியவை, காரித்தாஸ் தற்போது மேற்கொண்டு வரும் முக்கியப் பணிகள் என்று அருள்பணி பெருமனா அவர்கள் சுட்டிக்காட்டினார்.
25 யூரோக்கள் வழங்கினால், ஒரு குடும்பம் ஒரு மாதம் உணவு பெறும்; 10 யூரோக்கள் வழங்கினால், மூன்று குடும்பங்கள் தங்கக் கூடிய கூடாரம் அமைக்க உதவியாக இருக்கும் என்ற வார்த்தைகள் அடங்கிய விண்ணப்பங்களை, இத்தாலியக் காரித்தாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. நிலநடுக்கத்தின் தாக்கம்: 3 மீட்டர்கள் நகர்ந்த காத்மாண்டு

நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தின் எதிரொலியாக தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பெரும்பாறைகள் தெற்கு நோக்கி பத்தடி இடம்பெயர்ந்துள்ளன; ஆனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாறுதல் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பூமி வழியே சென்ற ஒலி அலைகளின் தரவுகளின் படி தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பூமியின் பாறை 3 மீட்டர்கள் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது மிகப்பெரிய இடப்பெயர்வு என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டெக்டானிக் (tectonics) ஆய்வியல் நிபுணர், ஜேம்ஸ் ஜாக்சன் அவர்கள் கூறினார்.
இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு, ஐரோப்பா, ஆசியாவை தாங்கும் கண்டத்தட்டை நோக்கி ஆண்டுக்கு 2 செமீ நகர்கிறது. தற்போது ஏற்பட்ட நிலநடுக்கம், இந்த இரண்டு கண்டத்தட்டுகளுக்கு இடையே உருவானது என்று சொல்லப்படுகிறது.
டர்ஹாம் (Durham) பல்கலைக்கழக புவி அறிவியல் துறையைச் சேர்ந்த மார்க் ஆலன் என்பவர், இரண்டு கண்டத்தட்டுகளுக்கு இடையே இருக்கும் இடைவெளிக்கோடு, (fault) தெற்கு நோக்கி 3 மீட்டர்கள் நகர்ந்தது என்றும், இந்த கோட்டின் மேல் எவரெஸ்ட் சிகரம் இல்லாததால் இவ்வளவு பலமான இடப்பெயர்வு இருந்தும் அதன் உயரத்தில் மாறுதல் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
எடின்பர்க் (Edinburgh) பல்கலைக்கழகப் பேராசிரியர், இயன் மெயின் அவர்கள்,
நிலநடுக்கம் காரணமாக பாறைகள் பூமிக்கு அடியில் இடப்பெயர்வு கண்டுள்ளதால், அருகில் உள்ள மற்ற இடைவெளிக்கோடுகளில் அழுத்தம் அதிகரிக்கவும், இதனால் சிலமாதங்களுக்கு நிலநடுக்கங்கள் இப்பகுதியில் நீடிக்கவும் வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார்.

ஆதாரம் : TheGuardian / வத்திக்கான் வானொலி

8. காற்று மாசுப்பாட்டினால் ஐரோப்பாவில் 600,000 பேர் மரணம்

ஏப்.29,2015. காற்று மாசுப்பாட்டினால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் மரணங்கள் மற்றும் நோய்கள் காரணமாக, 1.6 ட்ரில்லியன் டாலர்கள், அதாவது, 1 இலட்சத்து, 60 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.
உலக நலவாழ்வு நிறுவனமான WHOவின் ஐரோப்பிய பிரிவு முதன்முறையாக மேற்கொண்ட இத்தகைய ஆய்வின் முடிவுகள், இச்செவ்வாயன்று வெளியாயின.
காற்று மாசுப்பாட்டினால், ஐரோப்பிய நாடுகளில் இறக்கும் குறைந்த வயதுடையோரின் எண்ணிக்கை, 6 இலட்சம் பேர் என்று கூறிய ஐ.நா. அதிகாரி, Christian Friis Bach அவர்கள், காற்று மாசுப்பாட்டைக் குறைப்பது, ஐரோப்பிய ஒன்றியத்தின் அவசரமானத் தேவை என்று கூறினார்.
நலவாழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு உலக அமைப்பினரின் பிரதிநிதிகள், ஏப்ரல் 28 முதல் 30 முடிய இஸ்ரேல் நாட்டின் Haifa நகரில் பங்கேற்றுவரும் பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றில் இவ்வறிக்கை வெளியிடப்பட்டது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...