Thursday, 30 April 2015

செய்திகள்-28.04.15

செய்திகள்-28.04.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, ஈக்குவதோர் அரசுத்தலைவர் சந்திப்பு

2. திருத்தந்தை, ஐ.நா. பொதுச் செயலர் சந்திப்பு

3. வருங்காலத் தலைமுறைகள் நம்மைக் கடுமையாய்த் தீர்ப்பிடும்

4. படைப்பைப் பாதுகாப்பதற்கு அனைவருக்கும் தார்மீகக் கடமை உள்ளது

5. மாற்றத்துக்கென தூய ஆவியார் அழைக்கும்போது அஞ்சத் தேவையில்லை

6. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் திருத்தந்தை நிதியுதவி

7. கிறிஸ்தவ சமூகம் இறைவனைத் தேடுவோரை வரவேற்கும் இல்லம்

8. உலகில் பெருமளவு மக்களுக்குப் போதிய மருத்துவம் கிடைப்பதில்லை
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை, ஈக்குவதோர் அரசுத்தலைவர் சந்திப்பு

ஏப்.28,2015. திருப்பீடத்துக்கும், ஈக்குவதோர் நாட்டுக்கும் இடையே நிலவும் உறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், ஈக்குவதோர் அரசுத்தலைவர் Rafael Correa Delgado  அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
வருகிற ஜூலை 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈக்குவதோர் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத் தக்கது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு விடுத்துவரும் அழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது Greenpeace உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு. வத்திக்கான் நடத்திய வெப்பநிலை மாற்றம் குறித்த அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய Greenpeace அமைப்பின் பிரதிநிதிகள், நூறு விழுக்காடு மறுசுழற்சி செய்யக்கூடிய சக்திக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை, ஐ.நா. பொதுச் செயலர் சந்திப்பு

ஏப்.28,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், இச்சந்திப்பு, பல தலைப்புக்களில், பயனுள்ள ஒரு கலந்துரையாடலாக இருந்தது என்று கூறினார். 
வருகிற செப்டம்பர் 25ம் தேதி ஐ.நா.பொது அவையில் உரையாற்றுவதற்கு இசைவு தெரிவித்திருப்பதற்கு திருத்தந்தைக்கு நன்றியும் தெரிவித்த பான் கி மூன் அவர்கள், சுற்றுச்சூழல் குறித்த திருத்தந்தையின் அடுத்த திருமடலை ஆவலோடு தான் ஆவலோடு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் குறித்த விவகாரங்கள் மட்டுமல்ல, குடியேற்றதாரர், உலகில் போர்கள் இடம்பெறும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகள் போன்ற விவகாரங்களிலும் கவனம் செலுத்தி ஐ.நா. நிறுவனம் உழைத்து வருகின்றது என்றும் திருத்தந்தையிடம் தெரிவித்தார் பான் கி மூன்.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், வெப்பநிலை மாற்றம் குறித்த வத்திக்கான் கருத்தரங்கிலும் உரையாற்றினார் பான் கி மூன்.
ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து இத்தாலிக்கு வருவதற்கு மேற்கொண்ட கடல் பயணத்தில் 2014ம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 3,500 குடியேற்றதாரர் இறந்துள்ளனர். மேலும், குடியேற்றதாரர் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், 2015ம் ஆண்டில் ஏறக்குறைய 2 இலட்சம் குடியேற்றதாரர் இத்தாலிக்கு வருவார்கள் என இத்தாலிய அதிகாரிகள் கணித்துள்ளனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. வருங்காலத் தலைமுறைகள் நம்மைக் கடுமையாய்த் தீர்ப்பிடும்

ஏப்.28,2015. வத்திக்கானில் இச்செவ்வாயன்று பாப்பிறை அறிவியல் கழகம் நடத்திய, வெப்பநிலை மாற்றம் குறித்த அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய, பான் கி மூன் அவர்கள், வெப்பநிலை மாற்றத்துக்குரிய காரணங்களைக் களைந்து உறுதியான வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டியது இன்றியமையாதது என்று கூறினார்.
நலவாழ்வு, உணவு, தண்ணீர்ப் பாதுகாப்பு, குடியேற்றம், அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றோடு வெப்பநிலை மாற்றம் தொடர்புடையது, அறநெறி, சமூக நீதி, மனித உரிமைகள், அடிப்படை நன்னெறிகள் சார்ந்த விவகாரம் இது என்றும் உரைத்தார் பான் கி மூன்.
ஏழ்மை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் நாம் நமது நன்னெறி மற்றும் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்றத் தவறினால் வருங்காலத் தலைமுறைகள் நம்மைக் கடுமையாய்த் தீர்ப்பிடும் என்றும் எச்சரித்தார் பான் கி மூன்.
இன்று இப்பூமியின் வெப்பநிலை 4 முதல் 5 செல்சியுஸ் டிகிரி வரை உயர்ந்துள்ளது, இது நம் வாழ்வையும், இப்பூமியின் வாழ்வையும் மாற்றும் என்பதை அறிந்துள்ள இவ்வுலகினர், நம் வாழ்வுமுறைகளை மாற்ற வேண்டுமென்பதையும் உணர்ந்துள்ளனர் என்றும் கூறினார் பான் கி மூன்.
வெப்பநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் மதத்துக்கும், அறிவியலுக்கும் இடையே பிரிவினையே கிடையாது என்பதை உலகம் அறியட்டும் என்று கூறினார் பான் கி மூன்.
இக்கருத்தரங்கில், 20 மதத்தலைவர்கள், நொபெல் வேதியல் விருது பெற்ற Paul Crutzen அவர்கள் உட்பட 20 அறிவியலாளர்கள், 20 கல்வியாளர்கள் என, பல முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. படைப்பைப் பாதுகாப்பதற்கு அனைவருக்கும் தார்மீகக் கடமை உள்ளது

ஏப்.28,2015. மனிதர் வாழ்கின்ற நம் வீட்டுத் தோட்டமாகிய இறைவனின் படைப்பை பாதுகாத்துப் பேணுவதற்கு நம் அனைவருக்கும் அறநெறி சார்ந்த கடமை உள்ளது என்று கூறினார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.
வெப்பநிலை மாற்றமும், படைப்பின் கண்காணிப்பாளர்களும் என்ற தலைப்பில், பாப்பிறை அறிவியல் கழகம் இச்செவ்வாயன்று வத்திக்கானில் நடத்திய ஒரு நாள் அனைத்துலக கருத்தரங்கில் உரையாற்றிய, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், படைப்பைப் பாதுகாப்பதில் உலகினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுவதற்கும், இயற்கைக் காடுகளும் சதுப்புநிலங்களும் அழிவதற்கும், மனிதரை நோய்கள் தாக்குவதற்கும், நிலம், நீர், காற்று என அனைத்தும் மாசுபடுவதற்கும் மனிதரே காரணம் என்று உரையாற்றிய கர்தினால் டர்க்சன் அவர்கள், நன்னெறி வாழ்விலும், இதயத்திலும் மாற்றம் இன்றி நாம் படைப்பின் பாதுகாவலர்களாகச் செயல்பட முடியாது என்று கூறினார்.
இப்புவியின் எழுநூறு கோடி மக்களில் குறைந்தது முன்னூறு கோடிப் பேர் கடும் வறுமையிலும், அதேநேரம், ஏறக்குறைய நூறு கோடிப் பேர் நிறைந்த செல்வத்திலும்    வாழ்கின்றனர், இன்றைய உலகம் 730 கோடி மக்களுக்குத் தேவைப்படும் உணவுக்கு அதிகமாகவே உற்பத்தி செய்கின்றது, ஆயினும் எண்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் பசியால் வாடுவதையும் சுட்டிக் காட்டினார் கர்தினால் டர்க்சன். 
இயற்கைப் பேரிடர்களால் மக்கள் மடிவதையும் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் டர்க்சன் அவர்கள், இப்பூமியைப் பாதுகாத்து, மனித சமுதாயத்தை மாண்புடையதாய் அமைப்பதற்கு, உலகினரின் ஒழுக்கநெறி வாழ்வில் மாற்றங்கள் தேவை என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. மாற்றத்துக்கென தூய ஆவியார் அழைக்கும்போது அஞ்சத் தேவையில்லை

ஏப்.28,2015. தூய ஆவியாரின் உதவியின்றி நாம் எதையும் புரிந்து கொள்ள இயலாது, எனவே, நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை எல்லாக் காலங்களிலும் தேர்ந்து தெளிவதற்கு, தூய ஆவியாரை நமக்கு அருளும்படியாக இறைவனிடம் செபிப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, எல்லா நாடுகளுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட வேன்டுமென்ற இத்திருப்பலியின் முதல் வாசகத்தின் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டபோது இவ்வாறு கூறினார்.
திருஅவை, தூய ஆவியாரின் வழிகாட்டுதலில் வரலாறு முழுவதும் எவ்வாறு பயணம்  செய்துள்ளது என்பதை மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்கு எவ்வளவு நெருக்கடிகள் ஏற்பட்டன என்பதை திருத்தூதர் பணிகளில் வாசிக்கிறோம் என்றும் கூறினார்.
எசாயா இறைவாக்கினர் நூல் 60ம் பிரிவில், எல்லா நாடுகளுக்கும் நற்செய்தி அறிவிப்பது பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது, இறைவன் அனைத்தையும் புதியனவாக்குபவர் என்பதைப் பலர் புரிந்துகொண்டதுபோல் தெரியவில்லை என்றுரைத்த திருத்தந்தை, தூய ஆவியார் இந்தப் புதுப்பித்தல் பணியைச் செய்கிறார் என்றும் கூறினார்.
விந்தைகள் ஆற்றும் இறைவன் பற்றி அஞ்சத் தேவையில்லை என்றும், மாற்றத்துக்கென, ஓர் அடி முன்னோக்கி எடுத்து வை என்று தூய ஆவியார் கூறும்பொழுது நாம் பயப்படத் தேவையில்லை என்றும், தூய ஆவியாரின் வியப்புக்குரிய வேலையால் திருஅவை முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
திருஅவையின் முன்னேற்றம் தூய ஆவியாரின் வேலையாகும், இந்த ஆவியாரின் குரலைச் செபத்தின் மூலமே கேட்க முடியும், செபமின்றி தூய ஆவியாருக்கு இடமில்லை, எனவே தூய ஆவியாரை நாம் பெறுவதற்குச் செபிக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் திருத்தந்தை நிதியுதவி

ஏப்.28,2015. நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக, ஒரு இலட்சம் டாலரை, திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளது திருப்பீட கோர் ஊனும் பிறரன்பு அவை.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் திருத்தந்தை கொண்டிருக்கும் ஆன்மீக முறையிலான ஒருமைப்பாட்டுணர்வையும், தந்தைக்குரிய பாசத்தையும் வெளிப்படுத்தும் விதமாக, இந்நிதியுதவியை, நேபாளத் தலத்திருஅவைக்கு அனுப்பியுள்ளது கோர் ஊனும் அவை.
கடந்த ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி செப உரையின் இறுதியிலும் நேபாளத்திலும், அண்டை நாடுகளிலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திருத்தந்தை செபித்தார், மற்றும் கடந்த சனிக்கிழமையன்றே ஆறுதல் தந்தியையும் அனுப்பினார்.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் அந்நாட்டின் 34 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், எண்பது இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 இலட்சம் பேர் வீடிழந்துள்ளனர், நான்கு இலட்சம் கட்டிடங்கள் இடிந்துள்ளன, 14 இலட்சம் பேருக்கு அவசர உணவு உதவி தேவைப்படுகின்றது என்று ஐ.நா கூறுகிறது.
நேபாளத்தில் நிலநடுக்கத்தில் சிக்கித்தவித்த 56 தமிழர்கள் உள்ளிட்ட 2305 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. கிறிஸ்தவ சமூகம் இறைவனைத் தேடுவோரை வரவேற்கும் இல்லம்

ஏப்.28,2015. ஒவ்வொரு கிறிஸ்தவ சமூகமும் இறைவனைத் தேடுவோரை வரவேற்கும் இல்லமாக அமைய வேண்டும், அதோடு, ஒரு சகோதரரையோ அல்லது ஒரு சகோதரியையோ தேடுவோரின் குரலுக்குச் செவிமடுக்கும் சமூகமாகவும் இருக்க வேண்டும் என்று, இச்செவ்வாயன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வருகிற டிசம்பர் 8ம் தேதி ஆரம்பமாகும் இரக்கத்தின் புனித ஆண்டுக்குத் தயாரிப்பாக, இத்தாலியின் சிசிலியில் நடந்த கருத்தரங்குக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, சிசிலித் திருஅவை, இறைவனின் இரக்கத்துக்குச் சான்றாக வாழுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இத்தகைய தயாரிப்பு கருத்தரங்கு நடத்துவதற்கு, தனது பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார். இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டு, 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. உலகில் பெருமளவு மக்களுக்குப் போதிய மருத்துவம் கிடைப்பதில்லை
ஏப்.28,2015. உலகின் பெரும்பாலான கிராமப்புற மக்கள் அத்தியாவசிய மருத்துவ வசதிகள் இன்றி வாழ்கின்றனர் என்று ஐ.நா. உலக தொழில் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.
உலகில் கிராமப் பகுதிகளில் வாழும் மக்களில் 56 விழுக்காட்டினருக்குப் போதிய நலவாழ்வு வசதிகள் கிடையாது என்றும், வறுமையை அதிக அளவில் எதிர்நோக்கும் நாடுகளே இதனால் அதிகம் பாதிப்படைந்துள்ளன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
உலகின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பாகத்தினருக்கு பாதுகாப்பான அறுவை சிகிச்சைக்கோ அல்லது தங்களால் சிகிச்சைக்குரிய கட்டணம் செலுத்தக்கூடிய அறுவை சிகிச்சைக்கோ வழியில்லாமல் இருக்கிறது எனவும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலான நாடுகளில், ஏழைகள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர், அறுவை சிகிச்சைக்கு வழியில்லாத காரணத்தால், குடல்வால் வெடிப்பு, எலும்பு முறிவு, மகப்பேறு கோளாறுகள் போன்ற எளிதில் குணப்படுத்தக்கூடிய பாதிப்புகளால் மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...