Tuesday, 2 December 2014

துன்பங்களுக்கு அஞ்சாதவர் (St. Bibiana)

துன்பங்களுக்கு அஞ்சாதவர் 
 (St. Bibiana)

கிறிஸ்தவர்களை வதைத்துவந்த உரோமைப் பேரரசர் ஜூலியன், கி.பி.363ம் ஆண்டில், Apronianus என்பவரை உரோமை ஆளுனராக நியமித்தார். அச்சமயத்தில் உரோமையில் இரு சகோதரிகள் பெற்றோரின்றி வாழ்ந்தனர். அதோடு இவர்களின் சொத்துக்களையும் ஆதிக்கவர்க்கத்தினர் அபகரித்துக்கொண்டார்கள். வறுமையும் பசியும் ஒருபுறம் வாட்டினாலும், கடவுள் நம்பிக்கையை மட்டும் இச்சகோதரிகள் கைவிடவில்லை. பெற்றோர் கொலைசெய்யப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியும், கடும் துன்பங்கள் மத்தியில் கிறிஸ்துவ விசுவாசத்தில் உறுதியுடன் வாழ்ந்த சகோதரிகள்தான் பிபியான மற்றும் தெமெத்ரியா(Demetria). இவர்களின் மனஉறுதியைப் பார்த்த ஆளுனர் அப்ரோனியானுஸ் முதலில் தெமெத்ரியாவை வரவழைத்து விசாரித்து துன்புறுத்தினார். தெமெத்ரியா கிறிஸ்துவைத் துணிச்சலுடன் அறிக்கையிட்டு, அவ்விடத்திலேயே விழுந்து இறந்தார். பின்னர் பிபியானாவை அதிகமாகச் சித்ரவதைக்கு உள்ளாக்கினார். ரூஃபினா(Rufina) என்ற ஒழுக்கங்கெட்ட பெண்ணிடம் பிபியானாவை ஒப்படைத்து மனம் மாற்ற முயற்சித்தார் ஆளுனர். அனைத்திலும் தோல்வி கண்ட அவர், பிபியானாவை ஒரு தூணில் கட்டி, இரும்புக் குண்டுகளைக்கொண்ட சவுக்கால்  அடிக்கக் கட்டளையிட்டார். சதைகள் பிய்ந்து தொங்கி இரத்தம் கொட்டின. பிபியானா அதிலும் உறுதியாய் இருந்ததால், உயிர்போகும்வரை அவரை அடித்தனர். பின்னர் பிபியானாவின் உடலை விலங்குகளுக்கு இரையாகப் போட்டனர். ஆனால் விலங்குகள் பிபியானாவின் உடலை நெருங்கவே இல்லை. இரண்டு நாள்கள் கழித்து கிறிஸ்தவர்கள் பிபியானாவை நல்லடக்கம் செய்தனர். மறைசாட்சி பிபியானாவின் விழா டிசம்பர் 02. புனித  பிபியானாவைக் கட்டி அடித்த தூண் உரோம் நகரில் அவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ளது. இப்புனிதரின் தந்தை Flavianம், உரோமைப் படையில் உயர்ந்த நிலையில் இருந்தவர். இவர் விசுவாசத்தில் உறுதியாய் இருந்ததால் இவரது முகத்தை, பழுக்கக் காய்ச்சிய இரும்பால் தேய்த்தனர். முகம் சிதைந்து வலியால் துடித்த அவரை வேறு பகுதிக்கு விரட்டி அடித்தனர். சீழ்வைத்த முகத்தோடு அந்த வலியில் அவர் இறந்தார். பிபியானாவின் தாய், Dafrosaவையும் தலைவெட்டிக் கொன்றனர். பிபியானாவின் பெற்றோர், பிபியானாவும், தெமெத்ரியாவும் இறக்குமுன்பே கொல்லப்பட்டுவிட்டனர். எனவே பிபியானாவின் குடும்பத்தில் எல்லாருமே  மறைசாட்சிகள். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...