Thursday, 30 April 2015

செய்திகள்-27.04.15

செய்திகள்-27.04.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : குடும்பங்களின் தினசரி வாழ்வில் உதவுங்கள்

2. திருப்பீடம் : சிறார் உரிமைகள் காக்கப்பட ஒன்றிணைந்த நடவடிக்கை தேவை

3. திருத்தந்தை - இரக்கம் காட்டுவதில் களைப்படையாதீர்கள்

4. திருத்தந்தை: தலைவன் என்ற மனநிலையை மாற்றி, பணியாளாக மாறுங்கள்

5. கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தோழமை உணர்வு

6. நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மும்பை கர்தினாலின் ஆறுதல்.

7. நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கத்தோலிக்க அமைப்புகள்
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : குடும்பங்களின் தினசரி வாழ்வில் உதவுங்கள்

ஏப்.27,2015. இன்றைய உலகில் எழுந்துவரும் சவால்களையும், தவறான கொள்கைகளையும் எதிர்த்து நின்று சமாளிக்கும் வகையில், பெனின் நாட்டு பொதுநிலையினரைத் தயாரிக்க வேண்டியது தலத் திருஅவையின் கடமையாகிறது என அந்நாட்டு ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல பகுதிகளிலிருந்து 'அத் லிமினா' சந்திப்பை மேற்கொள்ளும் ஆயர்கள் வரிசையில், உரோம் நகருக்கு வருகை தந்துள்ள பெனின் நாட்டு ஆயர்களை, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
இன்றைய குடும்பங்கள் எதிர்நோக்கிவரும் சவால்கள் குறித்தும் பெனின் நாட்டு ஆயர்களிடம் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களின் விசுவாசத்தில் மட்டுமல்ல, அவர்களின் தினசரி வாழ்விலும் உதவ வேண்டியது ஆயர்களின் கடமை என்றார்.
மேய்ப்புப் பணி பராமரிப்பு, குடும்பங்கள் பாதுகாக்கப்படுதல், இளைஞர்களுக்கு கல்வி புகட்டுதல், கலாச்சாரங்களிடையே ஒத்துழைப்பு, மதங்களிடையே பேச்சுவார்த்தைகள் போன்றவற்றை ஊக்குவிக்கவேண்டிய பெனின் ஆயர்களின் கடமைகளையும் வலியுறுத்திய திருத்தந்தை, அண்மையில் கர்தினால் தவ்ரான் அவர்களின் தலைமையில், மதங்களிடையே உரையாடல் என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற கருத்தரங்கு பற்றி தன் பாராட்டுதல்களையும் வெளியிட்டார்.
இயேசுவின் கருணையை வெளிப்படுத்தும் திருஅவையின் சமூக நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறவேண்டும் என்ற ஊக்கத்தையும் ஆயர்களிடம் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதே நாளில், உரோம் யூத தலைமைக் குரு ரிக்கார்தோ தி ஸெஞியும் திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து உரையாடினார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

2. திருப்பீடம் : சிறார் உரிமைகள் காக்கப்பட ஒன்றிணைந்த நடவடிக்கை தேவை

ஏப்.27,2015. இன்றைய உலகில் பல்வேறு வழிகளில் குழந்தைகள் அடிமைகளாகவும், கொடுமையான முறையிலும் நடத்தப்படுவதைத் தடுக்கும் ஒன்றிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அறிவித்தார் கர்தினால் பீட்டர் டர்க்சன்.
திருப்பீடத்திற்கான ஸ்வீடன் தூதரகமும், திருப்பீடத்தின் சமூக அறிவியல் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், உடல் உறுப்பு விற்பனை, பாலின நடவடிக்கை, இழிபொருள் இலக்கியம், போதைப்பொருள் கடத்தல், பிச்சையெடுத்தல், கட்டாயத் திருமணம், கட்டாய வேலை, சிறார் படைவீரர் என பல்வேறு வழிகளில் சிறார்கள் வன்முறைகளை அனுபவித்து வருகின்றனர் என்றார்.
ஏழ்மையும், பொருளாதார வளர்ச்சியின்மையும் கொண்ட நாடுகளில் வாழும் குழந்தைகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மறுக்கப்படும்போது, இத்தகைய வன்முறைகள் அதிகரிக்கின்றன என மேலும் கூறினார் கர்தினால் டர்க்சன்.
இத்தகைய உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பும், பாராமுகமும் ஒரு காரணமாக அமைகின்றன என கர்தினால் டர்க்சன் அவர்கள் மேலும் கூறினார்.
குழந்தைகளின் உரிமைகள் குறித்த இக்கருத்தரங்கில், ஸ்வீடன் நாட்டு அரசி, சில்வியாவும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை - இரக்கம் காட்டுவதில் களைப்படையாதீர்கள்

ஏப்.26,2015. புதிய அருள்பணியாளர்கள் ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும்போது, தீர்ப்பிடாமல், மன்னிப்பு வழங்கவிருப்பதால், அவர்கள் இரக்கம் காட்டுவதில் களைப்படைய வேண்டாமெனவும், மன்னிப்பதில் ஒருநாளும் சோர்வடையாமல் இருக்கும் இறைவனைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்கத் திருஅவையில், இறையழைத்தலுக்காக செபிக்கும் 52வது உலக தினம் சிறப்பிக்கப்பட்ட இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் 19 தியோக்கோன்களை, அருள்பணியாளர்களாகத் திருப்பொழிவு செய்த திருப்பலி மறையுரையில் புதிய அருள்பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
எடுத்துக்காட்டுகளே வாழ்வைக் கட்டி எழுப்ப உதவும் என்பதால், அருள்பணியாளர்கள் எடுத்துக்காட்டுகளாய் வாழுமாறும் வலியுறுத்திய திருத்தந்தை, மனிதர்கள் மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மனிதர் மத்தியில் சலுகை பெற்றவர்களாகிய  அருள்பணியாளர்கள்,  இறைவனுக்கேற்ற காரியங்களைச் செய்யுமாறும் கூறினார்.
திருப்பலி, செயற்கையான வழிபாட்டுமுறை அல்ல, மற்றும், இது நம் ஆண்டவரின் மரணத்திலும் உயிர்ப்புப் பேருண்மையிலும் பங்கெடுப்பது என்பதால், திருப்பலியை வேகமாக நிறைவேற்ற வேண்டாமெனக் கூறிய திருத்தந்தை, மறையுரைகள், கேட்பவரைச் சலிப்படைய வைக்கக் கூடாது என்றும் கூறினார்.
புனிதக் கோட்பாடுகள் திருப்பணியை ஆற்றும்போது, ஒரே போதகராகிய கிறிஸ்துவின் மறைப்பணியில் பங்கு கொள்கின்றீர்கள், நீங்கள் மகிழ்வோடு பெற்றுக்கொண்ட இறைவார்த்தையை ஒவ்வொருவருக்கும் அறிவியுங்கள் என்றும் புதிய அருள்பணியாளர்களாடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். 
நீங்கள் சொல்வது உண்மையிலேயே உங்கள் இதயத்திலிருந்து வெளிவருவதாய் இருக்கட்டும். உங்கள் வாழ்வின் நறுமணம், பிறருக்குச் சான்று பகர்வதாக அமைய வேண்டும். ஏனெனில். முன்மாதிரிகையாய் இல்லாத வார்த்தைகள், வெற்று வார்த்தைகளே. சான்று வாழ்க்கை மூலம் வெளிப்படாத வார்த்தைகள், கேட்பவரின் இதயங்களை ஒருபோதும் தொடாது, ஆனால் அவை தீமையைக்கூட விளைவிக்கும்நன்மை செய்யாது என்றும் கூறினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை: தலைவன் என்ற மனநிலையை மாற்றி, பணியாளாக மாறுங்கள்

ஏப்.27,2015. கூலிக்கு மேய்ப்பவர் போல் அல்லாமல், இயேசு கிறிஸ்துவோ, தன் மந்தையின் வாழ்வில் பங்கெடுத்து அதை வழிநடத்திப் பராமரிக்கும் நல்லாயன் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நல்லாயன் குறித்த இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் பற்றி மூவேளை செப உரையிலும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மந்தையை வழிநடத்திப் பாதுகாப்பது என்பது, இயேசுவின் தன்னலமற்ற நோக்கமாகும், ஏனெனில் தன் மந்தைக்காக உயிரையே கையளித்தவர் அவர் என்றார்.
இயேசுவின் இந்த தியாகத்தை நன்றியோடு நினைவுகூர்ந்தால் மட்டும் போதாது, மாறாக, தலைவர் என்ற மனநிலையிலிருந்து நாம் இறங்கிவந்து, இயேசுவைப்போல் பணியாளராக மாற பயிலவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இயேசுவைப்போல் தம்மையே தாழ்த்தி பணியாள்போல் சேவையாற்ற வேண்டியது, குறிப்பாக ஆயர்களுக்கும் குருக்களுக்கும் தேவையான பண்பு எனவும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

5. கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தோழமை உணர்வு

ஏப்.26,2015. நேபாளத்திலும், அண்டை நாடுகளிலும் கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தனது தோழமை உணர்வை இஞ்ஞாயிறன்று மீண்டும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னர்வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஏறக்குறைய எழுபதாயிரம் திருப்யணிகளிடம், இப்பேரிடரால் துன்புறுவோருக்காகச் செபிக்குமாறு  கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் உதவிகள் பெறுவார்களாக எனச் சொல்லி, அன்னைமரியிடம், அனைவரோடும் சேர்ந்து, அருள்நிறைந்த மரியே என்ற செபத்தைச் செபித்தார் திருத்தந்தை.
நேபாளத்தில் இப்பேரிடர் நடந்த, கடந்த சனிக்கிழமையன்றே, நேபாள தலத்திருஅவைத் தலைவர் ஆயர் Paul Simick அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மும்பை கர்தினாலின் ஆறுதல்.

ஏப்.27,2015. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒடுமைப்பாட்டையும் நெருக்கத்தையும் அறிவிக்கும் அதேவேளை, அம்மக்களுக்கு உதவ மருத்துவக்குழு ஒன்றை, மும்பை உயர்மறைமாவட்டம் அனுப்ப உள்ளதாக அறிவித்தார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தான் நேரடியாகச் சென்றுச் சந்தித்ததாகவும், அவர்களின் துன்பங்களில் தான் பங்குகொள்வதாகவும் அறிவித்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இவ்வாரம் முழுவதும் மும்பை உயர்மறைமாவட்டத்தின் அனைத்துக் கோவில்களிலும், துறவு இல்லங்களிலும், கத்தோலிக்க நிறுவனங்களிலும் சிறப்பு செபவழிபாடுகள் இடம்பெறும் எனவும் அறிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை ஆற்றிவரும் காரித்தாஸ் இந்தியா அமைப்பின் மூலம் உதவிகளை வழங்க உள்ளதாகவும் மும்பை கர்தினால் கிரேசியஸ் அவர்கள் மேலும் கூறினார்.

ஆதாரம்: AsiaNews/வத்திக்கான் வானொலி

7. நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கத்தோலிக்க அமைப்புகள்

ஏப்.27,2015. மூவாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தால் இறந்திருக்கலாம் என அஞ்சப்படும் நேபாளத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை உடனடியாக வழங்கியுள்ளன கிறிஸ்தவ அமைப்புகள்.
நிலநடுக்கத்தின் இழப்பீடுகள் குறித்து அறிய வந்தவுடனேயே இத்தாலிய ஆயர் பேரவை 30 இலட்சம் யூரோக்களை, பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்கென, இந்தியா மற்றும் நேபாளத்திற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் சல்வத்தோரே பென்னாக்கியோ வழியாக அனுப்பியுள்ளது.
CAFOD என்ற பிரிட்டனின் கிறிஸ்தவ உதவி அமைப்பும் 50 ஆயிரம் பவுண்டுகளை உடனடியாக நேபாள நிவாரணப் பணிக்காக அனுப்பியுள்ளது.
இது தவிர, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பும், பேரிடர் துடைப்பு நிறுவனமான சமாரித்தன் அமைப்பும், தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றி வருகின்றன.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...