செய்திகள் - 10.12.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் 48வது உலக அமைதி நாளுக்கென வழங்கியுள்ள செய்தி
2. திருத்தந்தை பிரான்சிஸ் - கிறிஸ்தவக் குடும்பத்திற்கு திருமணம் என்ற திருவருள் அடையாளம் தரும் சக்தி
3. கிறிஸ்மஸ் விழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் வழிபாட்டு நிகழ்வுகளின் அட்டவணை
4. வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் பொது அவையின் ஆரம்ப ஏடு வெளியீடு
5. "இணையதளத்தின் ஆபத்துக்களை நிறுத்துக" - நீதி, அமைதி திருப்பீட அவையின் முயற்சி
6. சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் பறிபோவதே, பெரும் மனித உரிமை மீறல் - இந்திய ஆயர் பேரவை
7. பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கொல்லப்படுவதே, இனப் படுகொலைகளின் அடிப்படை - ஐ.நா. உயர் அதிகாரி
8. அடுத்துவரும் பத்தாண்டுகள், ஆப்ரிக்க இனவழியினர் அனைவரின் பத்தாண்டுகள் - ஐ.நா. அறிவிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் 48வது உலக அமைதி நாளுக்கென வழங்கியுள்ள செய்தி
டிச.10,2014. மனிதர்கள் அனைவருக்கும் அமைதியை வேண்டும் இவ்வேளையில், மனிதர்களால் உருவாகும் போர்களும் மோதல்களும் அகன்று, இயற்கையால் விளையும் அழிவுகளும், நோய்களும் தீரவேண்டும் என்று தான் இறைவனை மன்றாடுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
2015ம் ஆண்டின் முதல் நாள், சனவரி முதல் தேதியன்று, கத்தோலிக்கத் திருஅவை சிறப்பிக்கவிருக்கும் 48வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
"இனி ஒருபோதும் அடிமைகள் அல்ல, ஆனால், உடன்பிறப்புக்கள்" என்ற மையக்கருத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள இச்செய்தியில், அடிமைத்தனத்தின் வரலாறு, அதன் இன்றைய நிலை, அதனை அறவே ஒழிக்கும் வழிகள் என்ற கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
திருத்தூதர் பவுல், பிலமோனுக்கு எழுதியத் திருமுகத்தில், அடிமையாக இருந்த ஒனேசிமுக்காக பரிந்துரைத்த வார்த்தைகளான, "இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையைவிட மேலானவனாக, அதாவது
உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்" (பிலமோன் 15-16) என்ற
சொற்கள் தனது அமைதி நாள் செய்திக்கு வித்திட்டன என்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மனித வரலாற்றில் அடிமைத்தனம் முன்னொரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கமாக இருந்தாலும், இன்றைய காலத்தில் அது ஒரு குற்றம் என்ற உண்மை, உணர்வளவிலும், சட்டங்கள் வழியாகவும் நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது என்று திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படை மனித மாண்பு மறுக்கப்படும்போது, அல்லது மறக்கப்படும்போது, மனிதர்கள் ஒரு பொருளாக கருதப்பட்டு, அடிமைகளாக விற்கப்படுகின்றனர் என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை, இத்தகைய மனநிலை உலகில் இருப்பதால், அடிமைத்தனம் இன்றைய காலத்திலும் தொடர்கிறது என்று கூறினார்.
பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் மனநிலையும், தவறான கொள்கைகளால் போரிலும், மோதல்களிலும்
ஈடுபடும் அடிப்படைவாத உணர்வுகளும் அடிமைத்தனம் வளர்வதற்கு முக்கிய
காரணங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில்
குறிப்பிட்டுள்ளார்.
தனி மனிதர்கள், அரசுகள், பன்னாட்டு
நிறுவனங்கள் என்ற அனைத்து தளங்களிலும் அடிமைத்தனத்தை ஒழிக்கும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திருத்தந்தை விண்ணப்பித்துள்ளார்.
அடிமையாக வாழ்ந்து, பின்னர் தன் சுதந்திரத்தை அடைந்து, தன் வாழ்வை இறைவனின் பணியில் அர்ப்பணித்த புனித Josephine Bakhita அவர்கள், அடிமைத்தனத்தின்
அனைத்து காயங்களும் மனிதர்கள் மத்தியிலிருந்து அகல்வதற்கு நம்பிக்கைதரும்
அடையாளமாக விளங்குகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் - கிறிஸ்தவக் குடும்பத்திற்கு திருமணம் என்ற திருவருள் அடையாளம் தரும் சக்தி
டிச.10,2014. திருமணம் என்ற திருவருள் அடையாளம் தரும் சக்தியைக் கொண்டு, கிறிஸ்தவக் குடும்பம், இறைவனின் அன்பை உலகில் பறைசாற்றும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின், பிலடெல்பியா நகரில், 2015ம் ஆண்டு, செப்டம்பர் 22 முதல் 27 முடிய நடைபெறவிருக்கும் குடும்பங்களின் உலக மாநாட்டைக் குறித்து, குடும்பப்பணி திருப்பீட அவையின் தலைவரான பேராயர் Vincenzo Paglia அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.
"அன்பே நமது அறிவிப்புப்பணி: குடும்பம்
இன்னும் வாழ்வுபெற" என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் இந்த உலக
மாநாட்டிற்கு இறைவனின் ஆசீர் முழுமையாகக் கிடைப்பதை தான் நம்பிக்கையோடு
எதிர்நோக்கியிருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில்
குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டு வத்திக்கானில் நடந்து முடிந்த ஆயர்கள் சிறப்பு மாமன்றம், கிறிஸ்தவக் குடும்பத்தை மையப்படுத்தி பல சவால்களை நம்முன் வைத்துள்ளது என்று கூறியத் திருத்தந்தை, இறைவார்த்தையை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படும் குடும்பங்கள், அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ளும் என்று நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
மாநாட்டின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைவரையும், Guadalupe அன்னை மரியாவும், Aparecida அன்னை மரியாவும் வழிநடத்தும்படியாக வாழ்த்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மடலை நிறைவு செய்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. கிறிஸ்மஸ் விழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் வழிபாட்டு நிகழ்வுகளின் அட்டவணை
டிச.10,2014. கிறிஸ்மஸ் விழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் வழிபாட்டு நிகழ்வுகளின் அட்டவணையை, திருப்பீடத்தின் வழிபாட்டுத் துறைத் தலைவர், பேரருள்திரு Guido Marini அவர்கள் இப்புதனன்று வெளியிட்டார்.
டிசம்பர் 24 இரவு, 9.30 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்தநாள் நண்பகல் 12 மணிக்கு பசிலிக்காப் பேராலய மேல்மாடியிலிருந்து, வளாகத்தில் கூடியிருப்போருக்கு முன், “Urbi et Orbi” அதாவது, 'ஊருக்கும் உலகுக்கும்' என்ற சிறப்புச் செய்தியை வழங்குவார்.
டிசம்பர் 31, புதன் மாலை 5 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருத்தந்தையின் தலைமையில், 'Te Deum' என்ற நன்றிப் பண்ணுடன் கூடிய மாலைச் செபமும், நற்கருணை ஆசீரும் நடைபெறும்.
ஆண்டின் முதல் நாள் கொண்டாடப்படும் இறைவனின் அன்னையாகிய மரியாவின் பெருவிழா மற்றும், 48வது உலக அமைதி நாளன்று, காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆடம்பரத் திருப்பலியை, தலைமையேற்று நடத்துவார்.
கிறிஸ்மஸ் காலத்தின் இறுதி நிகழ்ச்சியாக, சனவரி 6, செவ்வாயன்று, காலை 10 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், திருக்காட்சிப் பெருவிழா திருப்பலியை, திருத்தந்தை நிகழ்த்துவார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் பொது அவையின் ஆரம்ப ஏடு வெளியீடு
டிச.10,2014. 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம், 4ம் தேதி முதல், 25ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் பொது அவையின் ஆரம்ப ஏடு ஒன்றை, ஆயர்கள் மாமன்றச் செயலகம், இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.
குடும்பத்தை
மையப்படுத்தி நடைபெறவிருக்கும் ஆயர்கள் பொது அவைக்குத் தேவையான
ஏற்பாடுகளைத் துவக்கிவைக்கும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ள இந்த ஏடு, உலகின் அனைத்து கத்தோலிக்க ஆயர்கள் பேரவைகள், ஏனைய வழிபாட்டு முறைத் திருஅவைகள், துறவுச் சபைகள் மற்றும் திருப்பீடத்தின் அனைத்து அவைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தில் எழுந்த கருத்துக்களின் அடிப்படையில், 46 கேள்விகள் அடங்கிய இந்த ஏடு, அனைத்துலக கத்தோலிக்கத் திருஅவையின் மறைமாவட்டங்கள், துறவுச் சபைகள் என்ற பலநிலைகளில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவாதங்களின் அறிக்கை, 2015ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் வத்திக்கானை வந்தடைய வேண்டும் என்ற குறிப்புடன் இந்த ஏடு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 28ம் தேதி கொண்டாடப்படும் திருக்குடும்பத் திருவிழாவன்று, அகில உலக கத்தோலிக்கத் திருஅவை, நடைபெறவிருக்கும் ஆயர்கள் பொது அவைக்கென சிறப்பு செபங்களை எழுப்புமாறு, இந்த ஏடு விண்ணப்பித்துள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி / AsiaNews
5. "இணையதளத்தின் ஆபத்துக்களை நிறுத்துக" - நீதி, அமைதி திருப்பீட அவையின் முயற்சி
டிச.10,2014. குடும்பத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடாமல் இருப்பதால், குழந்தைகள், இணையதளத்தையும், ஏனைய தொடர்புகளையும் தேடிச் செல்லும் ஆபத்து கூடியுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
"இணையதளத்தின் ஆபத்துக்களை நிறுத்துக" என்ற கருத்து விளம்பரத்தின் நுணுக்கங்களை, இச்செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு விளக்கிய நீதி, அமைதி திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.
டிசம்பர் 10, இப்புதனன்று கடைபிடிக்கப்படும் மனித உரிமைகள் உலக நாளையும், குழந்தைகள் உரிமை சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட 25ம் ஆண்டையும் ஒட்டி, "இணையதளத்தின் ஆபத்துக்களை நிறுத்துக" என்ற கருத்து விளம்பர முயற்சியை, நீதி, அமைதி திருப்பீட அவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இணையத்தளத்தினால் ஆபத்துக்களுக்கு உள்ளான ஒரு சிலரும் இந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு, தங்கள் வாழ்வில் அடைந்த துன்பங்களை விளக்கிக் கூறினர்.
குழந்தைகளின் நலனிலும், குடும்பங்களின் நலனிலும் ஆழ்ந்த அக்கறை கொண்ட திருப்பீடம் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளும் முயற்சிகளை, கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் பறிபோவதே, பெரும் மனித உரிமை மீறல் - இந்திய ஆயர் பேரவை
டிச.10,2014. சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் பறிபோவதே, இந்தியாவில் மிக அதிகமாக, ஆழமாகப் பாதிப்புக்கு உள்ளாகும் மனித உரிமை என்று இந்திய ஆயர் பேரவை கூறியுள்ளது.
டிசம்பர் 10, இப்புதனன்று உலகெங்கும் கடைபிடிக்கப்பட்ட மனித உரிமைகள் உலக நாளையொட்டி, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மனித முன்னேற்றம் பணிக்குழு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சிறுபான்மை மதத்தவர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் அடிப்படைவாதக் குழுக்கள், மாநில அரசுகளையும் எதிர்த்துச் செயல்படும் துணிவை பெற்று வருகின்றன என்று, இப்பணிக்குழுவின் செயலர், அருள்பணி Charles Irudayam அவர்கள் கூறியுள்ளார்.
அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் இந்தியச் சட்டங்களுக்குச் சற்றும் மதிப்பு அளிக்காத இந்த வன்முறை குழுக்கள், மனித உரிமைகள் என்ற எண்ணத்தையே எள்ளி நகையாடுகின்றன என்று இவ்வறிக்கை தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
பழங்குடியினரும், தலித்துக்களும் ஒவ்வொரு நாளும் வன்முறைகளுக்கு உள்ளாகும் நிகழ்வுகள் இந்தியாவில் நிகழ்கின்றன என்று எடுத்துரைக்கும் இவ்வறிக்கை, வலுவற்ற சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கு உளது என்பதை வலியுறுத்திக் கூறுகிறது.
ஆதாரம் : CBCI (OJPD) / Fides
7. பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கொல்லப்படுவதே, இனப் படுகொலைகளின் அடிப்படை - ஐ.நா. உயர் அதிகாரி
டிச.10,2014. ஒருவர் செய்த செயலுக்காக அல்ல, மாறாக, அவரது பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கொல்லப்படுவதே இனப் படுகொலைகளின் அடிப்படை என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
டிசம்பர் 10, இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட மனித உரிமைகள் உலக நாளையொட்டி, ஐ.நா. தலைமையகத்தில் அறிக்கையொன்றை வெளியிட்ட, ஐ.நா. உயர் அதிகாரி Adama Dieng அவர்கள் இவ்வாறு கூறினார்.
பல்வேறு குழுக்களுக்கு இடையே மோதல்கள் நிகழ்வதும், அவற்றில் உயிர் பலிகள் நிகழ்வதும் உணர்வுக் கொந்தளிப்பில் உருவாகும் இழப்புக்கள் என்று கூறிய Dieng அவர்கள், இனப்படுகொலைகளோ பல ஆண்டுகள் திட்டமிட்டு செய்யப்படும் கொடூரங்கள் என்று சுட்டிக்காட்டினார்.
இனப்படுகொலைகள் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு அளவில், வெவ்வேறு கருத்தியல்களின் அடிப்படையில் நிகழ்ந்தவண்ணம் உள்ளன என்றும் Dieng அவர்கள் கவலை வெளியிட்டார்.
ஆதாரம் : UN
8. அடுத்துவரும் பத்தாண்டுகள், ஆப்ரிக்க இனவழியினர் அனைவரின் பத்தாண்டுகள் - ஐ.நா. அறிவிப்பு
டிச.10,2014. டிசம்பர் 10, இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட மனித உரிமைகள் உலக நாளுக்கு ஒரு தயாரிப்பாக, இச்செவ்வாய், நியூயார்க் நகரின் Harlem பகுதியில், ஐ.நா. அவையின் துணைத் தலைவர், Jan Eliasson அவர்கள், மனித உரிமைகள் அகில உலக அறிக்கையை வாசித்தார்.
அடுத்துவரும் பத்தாண்டுகள் ஆப்ரிக்க இனவழியினர் அனைவரின் பத்தாண்டுகள் என்று ஐ.நா. அறிவித்துள்ள வேளையில், கறுப்பின மக்களுக்கு மிகவும் பொருளுள்ள வகையில் வரலாற்றில் இடம்பெற்றுள்ள Harlem என்ற இடத்தில் இந்த அறிக்கையை வாசித்தது, பொருள்தரும் செயல் என்று Eliasson அவர்கள் கூறினார்.
Harlem பகுதியில் 1905ம் ஆண்டு, Schomburg மையம் என்ற ஆய்வுக் கூடம் அமைக்கப்பட்டு, ஆப்ரிக்க இனத்தவர் குறித்த பல அரிய தரவுகள் அங்கு சேகரிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா. அவையின் துணைத் தலைவர் குறிப்பிட்டுப் பேசினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு மட்டுமல்ல, உலகெங்கும் கறுப்பின மக்களின் விடுதலையைக் கொண்டாடவும், தொடந்து, அவர்களின் முழு விடுதலைக்கு உழைக்கவும், ஆப்ரிக்க இனவழியினர் அனைவரின் பத்தாண்டுகள் வழிவகுக்கும் என்றும், Eliasson அவர்கள் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : UN
No comments:
Post a Comment