Friday 24 April 2015

செய்திகள்-23.04.15

செய்திகள்-23.04.15



புனித ஜார்ஜ் அவர்களின் பெயரைத் தாங்கி, ஏப்ரல் 23, இவ்வியாழனன்று தன் திருநாளைக் கொண்டாடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று செபிக்கிறோம், வாழ்த்துகிறோம்.


------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையால் திருநிலைப்படுத்தப்படும் 19 தியாக்கோன்கள்

2. புனித ஜார்ஜைப் போலவே திருத்தந்தையும் செயல்படுகிறார்

3. உரையாடலுக்கு நிச்சயமாக வாய்ப்பு உள்ளது - திருப்பீட அவை

4. ஆர்மேனியப் படுகொலைகள் நினைவு நிகழ்வில் கர்தினால் Koch

5. எத்தியோப்பிய இளையோர் கொல்லப்பட்டதற்கு ஆயர்கள் கண்டனம்

6. தடுப்புச் சுவருக்குப் பதிலாக ஒரு பள்ளியைக் கட்டிய எர்பில் ஆயர்

7. எகிப்தில் பள்ளிச் சிறார் மத்தியில் உரையாடல் கலாச்சாரத்தை வளர்க்க முயற்சிகள்

8. விருதுநகரில் 15 பள்ளிகளுக்கு சிறந்த சுற்றுச்சூழல் விருது
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையால் திருநிலைப்படுத்தப்படும் 19 தியாக்கோன்கள்

ஏப்.23,2015. ஏப்ரல் 26, வருகிற ஞாயிறன்று, நல்லாயன் ஞாயிறும், இறையழைத்தலுக்காக செபிக்கும் 52வது உலக நாளும் சிறப்பிக்கப்படும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 19 தியாக்கோன்களை அருள் பணியாளர்களாகத் திருநிலைப்படுத்துவார் என்று உரோமை மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 26, காலை 9.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெறும் திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநிலைப்படுத்தும் திருச்சடங்கினை முன்னின்று நடத்துவார்.
திருநிலைப்படுத்தப்படும் 19 இளையோரில், 13 தியாக்கோன்கள், உரோம் மறைமாவட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்; ஏனைய 6 பேரில், இருவர், மடகாஸ்கரிலிருந்தும், இருவர் தென் அமெரிக்காவின் பேரு நாட்டிலிருந்தும், ஒருவர் குரோவேசியாவிலிருந்தும் மற்றவர், இந்தியாவிலிருந்தும் திருத்தந்தையால் திருநிலைப்படுத்தப்படுவர்.
ஞாயிறன்று கொண்டாடப்படும் இறையழைத்தலுக்காக செபிக்கும் 52வது உலக நாளையொட்டி, ஏப்ரல் 24, வெள்ளி மாலை, புனித இலாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் திருவிழிப்புச் செபவழிபாடு நடத்தப்படும் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
மேலும், திருநிலைப்படுத்தப்படும் அருள் பணியாளர்கள், 28 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்ற விவரத்தையும் உரோம் மறைமாவட்டம் வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. புனித ஜார்ஜைப் போலவே திருத்தந்தையும் செயல்படுகிறார்

ஏப்.23,2015. தீயச் சக்திகளுக்கு எதிராகப் போரிட்ட புனித ஜார்ஜைப் போலவே, அவரது பெயரைத் தாங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இன்றையத் தீயச் சக்திகளை எதிர்த்து போராடி வருகிறார் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஏப்ரல் 23, இவ்வியாழனன்று கொண்டாடப்படும் புனித ஜார்ஜ் அவர்களின் திருநாளில், ஹோர்கெ என்ற பெயருடன் திருமுழுக்குப் பெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் திருநாளைக் கொண்டாடுவதையொட்டி, திருத்தந்தையின் திருவழிபாடுகளில் உதவி செய்யும் அருள் பணியாளர் Guillermo Karcher அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
ஆர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்தவரும், திருத்தந்தையுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்பு கொண்டவருமான அருள்பணி Karcher அவர்கள், கர்தினால் ஹோர்கெ மாரியோ பெர்கோலியோ அவர்கள், புவனெஸ் அயிரஸ் பேராயராகப் பணியாற்றியபோது, அவரிடம் காணப்பட்ட தந்தைக்குரிய பாசம், அவர் திருத்தந்தையாகப் பணியேற்ற பின்னரும் தொடர்கிறது என்று குறிப்பிட்டார்.
மக்கள் மத்தியில் உயர்ந்த மதிப்பு பெற்றிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்கு எதிராகச் சொல்லப்படும் மாற்றுக் கருத்துக்களையும் சலனமற்ற நடுநிலையோடு ஏற்றுக்கொண்டு, தன் பணிகளைத் தொடர்வது, அவரது தனிச்சிறப்பு என்று அருள்பணி Karcher அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. உரையாடலுக்கு நிச்சயமாக வாய்ப்பு உள்ளது - திருப்பீட அவை

ஏப்.23,2015. நம்மைச் சுற்றி அண்மைக் காலமாக நிகழும் வன்முறைகளைக் காணும்போது, உரையாடலுக்கு இனியும் வாய்ப்பு உள்ளதா என்று எழும் கேள்விக்கு, நிச்சயமாக வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை என்று திருப்பீடம் வெளியிட்டச் சேதியொன்று கூறுகிறது.
நிகழும் வன்முறைகளை, பெரும்பாலான இஸ்லாமியர் கண்டனம் செய்துவருவது, உரையாடலை வளர்க்க அவர்கள் கொண்டிருக்கும் ஆவலை வெளிப்படுத்துகிறது என்று பல்சமய உரையாடல் திருப்பீட அவை, இப்புதனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பட்டுள்ளது.
'மதம்' என்ற வார்த்தை, 'வன்முறை' என்ற வார்த்தையுடன் அடையாளப்படுத்தப்படும் இன்றையச் சூழலில், உண்மையான மத நம்பிக்கை கொண்டவர்கள், அமைதியின் தூதர்களாகப் பணியாற்றும் கடமை எழுந்துள்ளது என்று இச்செய்தி வலியுறுத்துகிறது.
மதத்தின் பெயரால் கொலை செய்வது, கடவுளுக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல; அது மனித குலத்தைத் தோல்வியடையச் செய்யும் முயற்சி என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், மதத்தின் பெயரால், வன்முறைகளை நியாயப்படுத்தும் முயற்சிகளை வன்மையாகக் கண்டனம் செய்யவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கூறியிருக்கும் கருத்துக்கள், இச்செய்தியில் இடம் பெற்றுள்ளன.

ஆதாரம் : VIS / வத்திக்கான் வானொலி

4. ஆர்மேனியப் படுகொலைகள் நினைவு நிகழ்வில் கர்தினால் Koch

ஏப்.23,2015. கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவைத் தலைவர், கர்தினால் Kurt Koch அவர்கள், ஆர்மேனியா நாட்டிற்கு, 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த முதல் படுகொலைகள் என்று கருதப்படும் ஆர்மேனியக் கொலைகள் நடைபெற்றதன் முதல் நூற்றாண்டு நிகழ்வுகளில், திருப்பீடத்தின் சார்பில் கலந்துகொள்ளும் கர்தினால் Koch அவர்கள், இப்புதனன்று, ஆர்மேனியாவின் தலைநகர் Yerevan சென்றடைந்தார்.
ஆர்மேனியப் படுகொலைகளில் இறந்தவர்களை, Yerevanல் அமைந்துள்ள Etchmiadzin பேராலயத்தில் புனிதர்களாக உயர்த்தும் நிகழ்வு, இவ்வியாழன் நடைபெற்றபோது, கர்தினால் Koch அவர்கள், அந்நிகழ்வில் கலந்துகொண்டு, திருத்தந்தையின் செய்தியை வாசித்தார்.
1915ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்மேனியாவில் நிகழ்ந்த படுகொலைகளின் முதல் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகள், இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்படுகையில், கர்தினால் Koch அவர்கள், அந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. எத்தியோப்பிய இளையோர் கொல்லப்பட்டதற்கு ஆயர்கள் கண்டனம்

ஏப்.23,2015. தங்கள் மத நம்பிக்கையை விட்டுக் கொடுக்க விரும்பாத ஒரே காரணத்திற்காக, எத்தியோப்பிய இளையோர் 30 பேர், ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று எத்தியோப்பிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
எத்தியோப்பியாவிலிருந்து லிபியாவுக்கு பிழைப்புத் தேடிச் சென்ற கிறிஸ்தவ இளையோர் 30 பேரை, ISIS தீவிரவாதிகள் கொன்ற நிகழ்வு, ஒரு வீடியோத் தொகுப்பாக, ஏப்ரல் 19ம் தேதி வெளியானதற்குப் பதில் சொல்லும் வகையில், எத்தியோப்பிய ஆயர் பேரவை, தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஆயுதம் ஏதும் ஏந்தாமல், அரசியல், பொருளாதாரச் சக்தி ஏதும் இல்லாமல் இருந்த இளையோரை, அவர்களது மத நம்பிக்கை என்ற ஒரே காரணத்திற்காக, கொடூரமாகக் கொலை செய்தது, மனித குலத்திற்கே பெரும் அவமானம் என்று எத்தியோப்பிய ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
பல்வேறு மதத்தினரையும், கலாச்சரங்களைச் சேர்ந்தவர்களையும் வரவேற்று வாழவைக்கும் எத்தியோப்பியா நாட்டின் குடிமக்கள், இவ்வாறு கொல்லப்பட்டிருப்பது, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அநீதி என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
ISIS தீவிரவாதிகள், ஏப்ரல் 19 அன்று இந்தக் கொடூர வீடியோத் தொகுப்பை வெளியிட்டதற்கு அடுத்தநாள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தந்தை, மத்தியாஸ் அவர்களுக்கு, தன் அனுதாபங்களையும், செபங்களையும் தெரிவித்து, செய்தியொன்றை அனுப்பினார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

6. தடுப்புச் சுவருக்குப் பதிலாக ஒரு பள்ளியைக் கட்டிய எர்பில் ஆயர்

ஏப்.23,2015. 2004ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆரம்பத் தாக்குதல்கள் நிகழ்ந்தபோது பாதுகாப்புக்கென மக்கள் தடுப்புச் சுவர்கள் கட்ட முடிவெடுத்தனர் என்றும், தடுப்புச் சுவருக்குப் பதிலாக ஒரு பள்ளியைக் கட்டலாம் என்று தான் ஆலோசனை தந்ததாகவும் ஈராக் நாட்டின் எர்பில் ஆயர் பாஷர் மாத்தி வார்தா   அவர்கள் கூறினார்.
நாம் அனைவரும் நாசரேத்தூர் மக்களே என்ற தலைப்பில், இஸ்பெயின் நாட்டு மத்ரித் நகரில் அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய ஆயர் வார்தா  அவர்கள், கல்வி ஒன்றே இன்றையக் கலவரங்களுக்குத் தகுந்த தீர்வு என்று கூறினார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டு வைத்து முதலில் தாக்கியது, தான் பணியாற்றிய வந்த பங்குத்தளமே என்று சுட்டிக்காட்டிய ஆயர் வார்தா அவர்கள், தங்களைப் பாதுகாக்க மக்கள் கான்கிரீட் சுவர் எழுப்ப நினைத்தபோது அதற்குப் பதிலாக    ஒரு பள்ளியைக் கட்டுவோம் என்று தான் கொடுத்த ஆலோசனையின்படி பள்ளி ஒன்று கட்டப்பட்டது என்று கூறினார்.
கட்டப்பட்ட பள்ளியில் பயிலும் மாணவர்களில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் இஸ்லாமியர்களே என்று கூறிய ஆயர் வார்தா அவர்கள், கிறிஸ்தவரக்ளும், இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பது நிறைவுதரும் ஒரு முயற்சி என்று எடுத்துரைத்தார்.
ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி

7. எகிப்தில் பள்ளிச் சிறார் மத்தியில் உரையாடல் கலாச்சாரத்தை வளர்க்க முயற்சிகள்

ஏப்.23,2015. எகிப்து நாட்டின் மின்யா மாநிலத்தில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தலைவர்கள் இணைந்து ஏப்ரல் 22, இப்புதன் முதல் ஒரு கூட்டு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 2ம் Tawadros அவர்களும், இஸ்லாமிய மதத்தலைவர் Ahmad al-Tayyeb அவர்களும், ஆதரவு தரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியரைச் சந்தித்து உரையாடல் கலாச்சாரத்தை வளர்க்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
பல்வேறு மதங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர் தங்களுக்குள் சந்திக்கும்    கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ளவும், சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் மதிக்கும் மனநிலை இவற்றை கற்றுக் கொள்ளவும் இம்முயற்சி உதவுகிறது என்று மின்யா காப்டிக் கத்தோலிக்கப் பேராயர் Anba Botros Fahim Awad Hanna அவர்கள் Fides செய்திக்கு அனுப்பிய குறிப்பில் கூறியுள்ளார்.
காப்டிக் கத்தோலிக்க அருள்பணியாளர்கள், இஸ்லாமியப் போதகர்கள் என நாற்பதுக்கும்  மேற்பட்டோர் மின்யா மாநிலத்தில் துவக்கியிருக்கும் இம்முயற்சி, எகிப்தின் ஏனைய மாநிலங்களுக்கும் பரவும் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

8. விருதுநகரில் 15 பள்ளிகளுக்கு சிறந்த சுற்றுச்சூழல் விருது

ஏப்.23,2015. விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரிக்கும் 5 அரசு பள்ளிகள் உட்பட 15 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டு சுற்றுச்சூழல் துறை சார்பில் ரூ.2 இலட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய பசுமைப் படை இயங்கி வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் 50 மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தேசிய பசுமைப் படை செயல்பட்டு வருகிறது.
பள்ளியில் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரித்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு, மரக்கன்றுகள் நட்டுவைத்து வளர்த்தல், தூய்மையைப் பேணுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தேசிய பசுமைப் படையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழல் துறையின் தேர்வுப்படி, விருதுநகர் மாவட்டத்தில் இவ்வாண்டில் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரித்த நடுவப்பட்டி, கிளவிக்குளம், சூலக்கரை, படந்தால் அரசு மேல்நிலைப் பள்ளிகள், பாம்பாட்டி அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுசெய்யப்பட்ட பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத்தொகை வழங்குவார் என்று மாவட்ட கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...