செய்திகள்-30.03.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : நமக்கான சிறப்புச் சலுகையின் காலம் புனித வாரம்
2. திருத்தந்தை : புனித வாரத்தில் தாழ்ச்சியின் பாதையில் நடைபோடுவோம்
3. திருத்தந்தை : இயேசுவின் மறையுண்மைகளுடன் புனித வாரத்தை வாழுங்கள்
4. உலக இளையோர் தின தயாரிப்புகள் போலந்தில் முழுவீச்சில் இடம்பெறுகின்றன
5. காஷ்மீரில் கிறிஸ்தவப்போதகர் ஒருவர் கைது
6. எகிப்து கல்வித் திட்டத்தில் அரசுடன் இணைந்து பணியாற்றும் கிறிஸ்தவச் சமூகம்
7. கூட்டு இராணுவப் படை அமைக்க அரபுத் தலைவர்கள் இணக்கம்
------------------------------ ------------------------------ ------------------------------ ----
1. திருத்தந்தை : நமக்கான சிறப்புச் சலுகையின் காலம் புனித வாரம்
மார்ச்,30,2015. ‘இயேசுவின் அருகில் மிக நெருங்கி வருவதற்கு, நாம்
சிறப்புச் சலுகைப் பெற்றுள்ள காலம் புனித வாரம். துன்பகரமான நேரங்களில்
அவருடன் நாம் கொள்ளும் நட்புணர்வு வெளிப்படுத்தப்படுகின்றது’ என இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இத்திங்களன்று திருஅவை உயர் அதிகாரிகள் சிலரை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ப்பண வாழ்வுக்கான திருப்பீட அவையின் செயலர் பேராயர் José Rodríguez Carballo, பொதுநிலையினருக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko, இத்தாலிய ஆயர் பேரவைத்தலைவர் கர்தினால் Angelo Bagnasco, திருப்பீட நூலகத் தலைவர் பேராயர் Jean-Louis Bruguès, வத்திக்கான நகருக்கான திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் Angelo Comastri, குடுமபங்களுக்கான திருப்பீட அவையின் செயலர் பேராயர் Vincenzo Paglia ஆகியோரை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் தனித்தனியாக சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : புனித வாரத்தில் தாழ்ச்சியின் பாதையில் நடைபோடுவோம்
மார்ச்,30,2015. இயேசுவின் எளிமையையும் தாழ்ச்சியையும் ஆழ்ந்து தியானித்து, அதற்கு எடுத்துக்காட்டாக, இப்புனித வாரத்தில் செயல்படுவோம் என இஞ்ஞாயிறன்று அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குருத்து ஞாயிறன்று உரோம் நகரின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்பெருமை, வெளி ஆடம்பரம் போன்ற உலகப்போக்குகளைக் கைவிட்டு, இயேசுவின் தாழ்ச்சியைப் பின்பற்றவேண்டும் என்றார்.
கிறிஸ்தவர்களுக்குரிய
உண்மையான வாழ்வுப்பாதை தாழ்ச்சியே என்பதை இயேசுவின் பாடுகள் நமக்குக்
காட்டுகின்றன என தன் மறையுரையில் உரைத்த திருத்தந்தை, தாழ்ச்சி என்பது இறைவனின் பாதை, அவர் தன் மக்களுடன் இணைந்து நடக்க தேர்ந்து கொண்ட பாதை, என்றார்.
இயேசு நமக்குக் காட்டிய தாழ்ச்சியின் பாதையை பின்பற்றுவதன் வழியே இவ்வாரம் நமக்கு புனிதமானதாக அமைய முடியும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தாழ்ச்சி என்பது பிறருக்கான சேவையையும் குறிக்கிறது, ஏனெனில் இறைவனுக்கு நம் இதயத்தில் இடமளிக்க நம்மையே நாம் வெறுமையாக்க வேண்டியுள்ளது, அவ்வாறு வெறுமையாக்குவது தாழ்ச்சியைக் குறிக்கும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதற்கு எதிரானப் பாதைகளாக உலகப் போக்குகளையும் சுட்டிக்காட்டினார்.
நாற்பது நாட்கள் பாலைவனத்தில் செபத்தில் ஈடுபட்ட இயேசுவுக்கு தீயோன் முன்வைத்த வழிகளே உலகப்போக்குகளின் பாதை என்பதை உணரும் நாம், இயேசுவின் துணையுடன் ஒவ்வொரு நாளும் இச்சோதனைகளை வெல்லவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
நம்மையே வெறுமையாக்கி, தாழ்ச்சியின் மகிமை உணர்ந்து, பிறருக்கான சேவையில் ஈடுபாடு கொள்ளவேண்டிய நாம், நோயுற்ற நம் உறவினர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், வீடற்றோர், கிறிஸ்தவ விசுவாசத்திற்காக துன்புறுவோர் ஆகியோரை இவ்வேளையில் நினைவுக் கூர்வோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை : இயேசுவின் மறையுண்மைகளுடன் புனித வாரத்தை வாழுங்கள்
மார்ச்,30,2015. ‘இறைத் தந்தையின் இரக்கத்தால் நிரப்பப்படும் ஒவ்வோர் இளையோரும், அதனை தங்கள் சுற்றுப்புறங்களில் பரப்பட்டும்’ என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குருத்து ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் இளையோர் தினம் குறித்து இஞ்ஞாயிறு முவேளை செப உரையில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் தங்களின் பாதையில் சிறப்புடன் நடைபோட இக்கொண்டாட்டங்கள் உதவட்டும் என்றார்.
வரும் ஆண்டு போலந்தின் Cracow நகரில் இடம்பெறவிருக்கும் உலக இளையோர் தினத்திற்கு எடுக்கப்பட்டுள்ள தலைப்பான 'இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்’ என்பதையும் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் ஆண்டை சிறப்பிக்கவிருக்கும் நமக்கு இத்தலைப்பு மிகவும் இயைந்த ஒன்றாக உள்ளது என்றார்.
இயேசுவின் மறையுண்மைகளை சிந்திப்பவர்களாய் இந்த புனித வாரத்தை வாழுங்கள் எனவும் அழைப்புவிடுத்த திருத்தந்தை, ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தில் கடந்த வாரம் உயிரிழந்தவர்கள் குறித்து தன் அனுதாபங்களையும், அவர்களுக்கான செப உறுதியையும் வழங்கினார்.,
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. உலக இளையோர் தின தயாரிப்புகள் போலந்தில் முழுவீச்சில் இடம்பெறுகின்றன
மார்ச்,30,2015. அடுத்த ஆண்டு இடம்பெறவிருக்கும் உலக இளையோர் தினத்திற்கான தயாரிப்புகள், போலந்தில் முழுவீச்சில் இடம்பெற்றுவருவதாக தலத்திருஅவை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
போலந்து நாட்டின் கிராக்கோவ் (Krakow) நகரில், 2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் இளையோர் தின கொண்டாட்டங்களுக்கு இன்னும் 16 மாதங்கள் இருப்பினும், புதிய விமான தளம், இரயில் மற்றும் சாலைப்போகுவரத்து மேம்பாடு, இளையோர்க்கென
வடிவமைக்கப்பட்ட விவிலியப் பிரதிகள் என பல்வேறு திட்டங்கள்
செயலாக்கம் பெற்று வருவதாக தலத்திருஅவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்துலக திருஅவையின் உலக இளையோர் தினத்திற்கென ஏற்கனவே அமெரிக்க ஐக்கிய நாடு, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இளைஞர்கள் தங்கள் பெயர்களைப் பதிவுச் செய்துள்ளதாக, இதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துவரும் போலந்தின் அருள்பணி Bronislaw Fidelus கூறினார்.
இறை இரக்கத்தை மையப்பொருளாகக்கொண்டு 2016ம் ஆண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் முதல் தேதிவரை இடம்பெற உள்ள உலக இளையோர் தினத்தில் உலகெங்கிலுமிருந்து 20 இலட்சம்பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம் : CNS/ வத்திக்கான் வானொலி
5. காஷ்மீரில் கிறிஸ்தவப்போதகர் ஒருவர் கைது
மார்ச்,30,2015. இஞ்ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொண்டிருந்தபோது காஷ்மீர் மாநிலத்தின் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார், கிறிஸ்தவப் போதகர் ஒருவர்.
இந்தியக் கிறிஸ்தவர்களுக்கான உலக அவையின் காஷ்மீர் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்தவப் போதகர் பால் அகஸ்டின், பிரிவினைவாதத்தை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இஞ்ஞாயிறன்று கைது செய்யப்பட்டார்.
இவர் மீதான அக்குற்றச்சாட்டு பொய்யாக இருப்பதால், இவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக போதகர் அகஸ்டினின் குடும்பத்தினர் அறிவித்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய கிறிஸ்தவர்களுக்கான உலக அவையின் தலைவர் Sajan George அவர்கள், பெரும்பான்மையினரின் சட்டம் மேலோங்கியிருக்கும் இடங்களில், சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றார்.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
6. எகிப்து கல்வித் திட்டத்தில் அரசுடன் இணைந்து பணியாற்றும் கிறிஸ்தவச் சமூகம்
மார்ச்,30,2015. எகிப்து நாட்டில் கல்வியறிவின்மையை ஒழிக்கும் அரசின் திட்டத்தில் அரசுடன் இணைந்து உழைக்க உள்ளதாக கையெழுத்திட்டுள்ளது, அந்நாட்டு காப்டிக் கிறிஸ்தவ சபை.
எகிப்து அரசால் உருவாக்கப்பட்டு காப்டிக் கிறிஸ்தவ சபையின் முழு ஆதரவைப் பெற்றுள்ள இக்கல்வித் திட்ட ஒத்துழைப்புக் கையெழுத்து, காப்டிக் கிறிஸ்தவ சபையின் தலைமை இல்லத்தில் இடம்பெற்றது.
காப்டிக் முதுபெரும் தந்தை இரண்டாம் Tawadros அவர்கள் முன்னிலையில் இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது, அக்கிறிஸ்தவ சபையின் சமூக மேம்பாட்டுத்துறைத் தலைவர் ஆயர் Ioannis, கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
ஆதாரம் : Fides/ வத்திக்கான் வானொலி
7. கூட்டு இராணுவப் படை அமைக்க அரபுத் தலைவர்கள் இணக்கம்
மார்ச்,30,2015. ‘'எதிர்பாராத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில், அரபுலகத் தலைவர்கள் கூட்டு இராணுவப் படை ஒன்றை உருவாக்க இணங்கியுள்ளதாக எகிப்து அதிபர் அப்துல் ஃபட்டா எல்-ஸீஸீ கூறினார்.
அரபுப்பகுதியில் எதிர்நோக்கப்படும் 'எதிர்பாராத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதத்தில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
யேமனில் நிலவும் குழப்பங்கள் தொடர்பாக ஆராயப்பட்ட அரபு லீக் மாநாட்டில் இந்த உடன்பாடு காணப்பட்டுள்ளது.
யேமனில்
தற்போது ஹெளதி- ஷியா முஸ்லிம் கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து சவுதி
அரேபியா தலைமையிலான கூட்டு அரபுப் படையினர் தாக்குதல் நடத்திவருகின்றனர்.
ஹௌதிகள்
ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு தாங்கள் கைப்பற்றியிருக்கும்
நிலப்பகுதியிலிருந்து வெளியேறும்வரை படைநடவடிக்கை தொடரும் என்று அரபு லீக்
கூறியுள்ளது.
No comments:
Post a Comment