Thursday, 9 April 2015

செய்திகள் - 09.04.15

செய்திகள்-09.04.15
------------------------------------------------------------------------------------------------------

1. ஆர்மேனியக் கத்தோலிக்க ஆயர்களைச் சந்தித்த திருத்தந்தை

2. சுலோவாக்கியா குடியரசுத் தலைவருடன் திருத்தந்தை

3. மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள திருத்தந்தை - அமெரிக்கக் கர்தினால்

4. திருத்தந்தை பிரான்சிஸ் நம்பிக்கைக்குரியவர் - பிலிப்பின்ஸ் மக்களின் கருத்து

5. ஒப்புரவை வளர்ப்பது ஆசியத் திருஅவையின் பணி கர்தினால் Maung Bo

6. Garissa பல்கலைக் கழக கொடுமை குறித்து கென்யா ஆயர்கள்

7. தீவிரவாதம் பாகிஸ்தானை உருக்குலைக்கிறது - லாகூர் பேராயர்

8. காசாப் பகுதியில், நடமாடும் மருத்துவமனை காரித்தாஸ் முயற்சி
------------------------------------------------------------------------------------------------------

1. ஆர்மேனியக் கத்தோலிக்க ஆயர்களைச் சந்தித்த திருத்தந்தை

ஏப்.09,2015. இறைவனின் கருணை, நம் மத்தியில் நிலவும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து, நாடுகளிடையே ஒப்புரவையும் அமைதியையும் கொணர இறையருளை மன்றாடுவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
ஆர்மேனியாவில் 1915ம் ஆண்டு இனப்படுகொலைகள் நடைபெற்றதன் முதல் நூற்றாண்டு நினைவாக, இறை இரக்கத்தின் ஞாயிறான ஏப்ரல் 12ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தவிருக்கும் திருப்பலியில் கலந்துகொள்ள வந்திருக்கும் ஆர்மேனியக் கத்தோலிக்க ஆயர்களை, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தபோது, திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
கடந்த ஈராயிரம் ஆண்டுகள் ஆன்மீகத்திலும் கலாச்சாரத்திலும் திளைத்து வளர்ந்துள்ள ஆர்மேனியா, 301ம் ஆண்டு முதல் கிறிஸ்தவத்தைத் தழுவியுள்ளது, வரலாற்று உண்மை என்பதை திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
ஆழ்ந்த இருளிலிருந்து வெளியாகும் சக்திகள் மனித மனதில் தோன்றுகின்றன என்பதை விவிலியம் கூறியுள்ளது என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமை சூழும் நேரங்களில் மீட்பின் சக்தியும் தோன்றுகிறது என்பதை நமது நம்பிக்கை எடுத்துரைக்கிறது என்று கூறினார்.
கிறிஸ்துவின் பாடுகளை, ஆர்மேனிய மக்கள் இன்னும் தொடர்கின்றனர் என்பது, அந்நாட்டு வரலாற்றில் காணப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசியத் திருத்தந்தை, மக்களின் நம்பிக்கையை உயிர்ப்பு நோக்கித் திருப்புவது ஆயர்கள் என்ற முறையில், நமது கடமை என்று வலியுறுத்தினார்.
ஆர்மீனிய இனப்படுகொலைகளைத் தடுக்க, திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், கீழை வழிபாட்டு முறை பேராயத்தை அவர் தோற்றுவித்ததையும் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Narek நகர புனித கிரகோரி அவர்கள், திருஅவையின் மறைவல்லுனராக தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதை மகிழ்வுடன் குறிப்பிட்டார்.
1915ம் ஆண்டு, ஏப்ரல் 24ம் தேதி, ஓட்டோமான் பேரரசின் ஆணையால் ஆரம்பமான இனப்படுகொலையில், 15 இலட்சம் ஆர்மேனியர்கள் கொலையுண்டனர். இதுவே 20ம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை என்று நினைவுகூரப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. சுலோவாக்கியா குடியரசுத் தலைவருடன் திருத்தந்தை

ஏப்.09,2015. "உமது மன்னிப்பைப் பெறும்படி, எங்கள் பாவங்களுக்காக அழுது, கண்ணீர் விடும் கொடையை அளித்தருளும், இறைவா" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Twitter செய்தியாக, ஒன்பது மொழிகளில், இவ்வியாழனன்று வெளியானது.
மேலும், சுலோவாக்கியா குடியரசுத் தலைவர், திருவாளர் Andrej Kiska அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வியாழன் காலை 10 மணியளவில் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
சுலோவாக்கியா குடியரசுக்கும், வத்திக்கானுக்கும் இடையே 1990ம் ஆண்டு, ஏப்ரல் 19ம் தேதி உருவான உறவுகளின் 25ம் ஆண்டு நிறைவைக் குறித்தும், அதைத் தொடர்ந்து, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் அந்நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.
திருத்தந்தையைச் சந்தித்தபின், திருவாளர் Andrej Kiska அவர்கள், திருப்பீடச் செயலர் அலுவகத்தின் நேரடிப் பொதுச்செயலர் பேரருள் திரு Antoine Camilleri அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி

3. மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள திருத்தந்தை - அமெரிக்கக் கர்தினால்

ஏப்.09,2015. தான் வழங்கும் செய்திகள் வழியாக மட்டுமல்ல, தன் வாழ்க்கையாலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெரும்பாலான மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளார் என்று அமெரிக்கக் கர்தினால் ஒருவர் கூறினார்.
உயிர்ப்புப் பெருவிழாவையடுத்து, அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த, வாஷிங்க்டன் கர்தினால் Donald Wuerl அவர்கள், திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் அமெரிக்கப் பயணம் பற்றி பேசியபோது, இவ்வாறு கூறினார்.
மக்களைச் சென்று சந்திக்கவும், அவர்களோடு பயணிக்கவும் வேண்டும் என்று மீண்டும், மீண்டும் கூறிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் சொல்வதை, தன் செயல்களிலும் வெளிப்படுத்துவதை காண முடிகிறது என்று கர்தினால் Wuerl அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு 'கேக்' செய்ய மறுத்த ஒரு 'பேக்கரி' உரிமையாளர், 150,000 டாலர்கள் அபராதம் கட்டவேண்டும் என்று Oregon மாநிலம் விதித்துள்ள தண்டனை குறித்துப் பேசிய கர்தினால் Wuerl அவர்கள், தங்கள் மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுப்போரை இவ்விதம் தண்டிப்பது, பாகுபாடுகள் காட்டும் ஒரு மனநிலை என்று சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொருவும் தாங்கள் நம்பி பின்பற்றும் கொள்கைகளை அடுத்தவர் மீது திணிக்காமல் வாழ்வதும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட மாண்பை மதிப்பதும் நலமான சமுதாயத்தை உருவாக்கும் என்று கர்தினால் Wuerl அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் நம்பிக்கைக்குரியவர் - பிலிப்பின்ஸ் மக்களின் கருத்து

ஏப்.09,2015. பிலிப்பின்ஸ் மக்களைப் பொருத்தவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு திருத்தந்தை என்பது இப்புதனன்று தெரிய வந்துள்ளது.
பிலிப்பின்ஸ் நாட்டில் இயங்கிவரும் சமுதாய வானிலை நிலையம் (Social Weather Stations - SWS) என்ற கருத்துக்கணிப்பு மையம் நடத்திய ஒரு வாக்கெடுப்பில், பிலிப்பின்ஸ் மக்களில் 87 விழுக்காட்டினர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் என்று கூறியுள்ளனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சனவரி மாதம் பிலிப்பின்ஸ் நாட்டில் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது, அங்கு வீசிய புயலையும் பொருட்படுத்தாது, Tacloban நகருக்கு சனவரி 17ம் தேதி மேற்கொண்ட பயணம், மக்கள் மனதில் ஆழப்பதிந்தது என்று இக்கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பிலிப்பின்ஸ் நாட்டில், மத நல்லுணர்வு உருவாகவும், நீதியும் அமைதியும் வளரவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறிய செய்திகள், மக்களை பெரிதும் கவர்ந்தன என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
1995ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களைக் குறித்தும், 2005ம் ஆண்டு, திருத்தந்தை பெனடிக்ட் அவர்களைக் குறித்தும் கருத்துக்கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், இவ்விரு கருத்துக்கணிப்புக்களைக் காட்டிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பெற்றுள்ள நம்பிக்கை வாக்கு அதிக விழுக்காடு என்றும் சமுதாய வானிலை நிலையம் கூறியுள்ளது.

ஆதாரம் : UCAN           / வத்திக்கான் வானொலி

5. ஒப்புரவை வளர்ப்பது ஆசியத் திருஅவையின் பணி கர்தினால் Maung Bo

ஏப்.09,2015. ஒப்புரவை வளர்ப்பவர்களாகவும், அமைதியைக் கட்டியெழுப்புகிறவர்களாகவும் ஆசிய மக்களை உருவாக்குவது, ஆசிய திருஅவையின் முக்கியமானப் பணி என்று ஆசியக் கர்தினால் ஒருவர் கூறினார்.
"ஆசியச் சூழலில் ஒப்புரவும், அமைதியும்" என்ற தலைப்பில், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய மியான்மாரின் முதல் கர்தினால் Charles Maung Bo அவர்கள், 14 நாடுகளிலிருந்து வந்திருந்த கருத்தரங்கு பங்கேற்பாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
உலக மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினரைக் கொண்டுள்ள ஆசியா, மதம், கலாச்சாரம், பொருளாதாரம், மொழி என்ற அனைத்துத் துறைகளிலும் பன்முகம் கொண்ட ஓர் அழகியக் கண்டம் என்று கர்தினால் Maung Bo அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
மதம், கலாச்சாரம், அரசியல் ஆகிய சமுதாயக் கூறுகள், தனித்தும், ஒருங்கிணைந்தும் செயலாற்றும்போது, மக்களை ஒன்றிணைக்கவும், பிரிக்கவும் சக்தி பெற்றவை என்பதை உணர்ந்து, பிரிக்கும் சக்திகளை அழிப்பது, தங்கள் முக்கியப்பணி என்பதை ஆசியத் திருஅவை உணரவேண்டும் என்று கர்தினால் Maung Bo அவர்கள் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

6. Garissa பல்கலைக் கழக கொடுமை குறித்து கென்யா ஆயர்கள்

ஏப்.09,2015. கென்யா நாட்டு இளையோர் பலர், தவறான முறையில் வழிநடத்தப்பட்டு, அடிப்படைவாதக் கொள்கைகளில் தங்களையே ஈடுபடுத்திக் கொள்வதும், தீவிரவாதச் செயல்பாடுகளால் தங்கள் உடன்பிறப்புக்களைக் கொல்வதும் ஆழ்ந்த வருத்தத்தைத் தருகின்றன என்று கென்யா ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஏப்ரல் 2, புனித வியாழனன்று, Garissa பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த கொடூரத் தாக்குதல்களில், 147 பேர் கொல்லப்பட்டதைக் குறித்து, ஏப்ரல் 8, இப்புதனன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கென்யா ஆயர்கள், நாட்டின் ஒற்றுமையைக் காப்பது அனைவரின் கடமை என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
இறந்தோரின் குடும்பங்களுக்குத் தங்கள் செபங்கள் தொடரும் என்று கூறியுள்ள ஆயர்கள், இந்தத் துயரமான நிகழ்வின்போது, மனிதாபிமான உணர்வோடு செயல்பட்ட அனைவருக்கும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.
உயிர்ப்புப் பெருவிழாவன்று, நைரோபி, திருக்குடும்ப பசிலிக்காவில் திருப்பலியாற்றிய கென்யா ஆயர் பேரவையின் தலைவரும், நைரோபி பேராயருமான கர்தினால் John Njue அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த அனுதாபச் செய்தியை வாசித்தார் என்று CNS செய்திக்குறிப்பு கூறுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

7. தீவிரவாதம் பாகிஸ்தானை உருக்குலைக்கிறது - லாகூர் பேராயர்

ஏப்.09,2015. கோவில், மசூதி, பள்ளி, அரசு அலுவலகம் என்ற எவ்வித வேறுபாடும் இன்றி, தீவிரவாதம் அனைத்தையும் உருக்குலைத்து, பாகிஸ்தானை அச்சத்தில் ஆழ்த்துகிறது என்று லாகூர் பேராயர் செபாஸ்டின் பிரான்சிஸ் ஷா அவர்கள் கூறினார்.
இவ்வாண்டு மார்ச் மாதம் Youhanabad பகுதியில் உள்ள புனித யோவான் கத்தோலிக்கக் கோவிலில் நடைபெற்ற தற்கொலைப் படையின் குண்டுவெடிப்பால், 22 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 70 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் தாக்குதல்களை மையப்படுத்தி, உயிர்ப்புத் திருநாளையடுத்து, புனித யோவான் கத்தோலிக்கக் கோவிலில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மறையுரை வழங்கிய பேராயர் ஷா அவர்கள், நாட்டின் அமைதிக்காக செபிக்கும்படி விண்ணப்பித்தார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஏனைய கிறிஸ்தவ சபையினர், நல்மனம் கொண்ட இஸ்லாமியர் என்று அனைவரும் இணைந்து உதவிகள் செய்ததற்காக புனித யோவான் கோவில் பங்கு அருள் பணியாளர், பிரான்சிஸ் குல்சார் அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

8. காசாப் பகுதியில், நடமாடும் மருத்துவமனை காரித்தாஸ் முயற்சி

ஏப்.09,2015. எருசலேம் காரித்தாஸ் நிறுவனம், காசாப் பகுதியில் ஒரு நடமாடும் மருத்துவமனையைத் துவக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று காரித்தாஸ் இயக்குனர், அருள்பணி Raed Abusahliah அவர்கள் கூறினார்.
பாலஸ்தீனிய வங்கியின் துணையோடு துவங்கப்படும் இந்த முயற்சிக்கு, எருசலேம் காரித்தாஸ் அமைப்பும், பாலஸ்தீனிய வங்கியும் இச்செவ்வாயன்று கையொப்பம் இட்டன என்று Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
எருசலேம் காரித்தாஸ் நிறுவனம், காசாப் பகுதியில் துன்புறும் மக்களுக்குத் தேவையான உணவு, கல்வி வசதி, மற்றும் அவர்களுக்குத் தேவையான மனநல உதவிகளை இதுவரைச் செய்துவந்துள்ளது.
காசாப் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்துள்ள மக்கள், குறிப்பாக, குழந்தைகளுக்கென எருசலேம் காரித்தாஸ் அமைப்பு இதுவரை 10 இலட்சம் டாலர்கள் பொருளுதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...