Thursday 9 April 2015

ஏழுமலையான்தான் நீதி வழங்கனும்: திருப்பதியில் தமிழ் பெண்கள் கதறல்

ஏழுமலையான்தான் நீதி வழங்கனும்: திருப்பதியில் தமிழ் பெண்கள் கதறல்

Source: Tamil CNN. tamil people Encounterஆந்திரா காவல்துறையினர் தங்கள் பிள்ளைகளை திட்டமிட்டு சுட்டுக்கொன்று விட்டனர் என்று புகார் கூறிய தமிழ் பெண்கள், ஏழுமலையான் சந்நிதியில் நடந்துள்ள கொடூரத்துக்கு ஏழுமலையான்தான் நீதி வழங்கனும் என்று கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. திருப்பதி வனப்பகுதியில் செம்மரத்தை வெட்டி கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 பேரை ஆந்திர காவல்துறையினர் நேற்று சுட்டுக் கொன்றனர். காவல்துறையினரின் இந்த ஈவு இரக்கமற்ற செயல் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரின் உடல் திருப்பதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் வகையிலும், உடல்களை பெற்றுக் கொள்ளும் வகையிலும் மருத்துவமனை வளாகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உடல்களை பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறையினர் மைக் மூலம் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால் யாரும் உடலை வாங்க முன்வரவில்லை. இதனிடையே, 8வது நபர் அடையாளம் தெரிந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மேலகூச்சனூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் மேலகூச்சனூர் கிராமத்தை சேர்ந்த 21 பேர் மூன்று வேன்களில் இன்று பிற்பகலில் திருப்பதி சென்றனர். வந்தவர்களுக்கு அரசு சார்பில் சாப்பாடு வழங்கப்பட்டது. “சுட்டுக் கொன்னுட்டு சாப்பாடு போடுறீங்களா” என்று உறவினர்கள் ஆதங்கப்பட்டனர். சிலர் மட்டும் சாப்பிட்டனர்.

உயிரிழந்தவர்களின் புகைப்படம் ஒவ்வொன்றுக்கும் அடையாள எண் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், உயிரிழந்தவர்களின் புகைப்படத்தை உதவி மையத்தில் இருந்த அதிகாரிகளிடம் கொடுத்தனர். அந்த புகைப்படத்தை அதிகாரிகள் சரிபார்த்தனர். இறந்தவர்களின் அடையாள அட்டை, உறவினர்களின் அடையாள அட்டையை சரிபார்த்த பின்னர் உடலை பார்க்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட முனுசாமியின் சகோதரி பத்மா மற்றும் பெருமாளின் சகோதரி லட்சுமி ஆகியோர், சகோதர்களின் உடலை பார்த்து ஒப்பாரி வைத்து கதறி அழுததோடு, “திட்டமிட்டு காவல்துறையினர் சுட்டுக் கொன்றுவிட்டனர். ஏழுமலையான் சந்நிதியில் நடந்துள்ளது. அந்த ஏழுமலையான்தான் நீதி வழங்க வேண்டும்” என்று கண்ணீர் விட்டனர்.
இதனிடையே, உடலை வாங்க வந்திருந்த திருவண்ணாமலை மாவட்டம், அனந்தபுரம் பஞ்சாயத்தின் முன்னாள் கவுன்சிலர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மூர்த்தி, முனுசாமி, முருகன், சசிகுமார், பெருமாள், பழனி, மகேந்திரன், சேகர் ஆகியோர் ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு சென்றனர். நகரி அருகே இவர்கள் பேருந்தில் சென்றபோது காவல்துறையினர் பேருந்தை மடக்கி 7 பேரையும் அழைத்து சென்றுள்ளனர்.
இது எப்படி எங்களுக்கு தெரியும் என்றால், அந்த பேருந்தில் சேகர் என்பவர் பெண் ஒருவர் முன்பக்கத்தில் இருந்துள்ளார். அந்த பேருந்தில் இருந்து தப்பி ஊருக்கு வந்த சேகர், நடந்தவற்றை கூறினார். அதற்குள் காவல்துறையினர் அப்பாவி கூலித் தொழிலாளிகளை சுட்டுக் கொன்றுவிட்டனர். தகவல் தெரிவித்த சேகர் தற்போது காவல்துறையினருக்கு பயந்து தலைமறைவாக இருக்கிறார். கடத்தியவர்களை சுடாமல் கூலி வேலைக்கு வந்தவர்களை கொன்றது என்ன நியாயம்?” என்று ஆதங்கத்துடன் கூறினார்.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த தமிழர்களின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்கள், தர்மபுரியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், வெங்கடேஷ், சிவக்குமார், லட்சுமணன், இன்னொரு லட்சுமணன், வேலாயுதம், திருவண்ணாமலைச் சேர்ந்த சிவலிங்கம், கோவிந்தசாமி, சின்னசாமி, டெல்லி முத்து, ராஜேந்திரன், பன்னீர்செல்வம் என தெரியவந்துள்ளது. இன்னொருவர் சேலத்தை சேர்ந்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெயர் மற்றும் விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...